செய்திகள்

செய்திகள்

செய்திகள்

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்க கூடிய ஒரே அணி தமிழரசுக்கட்சி தான் – எம்.ஏ.சுமந்திரன்

ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசாங்கம் ஒருமாதகாலத்துக்குள்ளேயே சறுக்குவதற்கு ஆரம்பித்துள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் பாராளுமன்ற தேர்தலில் உங்கள் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்ன? எனும் தொனிப்பொருளில் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மக்கள் மன்றம் நேற்றைய தினம் (9) யாழ். கலைத்தூது மண்டபத்தில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைத் தமிழரசுக் கட்சி பழம்பெரும் கட்சியாகும். தற்போது மாற்றம் தேவை என்று கூறுபவர்கள் பழம்பெரும் கட்சியை விட்டுவிட்டு புதிய கட்சிக்கு வாக்களித்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கின்றார்கள். அது உண்மையான மாற்றம் அல்ல.

அடையாளம் மாற்றாத அரசியல் மாற்றமே உண்மையான மாற்றமாகும். நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு தேசம் என்கிற அடையாளத்தினை வழங்கியது எமது கட்சியாகும். அதன் காரணத்தினால் தான் எமது கட்சியின் ஸ்தாபகரை தந்தை செல்வா என்று அழைக்கின்றார்கள்.

தமிழ் மக்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கு சமஷ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகின்றோம். அவ்வாறான நிலையில் ஏனைய கட்சிகள் தற்போது தான் சமஷ்டி பற்றி பேசுகின்றார்கள். அவ்வாறான நிலையில் நீண்டகாலமாக சமஷ்டியை வலியுறுத்தும் எமக்கு வாக்களிப்பதில் என்ன தவறுள்ளது.

அதேநேரம், தமிழரசுக் கட்சி பொருத்தமான மாற்றங்களை செய்துகொண்டுதான் வருகிறது. உதாரணமாக, யாழ்.தேர்தல் மாவட்டத்தினை எடுத்துக்கொண்டால் ஒன்பது வேட்பாளர்களில் இருவரைத் தவிர ஏனைய எழுவரும் பாராளுமன்ற தேர்தல் களத்துக்கு புதியவர்கள்.

அதேபோன்று அவர்களில் இரண்டு பெண் வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக, பெண் வேட்பாளர்கள் ஆணை மையப்படுத்திய வகையில் தான் தெரிவு செய்வார்கள். ஆனால் இம்முறை உண்மையான செயற்பாட்டாளர்களை நாம் அடையாளம் கண்டு நிறுத்தியிருக்கின்றோம்.

அதேவேளை, நாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்துவதாகக் கூறிக்கொண்டு ஆட்சிப்பீடம் ஏறியுள்ள ஜனாதிபதி பதவியேற்று ஒருமாதத்துக்குள்ளேயே தனது செயற்பாடுகளில் இருந்து சறுக்க ஆரம்பித்துவிட்டார். மதுபான சாலைகளுக்கான சிபார்சுக்கடிதங்களை வழங்கிய அரசியல்வாதிகள், அனுமதிப்பத்திரங்களைப் பெற்றவர்களின் பட்டியலை அவர் தற்போது வரையில் வெளிப்படுத்தவில்லை.

ஜனாதிபதி அநுர, புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை ஏற்கனவே எமது பங்கேற்புடன் உருவாக்கப்பட்ட இடைக்கால அறிக்கையினை அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கவுள்ளதாக எழுத்துமூலமாகவே தனது விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியுள்ளார்.

இடைக்கால அறிக்கையை நாம் தயாரித்து அதனை வெளியிடுவதற்கு தயாரானபோது, அப்போது அநுரகுமார எம்மிடத்தில் வருகை தந்து கூறினார்… இந்திய – இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிராகவும், மாகாண சபை முறைமைக்கு எதிராகவும் ஆயுதம் ஏந்தியவர்கள் நாங்கள். ஆகவே இடைக்கால அறிக்கையின் உள்ளடக்கம் சம்பந்தமாக நாம் கட்சிக்குள் ஆராய வேண்டும் என்று எனக்கும் சம்பந்தனுக்கும் கூறினார்.

