செய்திகள்

செய்திகள்

செய்திகள்

காசாவில் ஹமாஸ் நிலைகளை தாக்க தடைசெய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தும் இஸ்ரேல் இராணுவம் !

பாலஸ்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸின் தாக்குதலைத் தொடர்ந்து காசாவில் ஹமாஸ் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) மக்கள்தொகை அதிகம் உள்ள காசா பகுதிகளில் தடை செய்யப்பட்ட வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்துவதாக சமூக ஊடகங்களில் பல புகைப்படங்கள், வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

பூமியில் மிகவும் நெரிசலான இடங்களில் ஒன்றான காசா பகுதியில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சுமார் 362 சதுர கிலோமீட்டர் மட்டுமே உள்ள காசா நிலப்பரப்பில் நெரிசலில் வசிக்கின்றனர். இதனிடையேதான், காசாவின் நெரிசலான இடங்களை குறிவைத்து வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரின்போது மட்டுமல்ல, சமீபத்தில் கிழக்கு உக்ரைனின் லுகான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகளில் ரஷ்யப் படைகள் இதே வெள்ளை பொஸ்பரஸ் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தியதாக உக்ரேனிய படைகள் குற்றம்சாட்டின.

பொஸ்பரஸ் குண்டு என்பது வென் பொஸ்பரஸால் ஆனது. வெள்ளை நிறம் மற்றும் சில நேரங்களில் அது வெளிர் மஞ்சள் நிறமாக இருக்கும். இவை பூண்டின் வாசனையைப் பரப்பும் மெழுகுப் பொருள். அது, ஆக்ஸிஜனுடன் தொடர்பு கொண்டவுடன் எரியத் தொடங்குகிறது. இந்த குண்டுகள் வெடித்த பிறகு, உடனடியாக வெப்பநிலை 800 டிகிரியை எட்டும் என்று மதிப்பிடப்படுகிறது.

வெட்டவெளியில் பொஸ்பரஸ் குண்டு வீசப்படும்பட்சத்தில், அது நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பரவும். வெடித்துச் சிதறும்போது மிக அடர்த்தியான வெண் புகை மண்டலத்தை உருவாக்கும். இதனால் தாக்குதல் நடத்தும் படைகளுக்கு தற்காப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. வெள்ளை பொஸ்பரஸ் தரையில் வேகமாக படர்ந்து விரைவாக தீயை ஏற்படுத்தும். இந்த வகை குண்டுகளை ஆள்நடமாட்டம் இல்லாத ஓபன் ஸ்பேஸ் வகையறா பகுதிகளில் பயன்படுத்த மட்டுமே ஐ.நா. அனுமதிக்கிறது.

இந்த குண்டுகள் மக்கள் மீது விழுந்தால் தோலில் தீக்காயங்கள் ஏற்படுகின்றன. குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகின்றன. இந்தப் புகையை சுவாசிப்பதால் புற்றுநோய், குறிப்பாக ரத்தப் புற்றுநோய் ஏற்படலாம். மேலும், மனிதர்கள் சிலசமயங்களில் இறப்பை தழுவுவது மட்டுமல்ல, தீ தோலில் சிறிதளவு விழுந்தாலும் திசு மற்றும் எலும்பில் ஆழமாக ஊடுருவி கடுமையான தீக்காயங்களை ஏற்படுத்துவதுடன் உறுப்புகளை சிதைக்கும் வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால், மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1800-களில் ஃபெனியன் என அழைக்கப்படும் ஐரிஷ் படைகள் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக இந்த வகையான குண்டுகளை பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனை அப்போது “ஃபெனியன் தீ” என்றும் கூறியுள்ளனர். இரண்டு உலகப் போர்களிலும் பிரிட்டிஷ் ராணுவம் இதைப் பயன்படுத்தியது. ஈராக் படையெடுப்பின்போது பல்லூஜா நகரில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்கப் படைகள் இந்த வகையான குண்டுகளை உபயோகித்துள்ளது.

