செய்திகள்

செய்திகள்

செய்திகள்

நல்லிணக்க ஆணைக்குழு தடுப்பு முகாம்களுக்கும் செல்லவுள்ளது.

படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினர் தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களுக்கும் செல்லவுள்ளதாக ஆணைக்குழுவின் பிரதிச் செயலாளர் வருண டி சேரம் தெரிவித்துள்ளார். இவ்வகையில் அம்பேபுஸ்ஸ புனர்வாழ்வு முகாம் மற்றம் காலி, பூஸா முகாம்களுக்கும் ஆணக்குழுவினர் செல்லவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆணைக்குழுவின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் புத்தளம், மன்னார் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார். ஜனவரி 7ஆம் திகதி புத்தளத்திலும், 8, 9ஆம் திகதிகளில் மன்னாரிலும், 22ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை அம்பாறையிலும் சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆணக்குழுவின் அமர்வுகள் மொனராகலை, அநுராதபுரம், பொலநறுவை ஆகிய மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் வாகன சாரதிகளிடம் தீவிரமாக இலஞ்சம் பெறும் பொலிஸார்!

கிளிநொச்சியில் போக்குவரத்துக் கண்காணிப்புக் கடமையில் ஈடுபட்டு வரும் பொலிஸார் சிலர் உள்@ர் வாகன ஓட்டுநர்களிடம் இலஞ்சம் வாங்குவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சிப் பிரதேசத்தில் கடந்த காலத்தின் யுத்தசூழல் காரணமாக வாகனங்களின் ஆவணங்களை பலர் தொலைத்துள்ளனர் அவற்றை மீளப்பெறும் நடவடிக்கைகளிலும் அவர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். மோட்டார் சைக்கிள் வைத்திருக்கும் பலர் சாரதி அனுமதிப்பத்திரங்கள் பெற்றிருக்கவில்லை. இறுதிக்கட்டப் போரின் போது கைவிடப்பட்டு, தற்போது மீட்கப்பட்டுள்ள பல வாகனங்கள் திருத்தியமைக்கப்பட்டு வரும் நிலையில். அவற்றில் ‘சிக்னல் லைற்’ போன்றவை இயங்காத நிலையில் பலர் பாவனைக்குட்படுத்தி வருகின்றனர்.

இவற்றில் ஏதோவொரு குறைப்பாட்டை அவதானித்து அவர்களிடம் இலஞ்சம் வாங்குவதில் குறித்த பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருதாக அவர்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பணமாக இலஞ்சம் பெறல், சம்பந்தப்பட்டவரை கடைகளுக்கு அழைத்துச்சென்று தாங்கள் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கு பணம் செலுத்துமாறு வற்புறுத்தல் போன்ற நடவடிக்கைகளில் குறித்த பொலிஸார் ஈடுபட்டு வருவதாகவும் கிளிநொச்சியில் இவ்வாறான சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இரு பெண்கள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வுவனியாவில் இரு பெண்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திலேயே இவ்விரு பெண்கள் காணாமல் போன சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வுவனியா சேமமடுவைச் சேர்ந்த 22 வயதான பெண்ணொருவர் வவுனியா பஸ் நிலையத்தில் வைத்து காணமால் போயுள்ளதாகவும், நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை காலை வவுனியா மாவட்டச் செயலகத்தில் தொழில்புரியும் பெண்ணான ஜெயசீலன் ஜெயப்பிரவீனா (வயது 25) என்ற பெண்ணும் காலையில் தொழிலுக்குச் சென்ற வழியில் காணமால் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒருவாத்தில் இடம்பெற்ற இரு பெண்கள் காணாமல் போயுள்ள சம்பவங்கள் அப்பகுதி மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கில் இரு நெற்களஞ்சியங்கள் உடனடியாக அமைக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு.

பெரும்போக நெற்செய்கையினால் கிடைக்கப்பெறும் நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கு வடக்கில் இரு நெற் களஞ்சியங்களை 80 மில்லியன் ரூபா செலவில் அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவ்விரு நெற்களஞசியங்களையும் உடனடியாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி பணிப்புரை விடுத்துள்ளார்.

இக்களஞ்சியங்களை அமைக்க வடமாகாண சபை, வடக்கின் மீள்எழுச்சித்திட்டம் என்பவற்றின் ஊடாக 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வடக்கில் பெரும்போகத்தில் ஒரு இலட்சம் ஏக்கரில் நெற் செய்கை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் புனரமைக்கப்பட்டு வரும் 17 பாடசாலைகள் விரைவில் மீள இயங்கவுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

மீள்குடியேற்றத்தின் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் இன்னமும் ஆரம்பிக்கப்படாமலுள்ள 17 பாடசாலைகள் விரைவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள நான்கு பிரதேசச் செயலர் பிரிவுகளிலுள்ள 17 பாடசாலைகளின் புனர்நிர்மானப்பணிகள் முடிவடைந்து வருகின்ற நிலையில் இவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 84 பாடசாலைகள் மீள இயங்கி வருவதாகவும், இப்பாடசாலைகளில் 26 ஆயிரத்து 649 மாணவர்கள் கல்வி கற்று வருவதாகவும், ஆயிரத்து 494 ஆசிரியர்கள் கற்பித்தலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்காக 150 முஸ்லிம் மக்கள் புத்தளத்திலிருந்து வருகை.

