செய்திகள்

செய்திகள்

செய்திகள்

15 இலங்கை மீனவர்கள் இந்திய காவல் படையினரால் கைது

handcuff.jpgஇந்திய கடல் எல்லையில் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 15 பேரை கடலோர காவல் படையினர் வியாழக்கிழமை கைது செய்தனர். அவர்கள் வந்த இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இலங்கை தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 15 மீனவர்கள் இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக இந்திய கடலோர காவல் படையினர் ஹோவர் கிராப்ட் கப்பலில் ரோந்து சென்ற போது அவர்களைக் கைது செய்து மண்டபம் கடலோர காவல்படை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். அவர்கள் வந்த இரு படகுகளையும் , அதில் இருந்த என்ஜின்களையும் பறிமுதல் செய்தனர். அங்கு கியூ பிரிவு பொலிஸாரும் இலங்கை மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட 15 பேரும் மண்டபம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர

பயண மார்க்கங்களை தடை செய்தமைக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு ஆலோசனை

leadimg.jpgசில பயண மார்க்கங்களுக்கான தனியார் பஸ் சேவையினை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளமைக்கு எதிராக, சட்ட நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்துத் தாம் ஆலோசித்து வருவதாக தனியார் பஸ் கம்பனிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சுமார் 50 இற்கும் மேற்பட்ட பயணமார்க்கங்களின் தனியார் பஸ் சேவை இடைநிறுத்தப்பட்ட விவகாரத்தில் அரசாங்கம் தலையிடத் தவறும் பட்சத்தில், சட்ட நடவடிக்கையில் தாம் இறங்க நேரிடுமெனவும் பஸ் கம்பனிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை குறைப்பை அடுத்து போக்குவரத்து அமைச்சும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் கூட்டாக அறிவித்திருந்த புதிய பஸ் கட்டண விபரங்களை அமுல்படுத்த சில தனியார் பஸ் ஊழியர் சங்கங்கள் தவறியதை அடுத்து, இவற்றின் பயண மார்க்கங்களில் பஸ் சேவையை நடத்துவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தடைவிதித்திருந்தது. இதேசமயம், பஸ் கட்டணங்களைக் குறைப்பது தொடர்பாக பஸ் நடத்துநர்களுடன் ஆராயப்படாமையால் இந்தப் பஸ் கட்டண குறைப்புக்கு பஸ் நடத்துநர்கள் சம்மதிக்கவில்லை என ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த தனியார் பஸ் கம்பனிகள் கூட்டமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பஸ் வண்டிகளுக்கான ரயர், ரியூப் என்பவற்றின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றைக் குறைப்பது பற்றி பஸ் நடத்துநர்கள் தமது கவனத்துக்குக் கொண்டு வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது விடயமாக, அரசாங்கம் தம்முடன் கலந்தாலோசிக்குமாயின் பஸ் கட்டணங்களை 4.3 வீதத்தில் இருந்து 8 வீதம் வரை குறைக்க தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அறிவிக்கப்பட்ட பஸ் கட்டண குறைப்பு அறிவிப்பை நடத்தத் தவறியதுடன், கூடுதல் கட்டணங்களைப் பயணிகளிடம் அறவிட்டதாக தெரிவித்து மேல் மாகாணத்தில் 67 தனியார் பஸ் பயண மார்க்கங்களின் சேவைகளை ஆணைக்குழு தடை செய்திருந்தது. இதனிடையே புதன்கிழமை தனியார் பஸ் கட்டணங்கள் குறைவடையுமென எதிர்பார்த்திருந்த நிலையில் அதற்கு முரணாக பஸ் கட்டணங்கள் கூடுதலாக அறவிடப்பட்டதாக சில தனியார் பஸ் பயணிகள் தெரிவித்தனர்.