இஸ்ரேல் இப்போது மட்டுமல்ல, 2006 லெபனான் போரின் போது ஹிஸ்புல்லா இயக்கத்துக்கு எதிராக பொஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டது. மேலும், 2008-09 காசா போரின்போதும் வெள்ளை பொஸ்பரஸை இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்தியதாக பல மனித உரிமைகள் குழுக்கள் குற்றம்சுமத்தி இருந்தன. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கூட இவ்வகை குண்டுகளை ஒருமுறை பயன்படுத்தியுள்ளனர். சிரிய போரிலும் இந்தக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.

பொதுமக்கள் மீது வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்துவது போர்க்குற்றமாகக் கருதப்படுகிறது. இந்த வகை குண்டுகளை, சமீபத்தில் உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா பயன்படுத்தியதாக சொல்லப்பட்ட நிலையில், அதே குற்றச்சாட்டு தற்போது இஸ்ரேலும் மீதும் சுமத்தப்பட்டுள்ளது. காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகளின் 200 இலக்குகளில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ள நிலையில், வெள்ளை பாஸ்பரஸ் குறித்த குற்றச்சாட்டும் வலுப்பெற்று உள்ளது.

நூறு தமிழர்களைக் கொன்றால் அதில் ஒரு ஈழப் போராளியும் கொல்லப்படுவான் என்ற மொசாட்டின் ஆலோசனைதான் பாலஸ்தீனிலும் நடக்கிறது – தேசம் திரை காணொளி !

பாலஸ்தீனப் போராட்டமும் ஈழப் போராட்டமும்:
அன்றைய இலங்கை ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஜே ஆர் ஜெயவர்த்தன மிகுந்த இனவாதி என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை. ஐக்கிய தேசியக் கட்சி ஒரு இனவாதக் கட்சியாகவே தன்னை கட்டமைத்திருந்தது. ஜே ஆருக்கும் அவரது படைக்கும் ஆலோசனையும் உதவியும் நல்கியது மொசாட். அன்றும் இன்றும் ஐக்கிய தேசியக் கட்சி மேற்கு நாடுகளின் சார்பையே எடுத்து வருகின்றது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இவர்களின் நெருங்கிய நட்புகள். நூறு தமிழர்களைக் கொன்றால் அதல் ஒரு ஈழப் போராளியும் கொல்லப்படுவான் என்ற மொசாட்டின் ஆலோசனை எண்பதுக்களில் அன்றைய பத்திரிகைகளில் இடம்பிடித்திருந்தது.
 இந்தத் தந்திரத்தைத் தான் மொசாட் பாலஸ்தினியர்கள் மீது இன்றும் மேற்கொள்கின்றது. ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் காலத்திலேயே மிக மோசமான இனப்படுகொலைகளும் இனச் சுத்திகரிப்பும் இடம்பெற்றது. மாறாக இடதுசாரி நிலைப்பாட்டோடு செயற்பட்ட ஈரோஸ் (ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை அமைப்பு) அமைப்பின் லண்டனில் வாழ்ந்த ஸ்தாபகர் இரத்தினசபாபதி மற்றும் புளொட் (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்) செயற்பாட்டாளர் மகா உத்தமன் ஆகியோர் பாலஸ்தீன விடுதலை அமைப்போடு தொடர்பைப் பெற்று தங்களுடைய வீரர்களை
பயிற்சிகளுக்காக பாலஸ்தீனம் அனுப்பி வைத்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு சிலரும் பாலஸ்தீன விடுதலை அமைப்போடு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். ஈரோஸ் அமைப்பில் அன்றைய நாட்களில் கணிசமான எண்ணிக்கையானவர்கள் இல்லாததால் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமே கூடுதலாக இப்பயிற்சிகளைப் பெற்றனர்.
இது தொடர்பான தேசம் திரை காணொளியை காண click செய்யவும்..,

“நாங்கள் மிருகங்களுடன் மோதுகிறோம். காசா மக்களுக்கு குடி தண்ணீருக்கு கூட அனுமதி இல்லை. ” – இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு !

ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக காசா பகுதியில் இஸ்ரேல் தொடர் வான்வெளித் தாக்குதல்களை நடத்தி வரும்நிலையில், காசா பகுதியை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவவ் காலண்ட் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக பேசியுள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவவ்,

‘‘காசா பகுதியை நாங்கள் முழுமையாக முற்றுகையிட்டுள்ளோம். அப்பகுதி அனைத்தும் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. அங்கு மின்சாரம், உணவு, குடிநீர், எரிவாயு என எதுவும் கிடைக்க அனுமதிக்க போவதில்லை. எல்லாம் முடக்கப்பட்டுள்ளது. நாங்கள் மனிதர்களுடன் சண்டையிடவில்லை. மிருகங்களுடன் மோதுகிறோம். எனவே, அதற்கேற்ப தான் நடந்துகொள்ள முடியும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நேற்றைய ஒரே நாள் இரவில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், பீரங்கிகள் என ஆகியவற்றை கொண்டு காசாவில் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாதிகளின் 500-க்கும் மேற்பட்ட இலக்குகளில் தாக்கப்பட்டன என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படை அறிக்கை வெளியிட்டுள்ளது.

லெபனானில் இருந்து ஆயுதங்களுடன் ஊடுருவிய தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர் என்று இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில் ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்கள் 9 பேர் பலியாகியுள்ளனர் என அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

 

சனிக்கிழமை முதல் ஹமாஸ் போராட்டகுழுவினர் நடத்தி வரும் தாக்குதல்களால் இஸ்ரேல் தரப்பில் 700 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 260 பேர் ஓர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள். இந்தத் தாக்குதல்களின்போது 100 இஸ்ரேலியர்கள் கடத்தப்பட்டு, காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. அதேபோல், ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் வான்வெளித் தாக்குதல்களால் காசா பகுதியில் வாழ்ந்து வந்த பாலஸ்தீனயர்கள் 500 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர்.

இந்தப் போர் காரணமாக, பாலஸ்தீன பகுதிகளில் இருந்து இதுவரை 1,20,000 மக்கள் வெளியேறியுள்ளனர். காசா பகுதியில் 1,00,000 ரிசர்வ் துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அங்கு 130 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் இயக்கத்தினர் பிடித்துவைத்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

சமீப நாட்களில் இஸ்ரேலிய குடியேறிகள் அல் – அக்ஸா மசூதி வளாகத்தில் நடத்திய தாக்குதல் மற்றும் சமீப மாதங்களில் இஸ்ரேலால் குறிப்பிடத்தகுந்த அளவில் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டத்தை அடுத்து, ஹமாஸ் போராட்ட குழுவினரின்  இந்தத் தாக்குதல் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. பல தசாப்தங்களாக நடந்து வரும் இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஹமாஸ் நடத்திய ரொக்கெட் வெடிகுண்டு தாக்குதல் சூழலை ரத்தக் களமாக்கியுள்ளது. இதற்கு, இஸ்ரேல் பதிலடியாக காசா பகுதிகளில் வான்வெளித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

‘ஹமாஸ் தீவிரவாதிகள் ஊடுருவப்பட்ட காசாவுக்கு அருகில் இருக்கும் தெற்கு பகுதியின் முழுக் கட்டுப்பாட்டையும் இராணுவம் மீண்டும் கைப்பற்றிவிட்டது. என்றாலும் சில இடங்களில் சண்டை தொடர்கிறது’ என்று இஸ்ரேலிய ராணுவ படையின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹக்கரி தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன ஹமாஸிற்கு ஆதரவளிப்பதாக ஈரான், சிரியா, லெபனான் அறிவிப்பு!

ஹமாஸ் போராட்ட குழுவினருக்கு ஈரான், சிரியா மற்றும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு ஆதரவாக உள்ளது. இவர்கள் அனைவருமே இப்பகுதியில் அமெரிக்காவின் கொள்கையை எதிர்க்கின்றனர்.

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்தியில், ‘‘ ஹமாஸ் தாக்குதல், ஆக்கிரமிப்பாளர்களின் முன்னிலையில் பாலஸ்தீன மக்களின் நம்பிக்கைக்கு சான்றாக உள்ளது. ஹமாஸ் அமைப்பினருக்கு பாலஸ்தீன பகுதி மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இதர நாடுகளிலும் ஆதரவாளர்கள்  உள்ளனர்.’’ என தெரிவித்துள்ளது.

ஹமாஸ் தாக்குதலால் பெருமிதம் அடைகிறோம் என ஈரான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் கூறியுள்ளன. இந்த சூழலுக்கு இஸ்ரேல்தான் பொறுப்பேற்க வேண்டும் என கட்டார் கூறியுள்ளது.

