செய்திகள்

செய்திகள்

செய்திகள்

900 சதுர கிலோமீற்றருக்குள் புலிகள் முழுமையாக முடக்கம்

_army.jpgஆனையிறவுக்கு கிழக்கே அமைந்துள்ள கெவில் பிரதேசத்தை பாதுகாப்பு படையினர் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். ஆனையிறவை கைப்பற்றிய படைப்பிரிவுகளில் ஒன்றான இராணுவத்தின் 53வது படைப்பிரிவினர் இந்தப் பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனையிறவைக் கைப்பற்றி அங்கிருந்து கிழக்கை நோக்கி முன்னேறிய 53வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் கமல் குணரத்ன தலைமையிலான படையினர் கெவில் பிரதேசத்தை வந்தடைந்துள்ளனர். வெற்றிலைக்கேணிக்கு தென்கிழக்கு கரையோரத்தில் அமைந்துள்ள கெவில் பிரதேசம் புலிகளின் மற்றுமொரு பலமான நிலையாக விளங்கியுள்ளது.

கடல் மார்க்கமான சில நடவடிக்கைகளுக்கு புலிகள் இந்தப் பிரதேசத்தைப் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர், தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ள வெற்றி லைக்கேணி முதல் கெவில் வரையான பிரதேசத்தை பலப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.  புலிகளால் இந்தப் பிரதேசங்களில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளையும், மிதிவெடிகளையும் மீட்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கு, கிழக்கின் பெரும்பாலான பகுதிகளில் பரந்திருந்த புலிகளை தற்பொழுது படை நடவடிக்கைகள் மூலம் 900 சதுர கிலோமீற்றர் பரப்புக்குள் முடக்கி விட முடிந்துள்ளதாக தெரிவித்த பிரிகேடியர் இராணுவத்தின் ஒன்பது பிரிவினர் எஞ்சியுள்ள பிரதேசங்களை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தொடர்ந்தும் முன்னேறி வருவதாகவும் குறிப்பிட்டார்.

முகமாலை தொடக்கம் ஆனையிறவு வரையான பிரதேசம் கைப்பற்றப்பட்டதையும், ஏ-9 பிரதான வீதி முழுமையாக விடுவிக்கப்பட்டதையும் அடுத்து, யாழ். குடாநாடு முழுவதும் படையினரின் பூரணகட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாகவும் பிரிகேடியர் குறிப்பிட்டார்.

சுண்டிக்குளமும், அதனை அண்மித்த சிறியதொரு பிரதேசம் மாத்திரம் யாழ். குடாவில் கைப்பற்றப்பட வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட அவர், யாழ். குடாவில் இருந்த புலிகளின் அச்சுறுத்தல் தற்பொழுது நீங்கியுள்ள தாகவும் குறிப்பிட்டார். விடுவிக்கப்பட்ட ஏ-9 பிரதான வீதியின் முகமாலை தொடக்கம் ஓமந்தை வரையான வீதியில் நிலைக் கொண்டுள்ள படையினர், கடுமையான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் இடைக்கிடையே வீதிகளில் ஏற்பட்டுள்ள உடைவுகள் மற்றும் வெடிப்புக்களை திருத்தும் நடவடிக்கைகளை இராணுவத்தின் பொறியியல் பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, கிளிநொச்சிக்கு கிழக்கே உள்ள வட்டக்கச்சி பிரதேசத்தை கைப்பற்றும் நோக்கில் 57 வது படைப்பிரிவினர் கடுமையான தாக்குதல்களை நடத்தி முன்னேறி வருகின்றனர். அத்துடன், பரந்தனுக்கு கிழக்கே அமைந்துள்ள முரசுமோட்டை பிரதேசத்தை முழுமையாக விடுவிக்கும் நோக்குடன் முன்னேறிவரும் இராணுவத்தின் 58 வது படைப்பிரிவினர் விசுவமடு பிரதேசத்தை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

