செய்திகள்

செய்திகள்

செய்திகள்

தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம்- டக்ளஸ் தேவானந்தா

தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கையூடியுள்ளார்.

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் ஈ.பி.டி.பி. கட்சியின் அடுத்த கட்ட நகர்விற்கு சிறந்த வலுவூட்டலை தந்துள்ளது என தெரிவித்துள்ள கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ், தேசிய நல்லிணக்கம் குறித்த தெளிவூட்டல் மக்களுக்கு சரிவர வழங்கப்படாமையும், எமது கட்சிக்கு எதிராக திட்டமிட்டு பரப்பட்ட அவதூறுகளுமே பின்னடைவிற்கு காரணம் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், இந்த தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவிற்கான காரணங்களை கட்சி செயற்பாட்டாளர்கள் ஒவ்வொருவரும் சுயவிமர்சனம் செய்து திருத்திக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தை நோக்கி இன்னமும் வலிமையுடன் பயணிக்க தயாராக வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தேர்தலுக்கு முன்னர் ஈ.பி.டி.பி. க்கு எதிராக முனனெடுக்கப்பட்ட பிரசாரங்களுக்கு அப்பால், தேர்தலுக்கு பின்னரும் வெளியாகின்ற காழ்ப்புணர்வு மற்றும் போலிப் பிரசாரங்கள் குறித்த உண்மைகளை, நாடளாவிய ரீதியில் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாய கடமை கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு இருப்பதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

பிரிவினை அரசியல் இனியும் தேவையில்லை – அனுர குமார திசாநாயக்க

இலங்கையின் வரலாற்றில் அரசியல் வரைபடம் மாற்றமடைந்துள்ளது. பிரிவினை அரசியல் இனியும் தேவையில்லை என்பதை இத்தேர்தல் நிரூபித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை ஜனாதிபதி தலைமையில் பொறுப்பேற்றுக்கொண்டது. இதனையடுத்து புதிய அமைச்சர்கள் முன்னிலையில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பொதுத் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்திக்கு பலமான ஆணையை வழங்கிய அனைத்து மக்களுக்கும் எமது நன்றிகள். பொதுமக்களின் எதிர்ப்பார்ப்புக்களையும் அபிலாஷைகளையும் நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும். மக்களின் கடின உழைப்பு மற்றும் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் வெற்றியடையச் செய்யும் வகையில் நல்லாட்சி இருக்க வேண்டும்.

நாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெரும்பான்மை அதிகாரம் ஆட்சியாளர்களுக்கு கிடைத்தது. அதிகாரத்தின் ஊடாக மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். மக்கள் வழங்கியுள்ள அதிகாரமானது பொறுப்பு வாய்ந்தது. மக்களுக்கும் பொறுப்பு உள்ளது. எந்தவொரு அதிகாரம் வழங்கப்பட்டாலும் அதில் பொறுப்புடன் செயற்பட வேண்டியுள்ளது.

வெற்றி பெரியது, அந்த வெற்றிக்காக நம் மீது சுமத்தப்பட்ட பொறுப்புகள் சமமானவை. பிரிவினை அரசியல் இனியும் தேவையில்லை என்பதை இத்தேர்தல் நிரூபித்துள்ளது.

இலங்கையின் அரசியல் கலாசாரம் நீண்ட காலமாக வடக்கை தெற்கிற்கு எதிராகவும் அதற்கு நேர்மாறாகவும் நிறுத்தும் முயற்சிகளால் வரையறுக்கப்படுகிறது.

 

இருப்பினும், பிளவுபடுத்தும் அரசியல் இனியும் ஆட்சி செய்யாது என்பதை இந்தத் தேர்தல் காட்டுகிறது. இது அனைத்து மக்களின் அபிலாஷைகளையும் வெற்றிகரமாக ஒரே மையத்திற்கு கொண்டு வந்துள்ளது.

