செய்திகள்

செய்திகள்

செய்திகள்

‘தமிழர்களுக்கு என பௌத்த விகாரை வேண்டும். அச்சமின்றி தமிழர்கள் விகாரைகளுக்கு செல்லும் நிலை நாட்டில் ஏற்பட வேண்டும்’ – ராகுல தேரர்

இலங்கையில் தான் மரணிக்கும் முன் தமிழ் விகாரையொன்று கட்டப்பட வேண்டுமென ராகுல தேரர் தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றிற்கு  வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, அந்த தமிழ் விகாரையில், நூற்றுக்கணக்கான தமிழ் தேரர்கள் இருக்க வேண்டுமெனவும், அச்சமின்றி தமிழர்கள் விகாரைகளுக்கு செல்லும் நிலை நாட்டில் ஏற்பட வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இலங்கையில் உள்ள தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கவும் தமிழ் அரசியல் தலைவர்களின் ஆதரவுடன் மக்களுக்காக சேவை செய்யவும் தான் உள்ளிட்ட காவி உடையணிந்த தேரர்கள் தயாராக இருப்பதாக ராகுல தேரர் தெரிவித்துள்ளார்.

எனினும், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் தேரர்களிடம் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள ஏன் தயங்குகிறார்கள் என்றும் தேரர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதேவேளை, ஈழத்தமிழர்கள் உலகின் பல நாடுகளில் தற்போது பரந்து வாழ்ந்து சாதனை படைத்துள்ளதாகவும் அவர்களுக்கு இலங்கையை கைப்பற்ற வேண்டுமென்ற அவசியம் கிடையாது எனவும் ராகுல தேரர் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் இருந்து தங்களது கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெறுகிறது அஸ்ட்ராஜெனெகா !

உலக சந்தையில் இருந்து தங்களது கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது பிரிட்டன் நாட்டின் மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா நிறுவனம். வர்த்தக ரீதியான காரணங்களால் கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவிட் பெருந்தொற்று நெருக்கடியின்போது அஸ்ட்ராஜெனகா மற்றும் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகம் இணைந்து கோவிட்-19 பாதிப்புக்கு தடுப்பூசியை உருவாக்கின. இந்தியாவில் இந்த தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து கொரோனாவுக்கானதடுப்பூசியாக ‘கோவிஷீல்ட்’ என்ற பெயரில் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உலக நாடுகளை சேர்ந்த பல கோடி மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இந்த சூழலில் அஸ்ட்ராஜெனகாவின் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக சொல்லி பிரிட்டன் நீதிமன்றத்தில் 50-க்கும் மேற்பட்ட வழக்குக தொடரப்பட்டது. இது அந்த நாட்டில் தற்போது விசாரணையில் உள்ளது.

இந்த சூழலில் அண்மையில் இது தொடர்பான வழக்கில் பதிலளித்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம் கோவிஷீல்ட் தடுப்பூசி மிக அரிதான சந்தர்ப்பங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்தது. இது அந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் தடுப்பூசியை சர்வதேச சந்தையில் இருந்து திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனகா தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இனி அந்நிறுவனம் கோவிட் தடுப்பூசியை தயாரிப்பதையும் விநியோகம் செய்வதையும் நிறுத்திக் கொள்கிறது. இதனை பிரிட்டன் நாட்டு செய்தி நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. இந்த முடிவு முற்றிலும் தற்செயலானது என்ற விளக்கமும் தரப்பட்டுள்ளது.

வர்த்தக ரீதியிலான காரணங்களுக்காக இந்த முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளதாக தகவல். கடந்த மார்ச் மாதம் தடுப்பூசியை திரும்பப் பெறுவது தொடர்பான விண்ணப்பத்தை ஐரோப்பிய ஆணையத்தின் வசம் அஸ்ட்ராஜெனெகா சமர்ப்பித்துள்ளது. இது நேற்று (மே 7) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பாராளுமன்றத்தில் அமர்வதற்கு சட்டரீதியாகத் தகுதியற்றவர் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே டபாராளுமன்றத்தில் அமர்வதற்கு சட்டரீதியாகத் தகுதியற்றவர் என உயர் நீதிமன்றம் இன்று (8) தீர்ப்பிட்டுள்ளது.

சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

டயனா கமகே பிரித்தானியப் பிரஜையாக இருப்பதால் இந்த நாட்டு பாராளுமன்றில் அமர்வதற்கு சட்டரீதியாகத் தகுதியற்றவர் எனத் தீர்ப்பளிக்குமாறு இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதேவேளைடயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதன் காரணமாக வெற்றிடமாகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு கூலிப்படை வீரர்களாக கடத்தப்படும் இலங்கை இராணுவ வீரர்கள் !

முப்படைகளிலும் பணியாற்றி ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களை ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்குச் சுற்றுலா விசா மூலம் அழைத்துச் சென்று கூலிப்படைகளில் அமர்த்தும் மனிதக் கடத்தல் செயற்பாடு இடம்பெறுவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அவர்களில் சிலர் யுத்தத்தில் பலத்த காயமடைந்து ஆதரவற்ற நிலையில் பரிதாபமாக உயிரிழப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மனித கடத்தல் செயற்பாடு தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் 0117192142 அல்லது 0117192250 என்ற இலங்கை கடற்படைத் தலைமையக தொலைபேசி இலக்கங்களுக்குத் தகவல் வழங்குமாறு இலங்கை கடற்படை கோரிக்கை விடுத்துள்ளது.

மகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பு – முல்லைத்தீவு மக்கள் ஆர்ப்பாட்டம்!

மகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கொக்குதொடுவாய், கொக்கிளாய் கருநாட்டுக்கேணி பிரதேச மக்களினால் இன்று (08) வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் மகாவலி எனும் பெயரில் தமிழர்களின் பூர்வீக காணிகளை அபகரிக்காது மகாவலி திட்டத்தை எமது மண்ணில் நிறுத்து, எமது வாழ்வாதாரத்தை பறிக்காதே, மகாவலி அபிவிருத்தி முல்லைதீவில் பௌத்த மயமாக்கலுக்கா, எமக்கு நீதி வேண்டும், மகாவலி திட்டத்தை எமது மண்ணில் நிறுத்து என்ற பதாகைகள் தாங்கியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மகாவலி நில ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆளுநரின் செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

காலநிலை மாற்றம் தொடர்பான புதிய சட்டம் விரைவில் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நாட்டில் தற்போது வெப்பமான காலநிலையை அனைவரும் எதிர்கொண்டுள்ள நிலையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான புதிய சட்டத்தை அரசாங்கம் உருவாக்கி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நமது தேசத்திற்கும் கிரகத்திற்கும் காலநிலை நடவடிக்கை என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாவது” நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே ஜனாதிபதியான எனது பணியாக இருந்தது. இதுவரை இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டின் தற்போதைய பொருளாதார அமைப்பில் நாம் தொடர்ந்து முன்னேற முடியாது. நான் முன்பு பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டது போல், நாம் அதிக போட்டித்தன்மை கொண்ட ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாற வேண்டும். அதற்கான புதிய சட்டத்தையும் உருவாக்கி இருக்கிறோம்.

பொருளாதார மாற்றுச் சட்டம் அடுத்த வாரம் வர்த்தமானியில் வெளியிடவுள்ளோம். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான புதிய சட்டத்தையும் நாங்கள் உருவாக்கி வருகிறோம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் இரண்டையும் கையாளும் ஒரு சட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளோம்.

இது மத்திய சுற்றாடல் அதிகாரசபையை தொடர்ந்து இயக்கும் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மையத்தையும் உள்ளடக்கும்.

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. நமது சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரத்திற்கான கிடைக்கும் திறன் ஆகியவற்றைப் பார்த்தால், நமக்கு 30 முதல் 50 ஜிகாவாட் வரையிலான ஆற்றல் உள்ளது.

எங்களிடம் உள்ள இந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை நாங்கள் அதிகம் பயன்படுத்த விரும்புகிறோம். கடன் மறுசீரமைப்புக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனைவரும் உதவ வேண்டும். கடன் நெருக்கடியில் இருந்து மீள ஆப்பிரிக்க நாடுகளுக்கு நிதி தேவைப்படுகிறது.

