செய்திகள்

செய்திகள்

செய்திகள்

சீன விண்வெளி நிலையத்தை நெருங்கிய எலன் மஸ்க்கின் செயற்கைக்கோள்கள் – ஐ.நாவில் முறைப்பாடு !

ஐ.நா. சபையில் சீனா எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மீது புகார் அளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தங்கள் விண்வெளி நிலையம் மீது எலன் மஸ்க்கின் செயற்கைக்கோள்கள் இரு முறை நெருங்கியது என சீனா தெரிவித்துள்ளது.

உலகின் பிரபல பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க் தனது நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மூலம் பல்வேறு செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்தியுள்ளார். அந்த செயற்கைக்கோள்களில் சில கடந்த யூலை1 மற்றும் ஒக்டோபர் 21 ஆகிய திகதிகளில் தங்கள் நாட்டு விண்வெளி நிலையத்திற்கு மிக அருகே மோதுவது போல் வந்ததாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

செயற்கைக்கோள்கள் மோதுவது போல் வந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக சீன விண்வெளி நிலையம் தடுப்பு மோதல் தவிர்ப்பு கட்டுப்பாடு நடவடிக்கைகளை பின்பற்றியது என சீனா தெரிவித்துள்ளது.

உலகை சுற்றி வரும் 19 வயது பெண் சாரா ரதர்போர்ட் இலங்கையில் !

இலகு ரக விமானத்தில் உலகை சுற்றி வரும் பெல்ஜியம் நாட்டவரான சாரா ரதர்போர்ட்  நேற்று இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

உலகை சுற்றி வந்த இளம் பெண் என்ற கின்னஸ் சாதனையை படைக்க சாரா திட்டமிட்டுள்ளார். 19 வயதான அவர் தனது உலக சுற்றுப்பயணத்தை இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பித்திருந்தார்.

5 கண்டங்களுக்குள் உள்ளடங்களும் 52 நாடுகளுக்கு பயணிப்பதே அவரது இலக்காகும். சாரா 2022 ஜனவரி மாதம் நடுப்பகுதியில் தனது பயணத்தை முடிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அணுகுண்டால் கூட துளைக்க முடியாது – பிரதமர் மோடி பயணிக்கும் புத்தம்புது மேபெக் கார்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, விசேஷ பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புத்தம்புதிய மெர்சிடிஸ் மேபேக் எஸ் 650 காரில் பயணம் செய்து வருகிறார்.

சமீபத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்திருந்த போது ஹைதராபாத் இல்லத்தில் அவரை வரவேற்க பிரதமர் மோடி முதன்முறையாக இந்த காரில் வந்திருந்தார். அவருக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் SPG எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் பரிந்துரையின் பேரில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த கார் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் காரில் VR10 என்ற உயர் ரக பாதுகாப்பு அம்சம் உள்ளது. இக்காரின் விண்டோ கண்ணாடிகள் துப்பாக்கி புல்லட்களாலும், அணுகுண்டுகளாலும் துளைக்கமுடியாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. வெடி குண்டு தாக்குதலில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது. இதுபோன்று மேலும் பல பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த காரில்தான் பிரதமர் இப்போது பயணிக்கிறார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

திணறும் பிரான்ஸ் – ஒரே நாளில் 1.79 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா !

உலகை உலுக்கி வருகிற ஒமிக்ரோன் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ம் திகதி முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த ஒரு மாத காலத்தில் அந்த வைரஸ் 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் கொரோனா தொற்று அதிகரிக்க இந்த ஒமைக்ரான் திரிபுதான் காரணம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் பிரான்ஸ் 7-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1.79 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையடுத்து, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 93.26 லட்சத்தைக் கடந்துள்ளது.
அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.23 லட்சத்தைத் தாண்டியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

“பெண்களுக்கு கல்வி மறுப்பு ஆப்கான் கலாசாரத்தின் ஒரு அம்சம்” – பாக்.பிரதமர் இம்ரான்கான்

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதிலிருந்து, அங்கு பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வரும் நிலையில், பெண்களுக்கு உரிமைகளும் முழுமையாக பறிக்கப்பட்டு விட்டன. அவர்களால் கல்வி கற்க மட்டுமல்ல, வீட்டை விட்டு வெளியே கூட செல்லக் கூடாது என்ற அளவிற்கு கட்டுபாடுகள் உள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உலகளாவிய மனித உரிமை அமைப்புகள், 2021 ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு மிகவும் மோசமான ஆண்டாகும் என கூறியுள்ளனர்.

