செய்திகள்

செய்திகள்

செய்திகள்

அஸ்ஸாமில் சுகோய் படையை நிறுத்தியது இந்திய விமானப்படை

iair-force.jpgசீனாவின் ஆக்கிரமிப்பு மேகம் வட கிழக்குப் பகுதியில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அஸ்ஸாமில் சுகோய் போர் விமானங்களை இந்திய விமானப்படை நிறுத்தியுள்ளது. மிகவும் எளிமையாக நடந்த நிகழ்ச்சியில் நான்கு சுகோய் விமானங்கள் அஸ்ஸாம் மாநிலம் தேஸ்பூர் விமானப்படை தளத்தில் சேர்க்கப்பட்டன.

சமீபத்தில் ஏஎன் 32 ரக விமானம் விபத்துக்குள்ளாகி ஏழு விமானப்படையினரும், 6 ராணுவத்தினரும் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து சுகோய் சேர்ப்பு நிகழ்ச்சி எளிமையாக நடந்தது. சுகோய் -30 ரக போர் விமானம் அதி நவீனமானது. 2 பேர் அமர்ந்து செல்லக் கூடியது. அனைத்து விதமான வானிலையையும் தாக்குப் பிடிக்கக் கூடிய தன்மை கொண்டது. வானிலிருந்தபடியே எரிபொருள் நிரப்பிக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. அணு ஆயுதங்களையும் இது சுமந்து செல்லக் கூடிய வல்லமை படைத்தது.

ரஷ்யாவிலிருந்து பெற்ற தொழில்நுட்பம் மற்றும் வடிவத்தைக் கொண்டு, தற்போது நாசிக்கில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திலேயே சுகோய் ரக போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சீனாவின் எத்தகைய சவாலையும் சமாளிக்கும் வகையில் வட கிழக்குப் பகுதியில் தற்போது இந்திய மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்பு

கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டதாகக் கூறபப்டும் பெரும்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றபடப்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றது.

வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையமொன்றில் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினரொருவரிடமிருந்து கிடைத்த தகவல்களையடுத்தே விசேட பொலிஸ் குழுவினரால் இவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறபப்டுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேசத்திலுள்ள தோணிதாண்டமடுவில் மறைவிடமொன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரி 56 துப்பாக்கிகள் – 210 ,ரீபீட்டர் ரக துப்பாக்கி – 01 , 303 வகை துப்பாக்கி – 01 உட்பட ஆயுதங்களும் வெடிப் பொருட்களும் நேற்று பாதுகாப்பான முறையில் பொதியிடப்பட்டு புதைத்து வைக்கப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நேற்று திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேசத்திலுள்ள கல்லடி என்னுமிடத்திலும் ஆயுதங்களும் வெடி பொருட்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

ரி – 56 துப்பாக்கி – 51 ,அதற்கான மகசீன்கள் – 900,ஆர்.பி.ஜி. ரக துப்பாக்கிகள் – 02,ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகள் – 03 உட்பட யுத்த உபகரணங்கள் ஒரு தொகுதி இதில் அடங்குவதாக பாதுகாப்பு தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மொரவெவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வான்வில் காட்டுப் பகுதியில் விடுதலைப் புலி சந்தேக நபரொருவர் நேற்று முன் தினம் மாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அந்தப் பகுதியில் மேற் கொள்ளப்பட்ட தேடுதலின் போது ரி – 56 ரக துப்பாக்கி சகிதம் குறிப்பிட்ட சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஈரானிய தேர்தல்: அஹமதி நெஜாத் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு 65 வீத வாக்குகள் பெற்று பெரு வெற்றி

president-ahamadinejad.jpgஈரான் ஜனாதிபதியாக கலாநிதி மஹ்மூத் அஹமதி நெஜாத் மீண்டும் தெரிவுசெய்யப் பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கலாநிதி நெஜாத் 65% வாக்குகளைப் பெற்று பெரு வெற்றி பெற்றுள்ளாரென்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 52 வயதான அஹமதி நெஜாத் ஈரானின் ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாகவும் பதவியேற்கின்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பிரதமரான மிதவாத அரசியல்வாதியாகக் கருதப்படும் மிர் ஹுசேன் முசாவி 32.05% வாக்குகளைப் பெற்றுள்ளார்.

