செய்திகள்

செய்திகள்

செய்திகள்

வலிகாமம் வடக்கில் நேற்று 970 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளன. டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கூட்டமைப்பினரும் கலந்து கொண்டனர்.

வலிகாமம் வடக்கில் 970 குடும்பங்கள் நேற்று சனிக்கிழமை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப் பட்டுள்ளனர். இளவாலை வடக்கு, இளவாலை வடமேற்கு, வித்தகபுரம் ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளில் அவர்கள் மீள்குடியமத்தப் பட்டுள்ளனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

நேற்று சனிக்கழமை காலை 8மணிக்கு மீள்குடியேற்ற நிகழ்வு இடம்பெறும் என குறித்த மக்களுக்கு அறிவிக்கப்பட்டதால் கொட்டும் மழையிலும் மக்கள் அந்நேரத்திற்கு கீரிமலைக்கு வந்தடைந்தனர். ஆனால், பிற்பகல் 2மணிக்கே மீள்குடியேற்ற நிகழ்வுகள் ஆரம்பமாகின. இவ்வாறு மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு ஐயாயிரம் ரூபா பணமும், சிமெந்து பக்கற்றுக்கள், கூரைத்தகடுகள் என்பனவும் வழங்கப்பட்டன.

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பூஜை வழிபாட்டிற்குப் பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இம்மீள்குடியேற்ற நிகழ்வில் தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

970 குடும்பங்களைச் சேர்ந்த 3448 பேர் இவ்வாறு மீள்குடியமர்த்தப் பட்டுள்ளனர். இந்நிகழ்வில் உரையாற்றிய கூட்டமைப்பின் உறுப்பினர் மாவை சேனாதிராஜா தமிழ் மக்களின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒன்றுபட்டு உழைப்பதற்கு தயாராகவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் திருடர்களால் தொல்லை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்ள் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் திருடர்களின் தொல்லை அதிகரித்துள்ளது. மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் வீடுகள் கதவுகள், யன்னல்களற்ற நிலையில் காணபடுவதாலும் பல வீடுகள் முற்றாக சேதமடைந்து தற்காலிக வீடுகளில் மக்கள் தங்கியிருக்கும் நிலையிலும் திருடர்கள் இரவு நேரங்களில் அவர்களின் உடமைகளை திருடிச் செல்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை, தண்ணீரூற்று பகுதிகளில் மீள்குடியமர்ந்துள்ள பொதுமக்களின் வீடுகளில் அண்மைய நாட்களாக சைக்கில்கள். மோட்டார் சைக்கில்கள் உள்ளிட்ட அவர்களின் உடமைகள் பல திருடர்களால் களவாடிக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

தமிழ் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதியுடன் மேற்கொண்ட கலந்துரையாடல் திருப்தியளிப்பதாகவுள்ளது -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

தமிழ் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் மேற்கொண்ட கலந்துரையாடல் திருப்தியளிக்கவில்லை என அதில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ள நிலையில் தமிழ்கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியுடனான சந்திப்பு மிகவும் திருப்தியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் உதவியில் நேற்று யாழ்.பொது நூலகத்தின் முன்பாக நடைபெற்ற உழவு இயந்திரங்கள் கையளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உயைாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை தமிழ் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. இப்பேச்சுவார்த்தையானது திருப்தியானதாகவும், நம்பிக்கை தருவதாகவும், முன்னேற்றத்திற்கு வழிவகுப்பதாகவும் உள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் விடிவுக்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பு உட்பட அனைத்துக்கட்சிகளும் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது குறிப்பிட்டார்.

இந்திய வெளியுறவு அமைச்சருடனான தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் சந்திப்பு நடைபெறவில்லை.

இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்ட இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவுடனான தமிழ்கட்சிகளின் அரங்கத்தின் சந்திப்பு நடைபெற மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இன்று இந்திய உயர்ஸ்தானிகர் இல்லத்தில் அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவை சந்திப்பதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர் கிருஸ்ணாவிற்கு நேரமின்மை காரணமாக இச்சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்கட்சிகளின் அரங்கத்தின் முக்கியஸ்தரும் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்திய அமைச்சர் கிருஸ்ணா இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை விஜயத்தை நிறைவு செய்து கொண்டு இந்தியா செல்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக். ஜனாதிபதிக்கு பிரமாண்ட வரவேற்பு- இருதரப்பு பேச்சு இன்று ஆரம்பம்

sr.jpgபாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிஃப் அலி சர்தாரி நேற்று பிற்பகல் இலங்கை வந்தடைந்தார். நேற்று பிற்பகல் 4.30 மணி அளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த அவரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேற்றார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பையேற்று நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வருகை தந்துள்ள சர்தாரிக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டதுடன் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.

