செய்திகள்

செய்திகள்

செய்திகள்

இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு !

உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசு விளங்குகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், 2022-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டுக்கான இயற்பியல் பரிசை 3 பேர் பெறுகின்றனர்.

அலைன் ஆஸ்பெக்ட், ஜான் எப். கிளாசர், அன்டன் ஜெய்லிஙர் ஆகிய 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
குவாண்டம் தகவல் அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிக்காக 3 பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2022 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.  அதில், அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக சுவீடனை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிஜாப் போராட்டம் , ஈரானின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வெளிநாட்டு சதி – ஈரான் அதிபர் குற்றச்சாட்டு !

ஈரானில், மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் ஹிஜாப் எனப்படும் தலையை மறைக்கும் உடையை சரியாக அணியவில்லை கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் 16-ந் திகதி விசாரணையின்போது அவர் திடீரென மர்மமான முறையில் இறந்தார். போலீசார் அவரை அடித்து கொன்று விட்டதாக கூறி ஈரானில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ஹிஜாப் உடைகளை தீ வைத்து எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். தொடர் போராட்டத்தால் ஈரானில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. போராட்டக்காரர்கள்- போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 92 பேர் இறந்துவிட்டதாக ஈரான் மனித உரிமை குழு தெரிவித்து உள்ளது.

இதில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் ஈரான்- ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் 41 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக அந்த குழு தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட 1,500 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், மேலும் அது தீவிரமடையாமல் தடுக்க ஈரானில் சமூக வலை தளங்கள் முடக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஹிஜாப் போராட்டம் ஈரானின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வெளிநாட்டு சதி என்று அந்நாட்டு அதிபர்  அயதுல்லா அலி கொமேனி தெரிவித்துள்ளார். போராட்டம் தொடங்கியது முதல் மவுனம் காத்து வந்த அவர் தனது கருத்தை முதன்முறையாக தெரிவித்துள்ளார். மாஷா அமினி போலீஸ் காவலில் இறந்ததை அறிந்து தாம் மனம் உடைந்ததாகவும் அவரது மரணம் மிகவும் துயரமானது என்றும் கொமெனி குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்த போராட்டங்களை திட்டமிட்டு தூண்டி விட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

2022ம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசு – ஸ்வீடன் விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு !

மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று (03) அறிவிக்கப்பட்டது.

இதில், ஸ்வீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும்.

முதல் நாளான இன்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

நோபல் கமிட்டியின் தலைவர் நோபல் பரிசு பெறுபவரின் பெயரை அறிவித்தார். 2022ம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசானது ஸ்வீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

´அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய அவரது கண்டுபிடிப்புகளுக்காக´ இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் கால்ப்பந்து மைதானத்தில் வன்முறை – 174 பேர் பலி !

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ளூர் கால்பந்து போட்டி அங்குள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் அரேமா எப்.சி- பெர்செபயா சுரபயா அணிகள் மோதின. இதில் அரேமா அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.

அரேமா அணி சொந்த மண்ணில் தோற்றதால் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து வன்முறையில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கானோர் தடுப்புகளை மீறி மைதானத்துக்குள் புகுந்தனர். அரேமா அணி வீரர்களை தாக்கினர். மைதானத்தில் இருந்த நாற்காலி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கினர். மைதானத்துக்குள்ளேயும் வெளியேயும் இருந்த வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களை சேதப்படுத்தினர். சில வாகனங்களுக்கு தீயும் வைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சி அளித்தது.

இதையடுத்து ரசிகர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. வன்முறை, கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயம் அடைந்தனர். நீண்ட போராட்டத்துக்கு பின் வன்முறையை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர். வன்முறையில் 129 பேர் பலியானார்கள். 180-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், மேலும் 51 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 174ஆக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி நிகோ அபின்டா கூறும்போது, “கால்பந்து போட்டியில் தோல்வி அணியின் ரசிகர்கள் மைதானத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். 34 பேர் மைதானத்துக்குள்ளே இறந்தனர். மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் இறந்தனர். மைதானத்தில் இருந்த போலீஸ் அதிகாரிகளை தாக்கிய ரசிகர்கள் கார்களையும் சேதப்படுத்தினர். மைதானத்தில் இருந்து ரசிகர்கள் வெளியேறியபோது வாகனங்களை அடித்து நொறுக்கினர் என்றார்.

இச்சம்பவம் தொடர்பாக இந்தோனேசியா கால்பந்து சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “மைதானத்தில் அரேமா அணியின் ஆதரவாளர்கள் செயல்களுக்கு வருந்துகிறோம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடமும், அனைத்து தரப்பினரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். போட்டிக்கு பிறகு என்ன நடந்தது என்பது குறித்து விசாரணையை தொடங்க ஒரு குழு மலாங்குக்கு சென்றுள்ளது” என்று தெரிவித்துள்ளது. வன்முறையை அடுத்து கால்பந்து போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சீசனில் அரேமா அணி எஞ்சிய போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஹிஜாப் அணியாத உணவகம் சென்ற பெண் கைது !