தேசிய மக்கள் சக்திக்கு வலுவான மக்கள் ஆணையை வழங்க முயற்சித்த அனைத்து மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். தேசிய மக்கள் சக்தியின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு அனைத்து மக்களின் ஆதரவும் தேவை.

இதன்பின்னர் நாம் வெற்றிகரமான முறையில் அனைத்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம். இலங்கையை மறுமலர்ச்சி யுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்பேற்றது புதிய அமைச்சரவை – இராமலிங்கம் சந்திரசேகருக்கு கடற்றொழில் அமைச்சு!

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

முதலாவதாக கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

 

பிரதமர் ஹரிணி – கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார்.

விஜித ஹேரத் – வெளிநாட்டமைச்சு, வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலா அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

பேராசிரியர் சந்தன அபேரத்ன – பொதுநிர்வாகம் , மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

பேராசிரியர் ஹர்ஷன நாணயக்கார – நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

சரோஜா சாவித்ரி போல்ராஜ் – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

கே.டி.லால்காந்த – விவசாயம் , கால்நடை , நீர்ப்பாசனம் , காணி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

அநுர கருணாதிலக – நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

இராமலிங்கம் சந்திரசேகர் – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

பேராசிரியர் உபாலி பன்னிலகே – கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

சுனில் ஹந்துன்நெத்தி – கைத்தொழில், தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

ஆனந்த விஜேபால – பொதுமக்கள் பாதுகாப்பு ,பாராளுமன்ற விவகார அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

பிமல் நிரோஷன் ரத்நாயக்க – போக்குவரத்து , நெடுஞ்சாலைகள், துறைமுக, சிவில் விமான சேவை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி – புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

சமந்த வித்யாரத்ன – பெருந்தோட்ட ., சமூக அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

நளிந்த ஜெயதிஸ்ஸ – சுகாதாரம் , ஊடகம் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

சுனில் குமார கமகே – இளைஞர் விவகாரம் ,விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

வசந்த சமரசிங்க – வர்த்தக , வாணிப , உணவுப்பாதுகாப்பு , கூட்டுறவு அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன – விஞ்ஞானம் , தொழிநுட்பம் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ – தொழில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

குமார ஜெயக்கொடி – வலுசக்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

தம்மிக்க பட்டபெந்தி – சுற்றாடல் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

தேசிய மக்கள் சக்தியின் விஸ்வரூப அவையில் சிக்குண்டு காணாமல் போன 150 பாராளுமன்ற உறுப்பினர்கள்!

கடந்த காலங்களில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய 150 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அரசியலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் 92 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றுள்ளதுடன் 58 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை.

 

2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் 77 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தோல்வியடைந்த நிலையில் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் இத்தொகை 94 ஆக அதிகரித்துள்ளது.

 

இதில் 70 க்கும் மேற்பட்டோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஏனையோர் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்தனர்.

 

மஹிந்த அமரவீர, அஜித் ராஜபக்ச, நிபுன ரணவக்க, கஞ்சன விஜேசேகர, கலாநிதி மனுச நாணயக்கார, கலாநிதி ரமேஷ் பத்திரன, சம்பத் அத்துகோரள, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம்.சந்திரசேன, சசீந்திர ராஜபக்ச, சுசில் பிரேமஜயந்த, ரொஷான் ரணசிங்க, திலும் அமுனுகம, ஜனக வக்கும்புர, விதுர விக்ரமநாயக்க, இந்திக்க அநுருத்த, பிரசன்ன ரணவீர, மதுர விதானகே, பிரேமநாத் சி.தொலவத்த, ஜகத் குமார சுமித்ராராச்சி, பியல் நிஷாந்த, கலாநிதி சன்ன ஜயசுமன, துமிந்த திஸாநாயக்க, வீரசுமண வீரசிங்க, சஞ்சீவ எதிரிமான்ன, ஹரின் பெர்னாண்டோ, கோகிலா ஹர்சனி, டி.பி.ஹேரத், அனுப பெஸ்குவல் ஆகியோரும் இந்தத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளனர்.

