எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

லிபியாவிலுள்ள இலங்கைப் பணியாளர்கள் மீண்டும் நாட்டிற்கு

lankan-airlines.jpgசேவை ஒப்பந்தத்தின்படி ஊதியம் வழங்குமாறு லிபியாவில் எதிர்ப்பு ஆர்பாட்டங்களை மேற்கொண்ட இலங்கைப் பணியாளர்களை மீட்டும் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. லிபியாவின் நிறுவனத்துடன் இலங்கை வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்திற்கு மேலாக குறித்த நிறுவனம் இலங்கைப் பணியாளர்களிடம் சேவைக் கொடுப்பனவை அறவிடுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.

இந்தத் தகவலை அறிந்திராத இலங்கைப் பணியாளர்கள் ஒப்பந்தத்தின் படி தங்களுக்கு ஊதியம் வழங்குமாறுக் கோரி ஆர்பாட்டங்களை மேற்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  இதேவேளை, சட்டவிரோதமாக கொண்டு நடத்தப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகங்கள் குறித்து தகவல் வழங்குமாறு கிங்ஸிலி ரணவக்க பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

முரளி உலகக் கிண்ணத்துடன் ஓய்வு

muttiah-muralitharan.jpgஎதிர்வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நிறைவடைந்த பின்னர் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறப்போவதாக இலங்கை அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்திய முரளிதரனுக்கு இந்திய சென்னையில் வைத்து நேற்று சனி பாராட்டு நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றுகையியேலே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், தனது 20 வருட கிரிக்கெட் வாழ்க்கை போதுமானதெனவும், இளைய சமுதாயத்தினருக்கு இடம்கொடுத்து ஓய்வுபெற வேண்டிய காலம் தற்போது வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  உலகக் கிண்ணத்திற்கு முன்னர் இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய தொடரில், தான் பங்கேற்கவுள்ளதாகவும், ஐபிஎல் தொடரில் சென்னை சுப்பர் கிங் அணிக்காக தொடர்ந்தும் விளையாடவுள்ளதாகவும் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்

தேநீர் கோப்பையில் புதிய உலக சாதனை

viva.jpgஉலகின் முதல் தர தேயிலை ஏற்றுமதி நாடான இலங்கை, உலகின் மாபெரும் தேநீர்க் கோப்பைக்கான உலக சாதனையை நேற்றுப் படைத்தது.1000 கலன் வீவா தேநீரைக் கொண்ட மாபெரும் கோப்பை நேற்றுக் காலை 10 மணிக்கு கொழும்பு 05, பி. ஆர். சி. மைதானத்தில் தயாரிக்கப்பட்டு, கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கிளாஸ் கொஸ்மித் லைன் நிறுவனத்தினால் வீவாவின் பிரதான தொனிப்பொருள் பிரசார நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இந்நிகழ்வு நடாத்தப்பட்டது.இந்தச் சாதனை ஆரம்பம் முதல் இறுதி வரை லண்டன் கின்னஸ் பிரதிநிதிகளால் கண்காணிக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டமைக்கான உறுதிப்படுத்தும் சான்றிதழ் இலங்கை மிஷிறி இன் நுகர்வோர் பிரிவுத் தலைவரும், நிர்வாக இயக்குனருமான சச்சி தோமஸிடம் கையளிக்கப்பட்டது.நாங்கள் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினோம். எங்கள் மக்கள் பெரிதும் விரும்பும் பானமான தேநீரைக் கொண்டு ஒரு சாதனையைச் செய்யலாம் என்று நினைத்தோம் என்றார் சச்சி தோமஸ்.

2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ம் திகதி அமெரிக்க கன்ஸாஸ், போர்ட் ஸ்கொட் சுகாதார நிலையத்தால், மாபெரும் தேநீர்க் கோப்பை தயாரிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. 660 கலன் (3000 லீட்டர்) தேநீரைக் கொண்டதாக அச்சாதனை அமைந்திருந்தது. இச்சாதனை வீவாவினால் நேற்று முறியடிக்கப்பட்டது. வீவாவினால் 1000 கலன் தேநீரைக் கொண்ட கோப்பை நேற்று தயாரிக்கப்பட்டது.

