செய்திகள்

செய்திகள்

செய்திகள்

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விலக ரஷ்யா முடிவு !

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை இயக்கி வருகின்றன. அங்கு அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகள் சர்வதேச விண்வெளி மையத்தில் ரஷ்யாவின் ஒத்துழைப்பை சீர்க்குலைக்கும் என ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மாஸ் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விலக உள்ளதாக ரஷ்யா திடீரென அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு நிறுவன தலைவர் யூரி போரிசோவ் கூறுகையில்,

2024- க்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு வெளியேற முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். 2024 க்குப் பிறகு ரஷ்யா சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விலகி, அதன் சொந்த சுற்றுப்பாதையை அமைப்பதில் கவனம் செலுத்த உள்ளது என்றும் அவர் கூறினார். உக்ரைனில் கிரெம்ளின் ராணுவ நடவடிக்கை தொடர்பாக ரஷ்யாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புனித வெள்ளி ஒப்பந்த சிற்பி டேவிட் டிரிம்பிள் காலமானார் !

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து நாட்டின் முதல்-மந்திரியாக இருந்த டேவிட் டிரிம்பிள் தன்னுடைய 77வயதில்  காலமானார்.  அவர் மறைந்துவிட்ட செய்தியை அவரது குடும்பத்தினர் நேற்று உறுதிபடுத்தியுள்ளதாக டிரிம்பிளின் அல்ஸ்டர் யூனியனிஸ்ட் கட்சி(யூயூபி) தெரிவித்துள்ளது.

David Trimble, key architect of Good Friday agreement, dies aged 77 |  Northern Irish politics | The Guardian

 

அவருடைய முயற்சியின் கீழ் 1998ம் ஆண்டு பெல்பாஸ்ட் ஒப்பந்தம் நிறைவேறியது. மேலும் அவர் புனித வெள்ளி ஒப்பந்தம் ஏற்பட காரணமாக திகழ்ந்த சிற்பி என்று போற்றப்படுபவர் ஆவார். அப்பகுதிகளில் 30 ஆண்டுகளாக நீடித்து வந்த செக்டேரியன் வன்முறையில் சுமார் 3600 பேர் பலியானார்கள். அங்கு கலவரத்தை முடிவுக்கு கொண்டுவந்து அமைதியை நிலைநிறுத்த, அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக அவருக்கு 1998ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

“ஏழை வீட்டில் பிறந்த மகளான நான் இன்று இந்தியாவின் ஜனாதிபதி .” – திரவுபதி முர்மு நெகிழ்ச்சி !

நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவியேற்றார். பதவியேற்ற பிறகு பாராளுமன்ற மைய மண்டபத்தில் அவர் தனது முதல் உரையை ஆற்றினார். அப்போது திரவுபதி முர்மு பேசியதாவது,

ஜனாதிபதியாக பதவியேற்றது பெருமை அளிக்கிறது. என்னை தேர்ந்து எடுத்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. முக்கியமான தருணத்தில் நாடு என்னை ஜனாதிபதியாக தேர்ந்து எடுத்துள்ளது. இன்று முதல் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகிறது.

நாடு சுதந்திரம் அடைந்து 50-வது ஆண்டை கொண்டாடும்போது எனது அரசியல் வாழ்க்கை தொடங்கியது என்பது தற்செயல் நிகழ்வாகும். சுதந்திரத்தின் 75-வது ஆண்டில் இன்று எனக்கு இந்தப் புதிய பொறுப்பு கிடைத்துள்ளது. அடுத்த 25 ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டம் தயாராகும் நேரத்தில் சேவையாற்ற வாய்ப்பு கிடைத்தது பாக்கியம். சாதாரண கவுன்சிலராக தொடங்கி ஜனாதிபதியாக உயர்ந்தது ஜனநாயகத்தின் தாயகமான இந்தியாவின் மகத்துவமாகும்.

ஏழை வீட்டில் பிறந்த மகளான நான் ஜனாதிபதி ஆக முடியும் என்பதுதான் ஜனநாயகத்தின் சக்தியாகும். ஜனாதிபதி பதவியை எட்டியது என்பது எனது தனிப்பட்ட சாதனை அல்ல. இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழையின் சாதனை ஆகும்.

