செய்திகள்

செய்திகள்

செய்திகள்

உலகில் பணவீக்கம் அதிகமுள்ள நாடுகளில் நான்காவது இடத்தில் இலங்கை!

உலகில் பணவீக்கம் அதிகமுள்ள நாடுகளில் ஏழாவது இடத்தில் இருந்த இலங்கை 3 இடங்கள் முன்னேறி, நான்காவது பணவீக்க நாடாக மாறியுள்ளது.

ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு பொருளாதாரப் பேராசிரியரான ஸ்டீவ் ஹான்கேவின் வெளியிட்ட தரவின்படி டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் 66 சதவீதமாக உள்ளது.

ஆனால் இலங்கையின் உண்மையான பணவீக்கம் 101 சதவீதமாக இருப்பதாகபேராசிரியரான ஸ்டீவ் ஹான்கேவின் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமீபத்திய கபட்டியலின்படி சிம்பாப்வே முதலிடத்திலும் இரண்டாவது இடம் வெனிசுவேலாவும் மூன்றாவது இடத்தில் கியூபாவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரேசிலில் பரபரப்பு – பாராளுமன்றத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் !

பிரேசில் நாட்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி போல்சனேரோ தோல்வியடைந்தார். முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரேசிலின் புதிய ஜனாதிபதியாக லூயிஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கிடையே, வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்ததால் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், பிரேசில் பாராளுமன்றத்திற்குள் போல்சனேரோவின் ஆதரவாளர்கள் இன்று நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். ஜனாதிபதி மாளிகை, சுப்ரீம் கோர்ட்டு வளாகம் முன் திரண்ட போல்சனேரோ ஆதரவாளர்கள் தற்போதைய ஜனாதிபதி லூயிசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். தேர்தலில் போல்சனேரோ தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதை ஏற்றுக்கொள்ளாத அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தால் பிரேசிலில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ள அதே நேரம் உலகின் பல தலைவர்களும் இதற்கான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தடையை உடனடியாக நீக்கி, பெண்கள் உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகளை தலிபான்கள் வழங்கவேண்டும் – ஐ.நா வலியுறுத்தல் !

தலிபான்கள் ஆட்சி செலுத்தி வரும் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் பெண்கள் உயர் கல்வி படிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், உலகம் முழுவதும் இருந்து தலிபான் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்ட சவுதி அரேபியா, கத்தார், துருக்கி உள்ளிட்ட நாடுகள்கூட கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், ஐ.நா. உயர் தூதர் மார்கஸ் போட்செல் இன்று தலிபான் அரசின் உயர் கல்வித்துறை மந்திரி நிதா முகமது நதீமை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பெண்களின் உயர்கல்வி தடை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இந்த தடையை உடனடியாக நீக்கி, பெண்கள் உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகளை வழங்கவேண்டும் என ஐநா தூதர் வலியுறுத்தி உள்ளார். இதற்கு மந்திரி நதீம் கூறிய பதில் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. பெண்களுக்கான உயர் கல்விக்கு கடந்த மாதம் தடை விதிக்கப்பட்ட பின்னர் உயர்கல்வி மந்திரியை சந்திக்கும் முதல் சர்வதேச அதிகாரி மார்கஸ் போட்செல் ஆவார்.

என்ஜிஓ மீதான தடையை வெளியிட்ட பொருளாதாரத் துறை மந்திரி காரி தின் முகமது ஹனிப், துணைப் பிரதமர் அப்துல் சலாம் ஹனபி, உள்துறை மந்திரி சிராஜுதீன் ஹக்கானி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் ஆகியோரையும் போட்செல் சமீபத்தில் சந்தித்து, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான அடக்குமுறைகள் குறித்து விவாதித்தார். ஜனவரி 13ம் தேதி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் பற்றி விவாதிக்க உள்ள நிலையில், இந்த ஆலோசனைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இலங்கையில் ஒரே வருடத்தில் 400 யானைகள் பலி !

மற்றைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கையில் யானைகளுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்திய ஆண்டாகும் என்று சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் கூறுகிறது.

2022 ஜனவரி முதல் டிசம்பர் 5ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 395ஆக உள்ளது.

இது ஒரு வருடத்தில் பதிவுசெய்யப்பட்ட யானைகளின் அதிகபட்ச உயிரிழப்பு எண்ணிக்கையாகும்.