பழைமைவாதியான அஹமதி நெஜாத்துக்குக் கிராமப்புற மக்கள் 75% வாக்களித்துள்ளனர். ஈரானின் 46.2 மில்லியன் வாக்காளர்களில், ஒரு கோடியே 40 இலட்சத்து 11,668 பேர் வாக்களித்துள்ளனர். எதிரணி வேட்பாளருக்கு 65 இலட்சத்து 75,844 பேர் வாக்களித்துள்ளனர்.

1979ஆம் ஆண்டின் இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர், நடைபெற்ற இந்த 10வது ஜனாதிபதித் தேர்தலிலேயே கூடுதலான மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். மக்கள் வாக்களிப்பதற்கு நாடு முழுவதும் 45,713 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தபோதிலும், மக்கள் அலை அலையாக வாக்களிக்கவென திரண்டு வந்தனர். இதனால் வாக்களிப்பு நேரத்தை இரண்டு மணித்தியாலம் அதிகரிக்க தேர்தல் ஆணையம் தீர்மானித்தது.

மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்ததால், வாக்களிப்பு நிறைவடைந்ததும் உடனடியாக செய்தியாளர் மாநாட்டைக் கூட்டிய முன்னாள் பிரதமர் ஹுசேன் மூஸ்வி, தாம் இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவது உறுதியென அறிவித்திருந்தார். ஆனால், நேற்றுக் காலை முதல் வெளியான முடிவுகளின்படி ஜனாதிபதி அஹமதி நெஜாத் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மக்கள் வீதிகளில் திரண்டு தமது வெற்றிக் களிப்பை வெளிப்படுத்தினர். இதனால், தலைநகர் தெஹ்ரானில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில், ஜனாதிபதி அஹமதி நெஜாத்தின் வெற்றியை ஏற்க முடியாதென ஹுசேன் மூஸ்வி தெரிவித்துள்ளார். இது ஒரு மோசடியான தேர்தல் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், தேர்தலின்போது தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டிருந்தன. குறுந்தகவல் சேவை, இணையத்தளம் என்பவையும் இடைநிறுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஐ. அ. இராய்ச்சிய வெளி. அமைச்சர் நேற்று கொழும்பு வருகை அபிவிருத்திக்கு உதவ முன்வருகை

sheikh_abdullah_bin_zayed_al-uae.jpgஇலங் கையில், விவசாயம், நிர்மாணப்பணிகள், உல்லாசப் பயணத்துறை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு ஐக்கிய அரபு இராய்ச்சியம் உதவ முன்வந்துள்ளது.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (சனி) கொழும்புக்கு வருகை தந்த ஐக்கிய அரபு இராய்ச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயிட் அல் நஃயான் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். ஐ.அ. இராய்ச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் நேற்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவைச் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின் முடிவில் பிற்பகல் நடந்த செய்தியாளர் மாநாட்டில் இரு அமைச்சர்களும் கருத்துத் தெரிவித்தனர். இலங்கையில் முதலீடு செய்வதில் ஆர்வம் கொண்டுள்ளதாகத் தெரிவித்த ஐ.அ. இராய்ச்சியத்தின் அமைச்சர், இந்த ஆண்டு ஒப்டோபர் மாதம் அளவில் இரு நாடுகளுக்கிடையிலும் கூட்டு ஆணைக்குழு உருவாக்கப்படவுள்ளது. அதன் பின்னரே முதலீடு செய்வது சாத்தியமாகுமெனக் கூறினார்.

