செய்திகள்

செய்திகள்

செய்திகள்

‘புலிகள் இயக்கத்தடையை வெளிநாடுகளோ இராஜதந்திரிகளோ ஆட்சேபிக்கவில்லை’ – அமைச்சர் போகொல்லாகம

rohitha-bougo.jpgபுலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளமைக்கு இலங்கையிலுள்ள இராஜதந்திரிகளோ வெளிநாடுகளோ எவ்வித ஆட்சேபனையையும் தெரிவிக்கவில்லையென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இலங்கை அரசாங்கம் நேற்று முன்தினம் இரவு முதல் தடை விதித்திருந்தது. அரசாங்கத்தின் இந்நிலைப்பாடு குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கும் மாநாடு நேற்று வெளிவிவகார அமைச்சில் அமைச்சர் போகொல்லாகம தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இராஜதந்திரிகள், இலங்கை அரசாங்கம் புலிகளை தடைசெய்தமை குறித்து ஒரு சிறு எதிர்ப்பை கூட வெளிப்படுத்தவில்லையென அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு எதிராக எடுத்துள்ள இம்முடிவு அனைத்து நாடுகளும் விரும்பத்தக்க வகையில் அமைத்துள்ளதென்பதையே இது குறிக்கின்றது என தெரிவித்த அமைச்சர் இது அரசாங்கத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியெனவும் குறிப்பிட்டார்.

இராஜதந்திரிகளுடனான சந்திப்பையடுத்து செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தலதா மாளிகை மீது புலிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து 1998ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் திகதி அரசாங்கத்தினால் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது. 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை அரசாங்கமும் புலிகளும் கைச்சாத்திட்ட போர் நிறுத்த உடன்படிக்கையைத் தொடர்ந்து அவ்வருடம் செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதி இருதரப்பினருக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இத்தடை நீக்கப்பட்டது.

இது இவ்வாறிருக்க கடந்த இரண்டாம் திகதி கிளிநொச்சி முழுமையாக படையினரிடம் வீழ்ந்ததையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றுகையில், பயங்கரவாதத்தை கைவிட்டுவிட்டு பேச்சுக்கு வருமாறு புலிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு முன்னரும் ஜனாதிபதி இதேபோன்றதொரு அழைப்பை விடுத்திருந்தார். ஆனால் புலிகள் தரப்பிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.
 
இச்சந்தர்ப்பத்திலேயே கொம்பனித்தெருவிலுள்ள இலங்கை விமானப்படை தலைமையகத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. அப்பாவி மக்களை இலக்கு வைத்து புலிகள் நடத்தும் இதுபோன்ற தாக்குதல்கள் அவர்கள் இன்னும் பயங்கரவாதத்தை கைவிடவில்லை யென்பதை நன்கு புலப்படுத்துகிறது. எனவேதான் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் புலிகள் இயக்கத்தை தடை செய்ய வேண்டிய கட்டாயம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டதாகவும் அமைச்சர் போகொல்லாகம கூறினார்.

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பாக புலிகள் இயக்கத்தை பிரகடனப்படுத்துவதன் மூலம் ஏனைய நாடுகளுக்கு அதனை அறிமுகப்படுத்துவதற்கு எமக்கு இலகுவாக இருக்கும். இதன் மூலம் புலிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் ஆயுத உதவிகளை எம்மால் நாளடைவில் முழுமையாக நிறுத்திவிட முடியும். புலிகள் இயக்கத்தை நாட்டினுள் தடைசெய்துள்ளமை எமக்கு நல்லதொரு ஆரம்பமாகுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் புலிகள் இயக்கத்தை தடைசெய்ய எவ்வாறான முயற்சிகளை முன்னெடுத்து வருகிர்களென செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவை குறித்து பகிரங்கமாக எதுவும் தெரிவிக்க முடியாது. குறிப்பாக புலிகளுக்கு ஆயுதம் வழங்கும், அவர்களுக்காக நிதி சேகரிக்கும் நாடுகளிலேயே புலிகளை தடை செய்யவேண்டும்.