இரணைமடு பகுதியிலுள்ள புலிகளின் விமான ஓடுபாதைக்கு அண்மித்த பகுதியில் இருதரப்பினருக்கு மிடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வரும் அதேசமயம், 59வது படைப்பிரிவினர் முல்லைத்தீவுக்கு மேற்கை நோக்கி முன்னேறிவருகின்றனர். இந்தப் பிரதேசத்தில் அமைந்துள்ள புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளையும், மண் அரண்களையும் இலக்கு வைத்து கடுமையான தாக்குதல்களை படையினர் மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பெரியகுளம், புதுக்குடியி ருப்பு மற்றும் கற்குளம் பகுதிகளில் பல தடவைகள் இடம்பெற்ற மோதல்களுக்கு பின்னர் படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட புலிகளின் எட்டு சடலங்களை படையினர் மீட்டெடுத்துள்ளனர். அத்துடன் ரி-56 ரக துப்பாக்கிகள் 6 அதற்கு பயன்படுத்தும் ரவைகள் 3,850 மற்றும் காட்டுப் பிரதேசத்தில் இருப்பவர்கள் அணியும் உடைகள் படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தாக்குதலில் சதித் திட்டம் தீட்டியவர்களை பாகிஸ்தான் சட்டத்தின் முன் நிறுத்தவில்லை என்றால் இந்தியா நடவடிக்கைகளை எடுக்கும்

pranab-1312.jpgகடந்த நவம்பர் மாதம் மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் சதித் திட்டம் தீட்டியவர்களை பாகிஸ்தான் சட்டத்தின் முன் நிறுத்தவில்லை என்றால் இந்தியா மேலதிக நடவடிக்கைகளை எடுக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.  எவ்விதமான நடவடிக்கை என்பதை முகர்ஜி விபரித்துக்கூறவில்லை என்றாலும், பாகிஸ்தானிடம் ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை இந்தியா கையளித்துவிட்டது என்றும், பாகிஸ்தான் அரசு அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

 மும்பையில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு பாகிஸ்தானின் அரசு நிறுவனங்களுடைய ஆதரவு இருந்திருக்கத்தான் வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துவதை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.  இப்படியான அறிக்கைகளால் போர் பீதிதான் மேலோங்குகிறது என பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் எச்சரித்துள்ளார்.

29 பொதுமக்கள் பலி 200 பேர் காயம்

kili-01.jpgகிளி நொச்சி பகுதியில் நவம்பர் மாதம் தொடக்கம் கடந்த சனிக்கிழமை வரை ஷெல் மற்றும் விமானத் தாக்குதலினால் 29 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 200 பேர் காயமடைந்துமுள்ளதாக வன்னியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வன்னிப்பகுதியில் இடம்பெற்று வரும் தொடர்ச்சியான ஷெல் மற்றும் விமானத் தாக்குதல்கள் காரணமாக கொட்டும் மழைக்கு மத்தியிலும் கிளிநொச்சி மாவட்டத்தின் கிழக்குப் பிரதேச மக்கள் விசுவமடு பகுதியை நோக்கி பெரும் எண்ணிக்கையில் இடம்பெயர்ந்துவருகின்றனர்.  கடந்த நவம்பர் மாதத்திலிருந்து சனிக்கிழமை வரையிலான காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 6 குழந்தைகள் உட்பட 29 சிவிலியன்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதல்களில் 36 பிள்ளைகள் உட்பட 200 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதல்களினால் பொதுமக்கள் மத்தியில் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளதுடன், பலரும் காயமடைந்துள்ளனர். இதனால், அங்கு மக்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலைமை தோன்றியிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

திருமங்கலம் இடைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் லதா வெற்றி

latha-adiyaman.jpgதமிழ் நாடு திருமங்கலம் சட்டப் பேரவை இடைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் தி. மு. க. வேட்பாளர் லதா அதியமான் 39 ஆயிரத்து 266 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தல் 190 வாக்குச் சாவடிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அ. தி. மு. க. சார்பில் முத்துராமலிங்கம், தி. மு. க. சார்பில் லதா அதியமான், தே. மு. தி. க. சார்பில் தனபாண்டியன் மற்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பத்மநாபன் உட்பட 26 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 1,38,369 வாக்குகள் பதிவாகியிருந்தன.

இதில் 67,748 ஆண்களும், 70,621 பெண்களும் வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே, தி. மு. க. வேட்பாளர் லதா அதியமான் 79,422 வாக்குகளையும், அவரைத் தொடர்ந்து அ. தி. மு. க. வேட்பாளர் முத்து ராமலிங்கம் 40,156 வாக்குகளையும் பெற்றிருந்தனர். அதாவது அ. தி. மு. க. வேட்பாளரைவிட தி. மு. க. வேட்பாளர் 39,266 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும் தே. மு. தி. க. வேட்பாளர் தனபாண்டியன் 13,136 வாக்குகளையும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் பத்மநாபன் 831 வாக்குகளையும் பெற்றனர்.