இதற்கான பணிகள் சுமார் 2 மாதங்களுக்கு முன்னரே ஆரம்பமாகி விட்டன. இந்தக் கோப்பை 10 அடி உயரமும் 8 அடி அகலமும் கொண்டது. 2000 வோல்டேஜ் கொண்ட 6 ஹீட்டர்களால் அது சூடேற்றப்பட்டது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வையடுத்து இம்மாபெரும் தேநீர்க் கோப்பை நகரின் பல பாகங்களுக்கும் மிஷிறிஇன் விற்பனை மற்றும் விநியோகிக்க படையணியின் வாகனத் தொடரணியுடன் எடுத்துச் செல்லப்பட்டது.

இலங்கைப் பணிப்பெண்களுக்கு சவூதி அரேபியா தடை? இன்று தீர்மானம் வெளியாகும்

sri-lankan-housemaid.jpgஇலங்கை யர்களை வீட்டுப் பணிப்பெண்களாக சேர்ப்பதற்குத் தடை விதிக்கும் தீர்மானத்தை சவூதி அரேபிய அரசாங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரியவருகிறது  பணிப்பெண்களுக்கான ஊதியம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கும் சவூதி அரேபிய அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இப்பகிஷ்கரிப்பு குறித்து அறிவிப்பதற்காக ஆட்சேர்ப்பு தொடர்பான சவூதி அரேபிய அரசாங்கக்குழு நாளை ஒன்றுகூடவுள்ளது. பணிப்பெண்களுக்கான ஊதியத்தை 7500 சவூதி றியால்களிலிருந்து 5500 றியால்களாக குறைப்பதற்கான சவூதி அரேபிய அரசாங்கத்தின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்ததையடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என சவூதி அரேபிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி, அரேபிய மொழி நாளிதழான ‘அல்யோம்’  செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைத் தரப்பின் இணக்கமற்ற தன்மையானது சவூதி அரேபிய அரசாங்கக் குழுவின் அனைத்து உறுப்பினர்களிடையேயும் இவ்விடயத்தில் கருத்தொற்றுமையை ஏற்படுத்தியுள்ளது. இப்போது அவர்கள் ஏனைய நாடுகளிலிருந்து பணிப்பெண்களை சேர்ப்பது குறித்து கலந்துரையாடுகின்றனர் என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் எஸ்.எஸ். சந்திரன் காலமானார்

4ssc.jpgதென்னிந்திய திரைப்பட நடிகர் எஸ். எஸ். சந்திரன் (வயது 69) நேற்று மாரடைப்பால் காலமானார். 700 க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்புக் கூட்டத்தில் பங்கு பற்றிய இவர், தனியார் விடுதி ஒன்றில் ஓய்வு எடுக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

அ.தி.மு.க. பேச்சாளரான இவர் பொதுக் கூட்டத்தில் கண்டன உரையாற்றிவிட்டு, வெள்ளிக்கிழமை இரவு 12 மணிக்கு மன்னார்குடியில் உள்ள பூரணா தனியார் விடுதியில் தங்கினார். நள்ளிரவு 1 மணி அளவில், எஸ். எஸ். சந்திரனின் உதவியாளர், மாத்திரை கொடுப்பதற்காக அவரை எழுப்பியுள்ளார்.

அப்போது அசைவற்று இருந்த எஸ். எஸ். சந்திரனை கண்டு அதிர்ச்சி அடைந்த உதவியாளர், கட்சி நிர்வாகி களுக்கு தெரி வித்துள்ளார். உடனடியாக மருத்துவர்களை அழைக்க முயன்றுள்ளனர். பின்னர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை யில் எஸ். எஸ். சந்திரனை அனுமதித்துள்ளனர். அங்கு எஸ். எஸ. சந்திரனை பரிசோதித்த மருத்தவர்கள், ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அறிந்த அதிமுகவினர் மன்னார்குடியில் கூடினர். உடனடியாக அவரது காரிலேயே, அவரது உடல் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.

