செய்திகள்

செய்திகள்

செய்திகள்

அமைச்சுப் பதவிகள் மூலம் கிடைக்கும் வரப்பிரசாதங்கள் உரிய முறையில் தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டும் – மனோ எம்.பி. தெரிவிப்பு

mano_ganesan_mp_.jpgஇன்று பெருந்தோட்ட மக்கள் அனுபவிக்கின்ற துன்பங்களுக்கும், வேதனைகளுக்கும் அரசாங்கங்களைக்குறை கூறுவதால் எவ்வித பிரயோசனமுமில்லை. மாறாக அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு மக்களுக்கு உரிய சேவைகளைச் செய்யாதவர்களையே உண்மையில் குறை கூற வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவைப் பிரதேசத்திலுள்ள எலிபடை மேற்பிரிவு, கீழ்ப்பிரிவு, கேர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு, கேர்க்கஸ்வோல்ட் கீழ்ப்பிரிவு, பெற்றசோ ஆகிய தோட்டங்களில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மனோ கணேசன் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;

இன்று பெருந்தோட்ட மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அதிகமாக உழைத்துக் குறைந்த வருமானம் பெறுகின்ற ஒரே சமூகமாக பெருந்தோட்டச் சமூகம் இன்றும் இருந்து வருகின்றது. ஒவ்வொரு அரசாங்கத்திலும் அமைச்சுப்பதவிகளை வகிக்கின்ற இந்தப் பெருந்தோட்டச் சமூகப்பிரதிநிதிகள் இந்த மக்களின் தேவைகளை உணர்ந்து சேவை செய்யாமல் தத்தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கின்றனர்.

மலையகத்தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களெல்லாம் இன்று அமைச்சுப்பதவிகளை வகித்துக்கொண்டிருக்கின்ற போதும் இவர்களால் சமூகத்துக்கு எந்த வித பிரயோசனமுமில்லை. இந்த மக்கள் நாளுக்கு நாள் சொல்லிக்கொள்ள முடியாத வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய ஏமாற்றுத் தலைமைகளைத் துடைத்தெறிவதற்கு தான் நாம் இன்று மலையகத் தேர்தல் களத்தில் குதித்துள்ளோம். மலையகம் எனது தாயகம், இந்த மண்ணையும் என்னையும் பிரிக்கமுடியாது.

இந்த மக்களுக்காக மனமுவந்து சேவை செய்வதற்கு முன்வந்துள்ளோம். எம்மை ஏன் இங்கு வந்தீர்கள் என்று கேள்வி கேட்பதற்கு யாருக்கும் எவ்வித அதிகாரமும் கிடையாது. எதிர்வரும் தேர்தலில் எமக்கு உரிய பலத்தை வழங்குவதற்கு மலையக மக்கள் முன்வரவேண்டும்.

தொடர்ந்து தோட்டத்தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் கிடைக்காவிட்டால் உரிய தரப்பினருடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தி தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வைப்பெற்றுக்கொடுப்பதில் தயங்கப்போவதில்லை.
எனவே ஆளுகின்ற அரசாங்கங்களில் எம்மவர்கள் அமைச்சுப்பதவிகளை வகிப்பதை நான் ஒருபோதும் குறை சொல்லமாட்டேன். மாறாக அந்த அமைச்சுப்பதவிகள் மூலம் கிடைக்கின்ற வளங்கள், வரப்பிராசாதங்கள், அதிகாரங்கள் அனைத்தும் இந்த மக்களுக்குக் கிடைக்கவேண்டும் என்பதே எனது எண்ணமாகும். ஆகவே எதிர்வரும் தேர்தலில் மலையக மக்கள் எனக்கு வாக்களிக்கின்றீர்கள் என்று கருதி எனது அமைப்பின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

சிவிலியன்களை விடுவிக்க: புலிகளுக்கு ஜனாதிபதி 48 மணிநேர காலக்கெடு

mahi-raja.jpgவடக்கில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்து வரும் 48 மணி நேரத்தினுள் சிவிலியன்களை சுதந்திரமாகச் செல்வதற்கு அனுமதிக்க வேண்டுமென ஜனாதிபதி புலிகளிடம் வற்புறுத்திக் கேட்டுள்ளார்.