என்னுடைய உயர்வு கோடிக்கணக்கான பெண்களின் கனவுகளுக்கான திறவுகோலாக இருக்கும். நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்துக்காக பணியாற்றுவேன். பெண்கள், இளைஞர்களின் நலனில் தனி கவனம் செலுத்துவேன். சுதந்திர போராட்ட வீரர்கள் நாட்டின் சுய மரியாதையை முதன்மையாக வைத்திருக்க கற்றுக்கொடுத்திருக்கின்றனர். சுதந்திர போராட்டத்தில் பழங்குடியின மக்கள் முக்கிய பங்காற்றி உள்ளனர். கொரோனா காலத்தில் உலகத்துக்கே இந்தியா பெரும் நம்பிக்கையாக திகழ்ந்தது.

அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து பாரதத்தை கட்டியெழுப்ப முனைப்புடன் செயல்படுவோம். பன்முக தன்மை கொண்ட நமது நாட்டில் பல மொழிகள், பல மதங்கள், பல உணர்வு, பழக்க வழக்கங்கள் உள்ளன. பெண்கள் மேலும் மேலும் அதிக அதிகாரத்தை பெற வேண்டுமென விரும்புகிறேன். ஒவ்வொரு துறையிலும் பெண்களுடைய பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். பல ஆண்டுகளாக முன்னேற்றம் காணாத பிற்படுத்தப்பட்டோர், ஏழைகள் என்னை அவர்களது பிரதிபலிப்பாக பார்க்கலாம். நாட்டின் முதல் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் முதல் ராம்நாத் கோவிந்த் வரை பல பிரமுகர்கள் இந்த பதவியை அலங்கரித்துள்ளனர். இந்த பதவியுடன் பெரிய பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்பையும் நாடு என்னிடம் ஒப்படைத்துள்ளது. அரசியலமைப்பின் வெளிச்சத்தில் எனது கடமைகளை மிகுந்த நேர்மையுடன் நிறைவேற்றுவேன்.

சில நாட்களுக்கு முன்பு இந்தியா 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தி சாதனை படைத்துள்ளது. இந்த முழுப் போரிலும் இந்திய மக்கள் காட்டிய கட்டுப்பாடு, தைரியம் மற்றும் ஒத்துழைப்பு இதற்கு காரணமாகும். கல்வி பற்றிய ஸ்ரீஅரவிந்தரின் கருத்துக்கள் என்னை தொடர்ந்து ஊக்குவிக்கின்றன. இளைஞர்களின் உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். எதிர்காலத்தை உருவாக்குவது மட்டுமல்ல எதிர்கால இந்தியாவுக்கு அடித்தளமிடுகிறீர்கள் என்பதை நம் நாட்டு இளைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். ஜனாதிபதி என்ற வகையில் உங்களது முழு ஒத்துழைப்பு எனக்கு எப்போதும் உண்டு. என் வாழ்க்கையில் இதுவரை பொது சேவையில் வாழ்க்கையின் அர்த்தத்தை அனுபவித்து வருகிறேன். உலக நலன் என்ற உணர்வோடு உங்கள் அனைவரின் நம்பிக்கைக்கு ஏற்ப அர்ப்பணிப்புடன் பணியாற்ற நான் எப்போதும் தயாராக இருப்பேன். இவ்வாறு தனது முதல் உரையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.

மியான்மார் – இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவர்களுக்கு உதவியதற்காக நான்கு இராணுவ வீரர்களுக்கு தூக்குதண்டனை!

பயங்கரவாத செயல்களுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு ஜனநாயக ஆர்வலர்களை மியன்மாரின் இராணுவ அதிகாரிகள் தூக்கிலிட்டுள்ளனர்.

பல தசாப்தங்களின் பின்னர் நாட்டின் அமுல்படுத்தப்பட்ட முதல் மரணதண்டனை இதுவென சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்தை எதிர்த்துப் போராட, போராளிகளுக்கு இவர்கள் உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த தண்டனைகள் சர்வதேச கண்டனத்தை ஈர்த்துள்ள அதேவேளை, மக்கள் மத்தியில் பயத்தைத் தூண்டும் மோசமான முயற்சி என ஐ.நா நிபுணர்கள் இருவர் தெரிவித்துள்ளனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகியின் நெருங்கிய கூட்டாளி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்சில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் துப்பாக்கி சூடு – மூவர் பலி !

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த கொடூர தாக்குதலில் மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். விசாரணையில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் நபர் ஏற்கனவே விசாரணைக் கைதியாக போலீஸ் காவலில் இருந்தவர் என தெரிய வந்துள்ளது.

