தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மலேஷியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்று பரவியுள்ள தகவலைத் தொடர்ந்து, அவரைத் தேடும் பணியில் தீவிரமாக மலேஷிய போலீஸ் மற்றும் கமாண்டோ படை இறங்கியுள்ளனர் என சில செய்திகள் குறிப்பிடுகின்றன. வன்னிப் பகுதியில் பெரும் நிலப்பரப்பை சிங்கள ராணுவம் ஆக்கிரமித்துவிட்ட நிலையில் புலிகள் எந்தவித எதிர் தாக்குதலும் நடத்தாமல் உள்ளனர்.
இன்னும் சில கிலோ மீட்டர்கள் மட்டுமே புலிகளின் வசம் உள்ளதாம். இந்நிலையில், பிரபாகரன் மற்றும் முக்கிய தளபதிகள் அனைவரும் ஈழப்பகுதியிலிருந்து தப்பி மலேஷியா அல்லது தாய்லாந்துக்கு தப்பிச் சென்றுவிட்டிருக்கக் கூடும் என்று உளவு அமைப்புகள் தெரிவித்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்தத் தகவல் வெளியானதும் மலேஷிய போலீஸ் மற்றும் ராணுவம் ஊஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
‘பிரபாகரன் மலேஷியாவுக்குள் நுழைய வாய்ப்பில்லை. ஆனால் நாங்கள் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. எனவே நாடு முழுக்க தேடுதல் வேட்டையைத் தொடங்கிவிட்டோம்’ என அந்நாட்டின் காவல்துறை உயர் அதிகாரி மூசா ஹூஸைன் கூறியுள்ளார். ஆனால் இதுகுறித்து தாய்லாந்து அரசு எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.
‘பிரபாகரன் ஒருபோதும் ஈழத்தைவிட்டு வெளியேற மாட்டார். இது திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம். உண்மை என்னவென்று நாளை தெரியும்’, என்று புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.—–