எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

பொன்சேகா மீது சட்ட நடவடிக்கை: சட்ட மா அதிபருடன் அரசு ஆலோசனை

rajitha_senarathna00jpg.jpgசரத் பொன்சேகா படை வீரர்களைக் காட்டிக் கொடுக்கும் வகையில் தெரிவித்த கூற்று தொடர்பில் எத்தகைய சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என அரசாங்கம் சட்ட மா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். மகாவலி நிலையத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:-

சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் இவருக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கையை எடுக்கும். இவர் தொடர்பாக சி. ஐ. டி. யினூடாக விசாரணை நடத்த சட்ட மா அதிபர் பணித்தால் அவரிடம் வாக்கு மூலம் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

அடைமழையால் கிழக்கில் 65 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

front.jpgகிழக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்த அடை மழை காரணமாக சுமார் 65 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர்கள் நேற்றுத் தெரிவித்தனர். இம்மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 58 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் 377 குடும்பங்கள் இடம்பெயர்ந்து வழிபாட்டுத் தலங்களிலும், பொது இடங்களிலும் தங்கி இருப்பதாக மட்டு. மாவட்ட இணைப்பாளர் கே. விமலராசா கூறினார்.

திருமலை மாவட்டத்தில் சுமார் 5600 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக திருமலை மாவட்ட இணைப்பாளர் எம். எஸ். எம். ரிஸ்வி கூறினார். இத்தொடர் மழையின் விளைவாக அம்பாறை மாவட்டத்தில் சுமார் 500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களில் சுமார் 200 குடும்பங்கள் இடம்பெயர்ந்திருப்பதாக மாவ ட்ட செயலாளர் சுனில் கன்னங்கர கூறினார்.

தொடர் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாகனேரி, றூகம், நவகிரி, புனாணை, உன்னிச்சை குளங்களின் அணைகள் உடைப்பெடுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டதால் அவற்றின் சில வான் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர் ஜானகி மீகஸ்தென்ன குறிப்பிட்டார்.

மழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை உடனுக்குடன் மேற்கொள்ளுவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற் கொண்டுள்ளது. இது தொடர்பான அறி வுறுத்தல்கள் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாகரை, காத்தான்குடி, வாழைச்சேனை, வெல்லாவெளி, மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் பல கிராமங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. பல குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தமது சொந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்து உறவினர்கள் வீடுகளிலும் சில குடும்பங்கள் பொதுக் கட்டடங்களிலும் தங்கியுள்ளன.

பல கிராமங்களின் தொடர்பு வெள்ளத்தினால் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் பல பாதைகளும் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதால் வாகனங்கள், பயணிகள் பயணிக்க முடியாதுள்ளது.

கல்விப் பொதுத்தராதரப் சாதாரன தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் சிலர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிராமங்களிலிருந்து விமானப்படை மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் பரீட்சை மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஆப்கானில் உள்ள பிரிட்டிஷ் படைகளுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள்

ஆப்கானிஸ்தானில் தனது இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாக ஒரு பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான தொகையில், கூடுதலாக 22 சினூக் ரக போக்குவரத்து ஹெலிகாப்டர்களை தாங்கள் வாங்கவுள்ளதாக பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு தேவையான பணத்துக்காக இதர இராணுவ செலவினங்களை குறைக்க பாதுகாப்பு அமைச்சகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக வாங்க முடிவு செய்யப்பட்டுள்ள இந்த ஹெலிகாப்டர்களில் முதலாவது 2013 ஆண்டில் செயற்படத் தொடங்கும்.

ஆப்கானிஸ்தானில் இருக்கும் அதன் இராணுவ வீரர்களுக்கு போதிய அளவில் ஹெலிகாப்டர்கள் வழங்கப்படவில்லை என்று பிரிட்டிஷ் அரசு மீது குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. அங்கு பிரிட்டிஷ் இராணுவத்தினர் உயிரிழக்க முக்கிய காரணமாக இருக்கும் சாலையோர வெடிகுண்டுகளை எதிர்த்து சமாளிப்பதற்கு மேலும் கூடுதலாக 250 மில்லியன் டாலர்கள் செலவழிக்கப்படும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்திருந்தது.

ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 21 வேட்பாளர்கள் கட்டுப்பணம்

sri_election.jpgஜனாதிபதித் தேர்தலுக்காக மேலும் 08 பேர் நேற்று (15) கட்டுப்பணம் செலுத்தினர்.