இல்லையேல் அந்த கண்டத்தில் அழிவு ஏற்படும். நாங்கள் எங்களின் கடனை வெற்றிகரமாக மறுசீரமைத்துள்ளோம்.

மிகவும் சிரமப்பட்டு அந்த வேலையை செய்தோம். அந்த சவாலை எதிர்கொள்ளும் திறன் இலங்கைக்கு இருந்தது. ஆனால் அதற்கு ஆதரவு தேவைப்படுபவர்களு

மன்னாரில் 52 காற்றாலை திட்டங்களுக்கு அரசு வழங்கிய அனுமதியை ஏற்றுக்கொள்ள முடியாது – மன்னார் பிரஜைகள் குழு

மன்னார் தீவில் அதானி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள 52 காற்றாலை உயர் மின் திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை சந்தியோகு மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் புதன்கிழமை (8) மதியம் ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் தீவில் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ள குறித்த திட்டத்தினால் எமக்கு வர உள்ள அழிவுகள் குறித்து நாங்கள் பல வருடங்களாகக் கூறி வருகிறோம்.குறித்த திட்டத்தினால் எமது வாழ்விடம் திட்டமிட்டுப் பறிக்கப்பட உள்ளது.

எமது பண்பாடு மற்றும் வரலாற்றுச் சுவடுகள் அழிக்கப்படப் போகின்றது.மக்களின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு மக்கள் வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்படப் போகிறது.மாணவர்களின் கல்வி மற்றும் அவர்களின் எதிர்கால நல வாழ்வும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.

எமது வளமான மண் அழிக்கப்பட்டு,எதுவும் அற்ற ஒரு நிலைக்குத் தள்ளப்படும்.எனவே எமது மக்களை ஒன்று கூட்டி பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

இவ்விடயம் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்று அவரது முடிவை நாங்கள் எதிர் பார்க்க உள்ளோம்.மன்னார் தீவில் உள்ள மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி நல்லதொரு தீர்வை வழங்குவாராக இருந்தால் எதிர்ப்பு போராட்டங்கள் கைவிடப்படும்.

எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது விட்டால் எமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.மன்னார் தீவிலிருந்து ஒரு துண்டு நிலத்தைக் கூட நாங்கள் இத் திட்டங்களுக்கு வழங்க மாட்டோம்.

மேலும் கனிய மணல் அகழ்வினால் எமது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.மக்களுக்கு போதிய விளக்கம் இன்மையினால் மக்களிடம் இருந்து திட்டமிட்ட வகையில் காணிகள் அபகரிக்கப் படுகிறது.

மேலும் சுமார் 500 ஏக்கர் வரையிலான காணிகள் காணி உரிமையாளர்களிடம் கனிய மணல் அகழ்வுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.எனவே குறித்த திட்டங்களையும் நாங்கள் முற்று முழுதாக எதிர்க்கின்றோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான வீதிகளை பயன்படுத்த அனுமதி !

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான வீதிகளை பயன்படுத்த அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகளை திறக்குமாறும், இணைந்த வீதிகளை பயன்படுத்த அனுமதிக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பாதுகாப்பு பிரிவினரிடம் நேற்று (07) தெரிவித்தார்.

ஒட்டகப்புலம் பகுதிக்கு நேற்று விஜயம் செய்த ஆளுநர் விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிட்டத்துடன், காணி உரிமையாளர்களுடனும் கலந்துரையாடினார்.

 

யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி) ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

 

வசாவிளான் கிழக்கு (J/244), வசாவிளான் மேற்கு (J/245), பலாலி வடக்கு (J/254), பலாலி கிழக்கு (J/253), பலாலி தெற்கு (J/252) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்குட்பட்ட 234.8 ஏக்கர் காணி அண்மையில் விடுவிக்கப்பட்டது. இங்கு வசித்த 327 குடும்பங்கள் காணி உரிமை கோரி பதிவு செய்துள்ளதுடன், அவர்களில் 171 குடும்பங்களைச் சேர்த்தவர்கள் தங்களின் காணிகளை அடையாளப்படுத்தி துப்பரவு செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

 

இந்நிலையில், விடுவிக்கப்பட்டுள்ள காணிகளுக்குள் இலகுவாக பிரவேசிக்கக்கூடிய வகையில் பாதைகளை திறக்கவும், வீதிகளை பயன்படுத்தவும் அனுமதிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொண்டதற்கமைய, அதற்கான அனுமதியினை பாதுகாப்பு பிரிவினருடன் கலந்துரையாடி ஆளுநர் பெற்றுக்கொடுத்தார்.