அதனையடுத்து, அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் அவரை நாங்கள் அழைத்துச் சென்று அவரது கூற்றில் நியாயம் உள்ளது. கால அவகாசத்தினை வழங்குவோம் என்று கூறினோம். ஒருமாத கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் இடைக்கால அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக அநுர குறிப்பிட்டார்.

அரசாங்கம் சறுக்க ஆரம்பித்துள்ளது. அதனை கையாள வேண்டியுள்ளது. இடைக்கால அறிக்கையை முன்னோக்கி நகர்த்த வேண்டியுள்ளது. வடக்கு, கிழக்கு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்கும் செயற்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக பலமான அணியொன்றை வடக்கு, கிழக்கில் இருந்து தமிழ் மக்கள் அனுப்ப வேண்டும். அந்த அணியானது தமிழரசுக் கட்சியாகவே இருக்க வேண்டும் என்றார்.

 

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வேன் – ஜனாதிபதி  அனுரகுமாரதிசநாயக்க

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, ரக்பிவீரர் வாசிம் தாஜூதீன் படுகொலைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வேன் என ஜனாதிபதி  அனுரகுமாரதிசநாயக்க உறுதியளித்துள்ளார்.

லசந்தவிக்கிரமதுங்க வாசிம்தாஸ்ரீஜூதீன் பிரகீத் எக்னலிகொட விவகாரங்கள் குறித்து விசாரணை செய்து அதற்கு காரணமானவர்களை அரசாங்கம் நீதியின் முன் நிறுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் தேர்தல் பேரணியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் அரசியல் அதிகாரம் படைத்தவர்களால் அப்பாவி மக்கள் கொல்லப்படும் யுகத்தை முடிவிற்கு கொண்டுவருவோம் என தெரிவித்துள்ளார்.

அனைவரினதும் உயிர்களும் பெறுமதியானவை என அவர் தெரிவித்துள்ளார்.

சுண்ணாகம் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் – விரைந்து செயற்பட்ட சிறிபவானந்தராஜா !

நேற்றையதினம் சுன்னாகத்தில் வாகனமொன்றின் மீது இருவர் மதுபோதையில் வந்து மோதிய சம்பவத்தை தொடர்ந்து சுன்னாகம் பொலிஸார் இரண்டு மாத குழந்தையின் தாய் தந்தை உறவினர்கள் சிலரின் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டனர் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு மாத குழந்தையை பற்றைக்குள் தூக்கியெறிந்த பொலிஸார் தாயையும் தந்தையும் கடுமையாக தாக்கினார்கள் என தாயார் தெரிவித்திருந்த நிலையில் இது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததது.

இந்த நிலையில் சுன்னாகம் சம்பவத்துடன் தொடர்புடைய இரு பொலிஸார் பணி இடை நீக்கம் – தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் Dr. சிறிபவானந்தராஜா பொலிஸ் மாஅதிபருடன் தொடர்பு கொண்டு உடன் நடவடிக்கை.

நேற்றைய தினம் சுன்னாகம் பகுதியில் அமைதியின்மைக்கு காரணமான இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள், மக்கள் மீது மது போதையில் வந்தோர் காட்டுமிராண்டி தனமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டை தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் Dr. சிறிபவானந்தராஜா அவர்கள் உடனடியாக பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கும் கட்சி மேலிடத்துக்கும் கொண்டு சென்றார். உடனடியாக சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இருந்தார்.

