செய்திகள்

செய்திகள்

செய்திகள்

விரைவில் நீக்கப்படுகிறது உலகலாவிய கொரோனா அவசரநிலை – உலக சுகாதார அமைப்பு

சீனாவின் வூகான் மாகாணத்தில் 2019-ம் ஆண்டின் இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது.

தற்போது அந்த பாதிப்புகளில் இருந்து சர்வதேச நாடுகள் படிப்படியாக மீண்டு வருகின்றன. இதுவரை உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் சுமார் 66 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலுக்கு இன்னும் சர்வதேச சுகாதார அவசரநிலை தேவைப்படுகிறதா..? என்பதை தீர்மானிக்க உலக சுகாதார அமைப்பு சார்பில் சில மாதங்களுக்கு ஒருமுறை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் எதனோம் பேசுகையில்,

2023-ம் ஆண்டில் நாம் சந்திக்க வேண்டிய சவால்கள் நிறைய இருப்பதாகவும், எதிர்காலத்தில் கொரோனா போன்ற நோய்த்தொற்று பரவல்களை எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்கவேண்டும் என்பதே நாம் கற்க வேண்டிய பாடம் என்றும் கூறினார்.

கடந்த வாரம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ள நிலையில், வரும் 2023-ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பரவலை உலகளாவிய அவசரநிலையாக கருதவேண்டிய அவசியம் இருக்காது என டெட்ரோஸ் அதனோம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேசமயம், கொரோனா வைரசின் தோற்றத்தை நன்கு புரிந்துகொள்வதற்காக, நாங்கள் கேட்டுள்ள தரவுகளை பகிர்ந்துகொள்ளவும், ஆய்வுகளை மேற்கொள்ளவும் சீனாவிடம் தொடர்ந்து கூறிவருவதாக டெட்ரோஸ் கூறினார்.

வெளிநாட்டு தொழிலாளா்களுக்கு எதிராக மனித உரிமை மீறல் – கட்டாரிடம் லஞ்சம் பெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பெண் தலைவர் கைது !

மத்திய வளைகுடா நாடுகளில் ஒன்றான கட்டாரில் வெளிநாட்டு தொழிலாளா்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் ஐரோப்பிய கூட்டமைப்பு தங்களுக்கு ஆதரவான அரசில் முடிவுகளை எடுப்பதற்கு கட்டார் பணபலத்தை பயன்படுத்தி வருவதாக நீண்ட காலமாகவே குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

Eva Kylie, Vice President of the Council of Europe, was arrested. Qatari  cash hidden ~ News Directory 3

ஆனால் கட்டார் அரசு இதை திட்டவட்டமாக மறுக்கிறது. இந்த நிலையில் கட்டார் நாட்டிடம் லஞ்சம் பெற்றதாக கூறி ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பெண் தலைவரான எவா காயிலியை பெல்ஜியம் போலீசார் கைது செய்தனர். எவா காயிலி உள்பட 4 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்கள் மீது சட்டவிரோத பண பரிவா்த்தனை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீடு உள்பட 16 இடங்களில் போலீசார் சோதனை நடத்தி சுமாா் 6 லட்சம் யுரோ பறிமுதல் செய்தனர். அதன் தொடர்ச்சியாக நேற்று பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்ற அலுவலகங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இதனிடையே லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கிரீஸ் நாட்டை சேர்ந்த எவா காயிலி ஐரோப்பிய பாராளுமன்ற துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

நிலவுக்கு மனிதனை அனுப்பும் நாசாவின் “ஆர்டெமிஸ்“ திட்டம் – பூமியை வந்தடைந்தது ‘ஓரியன்’ விண்கலம் !

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா 2025-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மீண்டும் மனிதரை அனுப்ப ‘ஆர்டெமிஸ்’ என்கிற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்ல ‘ஓரியன்’ என்கிற விண்கலத்தை நாசா உருவாக்கியுள்ளது.

சோதனை முயற்சியாக ஆளில்லா ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்ட நிலையில், ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளால் அந்த முயற்சி பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. அதைதொடர்ந்து, கடந்த மாதம் 16-ந் திகதி ‘ஆர்டெமிஸ்-1’ ராக்கெட் மூலம் ‘ஓரியன்’ விண்கலம் வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பப்பட்டது.