 

டிலான் பெரேரா, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பிரமித்த பண்டார தென்னக்கோன், பந்துலால் பண்டாரிகொட, சரித ஹேரத், சிசிர ஜயக்கொடி, சந்திம வீரக்கொடி, டீ.வீரசிங்க, அநுர பிரியதர்ஷன யாப்பா, அசங்க நவரத்ன, சாந்த பண்டார, மஞ்சுளா திசாநாயக்க, ருவன் விஜயவர்தன, நிமல் லன்சா, அசோக்க பிரியந்த, சிந்தக்க மாயாதுன்னே, லசந்த அழகியவன்ன, வசந்த யாப்பா பண்டார, திஸ்ஸ அத்தநாயக்க, ஹேர்ல் குணசேகர, ரஞ்சன் ராமநாயக்க, வடிவேல் சுரேஸ், நளின் பெர்னாண்டோ, உபுல் மஹேந்திர, டிலான் ஜயதிலக்க, சரத் வீரசேகர, சுசில் பிரேமஜயந்த, இசுரு தொடங்கொட, மொஹான் பிரியதர்சன டி சில்வா, பிரேமலால் ஜயசேகர, சந்திரசிறி முத்துகுமாரன, ராஜிக்கா விக்ரமசிங்க ஆகியோரும் தோல்வியுற்றுள்ளனர்.

 

தாரக்க பாலசூரிய, நாலக்க பண்டார, முதித்தா பிரியதர்சினி, ஜகத் பிரியங்கர, சுமித் உடுகும்புர, அருந்திக்க பெர்னாண்டோ, விஜித்த பேருகொட, ராஜித்த சேனாரத்ன, சிவநேசத்துரை சந்திரகாந்தன், நிமல் சிறிபால டி சில்வா, புத்திக்க பத்திரன, ஹெரான் விக்ரமரத்ன, மனோ கணேசன், ஹிருணிக்கா பிரேமசந்திர, அசோக்க அபேசிங்க, துசார இந்துனில், லலித் எல்லாவெல, லலித் வர்ணகுமார, விஜித் விஜித்தமுனி, நியோமல் பெரேரா, பியசேன கமகே, லசந்த சேனாநாயக்க, ஜயரத்ன ஹேரத், எம்.ஏ.சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, வேலு குமார், மயில்வாகனம் உதயகுமார், மருதபாண்டி ராமேஸ்வரன், கோவிந்தம் கருணாகரன் ஆகியோரும் தோல்வி பட்டியலில் உள்ளடங்குவர்.

ஒற்றையாட்சிக்கு எதிராகவே வட கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர் – சிவாஜிலிங்கம்

ஒற்றையாட்சிக்கு எதிராகவே வட கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 80 ஆயிரம் வாக்குகள் மட்டும் தான் கிடைத்தது. ஆனால் சமஷ்டியை வலியுறுத்தும் தமிழ் தரப்புகளுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன.

 

EPDP மற்றும் அங்கஜன் போன்ரோரின் வாக்குகளே NPPகு கிடைக்கப் பெற்றுள்ளது. அவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர்.

 

வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.

 

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகள் முழு நாட்டிற்கும் தமிழீழ மக்களுக்கும் பல செய்திகளை சொல்லியுள்ளது. தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்கின்றோம். தோல்விகள் பின்னடைவுகள் புதிதல்ல. மீண்டும் எழுந்து நிற்போம்.

 

தமிழ்த் தேசியத்தை எவரும் பேச கூடாது என்று அர்த்தமல்ல. தமிழ்த் தேசியம் தொடர்பில் அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை. மக்களின் தீர்ப்பின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுங்கள்.

 

நிதி நெருக்கடி தொடர்பில் பத்திரிகை செய்தி மூலம் அறிந்து கொண்ட உள்ளூர் மற்றும் புலம்பெயர் வாழ் தமிழர்கள் தங்களால் முடிந்த அளவு நிதி உதவிகளை செய்திருந்தனர்.