27 ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 31 நாடுகளில் புலிகள் தடை செய்யப்பட்டுள்ளனர். தமிழர் புனர்வாழ்வு கழகம் உள்ளிட்ட புலிகளை சார்பு படுத்தி வெளிநாடுகளில் இயங்கும் முன்னணி அமைப்புக்களை தடைசெய்யவேண்டும். வன்னி மக்களுக்கென இவர்கள் சேகரித்த நிதியில் அங்கு என்னென்ன அபிவிருத்திகளை முன்னெடுத்திருக்கிறார்களென கிளிநொச்சியை கைப்பற்றிய பின்னர் உலக நாடுகளுக்கும் நன்கு விளங்கியிருக்கும். அவர்கள் அதுவரை அணிந்திருந்த முகமூடிகளை நாம் கழற்றிவிட்டோமெனவும் அமைச்சர் கூறினார்.

புலிகளின் வான் பலத்தை அழிக்க கவனம் செலுத்துமாறு ஐ.தே.க. வலியுறுத்தல்

parliment_inside.jpg
விடுதலைப் புலிகள் சிறு பிரதேசத்துக்குள் முடக்கப்பட்டிருக்கின்ற போதிலும் புலிகளின் வான் பலம் இன்னும் அழிக்க முடியாமல் போயிருப்பது குறித்து எதிர்வரும் நடவடிக்கைகளின் போது கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போதே அத்தநாயக்க எம்.பி. இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;  பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து ஒழித்துக் கட்டுவதே எம் அனைவரினதும் பொறுப்பு. நாட்டில் பயங்கரவாதம் தொடர்வதை எவரும் விரும்பவில்லை. எனவே, பயங்கரவாதத்தை ஒழிக்க எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் எமது ஆதரவு உண்டு. படையினர் புலிகளிடமிருந்து பிரதேசங்களைக் கைப்பற்றி தங்களது வெற்றியை நிரூபித்துள்ளனர். இந்நிலையில், படையினரால் மீட்கப்பட்ட பிரதேசங்களை தக்க வைத்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் படையினரின் வெற்றி அர்த்தமற்றதாகி விடும். ஏனெனில், கடந்தகால சம்பவங்கள் இதற்குச் சான்றுபகிர்கின்றன.

இதேநேரம், வடக்கில் பல பிரதேசங்கள் புலிகளிடமிருந்து மீட்கப்பட்டிருந்தாலும் இங்கு தெற்கில் ஆங்காங்கே குண்டுகள் வெடிக்கின்றன. இம்மாதிரியான செயற்பாடுகளில் புலிகள் தொடர்ந்தும் ஈடுபடக் கூடும். எனவே, இம்மாதிரியான நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

இராணுவத் தளபதி கூறியது போல புலிகள் சிறு பிரதேசத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பது உண்மை. நாம் புலிகளின் பலத்தை உயர்த்திக் கூறவரவில்லை. எனினும், புலிகளின் வான் பலத்தை இன்னும் எம்மால் அழிக்க முடியாமல் போயுள்ளது. எனவே, எதிர்வரும் நடவடிக்கைகளின் போது அரசாங்கம் அது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

காஸாவில் போர் நிறுத்தம்: ஐ.நா. தீர்மானம்

gaza_.jpgகாஸாவில் இஸ்ரேல் தாக்குதலை உடனடியாக நிறுத்த வலியுறுத்தும் போர் நிறுத்தம் கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் தீரமானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் இந்த தீர்மானத்தின் மீதான வாக்களிப்பில் அமெரிக்கா பங்கேற்கவில்லை. 3 நாட்கள் நடைபெற்ற கடும் விவாதத்தைத் தொடர்ந்து இந்த தீர்மானத்தை நிறைவேற்றும் தீர்மானத்தில் எஞ்சிய 14 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

இஸ்ரேல் மீது பலஸ்தீனத்தை ஆளும் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இஸ்ரேல் படைகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதல்களில் இதுவரை 700க்கும் மேற்பட் டோர் கொல்லப்பட்டனர். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொன்டலிசா ரைஸ், இந்த தீர்மானத்தை, நோக்கத்தை அமெரிக்கா ஆதரிப்பதாக கூறினார்.