யானையின்-மனித மோதல் காரணமாக 127 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் 2019ஆம் ஆண்டில் 207 யானைகள், 2020இல் 318 யானைகள் மற்றும் 2021இல் 375 யானைகள் இறந்துள்ளன.

இதேவேளை சுற்றாடல் மற்றும் இயற்கை கற்கைகளுக்கான நிலைய அறிக்கையின்படி, இலங்கையில் தினமும் ஒரு யானை இறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறையைக் கழிக்க உலகிலேயே சிறந்த நாடு இலங்கை – ஐக்கிய இராச்சியத்தின் iNews இணையத்தளம்

ஐக்கிய இராச்சியத்தின் iNews இணையத்தளம் அதிகப் பணம் செலவழிக்காமல் பெப்ரவரி விடுமுறையைக் கழிக்க உலகிலேயே சிறந்த நாடு இலங்கை என்று தெரிவித்துள்ளது.

இவ்வருடம் விடுமுறை எடுத்துக்கொண்டு வேறு நாட்டிற்குச் சென்று விடுமுறை எடுக்கக் காத்திருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்காக அதிகப் பணம் செலவழிக்காமல் நல்ல சேவையைப் பெறக்கூடிய 12 நாடுகளின் பெயர்களை ஐ நியூஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.

இலங்கையின் 75வது சுதந்திர தினம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதியிருப்பதால் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளதாக அந்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், பெப்ரவரியில் விமான டிக்கெட்டுகளின் விலை குறைந்த அளவிலேயே இருப்பதாகவும், கடந்த ஆண்டு ஏப்ரலில் 145 ரூபாயாக இருந்த ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்று தற்போது 441 ரூபாயாக மாறியுள்ளதாகவும் ஐ நியூஸ் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

இதன் விளைவாக இலங்கையின் மலைப் பிரதேசத்திற்கு 15 நாள் பயணத்திற்கு ஒரு நபருக்கு 1845 பவுண்டுகள் செலவாகும் என iNews இணையத்தளம் தெரிவித்துள்ளது.

போர் எப்போது முடியும்..? – உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு !

ரஷ்யா மற்றும் உக்ரைனில் வாழும் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவர்கள் இன்று (சனிக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

இதையொட்டி உக்ரைனில் போர் நிறுத்தத்தை அறிவிக்க ரஷ்ய ஜனாதிபதி புடினிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று, வெள்ளிக்கிழமை நண்பகல் தொடங்கி சனிக்கிழமை நள்ளிரவு வரை 36 மணி நேரத்துக்கு தாக்குதல்களை நிறுத்தும்படி ரஷ்ய படைகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்ய படைகளின் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு போர்நிறுத்தம் பொருந்துமா, உக்ரைன் தொடர்ந்து சண்டையிட்டால் ரஷ்யா திருப்பித் தாக்குமா என்பது அந்த உத்தரவில் தெளிவுப்படுத்தவில்லை. இந்த நிலையில் ரஷ்யாவின் இந்த போர் நிறுத்தத்தை ஏற்க முடியாது என தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி ; இது உக்ரைன் படைகளின் முன்னேற்றத்தை தடுக்கும் ஒரு தந்திரம் எனவும் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “உக்ரைனின் அமைதி திட்டத்தை ரஷ்யா பலமுறை புறக்கணித்துள்ளது. அவர்கள் இப்போது கிறிஸ்துமசை ஒரு மறைப்பாகப் பயன்படுத்த விரும்புகிறார்கள். ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டான்பாசில் உக்ரைன் படைகளின் முன்னேற்றத்தை தடுக்கவும், ராணுவ தளவாடங்களை எங்கள் துருப்புகளுக்கு நெருக்கமாக கொண்டு வருவதற்கும் ரஷியாவின் தந்திரம் இது. புதிய பலத்துடன் போரைத் தொடர ரஷ்யா எவ்வாறு போரில் குறுக்கீடுகளைப் பயன்படுத்துகிறது என்பது முழு உலகமும் அறிந்ததே. ரஷ்யா துருப்புக்கள் உக்ரைனை விட்டு வெளியேறும்போது அல்லது வெளியேற்றப்படும்போது போர் முடிவடையும்” என்றார்.

 

ஆசிரியருடன் வாக்குவாதம் – ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 6வயது சிறுவன் !

அமெரிக்காவில் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ரிச்நெக் தொடக்கப் பள்ளியில் ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்தார்.