சுயேச்சை வேட்பாளர்களாக மீரா மொஹிதீன் மொஹமட் முஸ்தபா, கனகலிங்கம் சிவாஜிலிங்கம் மற்றும் டபிள்யு. எம். யு. பி. விஜேகோன் ஆகியோரும் கட்சிகளின் சார்பாக கெ. ஜி. ஆர். எல். பெரேரா, எம். சி. எம். இஸ்மாயில், ஒஸ்வர்ட் அருணடி சொய்ஸா, சனத் பினதுவ, அதுரகே செனரத்ன சில்வாவும் நேற்று தேர்தல்கள் திணைக்களத்தில் தமது கட்டுப்பணத்தை செலுத்தினர்.

ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 21 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இதில் 17 அரசியல் கட்சி வேட்பாளர்களும் 04 சுயேச்சை வேட்பாளர்களும் அடங்குவர்.

வேட்புமனுத் தாக்கலின் பின் கட்அவுட், போஸ்டர்கள் அகற்றும் நடவடிக்கை

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து நாட்டின் சகல பகுதிகளிலுமுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களின் கட்அவுட்கள், பெனர்கள், போஸ்டர்கள் அனைத்தும் அகற்றப்படும் என சிரேஷ்ட உதவி பொலிஸ் மா அதிபரும் சிரேஷ்ட பொலிஸ் ஊடக பேச்சாளருமான நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

நாட்டிலுள்ள 432 பொலிஸ் நிலையங்களுக்கும் தலா இரண்டு தொழிலாளர் வீதம் இணைக்க ப்பட்டு 864 தொழிலாளர்களின் உதவியுடன் மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

தேர்தல் சட்டத்திற்கமைய வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து மேற்படி பெனர்கள், போஸ்டர்கள், கட்அவுட்கள் அகற்றப்படுதல் வேண்டும்.

வார்ட்’ புயல் சின்னம் இன்று மன்னார் நோக்கி நகரும் காற்றழுத்த வலுவிழப்பால் கடந்து செல்வதில் தாமதம்

satellite-dec.jpgவங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ‘வார்ட்’ புயல் சின்னம் வலுவிழுந்து இன்று இலங்கைக்கு மேல் திருகோணமலை ஊடாக மன்னார் குடாவை நோக்கி நகர்ந்து செல்கிறது.

காற்றழுத்தம் மிகவும் வலுவிழந்துள்ளதால் இலங்கையை கடந்து செல்வது தாமதமாகிறது. இதனால் வடக்கு கிழக்கு, வட மத்திய வடமேல் மாகாண, மத்திய மாகாணங்களில் தொடர்ந்தும் மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

இலங்கைக்கு மேல் மேகக் கூட்டங்கள் அதிகளவு காணப்படும். அத்துடன் மன்னார், வளைகுடா பகுதி வடக்கு கிழக்கு கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கிறது. முதலில் தமிழகத்தின் நாகப்பட்டினம் கரையை இலக்காகக் கொண்டு நகர்ந்த வார்ட் புயல் சின்னம் திருகோணமலைக்கு கிழக்கே சுமார் 300 கிலோ மீற்றர் தொலைவில் இருந்து. பின்னர் இலங்கைக்கு கிழக்கே திருகோணமலையை நோக்கி நகரத் தொடங்கியது.

நேற்று முன்தினம் இலங்கை கரையை அண்மித்தது. காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டால் காற்றழுத்த தாழ்வு நிலை இன்று இலங்கையை கடந்து சென்று விடும். எனினும் தற்போதைய நிலவரப்படி மிகவும் குறைந்த வேகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து காணப்படுவதால் மெதுவாகவே நகர்ந்து செல்கிறது. வடக்கு, கிழக்கு வட மத்திய பகுதிகளில் கன மழை பெய்தாலும் ஏனைய பகுதிகளில் காலநிலை மந்தமாக காணப்படுவதுடன் இடைக்கிடை மழை பெய்யும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

‘வேட்புமனுத் தாக்கல் நாளை; கொழும்பில் விசேட போ.வ. ஏற்பாடுகள்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படும் தினமான நாளை 17ஆம் திகதி காலை 9.00 மணி முதல் தேர்தல் திணை க்களம் அமைந்துள்ள ராஜகிரிய பகுதியில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் திணைக்களம் அமைந்துள்ள சரண மாவத்தைப் பகுதி அதி உயர் பாதுகாப்பு வலயமாக கருதப்படுவதுடன் தேர்தல் ஆணையாளரின் அனுமதி பெற்றுள்ளவர்களுக்கு மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படும்.