 

அதற்கமைய, பொன்னாலை – பருத்தித்துறை கடற்கரை வீதியில் கண்ணகி அம்மன் கோவில் சந்தியிலிருந்து நாகதம்பிரான் கோவில் வீதி ஊடாக விடுவிக்கப்பட்ட காணிக்குள் பிரவேசிக்க முடியும்.

அத்துடன் வீரப்பளை வீதியில் பலாலி வீதி நோக்கி 100 மீற்றர் தூரத்துக்குள்ளும், வீரப்பளை சந்தியில் தெற்கு நோக்கி தம்பாளை வீதி (விமான நிலைய வீதி) ஊடாகவும் விடுவிக்கப்பட்ட காணிக்குள் பிரவேசிக்க முடியும்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளவர்களை அதிலிருந்து விடுவிப்பதற்காக விசேட வேலைத்திட்டம் -பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன்

போதைப்பொருள் விநியோகத்தை ஒழித்து போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளவர்களை அதிலிருந்து விடுவிப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பங்கேற்புடன் இன்று (8) ஆரம்பிக்கப்பட்ட புனர்வாழ்வு வேலைத்திட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதன்படி, போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து விடுவிப்பதற்காகக் கொழும்பு மாவட்டத்தில் 11 புனர்வாழ்வு நிலையங்களும் நாடளாவிய ரீதியில் 256 புனர்வாழ்வு நிலையங்களும் நியமிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கன் விமானச் சேவையை வரி செலுத்தும் மக்களுக்குச் சுமை இல்லாதவாறு முன்னெடுப்போம் – பிரதமர் தினேஷ் குணவர்தன

ஸ்ரீலங்கன் விமானச் சேவை மற்றும் விமான நிலையத்தை அரசாங்கத்திற்கு வரி செலுத்தும் மக்களுக்குச் சுமை இல்லாதவாறு முன்னெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது எனப் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) பிரதமரிடம் கேள்விக்கான வேளையின் போது எதிர்க்கட்சி எம்பி ஹேஷா விதானகே எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கன் விமானச் சேவை மற்றும் விமான நிலையத்தை அரசாங்கத்திற்கு வரி செலுத்தும் நிறுவனமாகவும் மக்களுக்குச் சுமை இல்லாதவாறு முன்னெடுப்பதற்குத் தேவையான பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

அதன் பிரகாரம் பயிற்சிகளுக்காக மேற்கொள்ளப்படும் வெளிநாட்டுப் பயணங்களை மட்டுப்படுத்தல், மிக அத்தியாவசியமான ஆட்சேர்ப்பை மட்டும் மேற்கொள்வது, அனாவசிய கொள்வனவுகளை மட்டுப்படுத்தல், சம்பளத் திருத்தம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குதல் போன்ற விடயங்களை மேற்கொள்ள இருக்கிறோம்.

அதேவேளை, ஸ்ரீலங்கன் விமானச் சேவை நிறுவனம் அரசாங்க வங்கிகள் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கவுள்ள கடன் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு ஹேஷா விதானகே எம் பி எழுப்பிய கேள்விக்குப் பிரதமர் பதிலளிக்கையில்,

ஸ்ரீலங்கன் விமானச் சேவை நிறுவனம் 2024 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி வரை இரண்டு அரச வங்கிகளுக்கும் 385.12 மில்லியன் டொலர் வழங்கப்பட வேண்டியுள்ளது.

அந்த வகையில் இலங்கை வங்கிக்கு 217.42 மில்லியன் டொலரும் மக்கள் வங்கிக்கு 167. 71 மில்லியன் டொலரும் கடனாக வழங்க வேண்டியுள்ளது எனினும் 2024 மார்ச் 31ஆம் திகதி வரை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்திற்குக் கடன் வழங்க வேண்டியதில்லை என்றார்.