அவரின் வேண்டுகோளுக்கிணங்க, இரு பொலீஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பணத்தில் இருந்து மேலதிக விசாரணைகாக, உயர் மட்ட அறிவுறுத்தலுக்கு அமைய, மேலதிக பொலிஸார் சுன்னாகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த, தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் Dr. சிறிபவானந்தராஜா மக்களுக்கான நீதியை பெற்றுத் தருவதில் தேசிய மக்கள் சக்தி ஒரு போதும் பின்னிற்காது என்றும், மேலதிக விசாரணைகளின் பின் தொடர்புபட்ட அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

அதுவரை மக்களை அமைதி காக்கவும் வேண்டினார். இந்த தேர்தல் காலத்தில் இப்படியான சம்பவங்களை வைத்து சில அரசியல் கட்சிகள் குளிர்காய முற்படுவது வெட்கக்கேடானது என்றும் தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு முறையான கல்வியை வழங்குவதன் ஊடாக இந்த நாட்டில் வறுமையை இல்லாதொழிக்கலாம் – ஜனாதிபதி அநுர குமார

குழந்தைகளுக்கு முறையான கல்வியை வழங்குவதன் ஊடாக இந்த நாட்டில் வறுமையை இல்லாதொழிக்கும் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,

“கடந்த ஜனாதிபதி தேர்தலில் தந்தையிடமிருந்து மகனுக்கு அதிகாரம் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. அரசாங்கத்தை வைத்திருந்த ஜனாதிபதி, மாமாவிடமிருந்து மகனுக்கு அதிகாரத்தை எதிர்பார்த்தார். ஆனால் இந்நாட்டு மக்கள் செப்டம்பர் 21 அன்று அந்த ஊழல் மற்றும் நாசகார குடும்பங்கள் அனைத்தையும் தோற்கடித்து சாதாரண மக்களுக்கு அதிகாரத்தை மாற்றினர். அந்த ஊழல்வாதிகள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள் தங்களது வாழ்நாள் காலத்தில் இவ்வாறானதொரு சம்பவமொன்று நடக்கும் என்று, எவ்வாறாயினும், மீண்டும் அவர்களின் கைகளுக்கு அதிகாரம் மாற்றப்படாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நமது அரசின் மிக முக்கியமான திட்டம் கிராமப்புற வறுமையை ஒழிப்பதாகும். நல்ல கல்வியையும் அறிவையும் அரசால் வழங்க முடியுமானால், அந்த குடும்பம் ஏழைக் குழந்தையைப் படிக்க வைத்து அவர்களின் வறுமையில் இருந்து மீண்டு வருவர். ஆனால் அந்தக் குடும்பம் ஏழ்மையானதாகவும், குழந்தை படிக்காதவராகவும் இருந்தால், அந்தக் குடும்பம் ஏழ்மையானது, இது சுழற்சி வறுமையின் நெருக்கடியாகும். எனவே, கல்வியில் ஒரு பெரிய சீர்திருத்தத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம், இதன் மூலம் ஒவ்வொரு குழந்தையும் பாடசாலையை விட்டு வெளியேறும் வகையில் எதிர்காலத்திற்கான கல்வி அல்லது தொழில்முறை பாதையில் வர வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில் எமக்கு வாக்களிக்காதவர்கள் இருந்தனர். சிலருக்கு சிறு சந்தேகம் இருந்தது. அவநம்பிக்கை ஏற்பட்டது. தயக்கம் இருந்தது. ஆனால் இப்போது… தோழர்கள் என்று அழைக்கிறார்கள்… அப்போது எங்களுக்கு வாக்களிக்காதவர்கள்தான் தற்போது தேர்தல் பணியின் போது அதிக அளவில் உதவுகிறார்கள்.“ என தெரிவித்தார்.

பாக்கிஸ்தான் குண்டுவெடிப்பில் 25 பேர் பலி !

பாக்கிஸ்தானில் புகையிரதநிலையமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பலோச்சிஸ்தான் மாகாணத்தில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.

குவாட்டா நகரிலிருந்து பாக்கிஸ்தானின் பெசாவர் நகருக்கு செல்லவிருந்தவேளையிலேயே புகையிரதநிலையத்தில் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் தற்கொலை தாக்குதலே இடம்பெற்றது என தெரிவித்துள்ள அதேவேளை பலோச்சிஸ்தான் விடுதலை இராணுவம் என்ற அமைப்பு இந்த தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ளது.

