நேற்று திங்கள் (நவம்பர் 29) மாலை நாடாளுமன்றில் இடம்பெற்ற வரவுசெலவுத் திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களிப்பதைத் தவிர்த்து வாக்களிப்பில் கலந்து கொள்ளமல் விட்டது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, அபிவிருத்தி ஆகிய விடயங்களில் அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமாக கலந்துரையாடி அதற்காக அரசுடன் இணைந்து செயற்பட கூட்டமைப்பு விரும்புவதால், அரச எதிர்ப்பு அணுகுமுறையை கைவிட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடாகவே நேற்று வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பில் கலந்து கொண்டு அதனை எதிர்ப்பதை தவிர்த்துக் கொண்டதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கூட்டமைப்பு அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.
”நாடாளுமன்றில் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் இடம்பெயர்ந்து பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கு எவ்விதமான நிவாரணத்தையும் வழங்கவில்லை. இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியமர்வு முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய ஒன்று எனக் கூறிவரும் ஜனாதிபதியின் வரவு செலவுத்திட்டத்தின் ஒதுக்கீடுகளில் இது எவ்விதத்திலும் பிரதிபலிக்கவில்லை. இதற்கு மேலாகப் போர் முடிவுற்ற நிலையிலும் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு வருடாவருடம் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இந்நிலையில் தமிழ் மக்களின் மீள்குடியமர்வு. புனர்வாழ்வு. அபிவிருத்தி போன்ற விடயங்களில் அரசாங்கம் கூட்டமைப்புடன் அக்கபூர்வமான பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக கூட்டமைப்பின் நல்லெண்ணத்தைத் தெரிவிக்கும் முகமாகவே வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெகெடுப்பில் எதிர்த்து வாக்களிப்பதிலிருந்து கூட்டமைப்பு விலகியிருந்தது.” இவ்வாறு கூட்டமைப்பின் விளக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று மாலை இடம்பெற்ற வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்களிப்பில் 150 வாக்குகள் ஆதரவாகவும், 46 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. 104 மேலதிக வாக்குகளால் இது நிறைவேறியது.
ஏதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சி, ஜே.வி.பி ஆகியன எதிராக வாக்களித்தன. அரசுடன் தற்போது இணைந்துள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஆகியன ஆதரவாக வாக்களித்தன.