அப்போது 6 வயது மாணவன் ஒருவன் திடீரென்று துப்பாக்கியால் ஆசிரியையை நோக்கி சுட்டான். இதில் ஆசிரியை ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதனால் வகுப்பறையில் இருந்த மாணவர்கள் அலறியடித்து ஓடினார்கள்.

உடனே துப்பாக்கியால் சுட்ட மாணவனை மற்ற ஆசிரியர்கள் மடக்கி பிடித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்த ஆசிரியையை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தற்செயலாக நடக்கவில்லை. மாணவனுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

 

துப்பாக்கி சூட்டில் மாணவர்கள் யாரும் காயம் அடையவில்லை. இப்பள்ளியில் 550 மாணவர்கள் படித்து வருகிறார்கள். அவர்களை சோதனை செய்யும் கருவி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து மாணவர்களும் சோதனை செய்யப்படாமல் சிலர் மட்டுமே சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றார். விசாரணையில் வகுப்பறையில் ஆசிரியைக்கும், மாணவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்து மாணவன் துப்பாக்கியால் சுட்டது தெரியவந்துள்ளது.

போலீஸ் காவலில் உள்ள மாணவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.

அழகும் அதன் அரசியலும் – கிளிநொச்சி அழகிப் போட்டி கருத்தியல் நோக்கு:- கருப்புதான் எமக்கு பிடிக்கும் கலரா?

நாம் வாழ்கின்ற இந்த உலகில் அரசியல் பற்றி மனிதர்கள் அக்கறையில்லாமல் இருப்பதென்னவோ உண்மைதான். உண்ணும் உணவு, உடுத்துகின்ற உடை, சுவாசிக்கும் காற்று எல்லாவற்றிலும் அரசியல் உண்டு. அரசியலுக்கு அப்பாற்பட்டு எதுவும் இல்லை. அழகும் அழகுப் போட்டிகளும் கூட அதற்கு விதிவிலக்கு அல்ல. 2022ஆம் ஆண்டு டிசம்பர் நடுப்பகுதியில் கிளிநொச்சியில் நடந்த அழகுப்போட்டி அது அழகிப் போட்டியா அல்லது அழகிகளை உருவாக்குபவர்களுக்கான போட்டியா என்பது ஒரு பிரச்சினையே இல்லை. இதன் பின்னுள்ள கருத்தியல் தொடர்பானதே இப்பதிவு.

கிரேக்க பெண் தெய்வங்களுக்கு இடையே அழகுப்போட்டிகள் இடம்பெற்றதாகவும் அந்தப் போட்டிகளில் வெற்றிபெற அத்தெய்வங்கள் லஞ்சம் கொடுத்ததாகவும் புராண இதிகாச கதைகள் குறிப்பிடுகின்றன. ஆனால் உண்மையான அழகுப்போட்டி ஆண்டு தோறும் நடைபெறும் எதென்ஸ் விழாவில் ஆண்களுக்குத்தான் நடந்துள்ளது. ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் இங்கிலாந்தில் ஆங்கிலேய மே தினக் கொண்டாட்டங்களில் அரசியைத் தெரிவு செய்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அமெரிக்க மே தினக் கொண்டாட்டங்களில் இளம் பெண் அழகி ஒருத்தி போட்டியில் தெரிவு செய்யப்பட்டு சமூகப் பிரதிநிதியாக்கப்படுவது நடைமுறையாக இருந்து வந்துள்ளது. 1789இல் இளம்பெண்கள் வரிசையாக நின்று அமெரிக்க ஜனாதிபதியை வரவேற்கும் முறை உருவானது.

இந்த அழகுப் போட்டி தொடர்பாக குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து பெரும்பாலும் ஆண்களினால் மோசமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இவ்விமர்சனங்கள் பெரும்பாலும் ஆக்கபூர்வமானவையாக இல்லாமல் அப்போட்டியில் கலந்துகொண்ட பெண்கள் மீதான விமர்சனங்களாகவே அமைந்தன. இந்த விமர்சனங்களில் ஒன்று தங்களை அழகாக்கி இப்பெண்கள், ஆண்களை ஏமாற்ற முயல்கின்றனர் என்பது. இது தான் 2022இன் மிகப்பெரிய நகைச்சுவையாக அமையும் என்றால் மிகையல்ல. புலம்பெயர்ந்த ஆண்கள் தங்களுடைய அழகை மட்டுமல்ல, வயது, கல்வி, தொழில், தங்களிடம் உள்ள சொத்துக்கள் என்று பலதிலும் ஏமாற்றி தங்கள் மணப்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்வது என்பது ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்சமாகவே அன்று இருந்தது. இப்போது இவர்கள் சொல்லும் பெண்கள் ஏமாற்றுகிறார்கள் என்பது கொஞ்சம் ஓவர்தான்.

