எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

முல்லை, கிளிநொச்சி மாவட்ட செயலகங்களுக்கு புதிய கட்டடம்

யுத்தம் இடம்பெற்ற சகல பிரதேசங் களிலுமுள்ள அனைத்து அரச அருவல கங்களையும் மீண்டும் ஆரம்பித்து மக்க ளுக்கான சேவைகளை வழங்கிவருவதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி.திசாநாயக்க தெரிவித்தார். பாதிக்கப்பட்டிருந்த கட்டடங்கள் புன ரமைக்கப்பட்டு இயங்கவைக்கப் பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலகங்களுக்கு புதிய கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவை அலுவலகங்கள் உள்ளிட்ட அரச நிர்வாகத் துக்குக் கீழ்வரும் கட்டடங்கள் பல யுத்தச் சூழலின் போது பாதிக்கப்பட்டன. அவற்றில் பகுதியாக பாதிக்கப்பட்ட அலுவலகங்கள் அனைத்தும் புனரமைக்கப்பட்டு இயங்க வைக்கப்பட்டுள்ளன.

வடக்கின் சில பிரதேசங்களில் கண்ணி வெடி அகற்றல் நடவடிக்கைகள் இடம் பெறுகின்றன. மேலும் சில பிரதேசங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெறு கின்றன. இப்பகுதிகளில் பாதிப்படைந்துள்ள அரச கட்டடங்களை மீள நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

எனினும் சகல பிரதேசங்களிலும் உள்ள அரச அலுவலகங்கள் தமது கடமைகளை மேற்கொண்டு வருகின்றன. மக்கள் தடையின்றி தமது சேவைகளை தமது பிரதேசங்களிலேயே பெற்றுக் கொள்ள வழியமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மீள்குடியேற்றப் பணிகள் டிசம்பர் 31க்குள் பூர்த்தி – 450 பேர் இன்று மீள் குடியேற்றம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 75 வீதமான மீள்குடியேற்றப்பணிகள் பூர்த்தியடைந்துள்ளதோடு திட்டமிட்டபடி டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் மீள்குடி யேற்றங்களை நிறைவு செய்ய உள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் என். வேதநாயகம் நேற்றுக் கூறினார். இதேவேளை, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 6 கிராம சேவகர் பிரிவுகளில் 120 குடும்பங்களைச் சேர்ந்த 450 பேர் இன்று (26) மீள் குடியேற்றப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

30 கிராம சேவகர் பிரிவுகளில் மட்டுமே மக்களை மீள்குடியேற்ற வேண்டியுள் ளதாகவும், கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு துரிதமாக மக்களை மீள்குடியேற்றி வருவதாகவும் அரச அதிபர் கூறினார். ஒட்டுசுட்டானில் மேலும் ஒரு கிராம சேவகர் பிரிவிலும் புதுக்குடியிருப்பில் 14 கிராமசேவகர் பிரிவுகளிலும் கரைதுரைப்பற்றில் 16 கிராம சேவகர் பிரிவுகளிலும் மீள் குடியேற்றம் செய்ய வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்துபுரம், திருமுருகண்டி மேற்கு, பனிச்சங்குளம், மாங்குளம், ஒலுமடு மற்றும் அம்பகாமம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இன்று மீள்குடியேற்றம் நடைபெறுகிறது. வவுனியா மற்றும் யாழ். ஆகிய பிரதேசங்களில் தமது உற வினர் நண்பர்களின் வீடுகளில் உள்ளவர்களே இவ்வாறு மீள்குடியேற்றப்படுகின்றனர்.

இதே வேளை, அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மிதிவெடிகளை அகற்றும் பணிகளை துரிதப்படுத்துமாறும் முழுமையான மீள்குடியேற்றங்களை மேற்கொள்ளுமாறும் வடமாகாண ஆளுநர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணித்துள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 18,799 பேரே மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளதாகவும் இவர்களில் 17,641 பேர் வவுனியாவிலும் 1,158 பேர் யாழ்ப்பாணத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு கூறியது.

நுண்கலை பட்டதாரிகள் 3174 பேருக்கு ஆசிரியர் நியமனம்

நுண்கலைப்பட்டதாரிகள் 3174 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் சுனில் சிறிசேன தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் ஐயாயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்ற போதும் நேர்முகப் பரீட்சையொன் றின் மூலம் தகுதிகள் உறுதிசெய்யப்பட்ட பின்னரே ஆசிரிய நியமனம் வழங்கப் படுமெனவும் அவர் தெரிவித்தார். நேற்றைய தினம் நுண்கலைப் பட்டதாரிகள் தமக்கு ஆசிரியர் நியமனம் வழங்க வேண்டுமெனக் கோரி கல்வியமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதனால் உடனடியாக ஆசிரியர் நியமனங்களை வழங்க முடியாது. அதற்கு சில நியமங்கள் உள்ளன. கடந்த 9ம் திகதி போட்டிப் பரீட்சைகள் நடாத்தப்பட்டுள்ளதுடன் தகுதியானோரைத் தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 15ம் திகதி நடாத்தப்படவுள்ளது. இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியானவர்களுக்கே ஆசிரிய நியமனம் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வன்னியில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