பின்னர் ரொக்கெட்டில் இருந்து பிரிந்த ‘ஓரியன்’ விண்கலம் நிலவை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டது. 6 நாட்கள் பயணத்துக்கு பின் ‘ஓரியன்’ விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. சுமார் 26 நாட்கள் நிலவின் சுற்றுவப்பட்டப்பாதையில் சுற்றி வந்த ‘ஓரியன்’ விண்கலம் தனது பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் பூமிக்கு புறப்பட்டது. பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்த விண்கலம் பசிபிக் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

பிரிட்டனில் தரைமட்டமான கட்டிடம் – ஒருவர் பலி – பத்துப்பேர் மாயம் !

பிரிட்டனின் ஜெர்சி தீவின் தலைநகரான செயின்ட் ஹீலியரில் இன்று மூன்று தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென குண்டுவெடித்தது போன்று பலத்த சத்தம் எழுந்தது. சத்தம் வந்த சில வினாடிகளில் கட்டிடம் இடிந்து விழுந்தது.

இதில் கட்டிடம் முழுமையாக சிதைந்து தரைமட்டமானது. அதில் வசித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொணடனர். அருகில் உள்ள குடியிருப்பு கட்டிடமும் சேதமடைந்தது. விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆம்புலன்ஸ்களும் வரவழைக்கப்பட்டன.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 10க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. அவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவாக்ளுக்கு ஜெர்சி முதல்வர் கிறிஸ்டினா மூர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் குண்டுவெடிப்பால் இடம்பெயர்ந்தவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்.

மாண்டஸ் புயலை அடுத்து வங்க கடலில் உருவாக உள்ள புயல் ‘மொக்கா’ !

வங்கக் கடலில் தற்போது உருவாகி  தாக்கத்தை ஏற்படுத்தி வரும் புயலுக்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.ஐக்கிய அரபு அமீரகத்தின் பரிந்துரைப்படி இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாண்டஸ் புயலை அடுத்து வங்க கடலிலோ, அரபிக் கடலிலோ உருவாக உள்ள புயலுக்கு ‘மொக்கா’ என பெயரிடப்பட்டுள்ளது. ஏமன் நாட்டின் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகரமான மொக்கவை குறிக்கும் விதத்தில் அடுத்து உருவாகும் புயலுக்கு இந்த பெயர் சூட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் பருவமழை காலங்களில் புயல் உருவாகும் நிலையில் இவ்வாறு உருவாகும் புயல்களுக்கு இந்த பகுதியில் அமைந்துள்ள இந்தியா, பாகிஸ்தான் கத்தார், இலங்கை, ஏமன், தாய்லாந்து, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட 13 நாடுகள் பரிந்துரைக்கும் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு, அவற்றில் இருந்து முடிவு செய்யப்படும் ஒரு பெயர் வைக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த ‘மாண்டஸ்’ என்ற பெயர், வங்கக் கடலில் உருவாகி தற்போது மாமல்ல புரத்துக்கு அருகே கரையை கடந்து கொண்டிருக்கும் புயலுக்கு வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரக நாட்டு மொழியில மாண்டஸ் என்பதற்கு ‘புதையல் பெட்டி’ என்று அர்த்தம் கூறப்படுகின்றது. மாண்டாஸ் புயலின் தாக்கம் குறைந்த பிறகு ,வங்கக் கடலிலோ, அரபிக் கடலிலோ உருவாகும் புயலுக்கு ‘மொக்கா’ என்று பெயரிடப்பட உள்ளது.

குறித்த பெயர் ஏமன் நாட்டில் பெயர் பெற்ற” துறைமுகமான மொக்காவை குறிக்கும் வகையில் இந்த பெயரை ஏமன் நாடு பரிந்துரைத்து, அதனை மற்ற நாடுகள் ஏற்று கொண்டுள்ளதை அடுத்து, மாண்டஸை அடுத்து உருவாக உள்ள புயலுக்கு இந்த பெயர் சூட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு மேலும் 275 மில்லியன் டொலர்கள் இராணுவ ஆயுத உதவி – அமெரிக்காவே போரை தூண்டுகிறது என குற்றஞ்சுமத்தும் ரஷ்யா !

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தொடங்கிய போர் 10 மாதங்களைக் கடந்துள்ளது.

போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு இராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 275 மில்லியன் டொலர்கள் ராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அனுப்பியுள்ளது.