ஐ.அ.இராய்ச்சியத்தின் அமைச்சர் ஷேக் அப்துல்லா, அமைச்சர்களான ஜோன் செனவிரட்ன, ராஜித சேனாரத்ன உட்பட அமைச்சர்களைச் சந்தித்துப் பேசினார். செய்தியாளர் மாநாட்டில் பேசிய அமைச்சர் ரோஹித போகொல்லாகம;

சுமார் இரண்டரை இலட்சம் இலங்கையர்கள் ஐ. அ. இராய்ச்சியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். வெளிவிவகார அமைச்சரின் இலங்கைக்கான வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1976ம் ஆண்டு அவரின் தந்தையார் வந்தார்.  அதன்பின்னர் அமைச்சர் ஷேக் அப்துல்லா வந்துள்ளார் என அமைச்சர் போகொல்லாகம சுட்டிக்காட்டினார்.

ஈழத்தமிழர் பிள்ளைகள் கல்விக்காக நிதியுதவி: நடிகர் சிவகுமார்

sevakumar.jpgதமிழ கத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் பிள்ளைகளில் சிலருக்கு கல்வி கற்க நிதியுதவி வழங்க முடிவு செய்திருப்பதாக நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகுமார், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 30 ஆண்டுகளாக பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு வழங்கி வருகிறார்.  இந்தமுறை 30வது ஆண்டாக பரிசளிக்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார், அவர்களது மகன்களான நடிகர் சூர்யா, நடிகர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய சிவகுமார், நான் மிகவும் கஷ்டப்பட்டு படித்தேன். ஒரு வேளை மட்டுமே நல்ல சாப்பாடு கிடைக்கும். கஷ்டப்பட்டு படித்ததால், ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு என்னால் இயன்ற உதவியை செய்து வருகிறேன். மாணவர்கள், தங்களுடைய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை மதிக்க வேண்டும். அதுபோல தாய்நாடு மற்றும் தாய்மொழி மீது பற்றுக்கொண்டிருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

இலங்கையில் போர் முடிந்த பிறகாவது நிம்மதி ஏற்படும் என்று பார்த்தால், அங்கு உணவு மற்றும் மருந்துகள் கிடைக்காத நிலை இருக்கிறது. இலங்கையில் வாழ்க்கையை தொலைத்துவிட்டு, தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் துன்பப்படுகிற ஈழத் தமிழர்கள் பிள்ளைகளில் சிலருக்கு இந்த ஆண்டு முதல் உதவி செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார்.

ஏகான் கிளாசிக் டென்னிஸ்: சானியா மிர்சா தோல்வி

27-saniamirza.jpgஇங்கி லாந்தில் உள்ள பர்மிங்ஹாமில் உலகின் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் டபிள்யு.டி.ஏ., ஏகான் கிளாசிக் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் சனிக்கிழமை நடந்த ஒற்றையர் அரையிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, சுலோவேகியாவின் மக்டலினா ரிபரிகோவாவிடம் 6 3, 0 6, 3 6 என்ற செட் கணக்கில்  தோல்வியடைந்து வெளியேறினார்.

இருபதுக்கு இருபது கிரிக்கெட்: மேற்கிந்தியத் தீவிகளை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா

11bravo20-20.jpgஃபிளெட்சரின் விக்கெட்டை எடுத்து மகிழும் பந்துவீச்சாளர் பார்னெல் இங்கிலாந்தில் நடந்துவரும் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், தென்னாப்பிரிக்கா – மேற்கிந்தியத் தீவுகள் இடையே நடந்த ஆட்டத்தில், தென்னாப்பிரிக்க அணி இருபது ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்கா அணி முதலில் மட்டைப்பிடித்து இருபது ஓவர்களில் 183 ரன்களைக் குவித்திருந்தது. ஹெர்ஷெல் கிப்ஸ் அதிகபட்சமாக 55 ரன்களைக் குவித்திருந்தார். துவக்க ஆட்டக்காரர்களான காலிஸ் மற்றும் அணித் தலைவர் கிரேம் ஸ்மித் ஆகியோரும் அணியின் எண்ணிக்கை உயருவதற்கு கணிசமான பங்களிப்பு செய்திருந்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் துவக்க பந்துவீச்சாளர் ஜெரோம் டெய்லர் மூன்று விட்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இரண்டாவதாக மட்டை பிடித்த மேற்கிந்தியத் தீவுகள் அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் சோபிக்கவில்லை.