யுத்தத்தை அரசியல் மயமாக்கி அரசியல் இலாபம் தேடும் அவசியம் அரசுக்குக் கிடையாது – நந்திமித்ர ஏக்கநாயக்க

vote.jpgவடக்கே பயங்கரவாத யுத்தத்தையும், இராணுவத்தினரின் யுத்த வெற்றியையும் அரசியல் மயமாக்கி அரசியல் இலாபம் தேட வேண்டும் என்ற எந்தவொரு அவசியமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கோ அல்லது அரசுக்கோ கிடையாது. வடக்கே யுத்தம் தொடர்ந்தாலும், விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து நிராயுதபாணிகளாக ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொள்ளும் வரை இராணுவத்தினரின் யுத்த நடவடிக்கை வடக்கே தொடர்ந்து கொண்டே இருக்கும். இதுவே ஜனாதிபதியின் முக்கிய குறிக்கோள் என மத்திய மாகாண சபையின் மாத்தளை மாவட்ட ஐ. ம. சு. மு. வேட்பாளர் நந்திமித்ர ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இராணுவத்தினரின் பாரிய முயற்சியின் காரணமாக வடக்கு மீளப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கிழக்கை இராணுவத்தினர் மீட்டபொழுது அங்குள்ள மக்கள் எவ்வாறு சுதந்திரக் காற்றை சுவாசித்தனரோ இதே சுதந்திரக் காற்றை வடக்கே உள்ள மக்களும் சுவாசிக்கும் நாள் வெகு தூரத்திலில்லை.

எனவே, கிழக்கு மாகாண மக்கள் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசை வெற்றி பெறச் செய்தது போல், வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல்களில் அரசை மக்கள் வெற்றி பெறச் செய்தார்களோ இதே வெற்றியை மத்திய மாகாண மக்களும் அரசியல் மற்றும் ஏனையவேறுபாடுகளை மறந்து மத்திய மாகாண சபையை வெற்றி பெறச் செய்ய வேண்டும். எனவும் நந்திமித்ர ஏக்கநாயக்க தெரிவித்தார்

குடாநாட்டில் ஏழு இளைஞர்களின் சடலங்கள் ஒரு வாரத்தில் கரையொதுங்கின

யாழ்ப் பாணம் குடாநாட்டு கடற்கரையோரங்களில் இளைஞர்களின் சடலங்கள் ஒதுங்கும் சம்பவங்கள் அதிகரித்துவருவதால் மக்கள் மத்தியில் அச்சமும் பீதியும் ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை நெடுந்தீவின் கடற் கரையில் ஒதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் ஊர்காவற்றுறை பொலிஸாரால் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சடலத்தில் பச்சை நிறத்திலான ரீசேட்டும் கறுப்பு நிற அரைக்காற்சட்டையும் காணப்படுவதாகவும் முகம் அடையாளம் காணமுடியாதவாறு சிதைந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

காங்கேசன்துறை கடற்கரையில் கடந்த வியாழக்கிழமை ஒதுங்கிய நான்கு இளைஞர்களின் சடலங்கள் அன்று மாலை பொலிஸாரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தன. நிர்வாண கோலத்தில் காணப்பட்ட இந்த நான்கு சடலங்களிலும் அடிகாயங்கள், வெட்டுக்காயங்கள் உள்ளதாகவும் முட்கம்பிகளால் சுற்றப்பட்டுள்ளதாகவும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இவை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் வடமராட்சி பருத்தித்துறை கடற்கரையில் இரு இளைஞர்களின் சடலங்களும் கரையொதுங்கின. இந்த வாரத்தில் எழு இளைஞர்களின் சடலங்கள் இவ்வாறு கடற்கரையில் ஒதுங்கியுள்ளதால் மக்கள் மத்தியில் அச்சநிலை காணப்படுகிறது. இதுவரை எவரது சடலமும் அடையாளம் காணப்படவில்லை. அண்மைக்காலங்களில் குடாநாட்டில் பல இளைஞர்கள் கடத்தப்பட்டும், காணாமலும் போயுள்ளதால் இச்சடலங்கள் அவர்களுடையதாக இருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.