நிலைமை இவ்வாறிருக்க புதன்கிழமை முதல் இந்த அறிவிப்பு அமுலுக்கு வருவது தொடர்பாக, பஸ் நடத்துநர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் குழப்பமான கருத்துகளும் எழுந்துள்ளன. பஸ் கட்டணங்களை குறைக்குமாறு கோரிய சமயம் பஸ் நடத்துநர்களால் தாக்குதல் அச்சுறுத்தலை தாம் எதிர்நோக்கியதாகவும் பஸ் பயணிகள் தெரிவித்தனர

கருணா எம்.பி. மீது முறைப்பாடுகள் செய்யப்பட்டால் விசாரணை நடக்கும் – அமைச்சர் கெஹலிய

rambukwella.jpgஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினரான கருணா எனும் விநாயகமூர்த்தி முரளிதரன் தொடர்பான ஏதேனும் முறைப்பாடு செய்யப்பட்டால் அது குறித்து விசாரணை செய்யப்படும்மென அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகார பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்  ஆனையிறவு வெற்றியை அடுத்து ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அரசாங்க அமைச்சர்கள் நடத்திய விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் ரம்புக்வெல இவ்வாறு கூறினார்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை போல் அந்த இயக்கத்தில் இருந்த கருணா மீது குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில் இது குறித்து கருணாமீதும் நடவடிக்கை எடுக்கப்படுமாவென ஊடகவியலாளர் ஒருவர் இதன்போது கேள்வி எழுப்பவே, அப்படி எந்தக்குற்றச்சாட்டுகள் எதுவும் கிடையாதென முதலில் மறுத்துவிட்டனர். இதனையடுத்து சிறுவர்களைப் படைக்கு சேர்த்தது போன்ற குற்றச்சாட்டுகள் கருணா மீது இருப்பதாக கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர் சுட்டிக் காட்டிய போது பதிலளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, முறைப்பாடு செய்யப்பட்டால் அதுகுறித்து விசாரணை செய்யப்படும். ஆனால் அவ்வாறான முறைப்பாடுகள் எதுவும் இதுவரை செய்யப்படவில்லை. பிரபாகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளுடன் முறைப்பாடுகள் இருந்தமையினாலேயே அவருக்குத்தண்டணை வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறினார்.

லசந்த படுகொலை தொடர்பாக பி.பி.சி.யின் தமிழோசை, சந்தேசிய செய்திகளுக்கு தணிக்கை?

“சண்டே லீடர்’ பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஊடாக பி.பி.சி.தமிழோசை மற்றும் “சந்தேசிய’வில் ஒலிபரப்பான செய்திகள் முழுமையாகத் தணிக்கை செய்யப்பட்டது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இதன்போது, லசந்த விக்கிரமதுங்கவின் கொலையைக் கண்டித்து ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா விடுத்த அறிக்கையின் பெரும் பகுதியும் தணிக்கை செய்யப்பட்டது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பி.பி.சி.தமிழோசையும் சிங்கள சேவையான சந்தேசியவும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண்பலை வரிசை மூலம் (எவ்.எம்.) ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. அண்மைக்காலமாக பி.பி.சி.யின் இவ்விரு ஒலிபரப்பிலும், இலங்கையின் யுத்தம் மற்றும் அரசியல் தொடர்பான செய்திகளில் பெரும்பாலானவை முழுமையாகத் தணிக்கை செய்யப்பட்டு வரும் நிலையில் வியாழக்கிழமை, கல்கிசை பகுதியில் சிரேஷ்ட பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டது தொடர்பான செய்தியும்  தணிக்கை செய்யப்பட்டது.

இவரது கொலையைக் கண்டித்து அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா வெளியிட்ட அறிக்கையின் பெரும் பகுதியும் தணிக்கை செய்யப்பட்டது. அதுபோல் லசந்தவின் பத்திரிகைத்துறை நண்பர்கள், ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளின் கருத்துகளும் முற்றாகத் தணிக்கை செய்யப்பட்டன. இலங்கையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு தணிக்கை எதுவும் அமுல்படுத்தப்படாத நிலையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பி.பி.சி.ஒலிபரப்புக்கு தணிக்கையை மேற்கொள்வது குறித்தும் பல்வேறு தரப்புகளும் கேள்விகளை எழுப்பியுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை எம்.ரி.வி.நிறுவனம் மீதான தாக்குதல் தொடர்பாக தமிழோசை மற்றும் சந்தேசியவில் ஒலிபரப்பான செய்திகளும் தணிக்கை செய்யப்பட்டன.