ஆனால் முதல் விக்கெட்டுக்காக களமிறங்கியிருந்த அண்ட்ரூ சிம்மன்ஸ் மிகச் சிறப்பாக விளையாடினார். 50 பந்துகளில் 77 ரன்களை அவர் குவித்திருந்தார்.

தென்னாப்பிரிக்கப் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்ததோடு மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ரன் குவிப்பு வேகத்தையும் கட்டுப்படுத்தினர்.

தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் பார்னெல் தனக்கு வழங்கப்பட்ட நான்கு ஓவர்களில் பதிமூன்று ரன்களை மட்டுமே தந்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இருபது ஓவர்களின் கடைசியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியால் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

‘225 எம்.பிக்களும் ஒத்துழைக்க வேண்டும்’ சபையில் அமைச்சர் டிலான்

parliament-of-sri-lanka.jpgஒருவருக் கொருவர் சேறுபூசும் அரசியல் கலாசாரத்தைக் கைவிட்டு தமிழ் மக்களுக் கான அரசியல் தீர்வை சகல கட்சிகளும் இணைந்து பெற்றுக் கொடுப்பது அவசியமாகும். 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் இதில் ஒன்றிணைந்து ஒத்துழைக்க வேண்டியது முக்கியமெனவும் அமைச்சர் டிலான் பெரேரா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. அமரர் சிவனேசனின் அனுதாபப் பிரேரணையில் உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

எமக்குள் பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். தமிழ் மக்களுக்குப் பிரச்சினை உள்ளது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதற்கு அரசியல் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவேண்டும். அதற்காக 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருமனப்பட்டு ஒத்துழைப்பு வழங்குவது அவசியம். குறுகிய அரசியலைக் கைவிட்டு நாட்டின் எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு சர்வகட்சிக் குழுவின் பக்கம் விரல் நீட்டாமல் அனைவரும் ஒன்றுபட்டு தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கலை எதிர்த்த ஜே.வி.பி. மலையகத் தோட்டத்துறை மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்துப் போராடியது. இத் தருணத்தில் காலத்தின் தேவையைக் கருத்திற் கொண்டு அக்கட்சி செயற்படுதல் அவசியம். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் படுகொலை செய்யப்படமாட்டார்கள். இப்போது பயங்கரவாதம் உருவாக மூலகாரணமான பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டியது முக்கியம்.

இத்தருணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமது குறுகிய அரசியல் சிந்தனையிலிருந்து வெளியே வரவேண்டும். ரவிராஜ், கதிர்காமர், ஜெயராஜ் உட்பட பல அரசியல்வாதிகள் படுகொலைகளுக்கு இச்சபையில் அனுதாபப் பிரேரணைகள் இடம்பெற்றன.

புலிகள் இராணுவ ரீதியில் அழிக்கப்பட்டதையடுத்து இத்தகைய படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்று மறைந்த சிவனேசன் எம்.பிக்கான அனுதாபப் பிரேரணை இடம்பெறுகிறது. தமிழ் மக்கள் பயங்கரவாதிகளால் பல்வேறு துயரங்களை கடந்த 30 வருடங்களாக அனுப வித்துள்ளனர். இன்று அந்த மக்கள் நலன்புரி முகாம்களில் வாழும் நிலையில் அவர்களைத் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தி இயல்பு வாழ்க்கையைத் தோற்றுவிப்பதே சிவனேசன் எம்.பிக்கு நாம் செய்யும் சிறந்த அஞ்சலியாகுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