லசந்த பிரியாவிடை பெற்றார்

lasantha-3.jpgசண்டே லீடரின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் பூதவுடல் இன்று மாலை பொரளை கனத்தை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இன்று பகல் 1 மணிக்கு நாரஹேன்பிட்டி, கிரிமண்டல மாவத்தையில் உள்ள தேவாலயத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட அவரது பூதவுடலை திம்பிரிகஸ்யாய சந்தியில் வைத்து ஊடகவியலாளர்களும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கையேற்றனர். திம்பிரிகஸ்யாய சந்தியில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டபோது அரசியல் வாதிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், கலைஞர்கள் உட்பட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்

இதேவேளை, லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பாக சில அரசியல் கட்சிகளினால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பலர் உரையாற்றினர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க இவரின் படுகொலையுடன் தொடர்பானவர்கள் இனங்கானப்பட்டு அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.

lasantha-1.jpg

lasantha-2.jpg

 lasantha-3.jpg

எல்ரிரிஈயினர் ஒன்றுகூடும் இடங்களை இலக்குவைத்து விமானத்தாக்குதல் –

mi24-1912.jpgஇலங்கை விமானப் படையினரின் எம்ஐ.24 ஹெலிகொப்டர் மற்றும் ஜெட் விமானங்களைப் பயன்படுத்தி எல்ரிரிஈயினர் ஒன்று கூடும் இடங்களை இலக்கு வைத்து மூன்றாவது செயலணி படையினருக்கும் 57வது டிவிசன் படையினருக்கும் உதவியாக இரணமடுப்பகுதியில் இன்று (ஜன:12) காலை தாக்குதல் நடத்தியுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமானப்படைப் பேச்சாளர் விங்கமான்டர் ஜனக நானயக்கார தகவல் தருகையில் இன்று காலை 8.15 மணியளவில் இரணமடுவுக்கு 1 கி.மீ.தென்கிழக்காக எல்ரிரிஈயினர் ஒன்று கூடும் இடத்தை எம்ஐ 24 ஹெலிபொப்டரினாலும் இரணமடுவுக்கு 2 கி.மீ. வடக்காக மற்றுமொரு ஒன்று கூடும் இடத்தை காலை 9.00 மணியளவில் ஜெட்விமானங்களினால் தாக்கியதாகவும் தெரிவித்தார்.

ஏ-35 பாதையை கைப்பற்றும் தாக்குதல் தொடர்கிறது

SL_Army_in_Killinochieதாக்குதல் படையணியான 58வது டிவிசன் படையினர் ஏ-35 (பரந்தன் -முல்லைத்தீவு) வழியே மேற்கிலிருந்து கிழக்கை நோக்கி நேற்று (ஜன:11) தாக்குதல் நடத்தி குறிப்பிடத் தக்க தூரத்தை முன்னேறியுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்றுப் பகல் பொழுதில் முரசுமோட்டை மற்றும் வட்டக்கச்சி பகுதிகளுக்கு வடக்காக எஞ்சியிருக்கும் எல்ரிரிஈ மறைவிடங்களை தேடி அழிக்கும் பனியில் ஈடுபட்டு வந்தனர்.

முரசுமோட்டைப் பகுதியில் தாக்குதல் நடத்திய படையினர் 4 பயங்கரவாதிகளின் சடலங்களையும் இரு ரி-56 ரக துப்பாக்கியையும் வட்டக்கச்சிப் பகுதியில் தாக்குதல் நடத்திய படையினர் மூன்று பயங்கரவாதிகளின் சடலங்களையும் கைபற்றியுள்ளதாக களநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

100 சிவிலியன்கள் அரச பகுதிக்குள் வருகை

ahathi.jpgமுல்லைத்தீவிலுள்ள புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த 28 குடும்பங்களைச் சேர்ந்த 100 சிவிலியன்கள் நேற்று பாதுகாப்பு படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். பரந்தன், பெரிய பரந்தன், காஞ்சிபுரம் மற்றும் வட்டக்கச்சி ஆகிய பிரதேசங்கள் ஊடாகவே ஓமந்தையை நோக்கி 100 சிவிலியன்களும் வருகை தந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இந்த 100 சிவிலியன்களில் 22 சிறுவர்கள், 23 சிறுமிகள், ஆண்கள் 30, பெண்கள் 20 ஆகியோர் அடங்குவர். வழக்கமான விசாரணைகளுக்கு பின்னர் நலன்புரி முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.