செய்திகள்

செய்திகள்

செய்திகள்

இந்தியாவின் மணிப்பூரில் மீண்டும் பதற்ற நிலை – கலவரத்தை அடக்க குவிக்கப்பட்ட இராணுவம்!

மணிப்பூர்  மாநிலத்தில் மீண்டும் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதால், அங்கு பதற்ற நிலை உருவாக்கி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று (19) காலை ஜிர்பும் மாவட்டத்தில் உள்ள போரோபெக்ரா பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மணிப்பூரில் 2023ம் ஆண்டு மே மாதம் குக்கி பழங்குடி மற்றும் மெய்தி சமூகங்கள் இடையே பெரும் கலவரம் மூண்டது.இதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

பின்னர் அங்கு நிலைமை ஓரளவு சீராகி வந்த நிலையில், செப்டெம்பர் 1 ஆம் திகதி மணிப்பூர் தலைநகர் இம்பால் மேற்கு மாவட்டத்தில் ஆளில்லா விமானம் மூலம் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.இதில் இருவர் உயிரிழந்தனர்.

பின்னர் செப்டெம்பர் 7 ஆம் திகதி ஜிரிபம் பகுதியில் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதனால் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 5 பேர் உயிரிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் முழுவதுமே மணிப்பூரில் பதற்ற சூழ்நிலை இருந்து வந்தது.

 

இணையசேவை தடை, ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஓராண்டை கடந்தும் இந்த வன்முறைகள் நீண்டு கொண்டே செல்கிறது.

ஒக்டோபர் மாத தொடக்கத்தில் பதற்றம் சற்று குறைந்த நிலையில் மீண்டும் அங்கு மோதல் வெடித்துள்ளது.

தாக்குதலை அறிந்த பாதுகாப்பு படையினர் பதிலடியாக, அவர்கள் மீது வெடிகுண்டுகளை வீசி உள்ளனர்.

 

இருதரப்புக்கும் பலமணி நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. சண்டையில் எந்த தரப்புக்கும் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.

தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் காணப்படுவதால் பாதுகாப்பு படையினர் அதிக எண்ணிக்கையில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வன்முறை நிகழ்ந்த பகுதியில் உள்ள பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சில வாரங்களுக்குள்ளேயே 400 பில்லியன் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றுள்ள அனுர குமார அரசாங்கம் – ஹர்ஷ டி சில்வா  குற்றச்சாட்டு!

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் கடந்த சில வாரங்களில் 400 பில்லியன் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா  தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி  அலுவலகத்தில் இடம்பெற்ற நேற்று (18) செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நிதி அதிகாரம் ஜனாதிபதியிடம் அல்ல. நாடாளுமன்றத்திடம் உள்ளது. ஜனாதிபதியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் போது, ​​அது எவ்வாறு செய்யப்பட வேண்டும், சரியானதா? அல்லது தவறானதா? எனக் கணக்கிடுவது அவசியம்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பொறுப்பும் நாடாளுமன்றத்திடம் உள்ளது. எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும், நாட்டின் பொருளாதாரத்தை கையாள்வதற்கு தகுதியானவர்கள் நாடாளுமன்றத்தை பலப்படுத்த வேண்டும். இல்லையெனில் நாடு மீண்டும் அதள பாதாளத்திற்குச் செல்லும்.

முன்னைய அரசாங்கம் கடன் பெற்று, மக்களுக்கு எந்தவித நன்மையையும் வழங்கவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின் போது, அந்த பணம் முன்னைய அரசாங்கத்தால் திருடப்பட்டதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்தது.

அதேபோலவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த சில வாரங்களில் 400 பில்லியன் ரூபாவுக்கு மேல் கடன் பெற்றுள்ளது““ என அவர் மேலும் தெரிவித்தார்.

பொறுப்பேற்று சில வாரங்களுக்குள்ளேயே 400 பில்லியன் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றுள்ள அனுர குமார அரசாங்கம். ஹர்ஷ டி சில்வா  குற்றச்சாட்டு!