உலக இரத்ததான தினம் World Blood Donor Day – புன்னியாமீன்

world-blood-donor-day.bmp  உலக இரத்ததான தினம் World Blood Donor Day (recognized by the UN) ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது. இரத்தப் பிரிவுகளான A B O ஆகிய பிரிவுகளைக் கண்டுபிடித்த கார்ல் லென்டினரின் Karl Landsteiner பிறந்த தினத்திலே இத்தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இரத்ததானம் என்பது இன்னொருவருக்கு ஏற்றுவதற்காக இரத்தத்தை வழங்குவதை பொருள்படுத்தி நிற்கின்றது. இந்த தானத்தின் மூலம் சகல வழங்குநரும், பெருநரும் இதன் பிரதிபலன்களை அவர்களுடைய வாழ்நாளிலேயே அனுபவிக்கிறார்கள்.

விபத்தினாலோ, யுத்த அனர்த்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அளவிற்கு அதிகமான குருதி வெளியேற்றத்தினாலும், சத்திரசிகிச்சைகளின் போது குருதி தேவைப்படுமிடத்தும் மற்றும் குருதி மாற்றுச்சிகிச்சைக்கு உட்படுத்தப்படும்போதும் குருதியை தானமாக பெறுபவர்கள் பயன் அடைகிறார்கள். குருதியின் தேவை எச்சந்தர்ப்பத்தில் தேவைப்படும் என்பதை திட்டவட்டமாகக் குறிப்பிட முடியாது.

அதேநேரம், குருதியைப் பெறுபவர் தன் உயிரை மீளப் பெற்றுக் கொள்வதினூடாக நன்மையடைவதைப் போலவே இரத்ததானம் செய்பவர்களும் மறைமுகமாக நன்மையடைகின்றார்கள். இவர்களின் சிறிய செயற்பாடு சில சந்தர்ப்பங்களில் ஒரு உயிரைக் காப்பதற்கு உதவும் மனோநிலை இவர்களிடம் வளர்கின்றது. மறுபுறமாக இரத்ததானம் செய்பவர்களின் உடலில் புதிய குருதி உற்பத்தி செய்யப்படுவதால் அவர்களும் ஆரோக்கியமான வாழ்வை அனுபவிக்கிறார்கள். இந்த உண்மையை இரத்ததானம் செய்வோர் என்ற வட்டத்திற்கு அல்லது எல்லைக்கு வெளியே இருந்து பார்ப்போர் புரிந்து கொள்வதில்லை.

உலக ரீதியில் இத்தினத்தை கொண்டாடுவதற்கான முக்கிய நோக்கம் இரத்ததானம் வழங்குபவர்களை கௌரவப்படுத்துவதற்காகவே வேண்டியாகும். உலகில் நவீன தொழில்நுட்பங்கள் எவ்வளவு தூரம் முன்னேறியபோதிலும் இரத்தத்துக்கு மாற்றீடாக வேறு எந்த ஆக்கக்கூறுகளும் கண்டறியப்படவில்லை. இரத்தம் தேவைப்படுவோருக்கு இரத்தமே வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படாவிடின் நோயாளி மரணிக்கவும் கூடும்.

2009ஆம் ஆண்டில் இத்தினத்தின் கருப்பொருள் ‘இரத்தம் வழங்களின் பாதுகாப்பையும், தன்னிறைவையும் செம்மைப்படுத்தி எவ்வித ஊதியமோ, வெகுமதியோ இன்றி சுயமாக தொண்டு செய்யும் நோக்குடன் இரத்ததானத்தை ஊக்குவிப்பதாகும்’. வருடாவருடம் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் 81 மில்லியனுக்குக் கூடிய அலகுகளை இரத்ததானமாக வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு மனிதருக்கும் என்றோ ஒருநாள் இரத்தத்தின் மூலம் சிகிச்சைச் செய்ய தேவை ஏற்படலாம் என்ற அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் மிகவும் பயபக்தியுடன் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.

அதேநேரம், உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை பிரகாரம் உலக சனத்தொகையில் ஒரு வீதத்துக்கும் குறைவானவர்களே இரத்ததானத்தை செய்கின்றனர். எல்லா நோயாளர்களுக்கும் தேவையான இரத்தம் மூலமான சிகிச்சையை உத்தரவாதப்படுத்தி வழங்க இரத்ததானம் செய்வோரின் தொகை அதிகரிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்படுகின்றது.