காஸா மீதான தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம்

gaasa.jpgகாஸா மீதான இஸ்ரேலிய தாக்குதலைக் கண்டித்து நேற்று (9) கொழும்பு உட்பட நாடு பூராவும் ஜும்ஆத் தொழுகையின் பின்னர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஜும்ஆ தொழுகையின் போது விசேட துஆப் பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டன.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள் பொதுமக்கள் உட்பட பெருந்திரளான வர்கள் கலந்து கொண்டனர். காஸா மீதான குரூரமான தாக்குதலை நிறுத்துமாறும் சர்வதேச சமூகம் தலையிட்டு இதற்கு முடிவு கட்ட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர்.

கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலின் முன்பாக நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா, தொழில் அமைச்சர் அதாவுத செனவிரத்ன, பலஸ்தீன தூதுவர், ஜே. வி. பி. பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன் ஹெட்டி, மு. கா. தலைவர் ரவூப் ஹக்கீம், மு. கா. உறுப்பினர் சபீக் ரஜாப்தீன், முஸ்லிம் உரிமைக்கான அமைப்பின் தலைவர் முஜீபுர் ரஹ்மான் உட்பட பெருந் திரளானவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

தென் கிழக்குப் பல்கலைக்கழக முஸ் லிம் மஜ்லிஸ், மாணவர் பேரவை மற்றும் பல்கலைக்கழக மாணவ கழகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டப் பேரணி ஜும்ஆத் தொழுகையின் பின் நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை ‌பிர‌ச்சனை‌யி‌ல் முறை‌யிடுவது கடை‌சி முய‌ற்‌‌சி: சோனியா காந்திக்கு ராமதாஸ் கடிதம்

raamadas.jpgமுல்லைத் தீவில் இன்று பெருமளவில் மனித உயிரிழப்பைத் தடுப்பதற்கு, முறையிடுவதற்கான கடைசிப் புகலிடமாக உங்களை (சோ‌னியாகா‌ந்‌தி) நான் அணுகி இருக்கிறேன் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ள பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ், இலங்கையில் உடனடி போர்நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியாகாந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‌விடுதலைப்புலி போராளிகளுக்கு எதிராக இலங்கைப் படையினர் போர் நடத்துகிறார்கள் என்ற போர்வையில், இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கிக் கொல்லப்படுவது குறித்துத் தமிழக மக்கள் கொந்தளிப்பு அடைந்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இலங்கையில் நிலவும் அநீதியான நிலைமை குறித்துத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கவலை தெரிவித்துள்ளன.

இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு அவர் தலையிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து வேண்டுகோள் விடுப்பதற்காக, கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சி தூதுக்குழுவைத் தமிழக முதலமை‌ச்சர் கருணாநிதி தலைமை ஏற்று அழைத்துச் சென்றார்.

அமைதி முயற்சிகளைத் தொடங்குவதற்கு அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்புவதாகத் தமிழகத் தூதுக்குழுவினரிடம் பிரதமர் உறுதி அளித்தார். ஆனால் பிரதமர் வாக்குறுதி அளித்தபடி பிரணாப் முகர்ஜியை இலங்கைக்குச் செல்லவில்லை என்பதையும், தமிழக மக்களின் ஒட்டுமொத்த குரலுக்கு மதிப்பளிக்கப்படவில்லை என்பதையும் வருத்தத்துடன் உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையில் தமிழ் மக்கள் பாதுகாப்புடன் வாழ்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரி ஆறு கோடி தமிழ் மக்களும் மத்திய அரசை அணுகினர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. எனினும், இலங்கைத் தமிழ் மக்களும், இந்தியத் தமிழ் மக்களும் நீங்கள்தான் தங்களின் பாதுகாவலர் என்று உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர்.