இலங்கையின் அனைத்து வங்கிகளிலும் வர்த்தக மறுமலர்ச்சி பிரிவு உருவாக்க உத்தரவு !

நாட்டில் வீழ்ச்சியடைந்துள்ள வர்த்தகங்களை மீண்டும் வலுப்படுத்துவதற்கு வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக அனைத்து வங்கிகளிலும் வர்த்தக மறுமலர்ச்சி பிரிவுகளை அமைக்குமாறு இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.

 

வர்த்தகங்களுக்கு புத்துயிர் அளிக்க நிதி வழங்குதல், கடனுக்கான வட்டியை குறைத்தல், கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடித்தல் போன்ற பல சேவைகள் இந்தப் பிரிவுகள் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன.

 

இலங்கை மத்திய வங்கி ஒவ்வொரு வங்கிக்கும் புதிய பிரிவுகளை அமைக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்குவதற்கு முன்னரே சில வங்கிகளில் இப்பிரிவுகள் செயற்பாட்டில் இருந்தன.

 

முன்னர் நிறுவப்பட்ட இப்பிரிவுகளை மேம்படுத்துவதுடன், மிகவும் திறமையான மற்றும் மக்கள்நேய சேவையை வழங்குவதற்கு புதிய முறையின் கீழ் செய்யப்படுகிறது.

 

இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதங்களை பல சந்தர்ப்பங்களில் குறைத்துள்ளது. இந்த வகையில் மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீத குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது வங்கிகளின் பொறுப்பாகும். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி.நந்தலால் வீரசிங்க, பல சந்தர்ப்பங்களில் கொள்கை வட்டி வீத குறைப்பின் அனுகூலத்தை பயன்படுத்தி கடன் வட்டியை குறைக்க உதவுமாறு வங்கி முறைமையிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

 

அதன்படி வங்கிகள் வர்த்தகத்துறையை எளிதாக்கும் வகையில் குறைந்த வட்டியில் கடன் வழங்கத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக இலங்கை வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான ரசல் பொன்சேகாவிடம் கேட்ட போது, இலங்கை வங்கியின் மாகாண மட்டத்திலுள்ள கிளைகளில் ஏற்கெனவே இவ்வாறான 11 நிலையங்கள் இயங்கி வருவதாக தெரிவித்தார்.

 

கொழும்பிலுள்ள தலைமையகத்தில் இவ்வாறு ஒரு பிரிவு இயங்குகிறது. அதன் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வினைத்திறன் மிக்க நட்புறவான சேவை வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுத் தேர்தல் தொடர்பாக சமூக ஊடகங்களில் தரமற்ற போலியான தகவல்கள் – ஒரு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை !

பொதுத் தேர்தல் தொடர்பாக சமூக ஊடகங்களில் தரமற்ற அல்லது போலியான ஆய்வு அறிக்கைகள், கருத்துக் கணிப்புகள் போன்ற தகவல்களை வெளியிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி அல்லது வேட்பாளர்கள் முறைகேடாக பதவி உயர்வு அல்லது பாரபட்சம் காட்டினால், அந்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

நபர் ஒருவர் குற்றவாளியாக உறுதி செய்யப்பட்டால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினர் தலைவர் ஆர்.எம்.எல்.கே.ரத்நாயக்கவிடம் வினவியபோது, ​​

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப்பிரிவு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, தேர்தல் சட்டத்தை மீறியமை கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு தேர்தல் ஆணையத்தில் தனிப் பிரிவு நடைமுறைப்படுத்தப்படும் என சுட்டிக்காட்டிய அவர், தேர்தல் கண்காணிப்பு குழுக்களும் தகவல்களை வழங்குவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

அந்தத் தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தின் சமூக ஊடக ஒழுங்குமுறை குழு செயற்படுத்தப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்கள், விசேடமாக டிக்டொக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை தொடர்பில் தேர்தல் ஆணையம் அதிக கவனம் செலுத்தியுள்ளது.