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து முக்கிய ஆலோசனை

ramsosss.jpgபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என இந்த மூன்று தலைவர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து டாக்டர் ராமதாஸ், பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோருக்கு கடிதங்களையும் அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் இலங்கை விவகாரத்தில் ஒத்த கருத்துக்களைக் கொண்ட கட்சித் தலைவர்களை இணைக்கும் முயற்சியில், திருமாவளவன் இறங்கியுள்ளார். அதன் அடிப்படையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தொல்.திருமாவளவன் ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இனி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இப்பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகளை எவ்வாறு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது என்பது குறித்தும் முக்கிய ஆலோசனை நடைபெற்றதாக தெரிகிறது. அத்துடன் ஈழ ஆதரவு கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை, போராட்டம் குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது. இந்த சந்திப்பின்போது திமுக கூட்டணியில் பாமக நீடிக்க வேண்டும், விலகக் கூடாது என வீரமணி கேட்டுக் கொண்டாராம்.

இந்தியா, அமெரிக்கா கண்டனம்

lasantha-02.jpg“சண்டே லீடர்’ ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை மற்றும் மகாராஜா தொலைக்காட்சி நிறுவனம் மீதான தாக்குதல் சம்பவங்களை இந்தியாவும் அமெரிக்காவும் கடுமையாகக் கண்டித்துள்ளன. லீடர் குழும வெளியீடுகளின் ஆசிரியரின் மறைவையிட்டு கடும் அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் நேற்று வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஊடக அமைப்புகள், ஊடகத்துறை சார்ந்தோர் மீது தொடர்ச்சியாக அதிகரித்துவரும் தாக்குதல்களின் மத்தியில் துயரகரமான இச்சம்பவமும் இடம்பெற்றுள்ளது. அண்மையில் மகாராஜா தொலைக்காட்சி கலையகம் மீதான குண்டுத் தாக்குதல் சம்பவமும் இந்தத் தொடர்ச்சியான தாக்குதல்களில் ஒன்றாகும். எந்தவொரு ஜனநாயகத்துக்கும் ஊடக சுதந்திரம் அத்தியாவசியமான விடயமாகும். இந்த மாதிரியான தாக்குதல்கள் இலங்கையில் ஜனநாயக ரீதியான சுதந்திரத்தை பாதிப்புக்குள்ளாக்கும். இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக பூரணமான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்த வேண்டுமென இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று இந்திய தூதரகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் படுகொலை, தொலைக்காட்சி நிலையம் மீதான தாக்குதல் என்பன கவலைக்குரிய நடவடிக்கைகள் என்றும் இலங்கையிலுள்ள சுயாதீனமான குரல்களை மௌனமாக்குவதை நோக்கமாகக் கொண்டவையெனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ரொபேர்ட் வூட் தெரிவித்துள்ளார்.

திங்கள் மாலை பொரளையில் லசந்தவின் இறுதிக் கிரியை

lasa-body.jpgபடு கொலை செய்யப்பட்ட “சண்டே லீடர்’ ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் இறுதிக் கிரியை எதிர்வரும் திங்கட்கிழமை மாலை பொரளை கனத்தையில் இடம்பெறவுள்ள நிலையில், இறுதி நிகழ்வில் இன, மத, கட்சி பேதமின்றி அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஐக்கிய தேசியக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.  எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு அழைப்புவிடுத்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது; “சண்டே லீடர்’ பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் இறுதிக் கிரியை எதிர்வரும் திங்கட்கிழமை மாலை பொரளை கனத்தை மயானத்தில் இடம்பெறவுள்ளது. இவரது படுகொலையானது ஜனநாயகத்தையும் அடிப்படை உரிமையையும் மீறுவதால் அன்றைய தினம் அனைவரும் கட்சி, இன, மத பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைய வேண்டும். அதேபோல் இப்படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் அனுதாபம் தெரிவிக்கும் வகையிலும் வெள்ளைக் கொடியையும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கறுப்புக் கொடிகளையும் நாட்டிலுள்ள மக்கள் பறக்கவிட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

தென்னிந்திய தமிழ் திரைப்படங்களை இலங்கையில் திரையிடப்படுவது தடை செய்யப்பட வேண்டும்!