Wells_Lack_of_Waterமுல்லைத்தீவு,  முள்ளியவளை பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டு வரும் நிலையில் குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இப்பிரதேசங்களில் கடும் வரட்சி காரணமாக கிணறுகளில் நீர் வற்றியுள்ளதோடு, பல கிணறுகள் மாசடைந்து துப்புரவாக்கப்படாமலும் காணப்படுகின்றன. இதனால் அங்கு மீள் குடியேற்றப்பட்ட மக்கள் அனைவரும் குறிப்பிட்ட சில கிணறுகளையே பயன்படுத்தி வருகிறனர் குடிநீரை இக்கிணறுகளில் எடுத்து வர நீண்ட தூரத்திற்கு செல்ல வேண்டிய சிரமமும் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் குடிநீரை பணம்கொடுத்து வாங்கிப் பயன்படுத்துவதையும் காணமுடிகிறது.

இதேபோல் கிளிநொச்சிப் பகுதிகளிலும் பல கிணறுகள் துப்புரவாக்கப்படாமல் உள்ளதால் மக்கள் குடிநீருக்கு வேறு இடங்களில் உள்ள கிணறுகளைத் தேடிச் செல்ல வேண்டி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. வன்னியில் உள்ள பொதுமக்களின் கிணறுகள் பல மண் கிணறுகளாக காணப்படுவதால் அவை மாசடைந்து காணப்படுகின்றன. பொதுமக்களின் காணிகளில் நீர் இறைத்துக் கொடுக்கும் சில அரசசார்பற்ற நிறுவனங்கள் கட்டுக்கிணறுகளை மட்டுமே இறைத்துகொடுப்பதாகவும் மண்கிணறுகளை இறைத்துக் கொடுப்பதில்லை எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ். குடாக்கடலில் தடைசெய்யப்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவர்களால் தொல்லை.

Net_Fishingயாழ். குடாக்கடலில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் சிலர் மீன்பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி வருவதால் சிறுவலைகள் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தாங்கள் இதனால் பாதிப்படைந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

தடை செய்யப்பட்டுள்ள இழுவை டித்தொழில், தங்கூசி வலைத்தொழில், ‘டைனமைற்’ மூலம் மீன்பிடித்தல் ஆகியவற்றில் சில மீனவர்கள் ஈடுபட்டு வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக குருநகர், பாசையூர், நாவாந்துறை, சாவல்கட்டு, பகுதி மீனவர்கள் இதனால் பாதிப்படைந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கடந்த 19ம் திகதி மண்கும்பான கடற்பகுதியில் ‘டைனமைற்’ பயனபடுத்தி மீன்பிடித்த குருநகர் மீனவர்கள் சிலர் அவ்வழியில் ரோந்து வந்த கடற்படையினரல் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடமிருந்த மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இலங்கையில் கைத்தொலைபேசி வைத்திருக்கும் ஒருவர் ஐந்து ‘சிம்கார்டு’களை மட்டுமே வைத்திருக்க முடியும்.

Mobile_Simஇலங்கையில் கையடக்கத் தொலைபேசி வைத்திருக்கும் ஒருவர் ஐந்து ‘சிம் கார்டு’களுக்கு மேல் வைத்திருக்க முடியாது என்கிற நடைமுறை எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் அமுலுக்ககு வரவுள்ளதாக தொலைபேசித் தொடர்புகள் சீராக்கல் ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்லிட்ட தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு விதிகளை கருத்தில் கொண்டே இந்த நடைமுறை அமுலுக்கு கொண்டு வரப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் பத்துக்கும் மேற்பட்ட ‘சிம்’களை வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்கள் டிசெம்பர் 21ஆம் திகதிக்கு முன்னர் தாம் பயன்படுத்தும் ‘சிம்’களை தங்களது பெயரில் பதிவு செய்து கொள்ளவேண்டும் எனவும் அவ்வாறு பதிவு கொள்ளப்படாதவர்களின் ‘சிம்’கள் டிசெம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் செயலிழக்கச் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சவூதியில் சிசுக் கொலை; ரிஸான நபீக்கு தண்டனை உறுதி

naaa.jpg2005 ஆம் ஆண்டில் இலங்கை வீட்டுப்பணிப் பெண் ஒருவர் சவூதியில் சிசுவினை கொலை செய்தார் என்பதனை விசாரணையின் பின் ரியாத் உயர் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.  ரிஸான நபீக் என அழைக்கப்படும் இலங்கையைச் சேர்ந்த வீட்டுப்பணிப் பெண், நைப் ஜிஷியன் ஹலாப் அல் ஒடபீ என்பவரின் 4 மாத குழந்தையை கொலை செய்தார் எனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக அப்துல்லா அல் ரொசாமி தலைமையிலான மூன்று நீதிபதிகளை கொண்ட டவடாமி உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளது.