மேலும், அரசியல் கட்சி அல்லது வேட்பாளரை விளம்பரப்படுத்த அல்லது பாரபட்சம் காட்டுவதற்காக, அரச ஊழியர்கள் தங்கள் தனிப்பட்ட சமூக ஊடக கணக்கு அல்லது வேறு ஏதேனும் கணக்கை பயன்படுத்துவதும் தேர்தல் சட்டத்தை மீறுவதாகக் கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச வாகனங்களை காலம் தாண்டி பயன்படுத்தி வரும் மகிந்த ராஜபக்ச!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பயன்படுத்திய மேலதிக அரசாங்க வாகனங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு பல தடவைகள் அறிவிக்கப்பட்ட போதிலும் நேற்று வரை அவை கையளிக்கப்படவில்லை என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ஒருவர் ஓய்வு பெற்ற பின்னர் 03 அரச வாகனங்களை மாத்திரம் பயன்படுத்துவதற்கு உரிமையுள்ளது, ஆனால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 அரச வாகனங்களையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 15 ​​அரசாங்க வாகனங்களையும் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜேவிபியினர் கூறுவது போன்று எல்லோரும் சமம் என்று போனால் அது மிகப் பெரிய ஆபத்தாகும். – விக்கினேஸ்வரன் எச்சரிக்கை!

“பெரும்பான்மை சிங்களவர்கள் வாழும் இலங்கையில் ஜேவிபியினர் கூறுவது போன்று எல்லோரும் சமம் என்று போனால் அது மிகப் பெரிய ஆபத்தாகும்.” என சி.வி.விக்கினேஸ்வரன் தெவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவித்ததாவது,

13 ஆவது திருத்த சட்டத்திற்கு எதிராக அந்த காலத்திலே இருந்து ஜேவிபி செயற்பட்டது. ஆனால் ஐனாதிபதி தேர்தல் காலத்தில் அதற்கு மாற்றான கொள்கையுடன் வாக்கு கேட்டனர். இவ்வாறான நிலையில் இப்போது மீண்டும் தமது நிலைப்பாட்டையா சில்வின் சில்வா ஊடாக வெளிப்படுத்த முயல்கின்றனர். ஆனாலும் அக்கட்சியின் பிமல் ரத்நாயக்க அப்படி அவர் கூறவில்லலை என்றவாறாக கூறியிருக்கிறார். இதனூடாக தமிழ் மக்களுக்கு எதிராக இவ்வாறன கருத்துக்களை கூறுவது அந்த மக்களின் மனங்களை நோகச் செய்யும் என்பது அவர்களுக்கே தெரிகிறது போல உள்ளது.

 

இந்த 13 ஆவது திருத்தச் சட்டம் எங்களுக்கு எந்தக் காலத்திலும் ஒரு நிரந்தர தீர்வாக அமையாது. ஆனாலும் இப்போது இருக்கும் 13 ஆவதையும் நாங்கள் இதற்காக பறிகொடுத்துவிட்டு ஜேவிபியினர் கூறுவது போன்று எல்லோரும் சமம் என்று போனால் அது மிகப் பெரிய ஆபத்தாகும்.ஏனெனில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் சிங்களவர்கள் அவர்களுடைய வாழ்க்கை முறையையும் பாசையும் மதமும் எங்கள் எல்லோரையும் பீடிக்க கூடியதாகத் தான் அமையும். ஆகையினால் அவ்வாறான கருத்துக்களை நாங்கள் கண்டிக்கின்றோம். சிர்வின் சில்வா போன்றவர்கள் அவ்வாறு கூறுவது பிழை என்று தெளிவாக கூறுகின்றோம்.