 

நிதி உதவிகளை அனுப்பியிருந்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன் மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியிருந்தது.

 

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்பதே மக்கள் தீர்ப்பு தமிழீழத்திலே சிங்கள இனவாத கட்சிகளின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் ஓரணியாக ஒன்றுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவராக சிவஞானம் சிறிதரன் – தேசியப்பட்டியலில் சத்தியலிங்கம்!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (17) காலை நடைபெற்றது. இதன்போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கட்சியின் பேச்சாளர் பதவி தொடர்பாக பாராளுமன்ற முதலாவது அமர்வின் பின்னர் தீர்மானிக்கப்படவுள்ளதாக சிறிதரன் இதன்போது தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை வைத்தியர் ப.சத்தியலிங்கத்திற்கு வழங்க கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

மலையக இளைஞர்கள் அரசியலுக்குள் பிரவேசிப்பதில் இருந்த தடைகள் அகன்றுள்ளன – அம்பிகா சாமுவேல்

தான் முதன்முறையாக அரசியலில் பிரவேசித்துள்ள நிலையில், மலையக இளைஞர் சமூகம் அரசியலில் பிரவேசிக்க தயாராக இருப்பதாக பாராளுமன்றத்திற்கு தெரிவான புதிய பெண் பிரதிநிதி அம்பிகா சாமுவேல் தெரிவித்துள்ளார்.

தோட்டத்தில் திறன் கொண்ட இளைஞர்கள் குழு இருப்பதாகவும் ஆனால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பிற்குள் சிக்கிக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

“நான் முதன்முறையாக அரசியலுக்கு வருவதால், எனது சகோதரிகள், சகோதரர்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார்கள். அவர்கள் நல்ல திறன்களைக் கொண்ட பிள்ளைகள். ஜனரஞ்சகவாதிகள் மற்றும் நாட்டிற்கு சேவை செய்ய ஆர்வமுள்ளவர்கள். அவர்கள் சிக்கிக்கொண்டிருந்தனர், அவர்கள் ஒருவித கட்டமைப்பிற்குள் சிக்கி இருந்தனர். அந்த கட்டமைப்பு உடைத்தெறியப்பட்டுள்ளது. இனிமேல் சில நல்ல தலைவர்கள் மலையகம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வருவார்கள்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

டொனால்ட் ட்ரம்பின் தலைமையில் மூன்றாண்டு கால ரஷ்யாவுடனான போர் முடிவுக்கு வரும் – உக்ரைன் ஜனாதிபதி நம்பிக்கை!

கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் திகதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது என்பதற்காக ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய போன்ற நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவிகள் அளித்து வருவதால் உக்ரைனும் ரஷ்யாவை எதிர்த்து பதிலடி கொடுத்து வருகிறது.

 

இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக தற்போது வரை கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த போரினால் உலகம் முழுவதும் உள்ள வணிகங்கள் ஸ்தம்பித்து வருகின்றது. இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர பல முறை இரு நாடுகளிடம் ஐ.நா பேச்சு வார்த்தை நடத்தியும் அது எடுபடவில்லை.

 

 

இப்படி இருந்து வருகையில், சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் 2-வது முறை தேர்வாகியுள்ளார். அவர் தேர்வான பிறகு உலக நாடுகளில் நடக்கும் போர்களை நான் தொடங்குவேன் என அவர்கள் கூறினார்கள். ஆனால், நான் போரைத் தொடங்கமாட்டேன், போரை முடிவுக்குக் கொண்டு வருவேன்’ எனப் பேசி இருந்தார்.