 

ஈரானில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக போராடிய நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் !

ஈரானிய சமூக செயற்பாட்டாளர் நர்கிஸ் முகம்மதிக்கு (Narges Mohammadi) அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஈரானில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக போராடியதற்காகவும், மனித உரிமைகளுக்காக அவர் நடத்திய போராட்டத்திற்காகவும் அவருக்கு 2023 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஈரானிய ஆட்சியாளர்கள் அவரை 13 முறை கைது செய்துள்ளனர். ஐந்து முறை அவர் குற்றவாளி என்று தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மொத்தம் 31 ஆண்டுகள் அவர் சிறைத்தண்டனையுடன் 154 கசையடிகளையும் பெற்றுள்ளார். துயரம் என்னவென்றால், நர்கிஸ் முகம்மதி இன்னும் சிறையில் தான் இருக்கிறார்.

 

இயற்பியல் மாணவியான முகம்மதி, சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக போராடுபவராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.

 

ஈரானிய பெண்களுக்காகப் போராடி சிறையில் அடைக்கப்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவுவதற்கான முயற்சிகளுக்காக 2011 ஆம் ஆண்டில் முதன்முறையாக கைது செய்யப்பட்டார்.

 

இந்தக் குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு பல ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

 

பிணையில் வெளிவந்த முகம்மதி, ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு எதிரான போராட்டங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

 

அவரது இந்த போராட்டம், 2015 ஆம் ஆண்டு மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு, கூடுதலாக சில ஆண்டுகள் சிறைக்குள் இருக்கும் நிலையை உருவாக்கியது.

 

சிறைப்பிடிக்கப்பட்டதிலிருந்து, நர்கிஸ் முகம்மதி, ஈரானில் போராட்டங்களுக்கான வலு குறையாமல் இருக்க உதவிக்கொண்டேயிருந்தார்.

 

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் இதுவரை அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (06) அமைதிக்கான நோபல் பரிசு நர்கிஸ் முகம்மதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் பேருந்து தீப்பற்றி விபத்து – குழந்தைகள் உள்ளடங்கலாக 21 பேர் பலி !

வடக்கு இத்தாலியின் வெனிஸ் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து கேம்ப்கிரவுண்டிற்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று தீப்பற்றி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் குழந்தைகள் உள்ளடங்கலாக 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 18 பேர் காயமடைந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவிகின்றனர்.

பாலத்தில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பற்றியதால் பாலத்திலிருந்து விலகி புகையிரத பாதைக்கு அருகில் விழுந்து விபத்து சம்பவித்துள்ளது

பேருந்திலிருந்து எரிபொருள் கசிந்ததில் பேருந்து தீப்பற்றியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர், நீண்ட போராட்டத்தின் பின்னர் தீயினை அணைத்ததாகவும், இந்நிலையில் பயணிகளை மீட்க வேண்டியும் இருந்ததால் பெரும் சவாலுக்கு உள்ளதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு

மலேசியாtில் இலங்கையர் மூவர் கொல்லப்பட்ட விவகாரம் – சந்தேகநபர் சிறைக்காவலில் உயிரிழப்பு !

மலேசியா – சென்டுல் பகுதியில் இலங்கையர்கள் மூவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கோலாலம்பூர் காவல்துறை தலைமையக அதிகாரி டத்தோ அலாவுதீன் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு சிறைக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

அவர் மேலும் தெரிவிக்கையில், “இரண்டு பிரதான சந்தேக நபர்களுக்கு கொலைகளை செய்வதற்கு உதவிய சந்தேகத்தின் பேரில் மேலும் மூன்று இலங்கையர்களும், பாகிஸ்தானியரும் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டனர். நான்கு சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்திய போது கிடைத்த தகவலின் அடிப்படையில் இரண்டு முக்கிய சந்தேக நபர்களை கைது செய்ய முடிந்தது.

உயிரிழந்த இலங்கையர் தவிர மேலும் ஆறு இலங்கையர்களும், பாகிஸ்தானியர் ஒருவரும் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள்” எனத் தெரிவித்தார்.

நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி முடங்கியது யாழ்ப்பாணம் நீதிமன்றவளாகம் !