ராக்கெட் ஏவுகணை ஆயுதங்கள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் ராணுவ ஆயுத உதவியின் கீழ் உக்ரைனுக்கு வழங்கப்படுகிறது. ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவியாக இதுவரை 19.3 பில்லியன் டொலர் மதிப்பிலான அதிகமான இராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் “உக்ரைன் மீதான போர் தொடரந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கு அமெரிக்கா போரில் தலையிட்டுள்ளமையும் – அமெரிக்கா தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருவதுமே” காரணம் என ரஷ்யா சாடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

கைதிகளான ரஷ்யாவின் ஆயுதக்கடத்தல்காரனையும் – அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனையையும் மாற்றிக்கொள்ளும் ரஷ்யாவும் அமெரிக்காவும் !

12 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரஷ்ய ஆயுதக் கடத்தல்காரன் விக்டர் பௌட்டை மீட்டு, ரஷ்யக் காவலில் இருந்த அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனரை விடுவிப்பதில் அமெரிக்க அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது .

முப்பத்திரண்டு வயதான பிரிட்னி கிரைனர் அமெரிக்க தேசிய கூடைப்பந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் திறமையான வீராங்கனை . அவர் ஒரு ஒலிம்பிக் சாம்பியனும் கூட.

கடந்த பெப்ரவரியில், க்ரைனர் தனிப்பட்ட பயணமாக ரஷ்யாவுக்குச் சென்றபோது ‘கஞ்சா எண்ணெய்’ வைத்திருந்த குற்றச்சாட்டில் ரஷ்ய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கஞ்சா எண்ணெய் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக இருந்தாலும், ரஷ்யாவில் அது தடைசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரஷ்ய நீதிமன்றத்தால் கிரைனருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கிரைனரை விடுவிக்கும் முயற்சியில் பைடன் நிர்வாகம் தலையிட்டு ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. கூடைப்பந்து வீரர் கிரைனர் சார்பாக, அமெரிக்க சிறையில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஷ்ய ஆயுத வியாபாரி விக்டர் போட்டை வழங்க வேண்டும் என ரஷ்யா வழக்கு தொடர்ந்தது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் இந்த கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது.

அமெரிக்க ஏஜெண்டுகள் விக்டர் பௌட்டை தனி விமானத்தில் அழைத்து வந்து ரஷ்ய முகவர்களிடம் ஒப்படைத்தனர், ரஷ்ய முகவர்கள் கிரைனரை அழைத்து வந்து அமெரிக்க ஏஜெண்டுகளிடம் ஒப்படைத்தனர்.

ரஷ்யாவைச் சேர்ந்த விக்டர் பௌட், உலகின் மிகவும் பிரபலமான துப்பாக்கி கடத்தல்காரர். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு,பௌட் ஆயுதக் கடத்தலுக்குத் திரும்பினார்.

2008 ஆம் ஆண்டு, தாய்லாந்தின் பெங்கொக்கில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தபோது, ​​பாதுகாப்புப் படையினரால் பௌட் கைது செய்யப்பட்டு பின்னர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்கள் – 2022ல் கூகுளில் (Google) அதிகம் தேடப்பட்ட முதல் 10 சொற்கள் என்னென்ன தெரியுமா..?

2022 ஆம் ஆண்டு உலக அளவில் கூகுளில் (Google) அதிகம் தேடப்பட்ட சொற்களில் முதல் 10 இடங்களைப் பெற்றுள்ள வார்த்தைகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நமக்குத் தேவையான பல தகவல்களை உடனடியாகப் பெற கூகுள் தேடுபொறியையே நம்பியுள்ளோம். அந்த அளவிற்கு அதன் தேவை மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள் எவை என்பது குறித்து கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் இருப்பதால், கூகுள் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் உலக அளவில் அதிகம் தேடப்பட்ட சொற்களில், வோர்டில் (Wordle) என்ற சொல் முதலிடம் பிடித்துள்ளது. இது இணைய வார்த்தை விளையாட்டு. உலக அளவில் அதிக அளவிலான மக்கள் இந்த சொல்லை கூகுளில் தேடியுள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக இந்தியா – இங்கிலாந்து (India vs England) சொல் உள்ளது.

கடந்த ஆண்டில் அதிகம் பேசப்பட்ட உக்ரைன் போரால், உக்ரைன் (Ukraine) எனும் சொல் 3 ஆவது இடம்பிடித்துள்ளது.