அதேநேரம், வடக்கிலிருந்து இடரற்ற சூழலை நோக்கிப் பாதுகாப்பாகச் செல்லும் சகல மக்களினதும் சொந்தப் பாதுகாப்புக்கும், உரிமைகளுக்கும் தான் உத்தரவாதம் வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வடக்கில் புலிகளின் பிடியில் சிக்குண்டுள்ள பொதுமக்களின் நிலை தொடர்பாக ஜனாதிபதி நேற்றிரவு அறிக்கையொன்றை விடுத்தார். அந்த அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:- என்னுடைய அரசாங்கம் எப்போதும் நாட்டிலுள்ள மக்கள் அனைவரினதும் நலன்புரி நடவடிக்கைகளிலும், அவர்களது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திலும் பெரும் அக்கறையுடனேயே செயற்பட்டு வருகிறது.

விசேடமாக, புலிகளின் ஆதிக்கத்தின் கீழ் வடக்கு, கிழக்கில் வாழும் மக்களின் நலனிலும் எனது அரசாங்கம் பெரும் கரிசணை கொண்டு செயற்படுகிறது. இந்த வகையில், இலங்கையிலுள்ள சகல மக்களும் சமாதானமாக வாழ வேண்டுமென்பதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.

விசேடமாக வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்கு அவர்களது ஜனநாயக உரிமையை அனுபவிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதேநேரம், இலங்கையில் நீண்டகாலம் பின்பற்றப்பட்டுவரும் ஜனநாயகப் பாரம்பரியம் மூலம் அவர்களது அபிலாஷைகளுக்கேற்ப தேர்தல் மூலம் அவர்களுடைய தலைவர்களை சுதந்திரமாகத் தெரிவு செய்யும் வாய்ப்பு இருக்கிறது.

என்றாலும், வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு பேச்சுவாரத்தை மூலம் தீர்வுகாண எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் புலிகளால் குழப்பியடிக்கப்பட்டன. இலங்கை மக்கள் மீது புலிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன். பயங்கரவாதத்தை அகற்றி மக்களை அதிலிருந்து விடுவிப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்தனர்.

இந் நடவடிக்கையின் போது அரசாங்கத்தினரும் படையினரும் சிவிலியன்களின் நலன்புரி நடவடிக்கைகளிலும், உயிர்களைப் பாதுகாப்பதிலும் சொத்துக்களை அழிக்காமல் இருப்பதிலும் மிகவும் அக்கறையுடன் செயற்படுகின்றனர். மேலும், ஜனநாயக ரீதியில் மக்கள் ஆணைபெற்ற அரசாங்கம் என்ற வகையில் இலங்கையின் இறைமையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதில் உறுதியுடன் செயற்படுகிறது. இலங்கை மக்களை ஐக்கியப்படுத்தும் அதேநேரம் சகல பிரச்சினைகளுக்கும் ஜனநாயக வரையறைக்குள்ளேயே தீர்வு காண வேண்டுமென்பதிலும் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது.

இந்த வகையில் அரசாங்கத்தினதும் மக்களினதும் இலக்கை அடைவதற்கு பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். ஜனநாயகத்தை மீளக் கட்டியெழுப்புவதில் அரசாங்கம் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கிறது. வடக்கில் வாழும் மக்கள் தங்களது ஜனநாயக உரிமைகள் மூலம் தங்களது தலைவர்களைத் தேர்ந்தெடுத்து வாழ்வதற்கு உரிமை இருக்கிறது.

சகல பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலமும் கலந்துரையாடல் மூலமுமே தீர்வு காணப்படும். வன்முறைகள் மூலம் தீர்வுகாண அரசாங்கம் ஒருபோதும் முயற்சிக்காது. பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கையால் வடக்கில் குறுகிய நிலப்பரப்பினுள் பொது மக்கள் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

பெரும் தொகையான மக்கள் புலிகளால் பலாத்காரமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் அப்பாவி மக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

புலிகளால் பொதுமக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை கவனத்தில் கொண்ட நாம், யுத்தப் பிரதேசத்தில் பொது மக்கள் பாதுகாப்பு வலயமொன்றை பிரகடனப்படுத்தினோம். இது முழுக்க முழுக்க சிவிலியன்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே ஏற்படுத்தப்பட்டது.