 

இந்த 13 ஆவது திருத்தத்தை பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கால கட்டத்திலும் மாறி மாறி கூறி வருகின்றதை பார்க்கிறோம். அவ்வாறு அவர்கள் எதனைக் கூறினாலும் 13 ஆவது திருத்தச் சட்டம் எந்தக் காலத்திலும் எங்களுக்கு ஒரு தீர்வாக அமையாது. அவ்வாறு அமையவும் போவதில்லை.ஆனால் தமிழ் மக்களுக்கு எந்தவாறான தீர்வு தரப் போகின்றார்கள் என்று குறிப்பிடுகையில் பொருளாதார பிரச்சனை தான் எங்களுக்கு இருக்கு என்று சில்வின் சில்வா குறிப்பிடுகின்றார்.அதுவும் பொருளாதார பிரச்சனை என்று கூறும் போது எங்களுடைய தமிழ்ப் பிரதேசங்களில் காணிகள் அபகரிக்கபடுகின்றன. பௌத்த சின்னங்கள் கொண்டுவரப்பட்டு புதிய புதிய விகாரைகள் அமைக்கப்படுகின்றன.

 

வடக்கையும் கிழக்கையும் ஒருமித்து வைத்திருக்கும் இடத்திலே சிங்களப் பிரதேசத்தைக் கொண்டு வந்து எங்களுடைய தொடர்ச்சியை அற்றுப் போகச் செய்கின்றார்கள். குறிப்பாக வடகிழக்கிலே அதிக இரானுவர்கள் குவிக்கப்பட்டு இருக்கின்றார்கள். அதனால் எங்களுக்கு ஏற்படும் பலவிதமான சமூக பிரச்சனைகளை நாங்கள் எதிர்நோக்கி கொண்டு இருக்கிறோம். இவற்றையெல்லாம் பற்றி குளிப்பிடாது பொருளாதார அபிவிருத்தி என்று சில விடயங்களை செய்வதால் பிரச்சனை தீரும் என அவர் நினைத்தாரானால் அது அவருடைய அறியாமையை வெளிப்படுத்துகிறது.

 

வடகிழக்கு மாகாணங்களிலே தமிழ் மக்கள் மூவாயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக தமிழ் மொழியை பாவித்து அவர்களுக்கென்று வாழ்வு முறையொன்று அமைத்து இருக்கிறார்கள். அதனை உப்போதும் பாதுகாத்துக் கொண்டு வருகிறார்கள். ஆனால் அதனை இல்லாமல் படுத்தும் விதத்தில் பொருளாதார ரீதியான தேவை என்று கூறுவது மனவருத்தத்திற்குரியது. அதனை நீங்கள் கண்டி்க்கிறோம்.மேலும் முன்னாள் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து என்பது தெற்கில் பொருந்தினாலும் வடகிழக்கிலே எங்களுக்கு பொருந்தாது. உண்மையில் இளையவர்கள் அனுபவசாலிகளாகவும் இருக்க முடியும். ஆனாலும் ரணில் அவர்கள் அனுபவசாலிகளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டுமென கூறுவதற்கு காரம் இருக்கலாம்.

 

அதாவது அனுபவம் இல்லாமல் சில புதிய சிந்தனைகளை நடைமுறைப்படுத்தும் போது இந்த நாட்டிற்கு அந்த விடயம் ஏதாவது பிரச்சனைகளை ஏற்படுத்துமென்று கருதலாம். ஆனால், வடகிழக்கு மாகாணங்களிலே இது சம்பந்தமாக அவ்வாறான ஒரு தீர்மானத்தை நாங்கள் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இப்போது இருக்கும் அரசியல் யாப்பின் பிரகாரம் எல்லா அதிகாரங்களும் மத்தியிலே தான் இருக்கின்றது.

 

ஆகவே எங்களுக்கு தேவையானவர்கள் வந்து மக்களுக்காக ஓடியாடி சில சில நன்மைகளைப் பெற்றுக் கொடுக்க கூடியதாகவும் பல இடங்களிலும் சென்று மக்களுக்கு எதனை எடுத்துக் கொடுக்க முடியும் என்று ஆராயந்து நடவடிக்கை எடுக்க கூடியவர்கள் தான் தேவை. ஆகவே அந்த விதத்தில் வடகிழக்கு மமாகாணங்களில் இளைஞர்கள் கட்டாயமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென மக்களைப் பொறுத்தவரையில் நினைக்கின்றனர்.