துப்பாக்கிச்சூடு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவின்போது துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் பிலிப்பைன்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கறுப்பு ஜுலை நினைவு தினத்தையொட்டி ஜஸ்ரின் ட்ரூடோ அறிக்கை !

கையெழுத்தானது உக்ரைன் – ரஷ்யா இடையேயான ‘கண்ணாடி’ ஒப்பந்தம் !

ரஷ்யாவின் பெப்ரவரி 24 படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைனிய தானியங்களின் உலகப் பற்றாக்குறை மில்லியன் கணக்கானவர்களை பட்டினி ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

படையெடுப்பு, உணவு விலைகளை உயர்த்தியது, எனவே உக்ரைனின் துறைமுகங்களைத் தடுப்பதற்கான ஒப்பந்தம் முக்கியமானது. ஒடேசாவில் சுமார் 20 மில்லியன் டன் தானியங்கள் இருப்புகளில் சிக்கியுள்ளன.

இந்த நிலையில், உக்ரைனும் ரஷ்யாவும் தானிய ஏற்றுமதியை கடல் வழியாக மீண்டும் தொடங்க அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

கண்ணாடி’ ஒப்பந்தம் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், தற்போது உக்ரைனில் போரினால் சிக்கியுள்ள மில்லியன் கணக்கான டன் தானியங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும்.

ரஷ்யாவின் பெப்ரவரி 24 படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைனிய தானியங்களின் உலகப் பற்றாக்குறை மில்லியன் கணக்கானவர்களை பட்டினி ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

இருப்பினும், உக்ரைன், ரஷ்யாவுடன் நேரடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டது.

இரு தரப்பினரும் இஸ்தான்புல்லில் நடந்த கையெழுத்து நிகழ்வில் கலந்து கொண்டனர். ஆனால் ஒரே மேசையில் அமரவில்லை.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு முதலில் ரஷ்யாவின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், அதைத் தொடர்ந்து உக்ரைனிய உட்கட்டமைப்பு அமைச்சர் ஓலெக்சாண்டர் குப்ராகோவ் உக்ரைனின் ஒத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இந்த ஒப்பந்தம் அடைய இரண்டு மாதங்கள் எடுத்தது. இது 120 நாட்களுக்கு நீடிக்கும் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டால் புதுப்பிக்க முடியும்.

இதற்காக, இஸ்தான்புல்லில் ஒரு ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு மையம் நிறுவப்பட உள்ளது, ஐ.நா., துருக்கிய, ரஷ்ய மற்றும் உக்ரைனிய அதிகாரிகளால் இது இயக்கப்படும்.

பொருளாதார நெருக்கடி – பதவியை ராஜினாமா செய்தார் இத்தாலி பிரதமர் !

இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக தனது பதவியை நேற்றைய தினம் ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் இத்தாலியின் பிரதமராக மரியோ ட்ராகி பதவியேற்றார்.

அதன் பின்னர் அந்நாட்டில் எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகரித்து வருகின்றன. இதனால் கடும் நெருக்கடிக்கு ட்ராகி உள்ளானார்.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டபோது, கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. அப்போது பதவி விலக தயார் என ட்ராகி அறிவித்தார்.

அவர் அறிவித்த ஒரு வாரம் கழித்து, தற்போது ஜனாதிபதி மாளிகையில் தனது ராஜினாமாவை அளித்துள்ளார். அதனை இத்தாலி ஜனாதிபதி செர்ஜியோ மேட்டரெல்லா ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் நாம் இணைந்து செய்த அனைத்து பணிகளுக்கும் நன்றி என தனது ராஜினாமா குறித்து வெளியிட்ட அறிக்கையில் மரியோ ட்ராகி குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், தற்போதைய விவகாரங்களைக் கையாள்வதற்காக தனது அரசாங்கம் பதவியில் இருக்கும் என்று ஜனாதிபதி மேட்டரெல்லா கூறியுள்ளார். ஆனால் அடுத்து என்ன நடக்கும் என்று சரியாக அவர் கூறவில்லை.

2023ஆம் ஆண்டின் முதல் பாதியில் தேர்தல்கள் நடைபெறவிருந்தன, ஆனால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டவுடன் செப்டம்பர் நடுப்பகுதி அல்லது அக்டோபர் தொடக்கத்தில் தேர்தல்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் 15ஆவது ஜனாதிபதியாக தெரிவானார் பழங்குடியின பெண் – யார் இந்த திரௌபதி முர்மு ..?

இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக திரெளபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, திரெளபதி முர்மு, இந்தியாவின் முதல் பழங்குடியின மற்றும் இரண்டாவது பெண் ஜனாதிபதி என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம், அடுத்த மாதம் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

யார் இவர்..?

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவரான திரௌபதி முர்மு பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர். குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட இவர் இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்று உள்ளார். ஒடிசாவின் மாயுர்பஞ்ச் மாவட்டத்தில் கடந்த 1958 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி பிறந்தார் திரௌபதி முர்மு. கடந்த 2017 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலின்போதும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக இவரது பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், பீகாரை சேர்ந்த ராம்நாத் கோவிந்துக்கு கோவிந்துக்கு பாஜக தலைமை வாய்ப்பு வழங்கியது.

ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் பட்டம் படித்த இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் மற்றும் சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். பட்டப்படிப்பை முடித்த பிறகு ஆசிரியராக பணியாற்றிய இவர், அதன் பின்னர் அரசு ஊழியராக நீர்வளம் மற்றும் மின்சார துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றியவர். பின்னர் ஒரு சாதாரண கவுன்சிலராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய திரௌபதி முர்மு 2 முறை ஒடிசா மாநில சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து இருக்கிறார்.

பாஜகவை சேர்ந்த இவர் கடந்த 2000 வது ஆண்டில் ஒடிசாவில் பாஜக, பிஜு ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது அமைச்சராக பதவியேற்றார். ஒடிசா மாநிலத்தில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், அதைத் தொடர்ந்து மீன்வளம் மற்றும் விலங்குகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் திரௌபதி முர்மு பதவி வகித்து இருக்கிறார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டதன் மூலம், ஒடிசாவிலிருந்து ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் மற்றும் முதல் பழங்குடியின ஆளுநர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்த நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார் திரௌபதி முர்மு. வரும் 25 ஆம் தேதி இவர் பதவியேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

யாழில் அதிகரிக்கும் ஹெரோயின் ஊசிக்கலாச்சாரம் – அடுத்தடுத்து உயிரிழக்கும் இளைஞர்கள் !

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள் பாவனை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. நகர்ப்புறங்களில் உள்ள உயர்தரம் பயிலும் பாடசாலை மாணவர்கள் தொடங்கி இளைஞர்கள் பலரிடமும் போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்துள்ளதை அண்மைய கால செய்திகள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.

ஐஸ் போதைப்பொருள்ள பாவித்த இளைஞன் மரணம் என்ற தகவல்கள் இலங்கையின் வேறு எங்கோ நடைபெறுவதாக கேள்விப்பட்ட நிலை மாறி  இப்போது அடிக்கடி கேள்விப்படும் தகவல்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. அடுத்தடுத்து பல இளைஞர்கள் வடக்கு – கிழக்கு பகுதிகளில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உயிரிழந்து கொண்டிருக்கின்றனர்.

30வருட யுத்தத்தை முடித்தோம் என மார்தட்டும் இந்த இராணுவத்தினதும் – கடற்படையினதும்  கட்டுக்காவல்களையெல்லாம் மீறி ஏதொவொருவகையில் வடக்கு இலங்கையினுள் போதைப்பொருட்கள் கொண்டுவரப்பட்ட வண்ணமே உள்ளன. போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதில் யாழ். பொலிஸார் பெரிதாக சிரத்தை காட்டுவதாக தெரியவில்லை. பாடசாலைகளிலும் மாணவர்களிடம் போதைப்பொருள் பாவனை சார்ந்த விழிப்புணர்வு செயற்பாடுகள் இடம்பறுவதாக தெரியவில்லை. இந்த நிலையில் போதைப்பொருள் பாவனை தொடர்பான குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பாடசாலைகளில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய ஆசிரியர் சமூகம் வடக்கில் சுயநல மனப்பாங்குடன் செயற்பட ஆரம்பித்து விட்டது போலவே தோன்றுகிறது. அண்மையில் கூட முல்லைத்தீவின் பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் உயர்தர ஆண்  மாணவர்களை போதைப்பொருள் பாவனைக்கு அடிமைப்படுத்தி பின்பு அவர்களை  பயன்படுத்தி மாணவிகளை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகப்படுத்தியுள்ளார். இது எவ்வளவு பெரிய சமூக சீர்கேடு. இந்த நிலையில் இது தொடர்பாக பெரிதாக வடக்கு மாகாண ஆசிரியர் சங்கம் அலட்டிக்கொள்ளவில்லை. இவர்கள் எங்கே இந்த பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையை தடை செய்ய முயற்சிக்கப்போகிறார்கள் என்ற கேள்வியே மீதமாகவுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணத்தின் பிரபலமான நகர்ப்புற பாடசாலை ஒன்றில் உயர்தரம் கற்கும் மாணவன் ஒருவனிடம் இருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்படட்தாக தகவல்கள் வெளியான போது யாழ். சமூக கல்விமான்கள் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்து விட்டு  அடங்கிவிட்டனர்.