படையினருக்கும், ஆயுதம் ஏந்திய புலிகளுக்குமிடையில் மோதல்கள் ஏற்படுகின்ற போது பொது மக்களைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.துரதிர்ஷ்டவசமாக பாதுகாப்பு வலயத்தினுள் புலிகள் ஆட்லறித் தாக்குதல் நடத்தி வருகின்ற அதேநேரம் அந்தப் பகுதிகளினுள் இருந்து கொண்டு பாதுகாப்புப் படைவீரர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதனால், கண்மூடித்தனமான முறையில் சிவிலியன்களைக் கொல்கின்றனர்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்து வரும் 48 மணி நேரத்தினுள் சிவிலியன்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டுமென நான் புலிகளிடம் கேட்டுக் கொள்கிறேன். அந்த சிவிலியன்கள் அனைவரும் ஒரு பாதுகாப்பா இடரற்ற சூழலுக்குள் பாதுகாப்பாக செல்வதை நான் உறுதிப்படுத்துகிறேன்.

வடக்கில் மோதல் நடைபெறும் பகுதிகளில், (புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில்) வாழும் சகல மக்களினதும் சொந்தப் பாதுகாப்பும் இலங்கையில் வாழும் ஏனைய பிரதேச மக்கள் அனுபவிக்கும் உரிமைகளும் அந்த மக்களுக்கும் கிடைக்கும் வகையில் நான் உத்தரவாதம் வழங்குகிறேன். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்தார்.
 
 

பிரிட்டனின் எக்கனோமிஸ்ட் சஞ்சிகைக்கு தாய்லாந்தில் தடை

பிரிட்டனை தளமாகக் கொண்டு வெளியாகும் எக்கனோமிஸ்ட் சஞ்சிகையின் புதிய வெளியீட்டிற்கு தாய்லாந்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.  இராஜ குடும்பம் தொடர்பாக வெளிவரும் கட்டுரை இப்பதிப்பில் பிரசுரமாவதால் மக்களிடையே நிலவும் சர்ச்சைகளுக்கு மத்தியிலேயே இச்சஞ்சிகையின் வெளியீட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசாட்சியை அவதூறாக விமர்சித்தமைக்காக சிறைவைக்கப்பட்டிருக்கும் அவுஸ்திரேலிய எழுத்தாளரின் கட்டுரையே இப்பதிப்பில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை பொது வாழ்வில் தாய்லாந்து மன்னரின் செயற்பாடு குறித்துக் கேள்வி எழுப்பி இருந்தமைக்காக கடந்தமாதமும் இச்சஞ்சிகையின் வெளியீட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

வவுனியா ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த 26 உடல்களும் பூந்தோட்டம் மயானத்தில் அடக்கம்

வவுனியா அரசினர் பொது வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்த அடையாளம் காணப்படாத 26 சடலங்களும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியவில் அரசாங்க செலவில் பூந்தோட்டம் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட நீதிமன்றின் உத்தரவுடன் சடலங்களை பொலிஸார் அடக்கம் செய்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. வன்னிப் போர்முனைப் பகுதியில் இராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்ட இவையாவும் புலிகளின் சடலங்கள் எனத் தெரிவிக்கப்பட்டு சவச்சாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. சடலங்களை பொறுப்பேற்குமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் பொலிஸார் கேட்டிருந்தனர். பழுதடைந்த நிலையில் இவை இருந்ததால் சவச்சாலையிலிருந்து விரைவாக அப்புறப்படுத்தப்பட வேண்டுமென பொலிஸார் தெரிவித்திருந்தனர். அத்துடன் சவச்சாலையில் இடநெருக்கடியும் ஏற்பட்டிருந்தது. தொடர்ந்தும் சடலங்களை வைத்திருக்க முடியாத நிலையில் மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் பொலிஸார் சடலங்களை அடக்கம் செய்தனர்.

முத்துக்குமாரின் தீக்குளிப்பு எதிரொலி – இலங்கை வங்கி தாக்குதல் :தூதரகத்திற்கும் பலத்த பாதுகாப்பு

ஈழத்தமிழருக்காக தீக்குளித்து உயிர்நீத்த வாலிபர் முத்துக்குமாரின் எதிரொலியாக சென்னையில் உள்ள இலங்கை அரசுக்கு சொந்தமான வங்கி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது.