அங்கு பெண்கள் அலுவலகம் செல்ல அனுமதிக்கப்படாத நிலையில், சர்வதேச அரங்கில் தலிபான்களின் உண்மை முகம் வெளிப்படும் வகையில், காபூல் நகரில் கடை முகப்புகளில் பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்தும், அதை கடைகளில் இருந்து அகற்றும் படங்களும் வெளியாகின.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு ஆப்கானிஸ்தான் பெண்கள் தொடர்பாக வெறுப்பு கருத்து தெரிவித்ததற்காக உலகளவில் ட்ரோல் செய்யப்பட்டார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட மேற்கத்திய அரசாங்கங்களின் பிரதிநிதிகள், “பெண்களுக்கு கல்வி கற்பிக்காதது ஆப்கான் கலாசாரத்தின் ஒரு அம்சம்” என்ற இம்ரான்கானின் கருத்தை நிச்சயம் கவனித்திருப்பார்கள்” என்று அல் அரேபியா போஸ்ட் தெரிவித்துள்ளது.

சில மாதங்கள் முன்னதாக, காபூல் நகராட்சியின் செய்தித் தொடர்பாளர் நெமதுல்லா பராக்சாய், காபூலில் உள்ள கடைகள் மற்றும் வணிக மையங்களின் விளம்பர பதாதைகளிலுள்ள பெண்களின் அனைத்து புகைப்படங்களையும் அகற்றுமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

“அரசாங்கத்தின் முடிவின் அடிப்படையில், இஸ்லாமிய விதிமுறைகளுக்கு எதிரான வகையில் பெண்கள் படங்களை வைத்திருக்க கூடாது. பெண்கள் உள்ள விளம்பர பலகைகள் அகற்றப்படும். விதியை மீறுபவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும்” என்று பராக்சாய் கூறினார்.

திணறும் இங்கிலாந்து – ஒரே நாளில் ஒரு லட்சத்தை தொட்ட கொரோனா தொற்று !

இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அங்கு கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இங்கிலாந்து தற்போது 4-வது இடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்தில் கடந்த ஒரு வாரமாக 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமாக கொரோனா தொற்று உறுதியாகிறது.
நேற்றும் இங்கிலாந்தில் 98,515 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 22 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பால் 143 பேர் இறந்துள்ளனர். இதனால் இங்கிலாந்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 48 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 99.61 லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போது 21 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தில் ஒமிக்ரோன் வகை கரோனா பரவலைத் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்துள்ளன. பல பகுதிகளில் இரவு கேளிக்கை விடுதிகள் மூடப்பட வேண்டும். மதுபானக் கூடங்கள், உணவகங்கள், திரையரங்குகளில் 6 பேருக்கு மேல் அனுமதிக்கப்படக் கூடாது. உள்ளரங்குகளில் 30 பேருக்கு மேலும், வெளியரங்குகளில் 50 பேருக்கு மேலும் கூடக் கூடாது என உத்தரவிடப்பட்டது.

விண்ணில் செலுத்தப்பட்ட உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த விண்வெளி அறிவியல் தொலைநோக்கி !

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் கனேடிய விண்வெளி நிறுவனம்  இணைந்து உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த விண்வெளி அறிவியல் தொலைநோக்கியான ‘ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கி உள்ளன.
பூமி தனித்துவமானதா? பூமியைப் போன்ற கிரக அமைப்புகள் இருக்கிறதா? பிரபஞ்சத்தில் நாம் மட்டும்தான் இருக்கிறோமா? போன்ற அடிப்படை கேள்விகளுக்கு பதில் தேடுவதற்கான ஆய்விற்கு, வானியலாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்த தொலைநோக்கியைப் பயன்படுத்த உள்ளனர்.
மிகவும் சக்திவாய்ந்த இந்த தொலைநோக்கியானது, தென் அமெரிக்க கண்டத்திலுள்ள ஏவுதளமான பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியன்-5 ரொக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, விண்வெளியில் வெற்றிகரமாக தனது பயணத்தை தொடர்வதாக நாசா கூறி உள்ளது. பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர்கள், (930,000 மைல்கள்) தொலைவில் உள்ள அதன் இறுதி இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

மியன்மாரில் கருப்பு கிறிஸ்மஸ் – கிராம மக்கள் 30 பேரை சுட்டுக்கொன்ற இராணுவம் !