சுதந்திரம் மற்றும் வளங்களிற்கான போராட்டம் இடம்பெறும் இந்த பகுதியில் வன்முறைகள் தொடர்ந்து இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆறு முதல் எட்டு கிலோ வெடிமருந்தினை பயன்படுத்தி தற்கொலை தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 2,348 முறைப்பாடுகள் !

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 08 ஆம் திகதி வரை) 2,348 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 615 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1,678 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 20 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 35 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

 

 

“அனுர தரப்பு ஊழலற்றவர்கள் தான் இருந்தாலும் தமிழர்களின் சுயாட்சிக் கோரிக்கையில் அவர்களுக்கு முழுமையான ஈடுபாடு கிடையாது.” – எம்.ஏ.சுமந்திரன்

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தன்னை மாவட்ட ரீதியான தேர்தலில் நிராகரித்தால் தான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வரவே மாட்டேன் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடக செவ்வியொன்றில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்த சில விடயங்கள் வருமாறு:-

“இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து வேட்பாளர் நியமனம் கிடைக்கவில்லை என்பதனால் வேறு கட்சிகளிலும், சுயேச்சைகளிலும் போட்டியிடுபவர்களினாலேயே தமிழரசு மீது அதிகமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இதேநேரம் அநுராகுமார திஸாநாயக்காவின் கட்சியைப் பொறுத்த மட்டில் ஊழல் அற்ற ஆட்சி, நேர்மையான நிர்வாகம் தொடர்பில் தமிழர்களிடம் ஒரு நம்பிக்கையான எதிர்பார்ப்பு இருக்கலாம். ஆனால், தமிழர்களின் சுயாட்சிக் கோரிக்கையில் அவர்களுக்கு முழுமையான ஈடுபாடு கிடையாது. நாட்டில் எல்லாரும் சமமாகப் பேணப்பட்டால் – நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை தீர்ந்தால் – எல்லாப் பிரச்சினைகளும் தீரும் என அவர்கள் எண்ணுகின்றார்கள்.

தமிழர்கள் தனியான ஒரு மக்கள் குழாம், அவர்கள் தனியான தேசம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களிடம் பிற நல்ல விடயங்கள் இருக்கலாம். ஆனால், எங்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் இணங்காதவர்களாகவே அவர்கள் இருக்கின்றார்கள். ஆகவேதான் நாடாளுமன்றத் தேர்தலில் எமக்கு வாக்களியுங்கள் எனக் கோருகின்றோம்.

இதேநேரம் முதன் முதல் 2010 இல் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் வந்தாலும் அதன் பின்பு இரண்டு தடவைகள் நேரடியாகப் போட்டியிட்டே நாடாளுமன்றம் சென்றேன். இம்முறையும் வெற்றியீட்டியே நாடாளுமன்றம் செல்வேனேயன்றி, தேர்தலில் மக்கள் என்னை நிராகரித்தால் நான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வரவே மாட்டேன்.” – என்றார்.

கனடா அரசின் புதிய கட்டுப்பாடுகள் – வெளிநாட்டு மாணவர்களுக்கு பேரிடி !

கனடா அரசு, திடீரென நேற்று பிரபலமான SDS எனும் மாணவர் விசா திட்டம் ஒன்றை நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடா அரசு, மாணவர்கள் விரைவாக கல்வி விசா பெற உதவும், Student Direct Stream (SDS) என்னும் திட்டத்தை திடீரென முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

நேற்று, அதாவது, நவம்பர் மாதம் 8ஆம் திகதியுடன் இந்த திட்டம் முடிவுக்கு வந்துவிட்டது.

வழக்கமாக மாணவர்கள் கல்வி விசா பெற 2 முதல் மூன்று மாதங்கள் ஆகும் நிலையில், இந்த SDS திட்டம் மூலம், சில நிபந்தனைகளின் பேரில், 4 முதல் 6 வாரங்களுக்குள் விசா பெற்றுவிடலாம்.