 

இது உலகம் முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்தது. தற்போது இந்த போர் நிறுத்தம் குறித்து டிரம்ப்பிடம் பேசியதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் பேசுகையில், “எங்களுடைய நிலைப்பாட்டைப் பற்றி ட்ரம்ப் கேட்டறிந்தார். டிரம்பின் தலைமையின் கீழ், போரானது விரைவில் முடிவுக்கு வரும். விரைவான தீர்வு காண்பதில் முன்னுரிமை அளிப்போம் என ட்ரம்பின் நிர்வாகம் உறுதி கூறியுள்ளது. அமைதி வேண்டும் என்பதே எங்களுக்கு மிக முக்கியமான ஒன்றாகும்.

இதனால், எங்கள் மீது திணிக்கப்பட்ட அநீதியால், எங்களுடைய குடிமக்களை இழந்து வருகிறோம் என்ற உணர்வு ஏற்படாது. போர் நிச்சயமாக முடிவுக்கு வரும். ஆனால், அதற்கான சரியான தேதியைக் கூற முடியாது”, என அவர் பேசியிருந்தார்.

“மக்கள் ஆணையை மனதார ஏற்று, எனது அறவழி அரசியற் பயணத்தை உறுதியோடு தொடர்வேன்.” – சிறீதரன்

நடைபெற்று முடிந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில், தங்கள் வாக்குகளால் எனக்கு ஆணை வழங்கிய யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள். மக்கள் ஆணையை மனதார ஏற்று, எனது அறவழி அரசியற் பயணத்தை உறுதியோடு தொடர்வேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர், இன்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அவரது செய்திக் குறிப்பில் மேலும் உள்ளதாவது, கடந்த 15 வருடகால அரசியற் பயணத்தில் என் ஆத்ம பலமாகவும், அரசியற் பலமாகவும் தம் உடனிருப்பை வழங்கி, கொள்கையின்பாற்பட்ட பயணத்தின் பங்குதாரர்களாக இருந்த உங்கள் ஒவ்வொருவரது கரங்களையும் நன்றியோடு பற்றிக்கொள்கிறேன்.

திட்டமிட்டு பின்னப்பட்ட சதிவலைகளின் உள்ளிருந்தவாறே, தமிழ்த்தேசியத்தின் இருப்புக்காய் போராடத் தலைப்பட்ட என்னையும், எனது பாதையையும் எமது மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்ற நிறைவே, எனது அரசியற் பணியையும் பயணத்தையும் இன்னும் வலுவூட்டும்.

என்னுள் நானாக இருந்து என்னை இயக்கும் எங்கள் தேசத்தில் விதையுண்ட ஆத்மாக்களின் அரூப பலத்தோடு, என் மக்களுக்கான தமிழ்த்தேசியப் பயணத்தை தடையற்றுத் தொடர்வேன்.

நிலையிழக்க வைத்த அலைகளின் நடுவே தமிழ்த்தேசியக் கொள்கைக்கு கிடைத்த இந்த வெற்றி கார்த்திகையின் கனதியை உறுதி செய்யட்டும் – என்றுள்ளது.

வரலாற்றில் பெரும்புரட்சி செய்த என்.பி.பி – சுமார் 19 பெண்கள் பாராளுமன்றத்திற்கு !

இலங்கையில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் 10வது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த 21 பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

21 பெண்களில் 19 பேர் தேசிய மக்கள் சக்தியில் இருந்தும், 2 பேர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, கலாநிதி ஹரினி அமரசூரிய, கௌசல்யா ஆரியரத்ன, சமன்மலி குணசிங்க, ஹேமாலி சுஜீவா, நிலந்தி கோட்டஹச்சி, ஒஷானி உமங்கா, துஷாரி ஜயசிங்க, அனுஷ்கா திலகரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, ஹசாரா லியனகே, சரோஜா சரோஜா பொல்ராஜ், முத்து ரத்வத்த, கீதா ஹேரத், ஹிருணி விஜேசிங்க, அம்பிகா சாமுவேல், சத்துரி கங்கானி, நிலுஷா கமகே, சாகரிகா அதாவுத, தீப்தி வாசலகே ஆகிய பெண்கள் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.