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்காக புத்தளத்திலிருந்து ஒரு தொகுதி முஸ்லிம் மக்கள் நேற்று செவ்வாய் கிழமை யாழ்ப்பாணம் வந்துள்ளனர். முதற்கட்டமாக 150 முஸ்லிம் குடும்பத் தலைவர்கள் வருகை தந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினர் சில தினங்களில் வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்ப்டுள்ளது. இந்த முதற்கட்ட குழுவில் யாழ். மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் எம்.ஜீ. பஷீரும் இடம்பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்டு புத்தளத்தில் வசித்து வந்த இம்மக்கள் ‘வளமான சிறீலங்காவைக் கட்டியெழுப்புவோம்’, என்ற அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

சரணடைந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை சமூகத்துடன் இணைப்பதற்கான செயலமர்வு.

சரணடைந்துள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை சமூகத்துடன் இணைப்பது தொடர்பாக நேற்று செவ்வாய் கிழமை மட்டக்களப்பில் விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு டேபோ மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

புனர்வாழ்வு ஆணையாளர் சுசந்த ரணசிங்க தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பிரதேசச்செயலர்கள் மற்றும், சமய சமூகத்தலைவர்கள் ஆகியோர், கலந்து கொண்டனர்.

சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்களை மீள்குடியேற்ற புனர்வாழ்வு ஆணையாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதன் ஒரு கட்டமாகவே இவர்களை சமூகத்துடன் இணைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு நிவாரணப்பொதிகள் வழங்கப்படவுள்ளன.

அண்மைக் காலமாக பெய்து வரும் கடும்மழை காரணமாக வடபகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க 45 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்ற அமைச்சில் நேற்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ண வீரக்கோன் இத்தகவலைத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் பாவனைப் பொருட்களடங்கிய நிவாரணப் பாதி வழங்கப்படவுள்ளதாகவும் இந்நிவாரணப் பொதி ஒவ்வொன்றும் 4ஆயிரத்து 500 ரூபா பெறுமதியானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரை வடபகுதிக்கு சென்று நேரில் இவற்றை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வன்னி இறுதிக்கட்டப் போரில் திறமையாக பணியாற்றிய படை வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவிப்பு.

வன்னியில் இறுதிக்கட்டப்போரில் ஈடுபட்ட படைவீரர்களில் ஆயிரம் பேருக்கு நேற்று செவ்வாய் கிழமை பதக்கங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கும் இறுதிக்கட்டப் போரில் மிகவும் திறமையாக செயற்பட்ட முப்படைகளையும் சேர்ந்த ஆயிரம் படைவீரர்களுக்கே இப்பதக்கங்கள் வழங்கப்பட்டன.

அலரிமாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. பிரதமர் டி.எம்.ஜயரட்ண, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மாஅதிபர் ஆகியோரும் இந்நிழ்வில் கலந்து கொண்டனர்.

இராணுவத்தைச்சேர்ந்த 680 பேருக்கும், கடற்படையைச் சேர்ந்த 170 பேருக்கும், விமானப்படையைச் சேர்ந்த 85 பேருக்கும், பொலிஸ் துறையைச் சேர்ந்த 65 பேருக்குமே இப்பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்து ஆராய தமிழ்தேசியக் கூட்டமைப்பு சார்பில் மூவர் தெரிவு.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்காக கூட்டமைப்பின் சார்பில் மூவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகிய மூவருமே கூட்டமைப்பின் சார்பில் தெரிவு செய்யப்பட்டவர்களாவர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் ஒன்றிணைந்து செயற்படுவது என கடந்த சனிக்கிழமை பத்து தமிழ் கட்சிகள் இணைந்துள்ள தமிழ் கட்சிகளின் அரங்கமும் தமிழ்தேசியக் கூட்டமைப்பும் கலந்துரையாடி இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதையடுத்து இதற்காக இருதரப்பிலிருந்தும் ஆறு பேர் கொண்ட குழுவொன்றினை அமைப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதனடிப்படையிலேயே கூட்டமைப்பு தங்கள் சார்பில் மூவரைத் தெரிவு செய்துள்ளது. தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் சார்பிலும் மூவர் தெரிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.