எதிர்வரும் 30ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் சர்தாரி, இலங்கை அரசியல் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவார். இவர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் தி. மு. ஜயரட்ன, அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் ஆகியோரைச் சந்தித்து இரு தரப்பு உறவுகள் தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.

பாகிஸ்தான் ஜனாதிபதியுடன் 40 பேர் கொண்ட உயர் மட்டக் குழுவினரும் வருகை தந்துள்ளனர். பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மஹ்மூத் குரோமி, பாதுகாப்பு அமைச்சர் அஹமட் முக்தார், பாக். வர்த்தக சம்மேளனத் தலைவர் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் ஆகியோர் இதில் அடங்குவர்.

படைத் தலைமையகம் உள்ள இடங்களில் உல்லாச ஹோட்டல்கள் – கோட்டாபய ராஜபக்ஷ

சுற்றுலாக் கைத்தொழில் துறையில் உலகின் முன்னணி நிறுவனமாகத் திகழும் சீனாவின் சங்கிரில்லா நிறுவனம் இலங்கையின் உல்லாசப் பயணத் துறையில் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட முன்வந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். இந்த முதலீடு தொடர்பான உடன்படிக்கை நேற்று முன்தினம் நிதி அமைச்சில் கைச்சாத்திடப்பட்ட தாகவும் கூறினார்.

இந்த முதலீட்டின் மூலம் இராணுவ தலைமையகம் அமைவுற்றிருக்கும் பிரதேசம் அடங்கலான பகுதியில் உல்லாச ஹோட்டல் நிர்மாணிக்கப்படும் எனவும் அவர் குறிப் பிட்டார். இராணுவ தலைமையகம் உள்ளிட்ட முப்படை தலைமையகங்களும் பத்தர முல்லையிலுள்ள 55 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட காணியில் அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

களுத்துறை தீயணைப்பு மற்றும் அனர்த்த சேவைப் பிரிவு, களுத்துறை நகர சபையின் இணையதள அங்குரார்ப்பண வைபவம் என்பன பிரதியமைச்சர் ரோகித அபேகுண வர்தன தலைமையில் களுத்துறை நகர மண்டப வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் இந்தியத் துணைத்தூதரகத்தை யாழ்ப்பாணத்தில் திறந்து வைத்து உரை நிகழ்த்தினார்.

Kirishna_SM_ExternalAffairsMinister_Indiaவட மாகாணத்தைச் சேர்ந்த யாழ்ப்பாண மக்களுக்கும் தென்னிந்தியாவிலுள்ள மக்களுக்கும் உள்ள உறவு தொடர்பாக தெரியாவிட்டால் இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலான உறவு பூரணமடையாது என யாழ்ப்பாணத்தில் வைத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா குறிப்பிட்டுள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத்தூதரகத்தை திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல நூற்றாண்டு காலமாக இந்தியாவின் வரலாறு கலாசாரம், சமயம், வர்த்தகம் போன்றவற்றுடன் தொடர்புபட்டே இருந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியத் துணைத்தூதரகத்தை யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிப்பதற்கு இதுவே பொருத்தமான காரணம் எனவும் அவர் தெரிவித்தார். இன்று சனிக்கிழமை யாழப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா இந்திய அரசின் உதவியுடனான நூறு உழவு இயந்திரங்களையும் வழங்கி வைத்தார்.

._._._._._.

யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகம் இன்று திறப்பு- 27 Nov 2010

MR&SM_Kirishnanஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தியத் துணைத் தூதரகத்தை இன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கிறார். இன்று காலை யாழ்ப்பாணம் செல்லும் அவர், விவசாயிகளுக்கு 500 டிராக்டர் வண்டிகளைக் கையளிப்பதுடன், யாழ்ப்பாணம் பலாலி வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் துணைத் தூதரகத்தை திறந்து வைக்கவுள்ளார்.

