செய்திகள்

செய்திகள்

செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இரு இறங்குதுறைகள் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்படவுள்ளன.

புனர்நிர்மானம் செய்யப்பட்ட காக்கைதீவு, நாவாந்துறை ஆகிய இரு இறங்குதுறைகளும் மக்களின் பாவனைக்குத் விடப்படவுள்ளன. எதிர்வரும் 19ஆம் திகதி வைபவ ரீதியாக இப்பாதைகள் மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்பட வுள்ளதாகவும், இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும், சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஜெய்கா’ நிறுவனத்தின் 30 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் இவ்விரு இறங்குதுறைகளும் புனர் நிர்மானம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.மாநகரசபைக்குட்பட்ட வீதிகள் ‘காப்பெற்’ வீதிகளாக மாற்றப்படவுள்ளன.

யாழ்.மாநகரசபையின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட வீதிகள் ‘காப்பெற்’ வீதிகளாக மாற்றியமைக்கப்படவுள்ளதாக யாழ்.மாநகரசபை முதல்வர் திருமதி யோ.பற்குணராசா தெரிவித்துள்ளார். இதன்படி சிறு வீதிகளும் இவ்வாறு மாற்றியமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது பெய்து வரும் மழையால் சேதமடைந்துள்ள வீதிகள் துரிதகதியில் திருத்தியமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது யாழ்.ஸ்ரான்லி வீதி இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

26 வருடங்களின் பின் களுவாஞ்சிக்குடியில் நீதவான் நீதிமன்றினை இயங்கச் செய்ய நீதிஅமைச்சர் இணக்கம்

களுவாஞ்சிக்குடியில் 26 வருடங்களின் பின்னர் நீதவான் நீதிமன்றத்தை இயங்கச் செய்வதற்கு புதிய நீதிஅமைச்சர் ரவூப் ஹக்கீம் இணக்கம் தெரிவித்துள்ளார். களுவாஞ்சிக்குடியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த இந்நீமன்றம் யுத்தம் காரணமாக 1984 ஆம் ஆண்டு தொடக்கம் இயங்கவில்லை. இந்த நீதிமன்றக் கட்டடத்தில் தற்போது விசேட அதிரடிப்படையினரின் முகாம் அமைந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்து இது தொடர்பாக அவரது கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்தே களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றினை மீண்டும் இயங்கச் செய்ய அவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் காலம் கடந்த பிறப்புப் பதிவுகளுக்கு நடமாடும் சேவை.

யாழ்.மாவட்டத்தில் காலம் கடந்த பிறப்புகள் பதிவு தொடர்பாக நடமாடும் சேவை நடத்தப்பட்டு வருகின்றது. ஆனால், இந்த நடமாடும் சேவைகளுக்கு பிள்ளைகளுடன் தாய்மார்களே 95 சத வீதம் வருகை தருவதாகவும் தந்தைமார் வருவதில்லை எனவும் பதிவாளர் நாயகம் என்.சதாசிவ ஐயர் தெரிவித்துள்ளார்.

இதனால் தந்தையரின் விபரங்களைப் ஆவணங்கள் மூலமாகப் பெறுவதில் நேர விரயம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தந்தைமார் பிள்ளைகளுடன் வரும்பொழுது அவர்களது கையெழுத்துடன் பதிவுகளை இலகுவாக மேற்கொள்ள முடியும் எனவும். காலம் கடந்த பிறப்புப் பதிவுகளை மேற்கொள்ளும் போது தந்தைமார் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தடுப்பு முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 211 பேர் இம்முறை க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களிலும் சித்தி.

000stud.jpgதடுப்பு முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகளில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் இம்முறை 360 பேர் தோற்றியதாகவும் அவர்களில் 211பேர் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதியைப் பெற்றுள்ளனர் எனவும் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சசந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். இவர்களில் 40பேர் பல்கலைக்கழத்திற்குத் தெரிவாகும் வாய்புக் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் 1இலட்சத்து 50 ஆயிரம் பேர் வரை பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுளளனர். ஆனால் புள்ளிகளின் அடிப்படையில் 22ஆயிரம் பேர் மட்டுமே பல்கலைக்கழகத்தில் உள்வாங்கப்படுவர் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட மாணவிகள் மத்தியில் நடத்தைப் பிறழ்வுகள் அவதானிக்கப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்டப் பாடசாலை மாணவிகளின் மத்தியில் நடத்தைப்பிறழ்வுகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சமகாலத்தில் 15 வயது தொடக்கம் 19 வயது வரையிலான மாணவிகள் மத்தியில் இந்நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலைமை தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலை பெண் நோயியல் வைத்திய நிபுணர்களும் உளநல மருத்துவ நிபுணர்களும் இணைந்து பெற்றோர் ஆசிரியர்களை ஒன்று கூட்டி கலந்துரையாடி வருகின்றனர்.

மாணவர்களின் நடப்தைப்பிறழ்வுகள் தொடர்பான காரணிகளை ஆராய்ந்து பெற்றோர், ஆசிரியர்கள் எவ்வாறு அவர்களை வழிநடத்தலாம் என்பது குறித்து இக்கலந்துரையாடல்களில் ஆராயப்பட்டு வருகின்றது. யாழ் நகரிலுள்ள பெண்கள் பாடசாலைகளில் வகுப்பு ரீதியாக பெற்றோர் ஆசிரியர்களை உள்ளடக்கி இக்கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாணவிகள் தினமும் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பாதிப்புகள், யாழ்.போதனா வைத்தியசாலையில் அவர்கள் எதிர்கொள்ளும் வைத்தியப் பிரச்சினைகள் குறித்து வைத்திய நிபுணர்களும் உளமருத்துவ நிபுணர்களும் உணர்வு பூர்வமாக பெற்றோர் ஆசிரியர்களுக்கு விளக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டார்.