ஈரானில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹிஜாப் அணிய மறுத்த மாஷா அமினி என்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். விசாரணையின் போது அவர் திடீரென இறந்தார். போலீசார் அவர் மாரடைப்பால் இறந்ததாக தெரிவித்தனர். ஆனால் போலீசார் அவரை அடித்து கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து ஈரான் முழுவதும் போராட்டம் வெடித்து உள்ளது. இந்த போராட்டத்தின் போது 60-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். இந்தநிலையில் ஈரானை சேர்ந்த டோனியோ ராட் என்ற பெண் தனது தோழி பணிபுரியும் கம்பெனியில் உள்ள உணவகத்துக்கு காலை சிற்றுண்டி சாப்பிட சென்றார். அப்போது அவர் தலையில் முக்காடு அணியாமல் சாப்பிட்டார். இந்த படங்களை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

இது வைரலாக பரவியது. இது தொடர்பாக போலீசார் அவரிடம் விளக்கம் கேட்டனர். ஆனால் அதற்கு அவர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து டோனி யோராட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தாக அவரது சகோதரி டினா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே.? – சிறுவர் தினத்தையொட்டி உறவுகள் போராட்டம் !

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று (01) காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது அலுவலகம் முன்பாக இடம்பெற்றது.

இதன்போது, வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிற்கு சர்வதேசம் நீதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.

சிறுவர் தினமான இன்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது உறவினர்களான சிறுவர்களும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

குடும்பமாக கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு என்ன நடந்தது உள்ளிட்ட விடயங்களில் சர்வதேசம் நீதியான விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும், கால நீடிப்பினை வழங்கக் கூடாது எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்து செயற்பட்டவர்களுக்கு இலங்கையில் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல் !

மனித உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்ததற்காக இலங்கை உட்பட 42 நாடுகளில் உள்ள மக்கள் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உதவி பொதுச் செயலாளர் இல்சே பிராண்ட்ஸ் கெஹ்ரிஸின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கியமாக மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்கள் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல்களை எவ்வாறு சந்தித்தார்கள் என்பது குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுத்து வைத்தல், கட்டுப்படுத்தப்பட்ட சட்டத்தால் இலக்கு வைக்கப்படல் மற்றும் இணையங்கள் மூலம் அவர்கள் கண்காணிக்கப்பட்டனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அத்துமீறல்கள் அனைத்தும் 2021 மே 1ஆம் திகதி முதல் 2022 ஏப்ரல் 30ஆம் திகதி வரையில் இடம்பெற்றுள்ளன என்றும் உதவி பொதுச்செயலாளரின் வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடுகள் காரணமாக, குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் உள்ளவர்கள் ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைப்பதைத் தவிர்த்தனர் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உதவி பொதுச்செயலாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திருமணமாகாத பெண்ணுகளும் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு – இந்திய உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !

திருமணமான பெண்ணைப் போலவே திருமணமாகாத பெண்ணுக்கும் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு என இந்திய உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கருக்கலைப்பு யாருக்கு எந்த சூழலில் செய்யப்பட வேண்டும் என்பது பற்றிய விதிமுறையை ஒழுங்குபடுத்துவது குறித்த வழக்கு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதன்போது தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், சட்டப்பூர்வமாக ,பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும் தகுதி உடையவர்கள் ஆவார்கள் என்றும் திருமணமாகாத பெண்களுக்கும் 20 முதல் 24 வார கர்ப்பத்தை கலைக்க உரிமை உண்டு என கூறியுள்ளது.

கருக்கலைப்பு விதிகளில் திருமணமாகாத பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என நீதிபதி கூறியுள்ளார்.

மேலும் திருமணத்திற்கு பிறகு மனைவியின் அனுமதியின்றி, கணவன்மார்களால் ஏற்படும் பாலியல் வன்கொடுமையும் இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் கருக்கலைப்புக்கான விதிகளின் கீழ் ( marital rape) என எடுத்துக் கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்ற பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

எம்.டி.பி சட்டத்தின் விளக்கம் சமூக யதார்த்தத்தைப் பிரதிபலிக்க வேண்டும் என கூறியள்ள நீதிபதி  சமூகம் மாறும்போது சமூக இயல்புகள் மாறுகின்றன ,உருவாகின்றன மற்றும் சட்டங்கள் நிலையானதாக இருக்கக்கூடாது மற்றும் காரணத்தை முன்னெடுக்கக்கூடாது என கருத்து தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ள உக்ரைனின் முக்கிய நகர மக்கள் !