இந்த புலம்பெயர்ந்த ஆண்களின் விமர்சனங்களுக்கு பதிலளித்த போட்டியில் கலந்துகொண்ட பெண்கள் இதற்கு பதிலளிக்கின்ற போது ஒட்டுமொத்தமாக புலம்பெயர்ந்தவர்கள் மீது காட்டமான விமர்சனங்களை வைத்துள்ளனர். விமர்சனங்களை முன்வைத்த ஆண்களுக்கு பதிலளித்ததோடு அவர்கள் நிறுத்திக்கொண்டிருப்பது ஆரோக்கியமானதாக இருந்திருக்கும்.

1971இல் கதிர்காமத்தைச் சேர்ந்த அழகுராணிப் போட்டியில் வெற்றிபெற்ற பிரேமாவதி மன்னம்பேரி படுகொலைசெய்யப்பட்டார். ஜேவிபி உறுப்பினராக இருந்த அவர் ஜேவிபி கிளர்ச்சியின் போது இலங்கை பாதுகாப்புப் படையால் நிர்வாணமாக்கப்பட்டு தெருக்களில் கொண்டு திரியப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டார்.

சென் லுயிஸில் 1905இல் பெண் அழகிகளுக்கான போட்டி பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டமை தற்போதுள்ள அழகிப் போட்டிகளுக்கு வித்திட்டது. அப்போது 40,000 பேர் இவ்வழகிப் போட்டிக்கு தங்கள் புகைப்படங்களை அனுப்பி வைத்திருந்தனர். 1921ஆம் ஆண்டு செப்ரம்பரில் அமெரிக்க அழகி அட்லான்டிக் நகரில் தெரிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஆண்டு தோறும் நீராடும் அழகிப் போட்டி இடம்பெற்றது.

1951 முதல் உலக அழகிப் போட்டி இடம்பெற்று வருகின்றது. கிளிநொச்சியில் நடைபெற்ற அழகிப் போட்டி அல்லது அழகு கலைஞர்களுக்கிடையேயான போட்டியும் இந்த உலக அழகுப் போட்டியும் அடிப்படையில் ஒன்றே. இதன் கருத்தியல் தளத்தில் தான் நாம் கவனம் செலுத்தவேண்டுமே அல்லாமல் போர் தின்ற கிளிநொச்சியில் அழகுராணிப் போட்டி அவசியமா இல்லையா என்பதல்ல பிரச்சினை. வெறும் அடைமொழிகளை வீசி அவ்விளம் பெண்களை குற்றவாளியாக்குவது நியாயமற்ற செயல்.

ஆணாக இருந்தாலென்ன பெண்ணாக இருந்தாலென்ன அழகு என்பது முக்கியமான அம்சம். ஒவ்வொருவரும் தன்னளவில் தாங்கள் அழகானவர்கள் என்பதை ஏற்றுக்கொள்வது அவர்களுடைய தனித்துவத்திற்கும் ஆளுமைக்கும் மிகவும் அவசியமானது. அதனால் அவரவர் தங்களை அழகுபடுத்தி வெளிப்படுத்துவது ஆரோக்கியமான விடயமே. அதில் எவ்வித தவறும் கிடையாது. ஆண்களுக்கு அழகு அவசியம் இல்லை என்றால் சிகை அலங்கார நிலையங்கள் எதற்கு?

ஆனால் இந்த அழகும் அதற்கான போட்டி என்பதும் சிக்கலான ஒன்று. ஆணழகன் போட்டிகள் இருந்தாலும் அவை பெரிதாகப் பேசப்படுவதில்லை. ஏனெனில் அது ஆண்களின் அம்சமாகப் பார்க்கப்படுவதில்லை. ஆனால் மிஸ்வேர்ல்ட், மிஸ் கிளிநொச்சி என்பது பலரது கவனத்தையும் ஈர்த்துவிடுகின்றது. அதற்குக் காரணம் சந்தைப் பொருளாதாரமும் அது ஏற்படுத்திய நுகர்வுக் கலாச்சாரமுமே. பெண்ணியம் சார்ந்த பெண் விடுதலைக்கான அமைப்புகள் இதற்கு எதிரான போராட்டங்களை மேற்கொண்டனர் 1970இல் லண்டன் அல்பேர் ஹோலில் இடம்பெற்ற மிஸ் வேர்ல்ட் போட்டிக்குள் நுழைந்த பெண்ணியவாதிகள் அங்கு சலசலப்பை ஏற்படுத்தி உலகின் கவனத்தை ஈர்த்தனர்.