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, வடக்கு – கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் இன்றையதினம் முடக்கப்பட்டுள்ளன. இதனால் யாழ்ப்பாணம் நீதிமன்றவளாக செயற்பாடுகளும் முற்றாக முடங்கின.

யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு திங்கட்கிழமை (02) ஒன்றுகூடி முக்கிய பல தீர்மானங்களை எடுத்திருந்தனர். இதன்போதே முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா தொடர்பிலும், நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தி சட்டவாட்சியை நிலைநாட்டவும் ஏதுவாக இன்றும் நாளையும் சட்டத்தரணிகள் வடமாகாண நீதிமன்ற நடவடிக்கைகளை பகிஷ்கரிப்பது என தீர்மானம் எடுத்திருந்தனர்.

நாளையும் (04) யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணிகள் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளமை

2023 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு – கொவிட் 19 தடுப்பூசியை கண்டுபிடிக்க மூல காரணமானவர்களுக்கு !

கொவிட் 19 தடுப்பூசி உருவாக்கத்திற்கான அடிப்படையாகக் கருதப்படும் நியூக்லியோசைடின் மாற்றம் குறித்த கண்டுபிடிப்புக்காக 2023 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு கடாலின் கரிகோ மற்றும் ட்ரூவ் வைஸ்மேன் இருவருக்கும் கூட்டாக வழங்கப்படுகிறது. இந்தத் தகவலை ரோயல் ஸ்வீடிஸ் அக்கடமி இன்று (அக்.2) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“தங்களின் அற்புதமான கண்டுபிடிப்புகள் மூலமாக, நமது நோய் எதிர்ப்பு சக்தியில் எம்ஆர்என்ஏ எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய அடிப்படை புரிதலை மாற்றியமைத்துள்ள பரிசு பெற்றவர்கள், நவீன காலத்தில் மனித ஆரோக்கியத்துக்கான அச்சுறுத்தலுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் முன்னோடியில்லாத பங்களிப்பினை செய்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர் வேதியியலாளரான கடாலின் கரிகோ, எம்ஆர்என்ஏயின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டார் என்றாலும், அவர் நோயெதிர்ப்பியல் நிபுணரான ட்ரூவ் வைஸ்மேன் உடன் இணைந்து நியூக்லியோசைடின் பாதிப்பும், நோய் எதிர்ப்பு அமைப்பில் அதன் தாக்கம் குறித்தும் கடந்த 2005-ல் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டார். பின்னர் 2008, 2010ம் ஆண்டுகளில் வெளியான மேலும் சில ஆய்வுக்கட்டுரைகள் ஆரம்பக்கட்ட கண்டுபிடிப்புகளை சரிசெய்ய உதவியது. இதன் மூலம் எம்ஆர்என்ஏவை மருத்துவ ரீதியாக பயன்படுத்துவதில் இருந்த முக்கியமான தடைகள் நீங்கின.

இதன் மூலம், மனித ஆரோக்கியத்துக்கான அச்சுறுத்தலாக விளங்கிய கோவிட் 19-க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இந்த இணை முன்னோடியில்லாத பங்களிப்பை செய்துள்ளதாக நோபல் பரிசு குழுவின் நடுவர் கூறியதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த இணையை கவுரவிக்கும் வகையில், ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் கமிட்டி மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு இருவரையும் தேர்வு செய்துள்ளது. பரிசு பெற உள்ள அறிவியல் கண்டுபிடிப்பு 2005ம் ஆண்டைச் சேர்ந்தது என்றாலும், கோவிட் 19க்கு எதிராக ஃபைசர்/பையோடெக் மற்றும் மடேர்னாவால் தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பூசி எம்ஆர்என்ஏ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டவை.

 

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக பணிபுரியும் ஹங்கேரியைச் சேர்ந்த கரிகோவும், அமெரிக்காவைச் சேர்ந்த வைஸ்மேனும் தங்களின் ஆராய்ச்சிக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளனர். இதில் 2021ம் ஆண்டு பெற்ற லஸ்கர் விருது நோபல் விருத்துக்கு இணையாக பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் விஞ்ஞானியான ஸ்வாண்டே பாபோவின் அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமத்தின் கண்டுபிடிப்புக்காக வழங்கப்பட்டது. இவரது கண்டுபிடிப்பு முற்றிலும் புதிய துறையான பலியோஜெனோமிக்-ல் மனித பரிணாமம் மற்றும் இடம்பெயர்வு குறித்து ஆழமாக புரிந்து கொள்ள அறிவியல் சமூகத்துக்கு உதவியது.