பொரளைச் சந்தி முதல் கொட்டா வீதியூடாக வெலிக்கடை பொலிஸ் வரையிலான வீதி மற்றும் டி. எஸ். சேனநாயக்கா சந்தி முதல் பாராளுமன்ற பாதையூடாக வெலிக்கடை பொலிஸ் வரையி லான வீதி ஆகியன நாளை காலை 9.00 மணி முதல் போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட வுள்ளன. க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை க்கு தோற்றும் மாணவர்களின் நன்மை கரு தியே காலை 9.00 மணிக்குப் பின்னர் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்படுகின்றன. பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் முடிந்த வரையில் நாளை நேர காலத்துடன் பரீட்சை மண்டபங்களுக்கு செல்லுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

நாளை காலை 9.00 மணி முதல் அமுல்படுத்தப்படவுள்ள விசேட போக்குவரத்து ஒழுங்குகள் குறித்த ஒத்திகையொன்று இன்று 16ஆம் திகதி கலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை நடத்தப்படும். வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படும் தினத்தன்று மேற்குறிப்பிடப்பட்ட வீதிகளைப் பயன்படுத்தாது மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஜனாதிபதி வேட்பாளரும் அவரது இரண்டு பிரதிநிதிகளும், அவருடன் மேலும் 10 பேர் மட்டுமே சரண மாவத்தையூடாக அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுடன் வரும் ஆதரவாளர்களுக்கு வாகன தரிப்பிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக வந்து பின்னர் திரும்பிச் செல்லும் வரையில் இந்த போக்குவரத்து ஏற்பாடு அமுலில் இருக்கும் என்றும் சிரேஷ்ட ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட உதவி பொலிஸ் மா அதிபருமான நிமால் மெதிவக்க தெரிவித்தார்.

போக்குவரத்து பிரிவின் உதவி பொலிஸ் மா அதிபர் லக்கி பீரிஸ் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து வரைபடங்கள் மூலம் விளக்கினார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருணாரட்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கீரிமலை சிவன்கோயில் திறப்பு

keerimalaitemple.gifஇலங் கையில் உள்ள மிகவும் தொன்மை வாய்ந்த சிவத்தலங்களில் ஒன்றாகிய யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்திற்குப் பொது மக்கள் இராணுவத்தின் முன்னனுமதியின்றி சென்று வரலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இந்த ஆலயம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் பணிப்புரைக்கமைய பொதுமக்கள் சென்று வழிபடுவதற்காகத் திறந்துவிடப்பட்டிருக்கின்றது என வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்திருக்கின்றார்.

காரைநகரில் 113 மீனவர்களுடன் 24 வள்ளங்கள் கரையொதுங்கின

நாட்டில் நிலவும் மோசமான கால நிலைக்கு மத்தியில் மீன்பிடிக்கச் சென்ற 113 மீனவர்களுடன் 24 வள்ளங்கள் காரைநகர் பகுதியில் கரையொதுங் கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.

தொடுவாவ, சிலாபம், நீர்கொழும்பு மற்றும் கல்பிட்டி ஆகிய பகுதிகளிலிருந்து ஆழ்கடலு க்கு மீன்பிடிக்கச் சென்றவர்களே வள்ளங்களுடன் கரையொதுங்கி யுள்ளனர்.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக இலங்கை யின் வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் காணப்படும் அதிக காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாகவே இந்த மீன் பிடி வள்ளங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில் சிவாஜிலிங்கம் போட்டி : இன்று கட்டுப்பணம் செலுத்தினார்

sivajilingam.jpgதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதென தீர்மானித்து தமது கட்டுப்பணமான 75 ஆயிரம் ரூபாவை இன்று செலுத்தியுள்ளார்.
 
இந்த நிலையில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் இறுதிநாளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலில் ஒருவரை நிறுத்துமானால்  தாம் போட்டியில் இருந்து விலகிக்கொள்ளப் போவதாக சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார். இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்னவும் இணைந்தே தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எடுத்துள்ள முடிவானது அவரது தனிப்பட்ட முடிவேயன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்புடையதல்ல என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தள்ளார்