கிறிஸ்துமஸ் தினமான சனியன்று மியன்மார் இராணுவத்தினர் கிராம மக்களை சுற்றிவளைத்து 30 க்கும் மேற்பட்டவர்களை சுட்டுக் கொன்றதுடன், உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு தீ வைத்துள்ளனர்.

இவ்வாறு பலியானவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகள்/ சிறுவர்கள் ஆவர் என்றும் கூறப்படுகிறது.

சம்பவத்தினால் ஐக்கிய அரபு இராச்சியத்தை தளமாகக் கொண்ட மனிதாபிமான குழுவின் இரு உறுப்பினர்களும் காணாமல் போயுள்ளதாக ஆதாரங்களை மேற்கொள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மியன்மாரின் கிழக்கு மோ சோ கிராமத்திலேயே இந்த சம்பவம் நடத்துள்ளது.

இந்த தாக்குதல் குறித்து சனிக்கிழமை ஒரு அறிக்கையில் உறுதிபடுத்தியுள்ள சேவ் தி சில்ட்ரன் அமைப்பு, மனிதாபிமானப் பணிகளைச் செய்துவிட்டு வீடு நோக்கி பயணித்த இரண்டு ஊழியர்கள் சம்பவத்தின் பின்னர் காணாமல்போயுள்ளதாகவும் கூறியுள்ளது.

அதேநேரம் அவர்களின் தனிப்பட்ட வாகனம் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டதையும் அது உறுதிபடுத்தியுள்ளது.

நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை ஏறக்குறைய 11 மாதங்களுக்கு முன்பு இராணுவம் கவிழ்த்ததில் இருந்து மியான்மர் கொந்தளிப்பில் உள்ளது.  பாதுகாப்புப் படையினரின் ஒடுக்குமுறையில் 1,300 க்கும் மேற்பட்ட பொது மக்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் உள்ளூர் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

“ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பெண்கள் பயணம் செய்ய கூடாது.” – தொடரும் தலிபான்களின் அடக்குமுறை !

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதையடுத்து அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்போது பயணம் செய்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து தலிபான்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-
“ஆப்கானிஸ்தானில் 72 கிலோ மீட்டர்களுக்கு மேல் பயணம் செய்யும் பெண்கள் நெருங்கிய ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பயணம் செய்ய அனுமதி கிடையாது. பயணம் செய்யும் பெண்கள் கண்டிப்பாக ஹைஜாப் அணிய வேண்டும். ஹிஜாப் அணியாத பெண்களை ஓட்டுநர்கள் வாகனங்களில் அனுமதிக்கக்கூடாது. பயணம் செய்யும் அனைவரும் வாகனங்களில் பாடல்கள் கேட்கக்கூடாது.” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த வாரம் பெண்கள் நடித்திருக்கும் தொலைக்காட்சி தொடர்களை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்பக்கூடாது என தலிபான்கள் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏலத்திற்கு வருகிறது நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறை அறையின் சாவி – தென்னாபிரிக்க அரசு எதிர்ப்பு !

தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடியவரும், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்க அந்நாட்டின் முதல் அதிபருமான நெல்சன் மண்டேலா அதிபராவதற்கு முன் தனது வாழ்வில் 27 ஆண்டுகளை சிறையில் கழித்தார்.
தென்னாப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் ராபன் தீவுகளில் உள்ள சிறைச்சாலையில் நெல்சன் மண்டேலா 18 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அந்த சிறையில் காவலராக இருந்த கிறிஸ்டோ பிராண்ட் என்பவர் நெல்சன் மண்டேலாவின் நெருங்கிய நண்பரானார்.
இதற்கிடையே, நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறை அறையின் சாவியை ஏலம் விட கிறிஸ்டோ பிராண்ட் முடிவு செய்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த கர்ன்சேஸ் என்கிற ஏல நிறுவனம் ஜனவரி 28-ம் திகதி இந்த ஏலத்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறை அறையின் சாவியை ஏலம் விடுவதற்கு தென் ஆப்பிரிக்க அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏலம் நடத்துவதை நிறுத்தவேண்டும் என கர்ன்சேஸ் நிறுவனத்தையும், கிறிஸ்டோ பிராண்டையும் அரசு வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக தென் ஆப்பிரிக்காவின் கலாசார மந்திரி நாதி தெத்வா கூறுகையில், இந்த ஏலம் குறித்து எங்கள் அரசோடு எதுவும் விவாதிக்கப்படவில்லை. இந்த சாவி தென் ஆப்பிரிக்க மக்களுக்குச் சொந்தமானது. அதை வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என தெரிவித்தார்.