சென்னை வேப்பேரியில் பூந்தமல்லி சாலையில் வணிகவளாகத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கியில் இன்று மாலை 4மணிக்கு 50க்கும் மேற்பட்டவர்கள் காவலுக்கு நின்றிருந்த போலீசாரை மீறி உருட்டுக்கட்டைகளுடன் உள்ளே நுழைந்தனர். வங்கியின் ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன.  முக்கிய ஆவணங்கள் அள்ளி வீசப்பட்டன. வணிகவளாகத்தின் மூன்று அடுக்கு மாடியில் இருந்த கண்ணாடிகளும் அடித்து நொறூக்கப்பட்டன. வங்கி அதிகாரிகளின்  கார்களும் அடித்து நொறுக்கப்பட்டன. பின்னர் போலீசார் வந்து பதட்ட நிலையை சரிப்படுத்தினர். மேலும் இந்த வங்கியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தையும் தாக்கக்கூடும் என்று முன்னெச்சரிக்கையாக அங்கே போலீசார் குவிந்துள்ளனர். எந்த அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விசுமடு நகரப் பகுதி முழுவதையும் இராணுவம் கைப்பற்றியுள்ளது

viswamadu_2901.jpgநேற்று பிற்பகல் விசுவமடு சந்தியைக் கைப்பற்றிய இராணுவத்தின் 58வது படையணியினர் அதனைத் தொடர்ந்து விசுவமடு நகரப் பகுதி முழுவதையும் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். விசுவமடு பகுதியில் புலிகளின் முன்னரங்க நிலைகள், அரசியல் அலுவலகங்கள் மாவீரர் இல்லங்கள் என்பவற்றையும் படையினர் கைப்பற்றி தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
 

புலிகள் அனுமதித்தால் காயமடைந்தவர்களை மீட்போம்: ஐ.நா.

uno.gifஇலங்கையின் போர் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி மக்களை மீட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஐ.நா. திட்டமிட்டுள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே தற்போது போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பல்வேறு நகரங்களை பிடித்துள்ள ராணுவம், தற்போது முல்லைத்தீவையும் பிடிக்க போராடி வருகிறது.

இந்நிலையில், போரினால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் இரண்டரை லட்சம் அப்பாவிப் பொதுமக்கள் வன்னிக் காட்டுப் பகுதியில் சிக்கியுள்ளனர். இவர்களில் சுமார் 50 குழந்தைகள் உள்பட பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், போரினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களை மீட்டு, சிகிச்சையளிக்க தயாராக இருப்பதாகவும், இதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும் என்றும் ஐ.நா.சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூனின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “புலிகள் அனுமதித்தால், இன்று பகல் நேரத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, வவுனியாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.காயமடைந்தவர்களை போர் நடக்கும் பகுதியில் இருந்து மீட்பதற்காக சென்ற ஐ.நா மீட்புக் குழு, புதுக்குடியிருப்பு பகுதியில் சிக்கியுள்ளது. இப்பகுதி விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கே.வி. பாலகுமாரன் மூத்த தலைவர் படுகாயம்

Balakumar Kஇலங்கையில் ராணுவத்துடன் நடந்த கடும் சண்டையில் விடுதலை புலிகளின் மூத்த தலைவர் கே.வி. பாலகுமாரன் படுகாயமடைந்ததாக, புலிகள் ஆதரவு இணையதளம் கூறியுள்ளது. முல்லைத்தீவு பகுதியிலுள்ள உடையார்காட்டில் கடந்த திங்களன்று நடந்த கடும் சண்டையில், எல்டிடிஈ மூத்த தலைவரும் சிறப்பு உறுப்பினருமான பாலகுமாரன் படுகாயமடைந்ததாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக, அந்த இணையதளம் கூறுகிறது. ‘ஈழ புரட்சிகர மாணவர் அமைப்பின் (ஈராஸ்) முன்னாள் தலைவரான பாலகுமாரன், கடந்த 90-களில் தனது ஆதரவாளர்களுடன் விடுதலை புலிகள் அமைப்பில் இணைந்தார்.

கடந்த 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு ராணுவத்துடன் நடந்த மோதலில் புலிகளின் மூத்த தலைவர் ஒருவருக்கு ஏற்பட்ட மிகமோசமான பாதிப்பு இதுவாகும். இதற்கு முன் கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பரில், புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் (முன்னாள்) தமிழ்செல்வன் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இணக்கப்பாடில்லாத முக்கிய சில விடயங்களுக்கு அடுத்த சர்வகட்சி மாநாட்டில் தீர்வு எட்டப்படும்?