tamil-cini.pngதென்னிந்திய தமிழ் திரைப்படங்களை இலங்கையில் திரையிடப்படுவது தடைசெய்யப்பட வேண்டும் என்று கோரிய சில சுவரொட்டிகள்  கண்டி நகரப்பகுதியிலும் மேலும் சில நகரப்பகுதிகளிலும் ஒட்டப்பட்டிருந்ததை காணமுடிந்தது. கண்டி மத்திய பேருந்து நிலையம் சந்தை தொகுதி கட்டிடங்கள் மற்றும் புகையிரத நிலையங்கள் உள்ளிட்ட பல பிரதேசங்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்த இந்த சுவரொட்டிகளில் தென்னிந்திய தமிழ் திரைப்படங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கருத்துக்களை வெளிப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஊடகவியலாளர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டப் பேரணி

stop-terr-media.jpgசண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்தும், ஊடக சுதந்திரத்தை அடக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரியும் கொழும்பு லேக் ஹவுஸ் சுற்று வட்டத்தின் அருகே நேற்று நண்பகல் 12.15 மணியளவில் அனைத்து ஊடகவியலாளர் அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தின.  பேரணியின் போது பதாதைகளைத் தாங்கியவாறு ‘ஊடகங்களுக்கு எதிரான பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்’ போன்ற கோஷங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் எழுப்பப்பட்டன. அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கறுப்புப் பட்டி அணிந்து காணப்பட்டனர். ஐந்து ஊடக அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணி லேக் ஹவுஸ் அரச பத்திரிகை நிறுவனத்திற்கு முன்பாக நடைபெற்றது.

அன்று நிமலராஜன் நடேசன், சிவராம் இன்று லசந்த நாளை யார் என்று கேள்வி கேட்டும் முழக்கமிட்ட ஆர்ப்பட்டக்காரர்கள் இதுவரை காலமும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் தாக்குதலுக்குள்ளான ஊடக நிறுவனங்களின் விபரங்கள் அடங்கிய வாசக அட்டைகளையும் தாங்கியிருந்தனர். இதனிடையே பாதுகாப்பு நடவடிக்கைகளும் அங்கு பலப்படுத்தப்பட்டிருந்தன. கலகத் தடுப்புப் பொலிஸ் பிரிவினர் உட்பட பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த பலர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். எனினும் எதுவித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.

பிரஜாவுரிமை; சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றம்

ratnasri.jpgஇந்திய வம்சாவளியினருக்கு பிரஜாவுரிமை வழங்க (திருத்தச்) சட்டமூலமும், நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்க (சிறப்பேற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலமும் வியாழக்கிழமை சபையில் திருத்தங்களின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றத்தில் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க இவ்விரு சட்டமூலங்களையும் சபைக்கு சமர்ப்பித்தார். இதில் இந்திய வம்சாவளியினரான ஆட்களுக்கு பிரஜாவுரிமை வழங்கல் திருத்தச் சட்டமூலம் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.

இதன் பின்னர் நடைபெற்ற நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்கல் சிறப்பேற்பாடுகள் திருத்தச் சட்ட மூலம் மீதான விவாதத்தின் இறுதியில் பதிலளித்து பேசிய பிரதமர் தெரிவிக்கையில்;

” சிரிமாசாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் எந்த ஒரு நாட்டுக்கும் உரித்தில்லாத ஒரு பகுதியினர் இருந்தனர். இவர்களுக்கு எந்த நாட்டினதும் பிரஜாவுரிமை இல்லாமல் இருந்தது. இம் மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்கும் முகமாகவே சட்டமொன்று அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. இதிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாகவே தற்போதைய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

எவராயிருந்தாலும் அவரவர்க்கென உரித்தான நாடொன்று இருக்கவேண்டும். அதன் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவருக்கும் இலங்கையில் பிரஜாவுரிமை வழங்க செயற்படுவோம்.

இதன்போது, சிக்கல்கள் ஏற்படலாம். இவ்வாறான சிக்கல்களை பேச்சுகள் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும். நாம் அனைவரும் இவ் விடயத்தில் ஒருமித்து நேர்மையாக செயற்படுவோமாயின், முகம் கொடுக்கவேண்டியிருக்கும் சிக்கல்களை எதிர்கொள்வதில் கஷ்டம் இருக்காது’ என்றார்