முல்லைத் தீவில் இன்று பெருமளவில் மனித உயிரிழப்பைத் தடுப்பதற்கு, முறையிடுவதற்கான கடைசிப் புகலிடமாக உங்களை நான் அணுகி இருக்கிறேன். மத்திய அரசை ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் என்ற முறையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பல்வேறு நடவடிக்கைகளை நீங்கள் எடுத்திருக்கிறீர்கள்.

அதே தகுதியில், இலங்கையில் உடனடியாகப் போர்நிறுத்தம் ஏற்படத் தலையிட வேண்டும் என்றும், இலங்கை அரசுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையே பேச்சுக்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் இந்திய அரசுக்கு நீங்கள் ஆணையிட வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இந்தச் சிக்கலை மிகுந்த மனிதநேயத்துடனும், அனுதாபத்துடனும் நீங்கள் அணுகுவீர்கள் என்றும், இலங்கையில் தமிழ் மக்களுக்கு அமைதியையும், பாதுகாப்பையும் மீட்டுத் தருவீர்கள் என்றும் நான் உறுதியுடன் நம்புகிறேன் எ‌ன்று அ‌ந்த கடி‌த‌த்‌தி‌ல் ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

தனது உளவு விமானத்தை ‘ரோ’ ‘பிரபாகரனைக் கண்காணிக்கவே பயன்படுத்தி வருகிறது. – திருமாவளவன்

thiruma.jpgதனது உளவு விமானத்தை ‘ரோ’ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைக் கண்காணிக்கவே பயன்படுத்தி வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

அண்மைக் காலமாக சிங்கள இனவெறி அரசு ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க இந்திய அரசு ராணுவ உதவிகளும் பண உதவிகளும் பெருமளவில் செய்து வருவது உறுதிப்பட்டு வருகிறது. கிளிநொச்சியை விட்டு விடுதலைப்புலிகளும் பொது மக்களும் இடம் பெயர்ந்துள்ள ஓரிரு நாட்களுக்குள் இந்திய அரசின் உளவு நிறுவனமான ரோ அமைப்பின் நவீன விமானம் ஒன்று தமிழீழத்தின் கடலோரப்பகுதிகளையும் காடுகளையும் கண்காணிப்பு ஆய்வு செய்வதற்கு 3-ம் தேதி அதிகாலை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து சில ‘ரோ’ அதிகாரிகளுடன் புறப்பட்டுச் சென்றுள்ளது.

உயர்ந்த தொழில் நுட்ப வேவு கருவிகளைக் கொண்ட இந்த வானூர்தி இரவு நேரத்திலும் தரையில் நடந்து செல்லும் ஒருவரை மிகத்துல்லியமாக புகைப்படம் எடுக்குமளவிற்கு ஆற்றலுடையது என்று தெரிய வருகிறது.

முதல் – அமைச்சர் கருணாநிதியின் முயற்சியில் இந்திய பிரதமரை சந்தித்து அனைத்துக்கட்சித் தலைவர்களின் கோரிக்கையையும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்தத்தை வலியுறுத்திய தீர்மானத்தையும் புறந்தள்ளியது மட்டுமில்லாமல் முல்லைத்தீவுப் பகுதிகளைக் கண்காணிக்க ரோ அமைப்பின் அதிகாரிகளை உயர் தொழில் நுட்ப உளவு விமானத்தில் அனுப்பியிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. பிரபாகரனை காட்டிக் கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது என்பதையே இது உறுதிப்படுத்துகிறது. தமிழீழ விடுதலைப்போரை நசுக்கவும், அதன் தலைவரை அழித்தொழிக்கவும் இந்திய அரசு வெளிப்படையாக ஈடுபட்டிருப்பது தமிழ்ச் சமூகத்தால் மன்னிக்கவே முடியாத செயலாகும்.

