செய்திகள்

செய்திகள்

செய்திகள்

தேசியப்பட்டியல் மூலம் இலங்கை பாராளுமன்றம் செல்ல 500க்கும் அதிகமானோர் காத்திருப்பு !

தேசியப் பட்டியல் மூலமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதற்கான போட்டியில் 527 பேர் காத்திருப்பில் உள்ளனர்.

2024ம் ஆண்டு்க்கான நாடாளுமன்றத் தேர்தல் தற்போது முடிவடைந்துள்ளது. தற்போது தபால் மூல வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்நிலையில் பொதுத் தேர்தலில் ஒவ்வொரு கட்சிகளும் பெறும் வாக்குகளின் அடிப்படையில் கிடைக்கவுள்ள 29 தேசியப் பட்டியல் உறுப்புரிமைக்காக 527 பேர் காத்திருப்பில் உள்ளனர்.

27 அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேட்சைக் குழுக்கள் தங்கள் தேசியப் பட்டியல் உறுப்பினர்களுக்கான விபரங்களை தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளன.

அதன் பிரகாரம் அரசியல் கட்சிகளின் மூலமாக தேசியப்பட்டியல் நியமனத்துக்காக 516 பேரின் பெயர்களும், இரண்டு சுயேட்சைக்குழுக்கள் மூலம் 11 பேரின் பெயர்களும் இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அருணலு ஜனதா பெரமுண, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணி, ஜனநாயக ஐக்கிய முன்னணி, ஐக்கிய ஜனநாயகக் குரல், ஜனஅரகல கூட்டமைப்பு, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஜனசெத பெரமுண, தேசிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் கட்சி, தேசிய ஜனநாயக முன்னணி, இரண்டாம் தலைமுறை, தேசப்பிரேமி ஜனபலவேகய, புதிய ஜனநாயக முன்னணியும் நிதஹஸ் ஜனதா பெரமுண, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி, ஜனநாயக தேசிய முன்னணி, ஜனநாயகக் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, லிபரல் ஜனநாயக கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுண, இலங்கை சமாஜவாதி கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, சர்வஜன அதிகாரம் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேசியப் பட்டியல் அபேட்சகர்கள் தொடர்பான விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளன.

அதற்கடுத்ததாக அநுராதபுரம் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் போட்டியிடும் இரண்டு சுயேட்சைக் குழுக்களும் தேசியப் பட்டியல் அபேட்சகர்களுக்கான பட்டியலை சமர்ப்பித்துள்ளன.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சமர்ப்பித்த தேசியப் பட்டியல் தொழில்நுட்ப காரணிகளினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இலங்கை பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்போது வெளியாகும்..? – தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல் !

2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (14) நிறைவடைந்த நிலையில், வாக்குப்பெட்டிகள் அந்தந்த வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு சென்றதைத் தொடர்ந்து, 7.15க்கு பிறகு வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படகவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 

ஊடகங்களுக்கு விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல். ரத்நாயக்க, தேர்தல் முடிவுகள் தேர்தல் அதிகாரிகளிடமிருந்து கிடைக்கப்பெற்றவுடன் தேர்தல் ஆணைக்குழுவில் அவை மீள்பரிசீலனை செய்யப்பட்டு ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என தெரிவித்தார்.

 

குறிப்பாக மூன்று தடவைகள் இந்த முறைமைகளில் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

முதலில் தொகுதி வாரியான வாக்குப்பதிவு முடிவுகள் வெளியிடப்படும்.

 

அதன்பிறகு, மாவட்ட அளவில் தேர்தல் முடிவுகள் வெளியாகும், அதனுடன், ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் சுயேச்சைக் குழு பெற்றுக்கொண்ட ஆசனங்களின் எண்ணிக்கையை அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 

முடிவுகள் வெளியானவுடன் ஒவ்வொரு வாக்கு எண்ணும் நிலையங்களிலும் விருப்பு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.

 

எவ்வாறாயினும், ஆசனங்களை வென்ற அல்லது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதற்கு தகுதியான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் வாக்குகளே எண்ணப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

எனவே, பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவதற்கு தகுதியற்ற அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பிரதிநிதிகள் மண்டப வளாகத்தில் இருந்து வௌியேற்றப்படுவார்கள் எனவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

வேடுவ சமூகத்தினரை வாக்களிக்க விடாது திருப்பி அனுப்பிய அதிகாரிகள்!

தம்பனை வேடுவ சமூகத்தின் பிரதிதலைவரும் குடும்பத்தினரும் வாக்களிப்பு நிலையத்திற்கு கோடரியுடன் வந்ததால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

தம்பனையில் உள்ள வேடுவசமூகத்தின் பிரதிதலைவர் கன்பன்டிய எத்தோவும் அவரது குடும்பத்தினரும் தேர்தல்வாக்களிப்பு நிலையத்திற்குள் கோடரியுடன் நுழைந்துள்ளனர்.