அதற்கு அடுத்தபடியாக ராணி எலிசபெத் (Queen Elizabeth), 5 ஆவது இடத்தில் இந்தியா – தென்னாப்பிரிக்கா (Ind vs SA), 6 ஆவது இடத்தில் உலகக்கோப்பை (World Cup), 7 ஆவது இடத்தில் இந்தியா – மேற்கிந்திய தீவுகள் (India vs West Indies),  8 ஆவது இடத்தில் ஐ-போன் 14 (iPhone 14), 9 ஆவது இடத்தில் அமெரிக்க சீரியல் கில்லரான ஜெஃப்ரெ தாமெர் (Jeffrey Dahmer), 10 ஆவது இடத்தில் இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) சொல் அதிகம் தேடப்பட்டுள்ளது.

கூகுளில் நடப்பாண்டில் அதிகம் தேடப்பட்ட சொற்களில் விளையாட்டு தொடர்பான சொற்களே அதிகம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகின் முதலாவது பணக்காரர் இடத்தை இழந்தார் எலான் மஸ்க் – முதலிடம் யாருக்கு..?

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் உரிமையாளரான அவர் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை இந்திய மதிப்புக்கு சுமார் ரூ.3½ லட்சம் கோடி விலைக்கு வாங்கினார்.

இதையடுத்து அவர் டெஸ்லா நிறுவனத்தின் ரூ.32 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றார். இதற்கிடையே டுவிட்டர் நிறுவனத்தில் ரூ.3½ லட்சம் கோடி முதலீடு செய்ததாலும் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சரிந்ததாலும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு குறைந்தது.

Bernard Arnault, யார் இந்த பெர்னார்ட் அர்னால்ட்? இனி உலகின் மிகப்பெரிய  பணக்காரர் இவர்தான்! - bernard arnault becomes worlds richest after jeff  bezos lost 14 billion - Samayam Tamil

இதையடுத்து எலான் மஸ்க்கை முந்தி பிரான்ஸ் தொழில் அதிபர் பெர்னார்ட் அர்னால்ட் தற்போது உலகின் முதலாவது பணக்காரர் என்ற இடத்தை பிடித்துள்ளார். பட்டியலில் பெர்னார்ட் அர்னால்ட் ரூ.15.29 லட்சம் கோடி சொத்துடன் முதலிடத்தில் உள்ளார்.

எலான் மஸ்க் ரூ.15.28 லட்சம் கோடியுடன் 2-வது இடத்துக்கு இறங்கினார். இந்த ஆண்டு தொடக்கத்தில் உலகின் முதல் இடத்தை எலான் மஸ்க் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது எலான் மஸ்க்குக்கும் பெர்னார்ட் அர்னால்ட்டுக்கும் இடையேயான சொத்து மதிப்பு வித்தியாசத்தில் மிக குறைந்த அளவிலேயே உள்ளது. இதனால் எலான் மஸ்க்கின் நிறுவனங்களின் பங்கு சற்று உயர்ந்தாலும் அவர் மீண்டும் முதலிடத்தை பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

டுவிட்டரில் எலான் மஸ்க் அதிக கவனம் செலுத்தியதே டெஸ்லாவின் பங்கு குறைய காரணமாக இருந்தது என டெஸ்லாவின் பங்குதாரர்கள் குறிப்பிடுகின்றனர்.

“அடிமைகளின் ரத்தத்தால் கட்டப்பட்ட தேசம்தான் இங்கிலாந்து.” எனக்கூறி மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசி தாக்கிய இளைஞன் கைது !

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மரணத்துக்குப் பிறகு அரசராகப் பதவியேற்றுள்ள 3-ம் சார்லஸ், நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், வடக்கு லண்டனில் இருந்து 46 கி.மீ. தொலைவில் உள்ள லூட்டன் நகரத்துக்கு நேற்று சென்ற அரசர் சார்லஸ், அங்கு நகர்மன்ற கட்டிடத்துக்கு வெளியே பொதுமக்களைச் சந்தித்தார்.

அப்போது அவரை நோக்கி ஒரு முட்டை வீசப்பட்டது. உடனடியாக அரசர் சார்லசை வேறொரு இடத்துக்கு அவரது பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

மன்னர் மீது முட்டைகளை வீசிய  இளைஞர் அடிமைகளின் ரத்தத்தால் கட்டப்பட்ட தேசம்தான் இங்கிலாந்து, நீங்கள் மன்னரே அல்ல என கோசம் எழுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மன்னர் மீது முட்டைகள் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்னர் மீது முட்டை வீசப்பட்டது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

ஏற்கனவே, கடந்த மாதம் வடக்கு இங்கிலாந்து சென்ற மன்னர் சார்லஸ், அவரது மனைவி ராணி கமிலா மீது முட்டைகள் வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.