 

மேலும், மத்தியில் இருக்கின்ற பொருளாதார பிரச்சனைகள் சம்பந்தமான நிதி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு அவர் கூறுவது சரியாக இருக்கும். ஆனால் பாராளுமன்றத்திலே நாங்கள் இவ்வாறான வயது சென்றவர்களை கொண்டிருக்க வேண்டுமென்று அவசியமில்லை. ஏனென்றால் அதிகாரம் எங்கள் கைவசம் இல்லாத நிலை உள்ளது. ஆகையினால் அவர் கூறுவது தெற்கிற்கு பொருந்தும் எனினும் வடகிழக்கு மாகாணத்திற்கு பொருந்தாது என்று தான் நான் அவதானிக்கிறேன் என்றார்.

அரசியலமைப்பின் அங்கமாக உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் – செல்வம் அடைக்கலநாதன்

அதிகாரப்பகிர்வையும், 13ஆவது திருத்தச்சட்டத்தையும் வடக்கின் அரசியல்வாதிகள் கோரவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது நீண்டகாலமாக எமது மக்களின் கோரிக்கையும், அபிலாசையுமாகும். அரசியலமைப்பின் அங்கமாக உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறே நாம் கோருகிறோம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

 

இந்தியாவை புறந்தள்ளிவிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் செயல்பட பார்க்கிறது. ஆனால், இந்தியாவுடன் அனுசரித்து செல்வதே அவர்களுக்கு நல்லதாக இருக்கும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை விடுத்தார்.

 

அதிகாரப்பகிர்வு மற்றும் 13ஆவது திருத்தச்சட்டங்களை வடக்கின் அரசியல்வாதிகளே கோருகின்றன. மாறாக மக்கள் அல்ல என அண்மையில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, தெரிவித்திருந்தார். இது தொடர்பில் ‘ஒருவன்’ பத்திரிகைக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியதுடன், மேலும் அவர் வலியுறுத்தியதாவது,

 

”அபிவிருத்தி என்பது மக்களுக்கு முக்கியம். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அரசியலமைப்பில் உள்ள ஒரு விடயத்தை இல்லையெனக் கூற முடியாது. 13ஆவது திருத்தச்சட்டம் மாகாண சபை முறைமைகளுக்காக அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளது.

 

புதிய அரசியலமைப்பொன்றின் ஊடாக மாகாண சபை முறையை இல்லாதொழிக்க முடியும். ஆனால், இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எமது மக்கள் இனப்பிரச்சினையாலும் போராளும் பாதிக்கப்பட்ட மக்கள். அவர்கள் வெறும் அபிவிருத்தியை மாத்திரம் எதிர்பார்ப்பதாக ரில்வின் சில்வா கருத கூடாது.

 

வடக்கின் அரசியல்வாதிகள்தான் அதிகாரப்பகிர்வை கோருவதாக கூறுவது பிழையான கருத்தாகும். அரசியலமைப்பில் உள்ள விடயத்தைதான் நாம் கோருகிறோம். இதில் அரசியல்வாதிகளை தொடர்புப்படுத்துவது தவறு. இது எமது உரிமையாகும்.

 

13ஆவது திருத்தச்சட்டம் என்பது இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாகதான் அரசியலமைப்புக்குள் உள்வாங்கப்பட்டது. இதனை இல்லாதொழிக்க முற்படுவது இந்தியாவுக்கு எதிரான ஒரு முயற்சியாகவே பார்க்கப்படும். புதிய அரசாங்கத்துக்கு இந்தியாவை அனுசரித்து போக வேண்டிய தேவை உள்ளது. அண்டைய நாடாக உள்ள இந்தியாவை எதிர்த்துவிட்டு எதனையும் செய்ய முடியாது.

 

இவர்களுடைய கருத்துகள் 13ஆவது திருத்தச்சட்டத்தை புதிய அரசியலமைப்பில் இருந்து இல்லாதொழிக்கும் வகையில் உள்ளது. ஆனால், இந்தியாவை பகைத்துத்கொண்டு இவர்களால் நகர முடியாது.” என்றார்.

கிளிநொச்சியில் கட்டுப்பாடற்ற வகையில் தொடரும் மண் அகழ்வு – கட்டுப்படுத்த முடியாமல் திணறும் பொலிஸார்!