எனினும் அவரது தோளில் கோடரியை அவதானித்த அதிகாரிகள் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தம்பனை வேடுவ சமூகத்தின் பிரதிதலைவர் வேடுவ சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் உரிமைகள் பற்றி அறியாத அதிகாரிகளை அரசாங்கம் தம்பனையில் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெளிநாடுகளிற்கும் நீதிமன்றங்களிற்கும் கோடாரியுடன் செல்வதற்கு எங்களிற்கு அனுமதி வழங்கியுள்ளனர் வாக்களிப்பு நிலையங்களிற்குள் செல்வதற்கு எந்த தடையும் இருக்ககூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

வெளியானது மாவட்ட ரீதியான வாக்கு வீதம் – யாழ்ப்பாணத்தில் 69 வீதம் !

இன்று நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மாவட்ட ரீதியாக பதிவாகியுள்ள வாக்கு சதவீதம் வெளியிடப்பட்டுள்ளது.

 

அதற்கமைய;

 

கொழும்பு 65%

நுவரெலியா 68%

குருநாகல் 64%

மட்டக்களப்பு 61%

மாத்தறை 64%

புத்தளம் 56%

அனுராதபுரம் 65%

பதுளை 66%

மன்னார் – 70%

திருகோணமலை – 67%

முல்லைத்தீவு – 63

பொலனறுவை – 65%

இரத்தினபுரி – 65

காலி – 64%

யாழ்ப்பாணம் – 69%

ஹம்பாந்தோட்டை – 60%

நிதி மோசடியில் ஈடுபட்ட வேட்பாளர் யாழ்ப்பாணத்தில் கைது !

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கியுள்ள ஒருவர் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வைத்து 49 வயதான சந்தேகநபர் நேற்று (12.11.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரி பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவர் காவல் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குருநகரை சேர்ந்த குறித்த வேட்பாளர் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக ஒருவரை ஏமாற்றி 5 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு காவல்துறையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஈராக்கில் பெண்களின் திருமண வயதெல்லையை 9 ஆகக் குறைக்க நடவடிக்கை !

ஈராக்கில் பெண்களின் திருமண வயதெல்லையை 18 இலிருந்து 9 ஆகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பெண்கள் அமைப்பினர், சமூக அமைப்பனர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றன.

மேற்காசிய நாடான ஈராக் நாடாளுமன்றத்தில், ஷியா முஸ்லீம் பழமைவாத குழுவினர் பெரும்பான்மை வகிக்கின்றனர். முகமது ஷியா அல் சுடானி பிரதமராக உள்ள அந்த நாட்டில், பெண்களுக்கான திருமண வயது வரம்பு 18 ஆக உள்ளது.

கடந்த 1950 ஆம் ஆண்டில் குழந்தை திருமணம் அங்கு தடை செய்யப்பட்டாலும், 28 வீத பெண்கள் 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்து கொள்வதாக 2023 ஆம் ஆண்டுக்கான ஐ.நா., ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்த நிலையில், ஈராக்கில் பெண்ணின் திருமண வயதை 18 இல் இருந்து 9 ஆகக் குறைக்க சட்ட திருத்தம் செய்ய அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஷியா பழமைவாத குழுவினர் பெரும்பான்மை வகிப்பதால் இந்த சட்ட திருத்தம் நிறைவேறுவதில் சிக்கல் இருக்காது எனவும் கூறப்படுகிறது.

எனினும் இதற்கு அந்நாட்டின் பெண்கள் அமைப்பினர், சமூக அமைப்பனர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றன.இந்த சட்டவரைபு நிறைவேற்றப்பட்டால் இளம் பெண்கள் மீதான பாலியல் மற்றும் உடல் ரீதியிலான துன்புறுத்தல்கள் அதிகரிக்கும் என்று அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கல்வி நடவடிக்கையை இடைநடுவில் நிறுத்த வேண்டிய நிலைமை பெண்களுக்கு ஏற்படும் என்றும் பெண்களின் சொத்துரிமை, வாரிசுரிமை மற்றும் விவாகரத்து கோரும் உரிமை பறிக்கப்படும் என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான எதிர்ப்புக்கள் தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டாலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து பெண்ணின் திருமண வயதில் திருத்தங்கள் செய்துள்ள இந்த சட்டவரைபை சட்டமாக இயற்றும் முயற்சிகளில் ஈராக் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

17 ஆண்டுகளின் பின் நீக்கப்பட்டது ஆணையிறவு சோதனைச்சாவடி!

கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள ஆணையிறவு பகுதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த வீதி தடைகள் 17 வருடங்களுக்குப் பின்னர் நீக்கப்பட்டுள்ளன.

1952 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் போடப்பட்டிருந்த இந்த வீதி தடையை 2000ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் 3 நடவடிக்கை மூலம் ஆணையிறவு மீட்கப்பட்டு மீண்டும் அவ்வீதி திறக்கப்பட்டது.