2018 இல் இடம்பெற்ற உலக அழகிப் போட்டியை வழங்கிக்கொண்டிருந்த பொப் ஹோப் “இன்றைய இரவைப் பார்க்க இதுவொரு கன்றுகளின் சந்தையாகத் தெரிகின்றது” எனக் குறிப்பிட்டிருந்தார். பிரித்தானியாவில் கன்றுகள் காட்சிப்படுத்தப்பட்டு ஏல விற்பனை செய்யப்படும் முறையிருப்பதன் பின்னணியில் அவர் இக்கருத்தை வெளிப்படுத்தி இருந்தார். இவ்வாறு இந்த உலக அழகிப் போட்டிகளுக்கு எதிரான பல போராட்டங்கள் காலத்துக்குக் காலம் இடம்பெற்று வருகின்றது.

2002 இல் நைஜீரியாவின் அபுஜாவில் நடக்கவிருந்த மிஸ் வேர்லட் போட்டி அதுதொடர்பான சர்ச்சையால் அங்கு நடைபெறவில்லை. முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் கணிசமான அளவில் வாழ்கின்ற நைஜீரியவில் மிஸ் வேர்ல்ட் ஏற்பாடு செய்யப்பட்டதுமே வாதப் பிரதிவாதங்கள் இரு மதத்தரிப்பினரிடையேயும் உருவானது. அது ஏற்கனவே முரண்பாடுகளோடு இருந்தோரிடையே மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்பின்னணியில் “முகம்மது நபிகள் இன்று இருந்தால் இந்த உலக அழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் ஒருவரையே திருமணம் செய்ய விரும்பி இருப்பார்” என்று கிறிஸ்தவ பெண் ஊடகவியலாளர் ஒரு கட்டுரையை எழுதினார். அதனைத் தொடர்ந்து சில நாட்களின் பின் வெடித்த கலவரத்தில் 215 பேர் படுகொலை செய்யப்பட்டனர். கட்டுரையாளருக்கு மரண தண்டனை – அறிவிக்கப்பட அவர் தற்போது மேற்கு நாடு ஒன்றில் தற்போதும் தலைமறைவாக வாழ்கின்றார்.

மீண்டும் நாங்கள் உலக அழகிப் போட்டிக்கு வருவோம்,
விளையாட்டுப் போட்டிகளை நாங்கள் பார்த்து மகிழ்கின்றோம், குத்துச் சண்டைகளில் யார் வெல்வார்கள் என்று பந்தயம் கட்டுகின்றோம், காளையை அடக்கும் பாட்டிகளை பார்த்து ரசிக்கின்றோம், போட்டிப் பரீட்சைகளில் போட்டி போட்டு கலந்துகொள்கின்றோம் ஆனால் அழகிப் போட்டி மட்டும் ஏன் வேறு கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகின்றது? என்ற கேள்வி நியாயமானதே.

ஏனைய போட்டிகளுக்கும் அழகுப் போட்டிக்கும் உள்ள பிரதான வேறுபாடு தான் இதற்குக் காரணம். ஏனைய போட்டிகளில் ஒருவரின் பலம், திறமை: எழுத்தாற்றல், பேச்சாற்றல், வரையும் ஆற்றல், ஓடும் ஆற்றல் போன்ற பல்வகைப்பட்ட ஆற்றல்கள், சிந்திக்கும் ஆற்றல் என்ற அளவீடு செய்யக்கூடிய சுட்டிகள் போட்டியின் போது மதிப்பீடு செய்யப்படுகின்றது. இது புறநிலையானது பொருள்வகைப்பட்டது. அதற்கு நீங்கள் பரிவர்த்தனை மதிப்பை ஏற்படுத்த முடியும். அதாவது விலை நிர்ணயம் செய்ய முடியும். உதாரணத்திற்கு சீதனச் சந்தையில் ஓஎல் பெயில் விட்டவருக்கும் பட்டதாரிக்கு இடையே உள்ள சந்தைவிலை – சீதனம் ஒன்றல்ல.