மேலும் உலக மக்கள் வழங்கும் இரத்ததானம் ஆண்டுதோறும் 81 மில்லியன் அலகுகளுக்கும் அதிகமாக இருந்த போதிலும் இதில் 38 வீதமான பங்களிப்பினையே வளர்முக நாடுகளில் வழங்கப்படுகின்றது. ஆனால், உலக சனத்தொகையின் 82வீதமானோர் வளர்முக நாடுகளில் வாழ்கின்றனர். இந்நிலையில் இந்நாடுகள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி உலக சுகாதார நிறுவனம் மக்களுக்கு பல்வேறுபட்ட வகைகளில் புரிந்துணர்வை ஏற்படுத்த முயன்று வருகின்றது.

அன்று முதல் இன்றுவரை இன மத மொழி வேறுபாடின்றி உலகெல்லாம் வாழும் அனைத்து மக்களும் மாற்றுக்கருத்தின்றி ஏகமனதாக ஏற்றுக்கொண்ட ஒரே ஒரு தானம் இரத்ததானமாகும். ஆனால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் வைத்தியத்துறை அடைந்துள்ள முன்னேற்றத்தின் காரணமாக குருதிதிரவ இழைய தானம், உடல் உறுப்பு தானம் போன்ற தானங்களும் எதிர்பார்த்தளவிற்கு வெற்றியடைந்துள்ளன. இந்த வெற்றிக்குரிய முக்கியமான காரணம் தானம் செய்யும் கருணையுள்ளம் கொண்ட கொடையாளிகளின் இதயத்தில் இவையும் முக்கிய இடத்தை பிடித்துவிட்டன என்பதேயன்றி வேறு எதுவும் இல்லை.

சாதாரண எடையுள்ள ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. அதில், இருந்து வெறும் 300 முத‌ல் 350 மில்லிலீட்டர் (ஒரு யூனிட்) இரத்தம் மட்டுமே தானத்தின் போது பெறப்படும். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். பொதுவாக 17 – 60 வயதுக்கிடைப்பட்ட சுகதேகிகளால் இரத்ததானம் செய்ய முடியும்.

இரத்த தானம் அளிப்பதால் நமது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சொல்லப்போனால் நமது உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். அது உடலுக்கு நன்மையாகத்தான் அமையும். தானமாக அளித்த இரத்த அளவை, நமது உடல் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் உற்பத்தி செய்துவிடும். இரத்த தானத்தின் போது நாம் இழக்கும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை 56 நாட்களிலேயே சீராகிவிடும். இரத்த தானம் அளிப்பதற்கு எந்தவிதமான உணவுக் கட்டுப்பாடோ, மருந்தோ தேவையில்லை.
உடலில் இருந்து இரத்தம் எடுக்க 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால் இரத்த தானம் அளித்த பிறகு 10, 15 நிமிடங்கள் ஓய்வெடுக்கச் சொல்லி பிறகுதான் அங்கிருந்து அனுப்புவார்கள். எனவே மொத்தமாகவே இரத்த தானம் அளிக்க 30 நிமிடங்கள் போதும்.

இரத்த தானம் அளித்த பிறகும் கூட அவரவர் தங்களது அன்றாட வேலைகளில் எப்போதும் போல் ஈடுபடலாம். எந்த சிக்கலும் இருக்காது.
இரத்த தானம் செய்வதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை எந்த போதைப் பொருளையும் எடுத்திருக்கக் கூடாது. சர்க்கரை நோய், காசரோகம், எய்ட்ஸ் போன்று இரத்தத்தின் மூலம் பரவக்கூடிய நோய்கள் இருக்கக் கூடாது. மேலும் 3 ஆண்டுகளில் மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருக்கக் கூடாது.