இந்திய அரசு,  இந்தக் காட்டிக் கொடுக்கும் கேவலத்தை உடனடியாகக் கைவிடவில்லையெனில் பொங்கியெழும் தமிழக மக்களுக்கு பதில் சொல்லியேத் தீர வேண்டும் என்று கூறியுள்ளார் திருமாவளவன்

5ம் ஆண்டு புலமைப்பரிசில் தமிழ் பாடசாலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

2008ஆம் ஆண்டு 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ள தமிழ்மொழிமூல மாணவர்களுக்குரிய வெட்டுப்புள்ளிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன்படி, 2009ஆம் ஆண்டு 6ஆம் வகுப்புக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளக்கூடிய பாடசாலைகளும், அதற்கான வெட்டுப்புள்ளிகளும் வருமாறு:

ஆண்கள் பாடசாலைகள்

கொழும்பு-7 ரோயல் கல்லூரி – 152

கொழும்பு-7 டி. எஸ். சேனாநாயக்க கல்லூரி – 140

யாழ். இந்துக் கல்லூரி – 120

பம்பலப்பிட்டி, இந்துக் கல்லூரி – 114

மட்டக்களப்பு, புனித மைக்கல் கல்லூரி – 114

கல்முனை, சாஹிரா கல்லூரி – 114

பெண்கள் கல்லூரிகள்

பம்பலப்பிட்டி, முஸ்லிம் மகளிர் கல்லூரி – 134

கண்டி, பதியுதீன் மகளிர் மகா வித்தியாலயம் – 128

கொழும்பு, சென்ட் கிளாயர் கல்லூரி – 124

யாழ். வேம்படி மகளிர் கல்லூரி – 120

மட்டக்களப்பு, வின்சன்ட் உயர் கல்லூரி – 119

கல்முனை, மஹ்மூத் மகளிர் கல்லூரி – 118

கலவன் பாடசாலைகள்

மாவனல்லை, சாஹிரா முஸ்லிம் ம.ம.வித்தியாலயம் – 125

ஹட்டன், ஹைலண்ட் ம.ம. வித்தியாலயம் – 124

ஹபுகஸ்தலாவ, அல் மின்ஹாஜ் முஸ்லிம் ம.ம. வித்தியாலயம் – 123

மடவளை பஸார், மதீனா முஸ்லிம் ம.ம. வித்தியாலயம் – 122

தர்காடவுன், அளுத்கம வீதிய முஸ்லிம் மகளிர் கல்லூரி – 117

மாவனல்லை, பதுரியா முஸ்லிம் மஹா வித்தியாலயம் – 116

கெகுனுகொல்ல, முஸ்லிம் மஹா வித்தியாலயம் – 114

பஹமுன, சியம்பலாகஸ்கொட்டுவ மதீனா முஸ்லிம் மஹா வித்தியாலயம் – 113

போலிச் சான்றிதழ்களுடன் அரச நிறுவனங்களில் தொழில்

denees.jpgபோலிச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து அரச நிறுவனங்களின் தொழில்வாய்ப்பைப் பெற்றுள்ளோர் சம்பந்தமாக அரசாங்கம் கவனமெடுத்துள்ளதுடன் அரச சேவை ஆணைக் குழு இது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமென ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இதற்கு முன்னோடியாகவே கமத்தொழில் அபிவிருத்தி, கமநல சேவைகள் அமைச்சில் போலிச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்தவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சம்பந்தப்பட்டவர்களை வேலை நீக்கம் செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் (08) ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி ரஞ்சித் அலுவிஹார எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்றம் (09) காலை 9.30 மணிக்குச் சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டாரவின் தலைமையில் கூடியது. வழமையான நடவடிக்கைகளுக்குப் பின் வாய் மூல வினாக்கான விளக்கங்களுக்கான வேளையில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். கமத்தொழில் அபிவிருத்தி அமைச்சில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை முன்னுதாரணமானது எனவும் அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை, அமைச்சில் பணிபுரிவோரின் தகைமைகளுக்கேற்ப அவர்களுக்கான பதவியுயர்வுகளும் வழங்கப்படுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல் பிரசார சுவரொட்டி, பதாதைகளை அகற்ற முதலமைச்சர் வேட்பாளர் சரத் ஏக்கநாயக்க இணக்கம்