இதற்கு முற்றிலும் மாறாக அழகு என்பது உணர்வு சம்பந்தப்பட்டது. அகநிலையானது. அதனை அளவீடு செய்ய முற்படுவதே அடிப்படையில் தவறான அணுகுமுறை. நாங்கள் விரும்புகின்றவர் எங்களுக்கு பேரழகனாகவோ பேரழகியாகவோ தோன்றலாம். ஆனால் எங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு அவ்வாறே தோண்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. கறுப்புப் பற்றி வரலாற்றினூடு எங்களுக்கு திணிக்கப்பட்ட தகவல்களால், கறுப்புப் பற்றிய தவறான புரிதலை எங்களை அறியாமலேயே எங்களுக்குள் கொண்டுள்ளோம். அகத்தில் உள்ள இந்தச் சிக்கலை மறைக்க நாங்கள் முகத்தையும் தோலையும் ப்பிளீச் பண்ணி கொஞ்சம் கூடுதலாக வெள்ளையாக்க விரும்புகின்றோம். ஆபிரிக்க பெண்கள் கூட இதனையே செய்ய ஊக்கப்படுத்தப்படுகின்றனர். அழகு என்ற பெயரில்.
1500களில் இருந்து ஐரோப்பியர்களின் காலனி ஆதிக்கத்திலிருந்தும் அதன் பின் நவகாலனித்துவ ஆதிக்கத்தினாலும் வெள்ளைத்தோல் அழகு, பண்பு, அறிவு ஆகியவற்றோடு தொடர்புபடுத்தப்பட்டு பார்க்கப்படலாயிற்று. ஐரோப்பிய வெள்ளையினத்தவர்கள் எம்மை ஆண்டதால் வெள்ளை மீது அல்லது கறுமை குறைந்தவர்கள் மீது எமக்கு காதலுருவாவது ஒன்றும் வியப்பில்லை. மேலும் கறுப்பாடு, கறுப்புப் பணம், கறுப்புச் சந்தை என்ற சொல்லாடல்கள் எல்லாம் கறுப்புப் பற்றிய கீழ்நிலைக் கருத்துருவாக்கத்தை எம்மத்தியில் மிக ஆழமாக பதிவு செய்துள்ளது. வெள்ளை தான் அழகு என்ற உணர்வை இவை ஏற்படுத்தி உள்ளது. மிஸ் வேர்ல்ட் போட்டியும் இதனையே பிரதிபலிக்கின்றது. வெள்ளையினத்தினரைக் கொண்ட நாடுகளும் அவர்களை ஒத்தவர்களுமே பெரும்பாலும் இப்போட்டிகளில் வெற்றிபெறுவது இதனையே உறுதி செய்கின்றது. ஆய்வுகளும் அதனை உறுதிப்படுத்துகின்றன.

இவற்றுக்கு அப்பால் இப்போது வெள்ளையினத்வரல்லாதவர்களும் இந்த அழகுப் போட்டியில் வெற்றிபெற வாய்ப்பு ஏற்பட்டு இருப்பது ஒன்றும் வெள்ளையரல்லாதோரை அல்லது கறுப்பை அழகாகக் கருதுவதால் அல்ல. தங்கள் ப்பிளீச் பவுடரையும் தாங்கள் அழகென்று கருதுவதை சந்தைப்படுத்தி தங்கள் சந்தையை விரிவாக்கம் செய்யவே. அதனால் தான் இலகுவில் விலைபோகக்கூடிய உலகின் இரண்டாவது பெரிய சந்தையுடைய இந்தியா மிஸ் வேர்ல்ட் போட்டிகளில் ஆறு தடவைகள் வெற்றி பெற்றதன் ரகசியம். உலகின் மிகப்பெரிய சந்தையையுடைய சீனா தன் சந்தையை சர்வதேசத்துக்கு திறந்துவிடாததால் சீனா 2007 இல் ஒரு தடவை மட்டுமே மிஸ்வேர்ல்ட் போட்டியில் வெற்றிபெற்றது.