டெல்லி கொமன்வெல்த் போட்டியில் ஒரு ஈழத்தமிழரின் தங்க வேட்டை

commonwealt_logo.jpgஅவுஸ் திரேலியாவுக்காக தங்கப் பதக்கங்கள் வென்ற இலங்கைத் தமிழன் பிரஷாந்த் கொமன்வெல்த் போட்டியில் சாதனை டெல்லி கொமன்வெல்த் போட்டியில் ஒரு தமிழர் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவர் இலங்கை பிரஷாந்த் செல்லத்துரை. அவுஸ்திரேலியாவுக்காக விளையாடி வருகிறார் இந்த ஜிம்னாஸ்ரிக்ஸ் வீரர்.
சர்வதேச அரங்கில் தமிழர்களின் முத்திரை தற்போது அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் இப்போது டெல்லி கொமன்வெல்த் போட்டியில் பதக்க வேட்டையில் முதலிடத்திலிருக்கும் அவுஸ்திரேலியாவுக்காக ஒரு தமிழர் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

அவரது பெயர் பிரஷாந்த் செல்லத்துரை. பூர்வீகம் இலங்கை. இவரது குடும்பத்தினர் இலங்கையில் இனக்கலவரம் பெரிதாக வெடித்த 1983 ஆம் ஆண்டு அங்கிருந்து இடம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவுக்குச் சென்றனர். தற்போது சிட்னியில் வசித்து வருகிறது செல்லத்துரையின் குடும்பம். பிரஷாந்த் அவுஸ்திரேலிய ஜிம்னாஸ்ரிக்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள முக்கிய வீரர். அவுஸ்திரேலியாவுக்காக டெல்லி கொமன்வெல்த் போட்டியில் 2 தங்கம் வென்று கொடுத்துள்ளார்.

டெல்லி கொமன்வெல்த் போட்டியில் இரு போட்டிப் பிரிவுகளில் கிட்டத்தட்ட 15,000 புள்ளிகள் வரை பெற்றுள்ளார் பிரஷாந்த். ஜிம்னாஸ்ரிக்ஸ் போட்டிகளில் இந்தளவுக்கு அதிக பட்ச புள்ளிகள் கிடைப்பது மிகவும் அரிதான விடயம். அந்தளவில் பிரஷாந்த் ஒரு சாதனையே படைத்துள்ளார்.

24 வயதேயாகும் பிரஷாந்த் “ரேடியோலோ” மாணவர் அவுஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்தது பிரஷாந்த்துக்கு எளிதாக இருக்கவில்லையாம். கடும் போராட்டங்கள், கடின பயிற்சி, கடுமையான முயற்சிக்குப் பின்புதான் அணியில் இடம்கிடைத்தது. கடந்த மெல்போர்ன் கொமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் பிரஷாந்த். இந்த முறை தங்கத்துடன் திரும்புவேனென சபதமே போட்டிருந்தாராம். சொன்னபடி வாங்கியும் விட்டார். டெல்லி கொமன்வெல்த் போட்டியில் ஒரு ஈழத்தமிழர் அதுவும்  தங்க வேட்டையாடி வருவது பெருமைக்குரிய விடயம் தான்.

அடிப்படை வசதிகள் எதுவுமின்றி புதுக்குடியிருப்பில் மீள்குடியேற்றம்

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் இதுவரை 824 குடும்பங்களைச் சேர்ந்த 2525 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். செட்டிகுளம் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த 549 குடும்பங்களைச் சேர்ந்த 1,784 பேரும் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வசித்து வந்த 215 குடும்பங்களைச் சேர்ந்த 731 பேருமே விஸ்வமடு மேற்கு கிராம அலுவலர் பிரிவில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் செட்டிகுளத்தில் நலன்புரி நிலையத்திலிருந்து வந்தவர்களுக்கேதறப்பாள் வழங்கப்பட்டுள்ளது.

மன்னகண்டல்,மாணிக்கபுரம்,வள்ளுவர்புரம் கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் அடுத்த வாரம் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.தயானந்தா தெரிவித்தார். புதுக்குடியிருப்பு பிரதேச செயலகமும் தற்காலிகமாக விஸ்வமடு மகாவித்தியாலய நூலகக்கட்டிடத்தில் இயங்க ஆரம்பித்துள்ளது.