ballot-box.jpgமத்திய மாகாண சபைத் தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்படும் தமது பதாதைகள், சுவரொட்டிகளை அகற்றவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளரான சரத் ஏக்கநாயக்க அறிவித்துள்ளார்.  தேர்தல் ஒழுங்கு விதிகளுக்கு முரணான பிரசார நடைமுறைகளை கட்டுப்படுத்துவதற்கு முன்னோடி நடவடிக்கையாக தனது பதாதைகள், சுவரொட்டிகளை அகற்றவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தேர்தல் சட்டம் மற்றும் அதன் அறிவுறுத்தல்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், தனது புகைப்படங்கள், சுவரொட்டிகளை அகற்ற தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.  இதேவேளை, சரத் ஏக்கநாயக்கவின் இந்த முன்னுதாரணமான செயற்பாட்டை தாம் பெரிதும் வரவேற்பதாக கண்டி பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். அத்துடன், மத்திய மாகாணத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தப்படும் அனைத்து வேட்பாளர்களதும் சுவரொட்டிகள் பதாதைகளை அகற்றுமாறு அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளதாகவும் பூஜித ஜெயசுந்தர தெரிவித்தார்.

தேர்தல் நடைமுறை தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளை அனைத்து வேட்பாளர்களும் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். வன்னியில் நடைபெற்றுவரும் போரை தேர்தல் பிரசாரத்துக்காக அரசு பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலுக்கான பிரசாரங்கள் மிகவும் சூடுபிடித்துள்ளன. ஆளும் கட்சியின் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்க்கட்சிகளுக்கிடையே மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில், மத்திய மாகாணத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கான வாய்ப்புகளும் அங்கு குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முகர்ஜியை விரைவில் கொழும்புக்கு அனுப்புவேன் கருணாநிதிக்கு மீண்டும் உறுதியளித்தார் மன்மோகன் – தமிழக அரசு அறிக்கை

singh.jpgவெளி விவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை விரைவில் இலங்கைக்கு அனுப்பிவைப்பேன் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தமிழக முதலமைச்சர் கருணாநிதியிடம் (07) புதன்கிழமை இரவு உறுதியளித்துள்ளார்.  வெளிநாடு வாழ் இந்தியர்களின் மாநாடு சென்னையில் ஆரம்பமானது. இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்னைக்கு புதன்கிழமை இரவு வருகைதந்த இந்தியப் பிரதமரை கருணாநிதி சந்தித்துப் பேசினார்.

அச்சந்திப்பின் போதே முகர்ஜியை விரைவில் கொழும்புக்கு அனுப்பவுள்ளதாக மன்மோகன் சிங் உறுதியளித்திருப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மன்மோகன் சிங் கருணாநிதி சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாகவும் இறுதியாக இலங்கைப் பிரச்சினை பற்றி பேசப்பட்டதாகவும் அப்போது ஏற்கனவே உறுதியளித்ததன் பிரகாரம் முகர்ஜி எப்போது இலங்கை செல்கிறார் என்று கருணாநிதி கேள்வி எழுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கைத் தமிழர்களின் நிலமை குறித்து கருணாநிதி விரிவாக எடுத்துக் கூறியபோது, அவரின் உணர்வை புரிந்து கொள்வதாக கூறியிருக்கும் மன்மோகன் சிங் சாத்தியமான அளவுக்கு துரிதமாக முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பிவைக்கவிருப்பதாக உறுதியளித்தாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க இலங்கை அரசு விரும்பாமல் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்புவது சாத்தியமற்றது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு இந்தவார முற்பகுதியில் கூறியிருந்தார். அதேசமயம் முகர்ஜியை அனுப்ப சாக்குபோக்கு கூறுவதாக விஜய டி ராஜேந்தர் போன்ற தமிழக அரசியல்வாதிகள் மன்மோகன் சிங் அரசை கடுமையாக விமர்சித்திருந்தனர்.  இந்நிலையிலேயே கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு இந்த அறிக்கையை விடுத்திருக்கிறது.