போதைப்பொருள் பாவனையை ஒழிக்க அவர்கள் ஏதேனும் களச்செயற்பாடுகளை மேற்கொண்டதாக எந்த பதிவும் இல்லை. இது யாழ்ப்பாண சமூகம் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம். ஆனால் இன்னமும் எந்த செயற்பாடும் இதனை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படவில்லை என்பதே கவலையான உண்மை.

இந்த நிலையில் கடந்த வாரம் ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக் கொண்ட 20 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார் என்ற தகவல் நமது தமிழர் சமூகத்தில் தற்போது என்ன நடக்கிறது என்பதை இன்னுமொரு தடவை வெளிப்படுத்தியுள்ளது. கொழும்புத்துறையில் கடந்த  20ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  நண்பர்களுடன் இணைந்து ஹெரோயின் போதை மருந்தை ஊசி மூலம் செலுத்திய இளைஞன், சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார் என்பது இங்கு இன்னமும் வேதனையான விடயம். இளைஞர்கள் குழுவாக இருந்து ஹெரோயின் எடுத்துக்கொள்ளுமளவிற்கு தைரியமான ஒரு சூழல் நமது பகுதிகளில்  உருவாகியுள்ளது இன்னமும் வேதனையளிக்கிறது.

 

யாழ்ப்பாணத்தில் அண்மைய காலப்பகுதியில் போதைப்பொருள் பாவனையினால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் காவல்துறையினர் மட்டுமல்லாமல் பாடசாலை ஆசிரியர்களும் தங்களுடைய மாணவர்களிடம் போதைப்பொருள் பாவனை தொடர்பான முறையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது தவிர பெற்றோர் தங்களுடைய வீட்டு இளைஞர்களின் போதைப்பொருள் பாவனையை அவர்களின் காட்டுக்கூச்சலுக்கு அஞ்சாது கண்டிக்க வேண்டியதுடன் பிள்ளைகளுக்கு போதைப்பொருள் பாவனையின் தீமையான பக்கங்களை புரியும்படி எடுத்துச்சொல்ல வேண்டும்.

ஒரு காலத்தில் கல்வியில் மட்டுமே கவனம் வந்த யாழ் சமூகமானது இன்று வெளிநாட்டு மோகத்திலும் – சுயநல மனோநிலையிலும்  சிக்குண்டு தனது கல்வி அடைவு மட்டத்தை தொலைந்துவிட்டது. கல்வியின் மீதான யாழ் சமூக மாணவர்களின் – இளைஞர்களின் நாட்டம் குறைவடைந்தது இன்று ஆவா வாள்வெட்டு  போன்ற குழுக்களின் தோற்றத்தையும் – போதைப்பொருள் பாவனையின் அதிகரிப்பையும் தூண்டியுள்ளது.

யாழ் சமூகத்தின் மீது அக்கறையுள்ள ஒவ்வொருவரும் விரைந்து போதைப்பொருள் பாவனையிலிருந்து நமது சமூகத்தை மீட்க – நமது இளைஞர்களை மீட்க இயங்க வேண்டும். நாம் சுதாகரித்து போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயங்கும் ஒவ்வொரு பொழுதிலும் ஆரோக்கியமற்ற இளைஞர் தலைமுறை ஒன்று உருவாவதற்கு நாமும் காரணமாகிக்கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.

நாம் சமூகத்தை திருத்த கூட களமிறங்க  தேவையில்லை. அவரவர் தத்தமது வீடுகளில் உள்ள இளைஞர்களிடம் இது தொடர்பில் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தினாலே போதுமானது. சிறுதுளி பெருவெள்ளம் போல ஆகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்..!