அதன் பின்னர் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படவிருக்கும் 50,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தின் முதற் கட்டமான 1,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தை அரியாலையில் அங்குரார்ப்பணம் செய்யவுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து மதவாச்சி செல்லும் இந்திய வெளிவிவகார வட பகுதிக்கான புகையிரதப் பாதை அமைக்கும் திட்டத்தையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இத்திட்டம் மூன்று கட்டங்களாக அமைக்கப்படவுள்ளன. மதவாச்சியிலிருந்து மடு வரையும், மடுவிலிருந்து தலை மன்னார் வரையிலும், ஓமந்தையிலிருந்து பளை வரையிலுமாக அமைக்கப்படவுள்ளன.

“தென்னிலங்கையில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்த முடியுமானால் யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் குடியேற விரும்புவதில் என்ன தவறு?” -ஜனாதிபதி தமிழ் கட்சிகளிடம் கேள்வி.

கொழும்பில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஆதிக்கம் செலுத்த முடியுமானால் வடக்கில் சிங்கள மக்கள் குடியேற விரும்புவதை தவறு என எவ்வாறு கூறமுடியும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் கட்சிகளிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

நேற்று தமிழ்கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய போது வடக்கில் இராணுவக் குடியிருப்புக்கள் அமைக்கப்படுவது குறித்து தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளரும் தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிப்பவருமான எம்.கே சிவாஜிலிங்கம் ஜனாதிபதியிடம் தெரிவித்த போது சற்று உணாச்சிவசப்பட்ட நிலையில் ஜனாதிபதி இக்கேள்வியைக் கேட்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தாரான ந.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

தெற்கில் தமிழ் மக்கள் குடியேறி ஆதிக்கம் செலுத்த முடியுமானால் வடக்கில் ஏன் சிங்கள மக்கள் குடியேறி வாழ முடியாது? அதில் என்ன தவறு இருக்கின்றது? என ஜனாதிபதி தமிழ் கட்சிகளிடம் கேட்டுள்ளார்.

அத்துடன் பாதுகாப்பின் அவசியம் கருதி வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி சிறு குற்றங்களுக்காக சிறைகளிலுள்ள தமிழ் கைதிகள் தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்தி அக்கைதிகளின் விரைவான விடுதலைக்கு நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு தான் உத்தரவிடுவதாக தெரிவித்துள்ளார். நேற்றைய சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் முக்கியஸ்தரான எம்.கே சிவாஜிலிங்கம் கருத்துக்கூறுகையில் ஜனாதிபதியுடனா சந்திப்பு திருப்தியளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி.

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கியதால் மாணவன் ஒருவர் உயிரிழந்தார். நேற்று மாலை யாழ் புங்கன்குளம் வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிவநாதன் தயானந்தன் என்ற 15 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்தார்.

நேற்று யாழ்ப்பாணம் உட்பட வடபகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்தது. இவ்வேளையில் கோழிக்கூடு ஒன்றை வேறு இடத்தில் மாற்றி வைக்க முயன்ற மாணவனே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மற்றுமொரு சிறுவன் கடும் காயங்களுக்குள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் மழையினால் இடம்பெயரும் மக்கள் பொது இடங்களில் தங்க அனுமதி மறுப்பு.

தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக கிளிநொச்சிப் பகுதியிலும் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஆனால், இவ்வாறு இடம்பெயரும் பொதுமக்கள் பொது இடங்களில் தங்குவதற்கு படையினர் தடைவிதித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடம்பெயர்ந்து மீள்குடியமர்த்தப்பட்ட மக்களில் பலர் இன்னமும் தறப்பாள் கூடாரங்களில் தங்கி வரும் நிலையில, அக்கூடாரங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவற்றிலிருந்து இடம்பெயர வேண்டி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இடம்பெயரும் மக்கள் அருகிலுள்ள பாடசாலைகள். கோவில்களுக்குச் செல்ல முற்பட்டபோது படையினர் அவ்வாறு அவர்கள் அங்கு தங்க அனுமதி மறுத்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் நண்பர்கள் உறவினர்கள் விடுகளில் தற்போது தங்கியுள்ளனர்.