நபீக்கிற்கு வேலை வழங்குனரின் மனைவி அவரது குழந்தைக்கு பால் வழங்குமாறு குழந்தையை வழங்கியுள்ளார் இதன் பின்னரே அவர் குழந்தையை கொன்றுள்ளார் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் நபீக் செய்ததாக கூறப்படும் கொலையினை மறுத்து நபீக் மனு தாக்கல் செய்யலாம் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வடபகுதி இளைஞர், யுவதிகளுக்கு மேலும் வேலை வாய்ப்புக்கள் – அவுஸ்திரேலியாவுடன் இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்து

வடபகுதி இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் திறன் பயிற்சிகளை வழங்கும் நோக்கில் அவுஸ்திரேலிய அரசாங்கம் மற்றும் சர்வதேச தொழில் அமைப்புகளுடன் நேற்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் நிகழ்வு தொழில் உறவுகள் அமைச்சர் காமினி லொக்குகே தலைமையில் வவுனியாவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் காமினி லொக்குகே, வடபகுதி மக்களின் வாழ்க்கைத்தரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் மேலும் பல தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், ஊழியர் சேமலாப நிதியத்தைப் பெறுவதில் வட பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும். இதற்காக வவுனியாவில் தற்பொழுது நடமாடும் சேவையொன்று நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் ஜகத் பாலசூரியவும் கலந்து கொண்டிருந்தார்.

யாழ். வசாவிளான் கல்லூரி ரூ. 50 இலட்சத்தில் புனரமைப்பு – ஜனவரியில் கல்வி நடவடிக்கை ஆரம்பம்

யாழ். பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் ஐம்பது இலட்சம் ரூபா செலவில் உடனடியாக புனரமைக்கப் படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

யாழ். பாதுகாப்புப் படைகளினதும் மேற்படி பாடசாலையின் அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் நலன்விரும்பிகளின் பூரண ஒத்துழைப்புடன் இந்த புனரமைப்பு நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இந்தப் பாடசாலை கடந்த மாதம் 29ம் திகதி பாதுகாப்புப் படையினரால் கல்வி நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்டது. சுமார் 20 வருடங்களுக்குப் பின்னர் மீளக் கையளிக்கப்பட்ட இந்த பாடசாலையை அபிவிருத்தி செய்தல், புனரமைப்பு தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க ஆகியோர் அடங்கிய உயர் மட்டக் குழுவினர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர்.

மேல் மாகாண தமிழ் சாகித்திய விழா இன்று

மேல் மாகாணத் தமிழ் சாகித்திய விழா பிரதான நிகழ்வுகள் இன்று மாலை மூன்று மணிக்கு கொழும்பு- 10 மருதானை- எல்பின்ஸ்ரன் மண்டபத்தில் நடைபெறுகிறது. நிகழ்வுக்கு மேல் மாகாண சபை உறுப்பினரும் சாகித்திய விழா ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான எஸ். இராஜேந்திரன் தலைமைதாங்குவார்.

மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா பிரதம அதிதியாகவும் கெளரவ அதிதிகளாக மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேல் மாகாண கலாசார அமைச்சர் உபாலி கொடிகார, பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர், முன்னாள் எம். பீ. மனோ கணேசன், மேல் மாகாண சபை உறுப்பினர் கலாநிதி ந. குமரகுருபரன், முன்னாள் பிரதியமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பீ. பீ. தேவராஜ், மேல் மாகாண பிரதம செயலாளர் விக்டர் சமரவீர, மேல் மாகாண கலாசார அமைச்சின் செயலாளர் ஏ. ராமநாயக்க ஆகியோர் கலந்துகொள்வார்கள்.

சிறப்பு அதிதிகளாக பேராசிரியர் சோ. சந்திரசேகரன், லேக் ஹவுஸ் ஆசிரியர் பீடப் பணிப்பாளர் சீலரட்ன செனரத், தொழில் அதிபர்கள் சுந்தரம் பழனியாண்டி, ஜே.பி. ஜெயராம் ஜே.பி. ஆகியோர் கலந்து சிறப்பிப்பார்கள்.

மேல் மாகாணத்தின் தமிழ் மொழி மூலப் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்படுவதுடன், 25 பேர் சாகித்திய விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர். நம் நாட்டு கலைப் படைப்புகளைப் பிரதிபலிக்கும் இசை நிகழ்வுகளும் கலை நிகழ்வுகளும் விழாவைச் சிறப்பிக்கும். இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு விழா ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் இராஜேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த வருடம் விருது பெற்றவர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுமெனவும் அழைப்பு விடுக்கப் படுகிறது.