நாட்டின் முக்கிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அமைக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவினர் 99 வீதமான இணக்கப்பாட்டை எட்டியுள்ள நிலையில் இணக்கப்பாடு இல்லாத முக்கிய ஒருசில விடயங்களை அடுத்த சர்வகட்சி மாகாநாட்டின் மூலம் எட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் 104 ஆவது கூட்டம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றபோது இதுவரை காணப்பட்ட இணக்கப்பாடுகள் குறித்த அறிக்கை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.  இந்நிலையில் இணக்கம் காணப்படாத ஏனைய ஒரு வீதத்தையும் சர்வகட்சி மகாநாட்டின் மூலம் இணக்கப்பாடு எட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதேவேளை, அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் 105 ஆவது கூட்டத்தை 2 அல்லது 3 ஆம் திகதியில் நடத்த இருந்த போதிலும் அத்தினங்களில் கண்காட்சியொன்று இடம் பெறவுள்ளதால் எதிர்வரும் 10 ஆம் திகதி நடத்துவதற்கும் தீர்மானித்துள்ளது.

காயமடைந்த சிவிலியன்களை விடுவிக்க புலிகள் மறுப்பு பாரிய சந்தேகங்களை ஏற்படுத்துகிறது – கெஹலிய

kkhaliya.jpgவன்னியில் காயமடைந்துள்ளதாகக் கூறப்படும் 320 சிவிலியன்களை சிகிச்சைக்காக வவுனியாவிற்குக் கொண்டு வருவதைப் புலிகள் தடுப்பதானது பாரிய சந்தேகங்களை உருவாக்கியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். நேற்று தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் குறிப்பிட்ட அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது :-

வன்னியில் யுத்தத்தினால் காயமடைந்தவர்கள், நோயாளர்களென 320 பேர் புதுக்குடியிருப்பு அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை வவுனியாவிற்குக் கொண்டுவந்து சிறந்த முறையில் சிகிச்சைகளை வழங்கும் நோக்கில் ஐ. நா. அதிகாரிகள் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் மற்றும் படைத்தரப்பு அதிகாரிகள் பலரும் வன்னிக்குச் சென்றுள்ளனர்.  இறுதி நேரத்தில் அந்த நோயாளிகளை ஒப்படைக்க புலிகள் மறுத்துவிட்டனர். அரசாங்கம் உச்ச அளவில் சிகிச்சை வசதிகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே காயமடைந்தோரை அழைத்துவர தீர்மானித்தது.

அப் பகுதியில் பல சிவிலியன்கள் காயமடைந்துள்ளதாக செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் சிவிலியன்களா அல்லது பயங்கரவாதிகளா என எப்படி இனங்காண்பது? ஆயுதத்தைக் கீழே வைத்தால் புலிகளும் சிவிலியன்கள்தானே? இவர்கள் சிவிலியன்கள் என ஒரு அரச சார்பற்ற அமைப்பினருக்கு எவ்வாறு இனங்காண முடிந்தது?

எந்த சிவிலியன்களை இலக்கு வைத்தும் படையினர் தாக்குதல் நடத்தவில்லை. எனினும் சில ஊடகங்கள் இது பற்றி அங்குள்ள டாக்டர்கள் தமக்குத் தகவல் தந்ததாகத் தெரிவிக்கின்றன. ஊடகங்களின் தகவலின்படி அத்தகைய பெயருடைய எவரும் அரசவைத்தியர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. இந்த டாக்டர்கள் தகவல் தெரிவிக்கையில்:-

இராணுவத்தினரே இம்மக்களைச் சுட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். டாக்டர்கள் எவ்வாறு இப்படி கூற முடியும். இவர்கள் புலிகள் அமைப்பின் டாக்டர்களோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஒரு டாக்டர் எப்படி யுத்த நிலைமை சம்பந்தமாக விளக்கமுடியும்? எனவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கேள்வியெழுப்பினார்.
இத்தகைய விடயங்கள் தொடர்பில் தகவல்களை வெளியிடும் ஊடகங்கள் கவனமாகச் செயற்படுவது அவசியம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.