உயிருள்ள உணர்வுள்ள ஜீவன்களான பெண்கள் சந்தைப் பொருளாதாரத்தின் விற்பனைப் பண்டமாக மாற்றப்படும் தன்மைதான் இந்த அழகுப் போட்டிகளில் வெளிப்படுத்தப்படுகின்றது. அழகில்லாத ஆணோ அழகில்லாத பெண்ணோ கிடையாது. படைக்கப்படவும் முடியாது. அழகை அவரவர் தமக்கேற்ப மெருகூட்டுவது அவரவர் உரிமை. ஆனால் அதற்கு போட்டி வைத்து தெரிவு செய்கின்ற போது அது தீவிரமான அரசியலாக மாற்றப்படுவது தவிர்க்க முடியாதது. ஒரு பெண்ணின் அழகை அளவீடு செய்வதும் அதன் மூலம் அவளை மதிப்பீடு செய்வதும் இந்த நூற்றாண்டின் கருத்தியல் அவலம் என்றே கருதுகிறேன். அவளின் அழகிற்கு அவள் மட்டுமே நிகர். இதற்கு ஒருபடி மேலே சென்று இப்போது க்கீயூட் பேபி கொன்ரெஸ்ட் வேறு நடத்த ஆரம்பித்துவிட்டது பேஸ்புக். லாபமீட்டலாம் என்றால் என்னவும் செய்யலாம் என்பது பல்தேசிய நிறுவனங்களின் கொள்கை. அதற்கு அவர்கள் பார்பி டோலின் இடுப்பை சிறிதாக்கி அதனையும் செக்ஸியாக்கி விற்பனை செய்கிறார்கள். இப்படி எத்தனை போட்டிகளுக்கு எம் எதிர்கால சந்ததியினர் முகம்கொடுக்க வேண்டி வரும் என்பது பல்தேசிய நிறுவனங்களுக்குத் தான் வெளிச்சம். இதில் கிளிநொச்சி இளம்பெண்கள் என்ன பாவம் செய்தார்கள், நீங்கள் சொல்லம்புகளால் அவர்களைத் தைக்க?

ரஷ்ய – உக்ரைன் மோதலால் உயிரிழந்த இராணுவ வீரர்களின் தொகையை வெளியிட்டது ஐ.நா !

ரஷ்யா மற்றும் உக்ரைன்க்கு இடையிலான போர் 10 மாதங்களாக தொடர்ந்த வண்ணம் உள்ளது.

குறித்த போரினால் இதுவரை உயிரிழந்துள்ள இரு நாட்டு இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இறுதியாக வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையகத்தின் அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போரினால் இதுவரை இரு நாடுகளையும் சேர்ந்த 2 இலட்சம் இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா சபையின் அறிக்கை தெரிவித்துள்ளது.

இதேவேளை, ரஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பின் விளைவாக இதுவரை உக்ரைன் நாட்டின் அப்பாவிப் பொதுமக்கள் 6,884 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10,947 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையகத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஐ.எஸ் அமைப்பு அங்கத்தவருடன் தொடர்பு – காத்தான்குடியில் ஒருவர் கைது !

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், இந்தியாவில் அண்மையில் கைது செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்த ஒருவர் காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

30 வயதுடைய ஒருவரே பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் சந்தேகத்தின் பேரில், திங்கட்கிழமை (02) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் தற்கொலைதாரியான சஹ்ரான் ஹசீமுடன் தொடர்பில் இருந்தனர் என்றக் குற்றச்சாட்டின் பேரில், ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

2022 ஓக்டோபர் மாதத்தில் இந்தியா கோயம்புத்தூரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சந்தேக நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்படும் ஷேக் ஹிதாயத்துல்லா மற்றும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் திட்டங்களில் பங்கேற்றதாகக் கூறப்படும் சனோபர் அலி ஆகியோரே டிசெம்பர் 29 ஆம் திகதி இந்தியாவில் கைது செய்யப்பட்டனர்.

இந்த சந்தேகநபர்கள் 2022 பெப்ரவரியில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியின் ஆசனூர் மற்றும் கடம்பூர் பகுதிகளில் உள்ள வனப்பகுதியின் உட்பகுதியில் சதித்திட்டத்தில் ஈடுபட்டதுடன் இலங்கையில் 2019 ஏப்ரல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹசீமுடன் தொடர்பில் இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவருடன் காத்தான்குடியைச் சேர்ந்த 30 வயதுடையவர் முகநூலில் தொடர்புகளை பேணிவந்துள்ளதாக இந்திய உளவுத்துறை விசாரணையின் தெரியவந்ததையடுத்து இலங்கை உளவுத்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் காத்தான்குடியிலுள்ள அவரது வீட்டில் வைத்து விசாரணைக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்றும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.