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கபட்டுள்ளார். மாணிக்கப்போடி சசிகுமார் (வயது 35) என்ற தமிழ் ஊடகவியலாளர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மூவர் கொண்டு குழுவினரால் தாக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு ஜெயந்திபுரத்திலுள்ள அவரது வீட்டில் வைத்தே இவர் தாக்கப்பட்டுள்ளார். இதாக்குதலினால் தலையிலும் கையிலும் காயமேற்பட்டுள்ள நிலையில் அவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வயலில் தேங்கி நின்ற நீரை வானம் உறிஞ்சியது. நவாலியில் மக்கள் வியப்புடன் அவதானித்தனர்.

வயல் நிலத்தில் தேங்கியிருந்த மழை வெள்ளத்தை வானம் உறிஞ்சிய காட்சியை நேற்று ஞாயிற்றுக்கிழமை நவாலி மேற்கில் பொதுமக்கள் கண்டு அதிசயித்தனர். யாழ்.நவாலி மேற்கில் நண்பகல் வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றது. வயல் வெளியில் தேங்கி நின்ற நீர் திடீரென் பெரும் ஒலியுடன் வானை நோக்கி சுழன்று சுழன்று சென்றது. இதனை அதிசயத்துடன் பார்த்த மக்கள் அச்சமடையவும் செய்தனர் சுனாமி அல்லது சூறாவளி ஏற்பட்டு விட்டதென அவர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடியதையும் காணக்கூடியதாகவிருந்தது.

இந்நீர் உறிஞ்சல் சுமார் அரைமணி நேரம் இடம்பெற்றது. கடந்த இரு நாட்களாக மழை விட்ட நிலையில் கடும் வெப்பம் நிலவியது. வளியமண்டலத்திலுள்ள அமுக்க வேறுபாடு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும், இவ்வாறான சம்பவம் சாதாரணமாக இடம்பெறக்கூடியதுதான் என வளிமண்டலவியல் அவதான நிலைய பொறுப்பதிகாரி புஸ்பநாதன் தெரவித்துள்ளார். இவ்வாறான மினி சூறாவளிகள் மக்களின் உயிர் மற்றும், உடமைகளுக்கும் சேதத்தை எற்படுத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நீரை வான் உறிஞ்சும் சம்பவங்கள் சில சமயங்களில் கடலில் தோன்றுவதை பலர் அவதானித்துள்ளனர் ஆனால், வயல் நீர் இவ்வாறு உறிஞ்சப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் வியப்பினை எற்படுத்தியுள்ளது.

குடாநாட்டில் புதிய இராணுவ காவல்நிலையங்கள் தோற்றம் பெறுகின்றன.

போர் முடிவிற்கு வந்ததன் பின்னர் யாழ்.குடாநாட்டில் கட்டம் கட்டமாக அகற்றப்பட்டு வந்த இராணுவ காவலரண்கள், சோதனைநிலையங்கள் என்பன மீண்டும் புதிய முறையில் அமைக்கப்பட்டு வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

குடாநாட்டு வீதிச் சந்திகளின் சில இடங்களில் இராணுவ சோதனை நிலையங்களையும், காவலரண்களையும் இராணுவத்தினர் புதிதாக அமைத்து வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது. முன்னர் இருந்த இடங்களிலேயே இவை மீண்டும் அமைக்கப்பட்டு வருகின்றன.

அண்மையில் இணுவில் கந்தசாமி கோவில் சந்தியிலும், வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவில் தேர்முட்டிக்கு அருகாமையிலும் புதிய இராணுவ காவல்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடாநாட்டின் சில பகுதிகளில் இவ்வாறு புதிய இராணுவ காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் கட்சிகளின் அரங்கம் – தமிழ்தேசியக்கூட்டமைப்பு சந்திப்பில் பொது விடயங்களில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

Sivajilingam_M_Kதமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகளும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் நேற்று சனிக்கிழமை நடத்திய சந்திப்பில் இனப்பிரச்சனைக்கு தகுந்த தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்கும் விடயத்தில் இணைந்து செயற்பட இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

இதன்போது பொதுத்தீர்வுத்திட்டம் ஒன்றைக் காணும் வகையில் ஆறு பேர் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் கூட்டமைப்பின் சார்பில் மூவரும் தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் சார்பில் மூவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சனைக்கான தீர்வு காணும் வகையில் அனைத்துத் தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதெனவும் நேற்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கொழும்பு அலுவலகத்தில் நேற்றுப் பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமான இச்சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது. தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட குழு தனது சிபார்சுகளை இரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் பேச்சாளரும் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமான எம்,கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை. இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் மீள்குடியமர்வு, தமிழ் பிரதேசங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுகின்றமை, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் போன்ற விடயங்களில் தமிழ் கட்சிகள் இணைந்து செயற்படுவது முக்கியமானது எனவம், தமிழ் கட்சிகள் யாவும் ஓரணியில் நின்று சமர்ப்பிக்கும் யோசனைகளை அரசாங்கம் நிராகரிக்க முடியாது எனவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.