கிளிநொச்சி – கிளாலியில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து கொண்டு செல்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 14டிப்பர் மணல் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் உபுல் செனவிரட்ணவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதியில் பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜீ.குலரட்ண தலைமையில் குறித்த 14டிப்பர் மணலையும் பொலிஸார் மீட்டுள்ளதாகவும் இருப்பினும் சந்தேக நபர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை – தடையை மேலும் தீவிரப்படுத்தும் இத்தாலி !

வெளிநாடுகளுக்குச் சென்று வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கும் இத்தாலி அரசு தனது தடையை விரிவுபடுத்தியுள்ளது.

 

இத்தாலியில் வாடகைத் தாய் முறைக்கு கடந்த 2004-ஆம் ஆண்டிலிருந்தே தடை உள்ளது. இருந்தாலும், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்குச் சென்று அங்கு வாடகைத் தாய் மூலம் அந்த நாட்டவா்கள் குழந்தைகளைப் பெற்றுவந்தனா்.

 

இந்தச் சூழலில், தனது வாடகைத் தாய் முறையை வெளிநாடு சென்று பயன்படுத்துவதற்கும் இத்தாலி அரசு தடை விதித்துள்ளது.இது தொடா்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் (படம்), முழு தடைக்கு ஆதரவாக 84 வாக்குகளும், எதிராக 58 வாக்குகளும் பதிவாகின. அதையடுத்து, வெளிநாடுகளில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதையும் குற்றமாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

 

 

மக்களிடையே பழமைவாதத்தை திணிப்பதாகவும், சமபாலின தம்பதியருக்கு விரோதமாக இருப்பதாகவும் இந்த சட்டத்துக்கு பலத்த எதிா்ப்புகள் எழுந்தன. அவற்றையும் மீறி, பிரதமா் ஜாா்ஜியா மெலோனி தலைமையிலான தீவிர வலதுசாரி அரசு அந்தச் சட்டத்தை தற்போது நிறைவேற்றியுள்ளது.

முன்னாள் அமைச்சர் வியாழேந்திரன் வீட்டின் முன்பாக நடைபெற்ற கொலை – ஜனாதிபதியிடம் தீர்வினை கோரும் உறவினர்கள்!

2021 ஆம் ஆண்டு 06மாதம் 21ஆம் திகதி மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு முன்பாக தனது சகோதரன் படுகொலை செய்யப்பட்டதாகவும் இதற்குரிய விசாரணைகளில் தங்களுக்கு நம்பிக்கையற்ற நிலையில் புதிய ஜனாதிபதி இது தொடர்பான உண்மையான விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

2021-06-21ஆம் திகதியன்று மட்டக்களப்பு மன்றேசா வீதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஊறணியை சேர்ந்த ம.பாலசுந்திரம் என்பவர் உயிரிழந்திருந்தார்.

 

இது தொடர்பில் குறித்த இராஜாங்க அமைச்சரின் மெய்பாதுகாவலர் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததுடன் இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.

 

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான சாட்சியங்களை அழிக்கும் பணிகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளடன் வழக்கினை திசைமாற்றும் செயற்பாடுகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் புதிய ஜனாதிபதி தலையிட்டு தமக்கான நீதியைப்பெற்றுத்தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த பாலசுந்தரத்தின் தந்தை, தாயார், சகோதரி ஆகியோர் நேற்றையதினம்(17) மட்டு.ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைத்தார்கள்.

 

குறித்த சம்பவத்தின்போது தமது சகோதரன் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட பின்னரே அவர் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுத்தால் உண்மைகள் வெளிவரும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

கடந்த காலத்தில் ஆட்சியாளர்களின் அதிகாரத்திலிருந்த இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு அருகிலேயே இந்த சம்பவம் நடைபெற்றதனால் தமது அதிகாரத்தினைக்கொண்டு சாட்சியங்கள் மாற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதி விசேட விசாரணைக்கு பணிப்புரை விடுக்கவேண்டும் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.