உலக இரத்தான தினத்தின் பிரதான குறிக்கோள்களாக பின்வருவன அமைகின்றன:-

எந்தவொரு வெகுமதியோ அல்லது ஊதியமோ இன்றி இரத்ததானத்தை வழங்குவோருக்கு நன்றி செலுத்துதல்.

நெருக்கடியான சூழ்நிலையில் உயிர்காக்கும் விலைமதிப்பற்ற வளத்தினை ஒழுங்காக வழங்கும் அற்புதமான விசேடமான தொண்டர் அணியைச் சேர்ந்தவர் என்ற மனநிலையை இரத்ததானம் புரிவோருக்கு ஏற்படுத்துதல்.

சுகதேகியாக உள்ள நண்பர்களையும், உறவினர்களையும் எவ்வித வெகுமதியோ அல்லது ஊதியமோ இன்றி இரத்தான நடவடிக்கைகளில் பங்கேற்க ஊக்கமளித்தல்.

ஒரு குடும்ப அங்கத்தவருக்கு இரத்தம் தேவைப்பட்ட சந்தர்ப்பத்தில் இரத்ததானம் செய்தவரை தொடர்ந்தும் இத்தகைய தொண்டர் பணியில் ஈடுபட ஊக்குவித்தல்.

இரத்ததானம் செய்வோருக்கு எவ்வாறு சுகமான வாழ்வினை மேற்கொள்ள முடியும், எவ்வாறு தமது இரத்தத்தை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்பது பற்றி அறிவுறுத்துதல்.

உலக இரத்ததான இயற்கை நிகழ்ச்சிகள் பற்றிய ஆர்வத்தைத் தூண்டுதல்.

ஐக்கிய இராச்சியத்தில் பொதுமக்கள் பெருந்தன்மையுடன் இரத்ததானம் செய்கின்றார்கள் என்று அறிக்கைகள் கூறுகின்றன. இங்கிலாந்திலும், பிரேசிலிலும் நிச்சயிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்காக தேசிய இரத்த சேவை நிறுவனம் தினமும் 9000 இரத்த அலகுகளை சேகரிக்கின்றது என்றும், கடந்த வருடம் 1.3 மில்லியன் மக்களிடமிருந்து 2.3 மில்லியன் இரத்த அலகுகளை சேகரித்து வழங்கியமையினால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்றும் அற்றிக்கைகளில் குறிப்பிடுகின்றது.

எனவே, இது விடயமாக நாங்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இரத்ததானம் என்பது ஒரு உயிரைக் காக்க நாங்கள் வழங்கும் பங்களிப்பு. இந்த உணர்வினை இத்தினத்தில் உறுதியாக எமது மனங்களில் பதித்துக் கொள்வோம்.

http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0614-world-blood-donor-day.html

விடத்தல் தீவு பகுதியில் புதிய பொலிஸ் நிலையம்

sri-lankan-road.jpgவிடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் இலங்கை அரசினால் விடுவிக்கப்பட்ட பகுதியான மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு பகுதியில் அண்மையில் பொலிஸாரினால் புதிய பொலிஸ் நிலையம் ஒன்று திரந்து வைக்கப்பட்டிருந்தது.

இந்த பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகளை நேரில் சென்று பார்ப்பதற்காக சனிக்கிழமை மதியம் 12.45 மணியளவில் பொலிஸ்மா அதிபர் ஜெயந்த விக்ரம ரட்ன அவர்கள் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இவருடன் பிரதிப் பொலிஸ்மா அதிபரும் வருகை தந்திருந்தார்.

இதன் போது விடத்தல் தீவு பகுதியில் அண்மையில் புதிதாக திரக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தை பார்வையிட்டதோடு அங்குள்ள குறை நிரைகளையும் கேட்டரிந்தார். இதன் போது மன்னார் பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி ஜெயமகால், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் நி.டி.எஸ்.ஆர் அசன் , மற்றும் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் திரக்கப்பட்ட பொலிஸ் நிலைய பொருப்பதிகாரிகளும் கலந்து கொண்டனர்.