அடிப்படை அத்தியாவசிய வசதிகள் எதுவும் செய்யப்படாமலேயே மீள்குடியேற்றம் இடம்பெறுவதாகவும் மழைகாலம் தொடங்கியுள்ளதால் மீள்குடியேற்றப்பட்டவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்காலிக கொட்டகையாவது அமைக்க தகரம், தடி,கம்புகள்,கிடுகுகள்,விவசாய உபகரணங்கள் உலருணவுப் பொருட்கள் உடனடியாக வழங்க ஆவன செய்யப்படவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அமைச்சர் ரிசாத் பதியுதீன் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் பகுதிகளுக்குச் சென்று முஸ்லிம்களின் நிலமைகளை ஆராய்ந்தார்.

Risath_Bathiyutheen_Ministerவர்த்தக மற்றும், கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கிளிநொச்சி பகுதிகளுக்கு விஜயம் செய்து அங்குள்ள முஸ்லிம் மக்களின் நலன் குறித்து ஆராய்ந்தார். யாழ்ப்பாணத்தில் 20 வருடங்களுக்குப்பின் நேற்று மானிப்பாய்   வீதியிலுள்ள பெரிய முகைதீன் பள்ளிவாசலில் இடம்பெற்ற ஜும்ஆ வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்டதுடன், கோப்பாய் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற இஸ்லாமிய கலை நிகழ்வில் பங்கு பற்றியதோடு, யாழ். ஒஸ்மானியாக் கல்லூரிக்குச் சென்று அங்கு முஸ்லிம் மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரிச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தார். அங்கு முஸ்லிம் பள்ளிவாசல் காணியில் வசிக்கும் எட்டு குடும்பங்களுக்கு நிரந்தரமாக வசிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

பின்னர் யாழ்.சோனகத்தெருவிற்கு சென்று அங்குள்ள வீதிகளை அபிவிருத்தி செய்தல், வடிகால் புனரமைப்பு, மின்சார வசதிகளை சீர்செய்தல் முதலான பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்ககு பணிப்புரை விடுத்தார்.

யாழ்.வருவதற்கு முன்னதாக கிளிநொச்சிக்குச் சென்ற அமைச்சர் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளான நாச்சிக்குடாவிற்குச் சென்று அங்குள்ள முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில் அடுத்த மாதம் 10ஆம் திகதி யாழ். மாநகரசபையின் பிரதி மேயராக முஸ்லிம் ஒருவர் பதவியேற்கவுள்ளதாகவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் படி ஒரு வருடத்தின் பின் பிரதி மேயர் பதவியை முஸ்லிம் ஒருவருக்கு வழங்குவது என முடிவெடுக்கப் பட்டமையையும் குறிப்பிட்டார். இந்த ஒப்பந்தத்தை  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நினைவு படுத்துவதற்காக தாம் யாழ்ப்பாணம் வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சரஸ்வதி பூஜை

sri-lankan-parliament.jpgபாராளு மன்றத்தில் சரஸ்வதி பூஜை நேற்று வெள்ளிக்கிழமை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பாராளுமன்ற முன்வாயில் மண்டபத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமான சரஸ்வதி பூஜையில் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார், பிரதி சபாநாயகர் பிரியங்க ஜயரட்ண மற்றும் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கலந்து கொண்டனர்.

சரஸ்வதி பூஜையைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. சரஸ்வதி பூஜைக்காகப் பாராளுமன்ற முன்வாயில் மண்டபம் வாழை,மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பாராளுமன்ற ஊழியர்கள் பலரும் கலந்துகொண்ட அதேவேளை, வெளியிலிருந்தும் பலர் வந்திருந்தனர்

எழுதுமட்டுவாழ் பகுதிகளில் பொதுமக்களின் பல வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

தென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதியில் 15 நாட்களுக்கு முன்னர் காணப்பட்ட வீடுகள் தற்போது அழிக்கப்பட்டுள்ளதாக எழுதுமட்டுவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

எழுதுமட்டுவாழ் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்கள் தங்களது வீடுகளை பார்வையிடுவதற்காக சென்ற போது நாகர்கோவில் வீதியிலிருந்த 267 வீடுகளில் இரு வீடுகள் தவிர்ந்த ஏனைய வீடுகள் முற்றாக அழிவடைந்துள்ளதாக தெரிவித்தனர். தங்கள் காணிகளிலிருந்த பயன்தரு மரங்களும் தறிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தங்கள் குடியிருப்புக்கள் மழைய நிலைக்குத் திரும்ப நீண்டகாலம் எடுக்கும் எனவும் இம்மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.