இந்தாண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலமாக நோபல் பரிசு அணிவகுப்பு தொடங்கியுள்ளது.

உலகின் பொருளாதார சுதந்திரம் 2023 இற்கான ஆண்டறிக்கை – இலங்கைக்கு பின்னடைவு !

கனடாவின் ஃப்ரேசர் நிறுவனத்துடன் இணைந்து அட்வகேடா நிறுவனம் வெளியிட்ட உலகின் பொருளாதார சுதந்திரம் 2023 இற்கான ஆண்டறிக்கையில் உள்ளடங்கிய 165 நாடுகளில் இலங்கை 116 வது இடத்தினைப் பிடித்துள்ளது.

 

165 நாடுகளின் கொள்கைகள் மற்றும் நிறுவனங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் தனிநபர்களின் பொருளாதார சுதந்திரத்தை அதாவது தங்கள் சொந்த பொருளாதார முடிவுகளை எடுக்கும் திறனை வெளியிடும் அறிக்கையே இந்த பொருளாதார சுதந்திர அறிக்கையாகும்.

 

இதில் நாட்டின் ஒழுங்குமுறை, சர்வதேச அளவில் வர்த்தகம் செய்வதற்கான சுதந்திரம், அரசாங்கத்தின் அளவு, சட்ட அமைப்பு, சொத்து உரிமைகள் மற்றும் நல்ல பணக் கொள்கை என்பன அடங்குகின்றது.

மேலும் இந்த தரவரிசையில் இப்போது முதலிடத்தில் சிங்கப்பூர் உள்ளது, அதனைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் ஹாங்காங், 3 ஆம் இடத்தில் சுவிட்சர்லாந்து, 4 ஆம் இடத்தில் நியூசிலாந்து, 5 ஆம் இடத்தில் அமெரிக்கா, அயர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, யுனைடெட் கிங்டம் மற்றும் கனடா ஆகிய நாடுகள் முறையே 6 தொடக்கம் 10 ஆம் இடம் வரை தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர்.

மேலும் ஜப்பான் (20வது), ஜெர்மனி (23வது), பிரான்ஸ் (47வது) மற்றும் ரஷ்யா (104வது) ஆகிய இடங்களை முறையே பெற்றுள்ளன. வெனிசுலா மீண்டும் கடைசி இடத்தினைப் பெற்றுள்ளது.

வட கொரியா மற்றும் கியூபா போன்ற சில நாடுகளின் தரவுகள் இல்லாததால் அவற்றை தரவரிசைப்படுத்த முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டின் தரவரிசையில் 104 வது இடத்தில் இருந்த இலங்கை 116 ஆவது இடத்தினை அடைந்திருப்பது பொருளாதார சுதந்திரத்தில் சரிவடைந்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது.

இலங்கையின் பொருளாதார சுதந்திரத்தின் 5 துணைக் கூறுகளில் 4 அந்தந்த தனிப்பட்ட மதிப்பெண்களில் சரிவை பதிவு செய்வதால், இலங்கையின் மதிப்பெண்ணில் சரிவு ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அளவு, பணத்திற்கான அணுகல், சர்வதேச அளவில் வர்த்தகம் செய்வதற்கான சுதந்திரம் மற்றும் கடன், உழைப்பு மற்றும் வணிகத்தின் கட்டுப்பாடு ஆகிய கூறுகளில் சரிவை சந்தித்துள்ளது.

சட்ட அமைப்பு மற்றும் சொத்து உரிமைகள் மதிப்பெண்ணில் முன்னேற்றத்தை காட்டிய கூறாகும்.

இந்த பின்னடைவிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளாக நிலையான பணம் மற்றும் நிதி சூழலில் சுதந்திரமாக வர்த்தகம் செய்யவும், வேலை செய்யவும், பரிவர்த்தனை செய்யவும் குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கபட்டால் இலங்கை இந்த சரிவிலிருந்து மீண்டுவர முடியும் என அட்வகேடா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தனநாத் பெர்னாண்டோ தெரிவித்தார்.