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. தலைநகர் கிவ், கார் கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. துறைமுக நகரமான மரியு போலை ரஷ்ய படைகள் கைப்பற்றியது. அதேபோல் சில நகரங்களையும் ரஷ்யா தன்வசப்படுத்தியது.

தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே போரில் உக்ரைனின் லுகான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைக்க திட்டமிட்ட ரஷ்யா, அதற்காக அப்பகுதிகளில் பொது வாக்கெடுப்பை நடத்தியது. நடமாடும் வாக்குப்பதிவு மையத்துடன் வீடு வீடாக சென்று வாக்கெடுப்பு நடத்தினர். நேற்று வரை 5 நாட்கள் வாக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து வாக்குகள் எண்ணப்பட்டன. இந்தநிலையில் உக்ரைனின் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான வாக்கெடுப்பில் வெற்றி கிடைத்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு லுகான்ஸ்க் பகுதியில் 98.42 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைப்புக்கு ஆதரவாக வாக்களித்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஜபோரி ஜியாவில் 93.11 சதவீதமும், தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சனில் 87.05 சதவீதமும், டொனெட்ஸ்கில் 99.23 சதவீதமும், ரஷ்யாவுடன் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பில் ரஷ்யாவுக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் உக்ரைன் பகுதிகளை ரஷ்யாவிடன் இணைத்து கொள்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிபர் புடின் நாளை மறுநாள் (30-ந்திகதி) அறிவித்து உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக இங்கிலாந்து உளவுத்துறை அதிகாரிகள் கூறும்போது, “ரஷ்ய பாராளுமன்றத்தின் இரு அவைகளும் அதிபர் புடின் 30-ந்திகதி உரையாற்றுகிறார். அப்போது உக்ரைன் பகுதிகளை ரஷியாவுடன் இணைத்து கொள்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை புடின் வெளியிட வாய்ப்பு உள்ளது” என்றனர்.

இந்த பொது வாக்கெடுப்பு ஒரு ஏமாற்று வேலை என்று உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, “ரஷியா கைப்பற்றிய பகுதிகளில் உள்ள மக்களை உக்ரைன் பாதுகாக்கும். இந்த வாக்கெடுப்புகள் ஒரு கேலிக்கூத்தாக உள்ளது. வாக்கெடுப்புக்கு பிறகு ரஷியாவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு ஏதும் இல்லை” என்றார்.

கைதுசெய்யப்பட்ட அமைதிப்போராட்டக்காரர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும். – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

கொழும்பில் கடந்த சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்மீது பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையையும் 84 பேர் கைதுசெய்யப்பட்டமையையும் கண்டித்திருக்கும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், இதன்மூலம் எதிர்ப்புக்களைப் பொறுத்துக்கொள்ளமுடியாத இலங்கை அரசாங்கத்தின் போக்கு மீளுறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரித்திருக்கின்றன.

அரசாங்கத்தினால் நிகழ்த்தப்படும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத்தெரிவித்து சோசலிஸ இளைஞர் சங்கத்தினால் கடந்த சனிக்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியைக் கலைப்பதற்கு பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன் தடியடிப்பிரயோகமும் நடத்தப்பட்டது.

இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இடைக்கால நிறைவேற்றுப்பணிப்பாளர் ரிறானா ஹஸன் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்:

உலகளாவிய ரீதியில் சிவில் சமூக இடைவெளியை ஒடுக்குவதற்கும், போராட்டக்காரர்களை அடக்குவதற்கும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களை அமைதிப்படுத்துவதற்கும் அரசாங்கங்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான நடைமுறைகளைப் பயன்படுத்துவதை அவதானிக்கமுடிகின்றது.

அந்தவகையில் இவ்வார இறுதியில் (கடந்தவார இறுதி) அதற்கான சிறந்த உதாரணமாக இலங்கை அமைந்திருக்கின்றது. இருப்பினும் அதன்மூலம் இன்னமும் மக்களை நிறுத்தமுடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இவ்விடயம் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபையின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:

இன்றைய தினம் (சனிக்கிழமை) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 84 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதன் மூலம் எதிர்ப்புக்களைப் பொறுத்துக்கொள்ளமுடியாத இலங்கை அரசாங்கத்தின் போக்கு மீளுறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இருப்பினும் இந்த அமைதிப்போராட்டக்காரர்கள் அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவே போராடுகின்றார்கள். எனவே கைதுசெய்யப்பட்ட அமைதிப்போராட்டக்காரர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும்.

அதுமாத்திரமன்றி ஆர்ப்பாட்டங்களுக்கு மேலும் தடையேற்படுத்தும் வகையில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ‘அதியுயர் பாதுகாப்பு வலய’ உத்தரவு தொடர்பிலும் நாம் மிகுந்த கரிசனை கொண்டிருக்கின்றோம். அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதென்பது ஓர் மனித உரிமையாகும் என்று அப்பதிவில் மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.