இருப்பினும், அதன் பின்னர் 8 வருடங்களின் கழித்து, 2008 ஆம் ஆண்டு இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் பின்னர் மீண்டும் குறித்த வீதி சோதனைச் சாவடிகள் இடப்பட்டன.

இந்நிலையிலேயே தற்போது சுமார் 17 வருடங்களுக்கு பின்னர் ஆனையிறவு சோதனை சாவடி அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.

அறுகம்பை பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாட்டை நீக்கியது அமெரிக்கா!

அறுகம்பை பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

அப்பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து சந்தேகத்திற்கிடமான செயல்பாடு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த ஒக்டோபர் மாதம் 23 திகதி அமெரிக்க தூதரகம் குறித்த பயணக் கட்டுப்பாட்டை விதித்திருந்தது.

இந்நிலையில், தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால், இலங்கைக்கான பயண ஆலோசனைகளை புதுப்பிக்கவுள்ளதாக அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்கள் வழியிலான தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான மொத்தம் 490 முறைப்பாடுகள் !

ஒக்டோபர் 11, 2024 முதல் நவம்பர் 11, 2024 வரையிலான காலத்திற்குள் சமூக ஊடகங்கள் வழியிலான தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான மொத்தம் 490 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது.

 

குறித்த பதிவுகள் பற்றி தகவல்கள் அறிவிக்கப்பட்டவுடன் உரிய சமூக ஊடக நிறுவனங்கள் அவ்வாறான 184 முறைப்பாடுகளின் இணைப்புகள் மற்றும் உள்ளடக்கங்களை நீக்கியதாக தேர்தல் ஆணைக்குழு ஒரு அறிக்கையை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

 

இருப்பினும், 87 முறைப்பாடுகள் தொடர்பான இணைப்புகள் அல்லது உள்ளடக்கத்தை அகற்ற சமூக ஊடக நிறுவனங்கள் மறுத்துள்ளன.

 

219 முறைப்பாடுகள் தொடர்பான உள்ளடக்கத்தை சமூக ஊடக நிறுவனங்கள் இன்னும் மதிப்பாய்வு செய்யவில்லை என்று தேர்தல் ஆணைக்கழு தெரிவித்துள்ளது.

 

வெறுப்புப் பேச்சு, இனம் மற்றும் மதத்திற்கு எதிரான அவதூறு அறிக்கைகள், தேர்தல் பிரச்சாரத்திற்கு குழந்தைகளைப் பயன்படுத்துதல் மற்றும் தவறான அல்லது போலியான தகவல் பரிமாற்றம் தொடர்பான பதிவுகள் மீது முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாலஸ்தீனுக்கான நிவாரண உதவிகளை தடுக்கும் இஸ்ரேல்!

காஸாவுக்குள் போதிய நிவாரண உதவிகளை அனுமதிக்க அமெரிக்கா விதித்துள்ள கெடுவை இஸ்ரேல் மீறியதாக பாலஸ்தீன பகுதிக்கான ஐ.நா. அகதிகள் நல அமைப்பு (யுஎன்ஆா்டபிள்யுஏ) குற்றஞ்சாட்டியுள்ளது.

 

இது குறித்து அந்த அமைப்பின் அவசரக்காலப் பிரிவு தலைவா் லூயிஸ் வாட்டரிஜ் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

 

காஸாவுக்குள் தேவையான அளவுக்கு அத்தியாவசியப் பொருள்களை அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா கெடு விதித்துள்ளது. அந்தக் கெடு முடியும் நிலையிலும் போதிய நிவாரணப் பொருள்களை இஸ்ரேல் ராணுவம் காஸா பகுதிக்குள் அனுமதிக்கவில்லை.

 

 

அதற்குப் பதிலாக, பல மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவான நிவாரணப் பொருள்களை இஸ்ரேல் ராணுவம் அனுமதிக்கிறது. இதன் மூலம் அமெரிக்காவின் கெடுவை இஸ்ரேல் மீறியுள்ளது என்றாா் அவா்.

 

முன்னதாக, காஸாவுக்குள் போதிய நிவாரணப் பொருள்களை இன்னும் 30 நாள்களுக்குள் அனுமதிக்காவிட்டால் இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிகள் குறைக்கப்படும் என்று அமெரிக்கா கடந்த மாதம் 12-ஆம் திகதி எச்சரிக்கை விடுத்திருந்தது நினைவுகூரத்தக்கது.

 

 

காஸா உயிரிழப்பு 43,665: காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 43,665-ஆக அதிகரித்துள்ளது.

 

 

இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

 

காஸா பகுதியில்நடத்திவரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 62 போ் உயிரிழந்தனா்; 147 போ் காயமடைந்தனா். இத்துடன், அந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் கடந்த ஆண்டு ஒக். 7 முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 43,665-ஆக அதிகரித்துள்ளது. இது தவிர, இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 1,03,076 பாலஸ்தீனா்கள் காயமடைந்தனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.