வவுனியாவிலுள்ள முகாமொன்றிலிருந்து கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெற்றோர் கடந்த வாரம் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டிருப்பதாக சிரேஷ்ட இராணுவ அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி ஊடகங்களில் நேற்று திங்கட்கிழமை செய்திகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டே பிரபாகரனின் பெற்றோரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை மற்றும் வேலுப்பிள்ளை பார்வதிபிள்ளை ஆகிய இருவரும் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் தற்போது பாதுகாப்பான இடமொன்றில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் மேற்குறித்த இராணுவ அதிகாரி தெரிவித்திருக்கிறார். புதுமாத்தளன் பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்த மக்களுடன் சேர்ந்து இடம்பெயர்ந்து வந்திருந்த இவர்கள் இருவரும் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், பிரபாகரனின் பெற்றோர் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் குறித்து இராணுவப் பேச்சாளரான பிரிகேடியர் உதய நாணயக்காரவிடம் வினவியபோது அது பற்றி உத்தியோக பூர்வமாக தனக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லையெனக் கூறினார்.