வீடு தட்டுப்பாடு பிரச்சினை மற்றும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி, கனடா அரசு சர்வதேச மாணவர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துவரும் நிலையில், தற்போது Student Direct Stream திட்டத்தையும் திடீரென முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்பள்ளிகளை கல்வி அமைச்சுக்குள் சேர்க்க முன்மொழி – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தமது அரசாங்கத்தின் கீழ் உள்ள கல்வி அமைச்சிற்கு முன்பள்ளி கல்வியை நேரடியாக சேர்க்க முன்மொழியப்பட்டுள்ளதாக பிரதமர் திருமதி ஹரிணி அமரசூரிய குறிப்பிடுகின்றார்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று நடாத்தப்படுவதற்கு முக்கிய காரணம் நல்ல பாடசாலைகள் மற்றும் மோசமான பாடசாலைகள், பிரபல பாடசாலைகள் மற்றும் பிரபலமற்ற பாடசாலைகள் என பிரிப்பதேயாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அதன்படி, பள்ளிகளுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வு களையப்பட வேண்டும் என்றும், அதற்காக அரசு கல்விக்கான முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கோருகிறார்.

 

மூன்று வயது முதல் ஐந்து வயது வரையிலான காலம் குழந்தைகளுக்கு எழுத்துகள், எண்கள் அல்லது எழுதக் கற்றுக்கொடுக்கும் நேரம் அல்ல என்றும், தேர்வுக்குத் தயாராகும் நேரம் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

 

தமது ஆட்சியில் எதிர்பார்க்கப்படும் கல்விக் கல்வி முறையில் எட்டாம் வகுப்பு வரை போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்ற நம்பிக்கை இல்லை என்றும் அவர் கூறினார்.

 

கண்டியில் நடைபெற்ற தேசிய மக்கள் படையின் முன்பள்ளி ஆசிரியர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மதுபான சாலைக்கு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்ட சிறீதரன்..?- ஃபேஸ்புக் தளத்தில் பகிரப்பட்ட கடிதத்தால் பரபரப்பு!

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ,  மதுபானசாலை அனுமதிக்கு சிபாரிசுக் கடிதம் வழங்கியுள்ளதாக போலிக் கடிதம் ஒன்றுடன் முகநூலில் விசமப் பிரசாரம் செய்த ஒருவருக்கு எதிராக இன்றையதினம் (08) கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் முறைப்பாடு செய்ததன் பின்னர் சிறீதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “ஜனநாயக முறைப்படி உட்கட்சித் தேர்தலின் அடிப்படையில் தலைவராக தெரிவுசெய்யப்பட்ட என்னை, நீதிமன்ற வழக்கினால் இயங்க விடாது தடுத்தவர்களின் மற்றொரு முயற்சியாக, எனது கடிதத் தலைப்பையும் பதவி முத்திரையையும் முறைகேடாகப் பயன்படுத்தி தொழிநுட்ப உதவியோடு போலியான கடிதத்தை தயாரித்து முகநூலில் விசமப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்கைய வதந்திகளை பரப்பும் நபரொருவர் மீது இன்றையதினம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். தொடர்ச்சியான முறைமைகளுக்குட்பட்டு அந்த நபர் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வெளியிடப்பட்ட கடிதம் போலியானது என்பதை எண்பிக்க போதுமான ஆதாரங்கள் அந்தக் கடிதத்திலேயே உள்ளன.

அறிவிலித்தனமாக செயற்பட்டுவரும் இவர்களை எமது மக்கள் எளிதில் இனங்கண்டு கொள்வார்கள்.

என்னை விசுவாசிக்கும் எனது மக்களுக்கு நான் மீளவும் ஒன்றை வலியுறுத்திக் கூறுகிறேன்.

இதுவரை காலமும் நான் மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தை பெறவோ, அத்தகைய அனுமதி ஒன்றுக்கு சிபாரிசுக் கடிதம் வழங்கவோ இல்லை.

அவ்வாறு நான் வழங்கியிருப்பதாக யாராவது கருதினால் ஜனாதிபதி செயலகத்திலோ, மதுவரி திணைக்களத்திலோ உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை வெளிப்படுத்துங்கள்.

அதைவிடுத்து பிற்போக்குத்தனமான அற்ப அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு உங்களை நீங்களே தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.