எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

சபாநாயகர் மீது இந்தியாவில் செருப்பு வீச்சு.

பாராளுமன்ற சபாநாயகர் லொக்கு பண்டார இந்தியாவில் உள்ள வைதீஸ்வரன் ஆலயத்தை தரிசிக்க சென்றிருந்தபோது அவரது வருகையை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பெரியார் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை நாடத்தியுள்ளதுடன் அவர் பயணம் செய்த கார் மீது செருப்புக்களையும் வீசியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிப்பதுடன் போராட்டம் நடாத்தியவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர் எனவும் கூறுகின்றது.

நுவரெலியா மாவட்ட எம்.பியாக அருள்சாமி

parliament.jpgநுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சந்தனம் அருள்சாமி வர்த்தமானி அறிவித்தல் மூலம் நியமிக்கப்பட்டுள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனின் வெற்றிடத்திற்கே பாராளுமன்ற உறுப்பினராக சந்தனம் அருள்சாமி வர்த்தமானி அறிவித்தல் மூலம் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி வர்த்தமானி அறிவித்தல் 08.01.2010 அன்று வெளியாகியுள்ளது.

சந்திரசேகரன் பெரியசாமி இறந்து போனதன் காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக இல, 06- நுவரெலியா தேர்தல் மாவட்டத்திற்கான ஆறாவது பாராளுமன்றத்தின் உறுப்பினர் ஒருவராக சந்தனம் அருள்சாமி என்பவர், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரென தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

2004 ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மலையக மக்கள் முன்னணி நுவரெலியா மாவட்டத்தில் தனித்து போட்டியிட்டு 47,630 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை பெற்றுக் கொண்டது. இதில் விருப்பு வாக்குகள் அடிப்படையில் மறைந்த முன்னாள் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் முதலாவது இடத்தை பெற்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

திருக்கேதீஸ்வரம் ஆலயப் பகுதி புனிதப் பிரதேசமாக பிரகடனம் – மன்னாரில் ஜனாதிபதி அறிவிப்பு

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயப்பகுதி அபிவிருத்தி செய்யப்பட்டு புனித பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்படும். அத்தோடு, இந்த ஆலயத்தில் பக்தர்கள் தினமும் வழிபாடுகளில் ஈடுபடவும் வசதி செய்துகொடுக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மன்னாரில் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டம் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் தலைமையில் மன்னார் பொது விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆப்பிரிக்கக் கோப்பை போட்டியில் இருந்து விலகுகிறது டோகோ

togo-team.jpgநாடுகளுக் கிடையிலான ஆப்பிரிக்கக் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் விளையாடுவதற்காக டோகோ அணியினர் பயணித்த பேருந்து துப்பாக்கிதாரிகளால் வெள்ளிக்கிழமை தாக்கப்பட்டதை அடுத்து, அந்த சுற்றுப் போட்டியில் இருந்து விலகுவது என்று டோகோவின் தேசிய விளையாட்டு அணியின் உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக அங்கோலாவில் இருந்து வருகின்ற செய்திகள் கூறுகின்றன.

இதில் கொல்லப்பட்ட ஓட்டுனரை அடுத்து மேலும் காயமடைந்த ஒரு ஊடக அதிகாரியும், துணை பயிற்றுவிப்பாளரும் மரணமானதால் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது மூன்றாக அதிகரித்துள்ளது.

மேலும் ஆறு பேர் இதில் காயமடைந்துள்ளனர்.

காங்கோ பிரசவில்லில் இருந்து அங்கோலிய கபிந்த பகுதிக்கு பேருந்து நுழைந்தபோது துப்பாக்கிதாரிகள் அதன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பிரிவினைவாதத் தீவிரவாதிகள் தாமே இந்தத்தாக்குதலை நடத்தியதாகக் கூறியுள்ளனர்.

சனல்4 விவகாரத்தால் எழுந்துள்ள சவாலுக்கு முகம் கொடுக்க அரசு தயார் – வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு

lankashootingvideo.jpgவடபகுதி மோதல்களின் இறுதிக்கட்டத்தின் போது பதிவு செய்ததாகக் கூறப்படும் சனல் 4 ஒளிப்பதிவு குறித்து நீதிவிசாரணைக்கு புறம்பான அல்லது தன்னிச்சையான மரணதண்டனை விவகாரங்களைக் கையாளும் ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்ரனின் கருத்துகளை அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதுடன், இக்குற்றச்சாட்டுக் குறித்து உள்ளக விசாரணைகளை மேற்கொள்ளவும் தயாரெனவும் அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம சனல் 4 ஒளிப்பதிவு குறித்து பேராசிரியர் அல்ஸ்ரனின் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும் இவ்விடயம் குறித்து எத்தகைய சவால்களுக்கும் அரசாங்கம் முகம் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் சுயாதீன அறிக்கையாளர் அல்ஸ்ரனின் குற்றச்சாட்டுக்கள் ஆதார மற்றவையெனவும் அமைச்சர் அங்கு குறிப்பிட்டார். இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ரோகித போகொல்லாகம தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்; இலங்கையில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒளிப்பதிவானது சனல் 4 இல் ஒளிபரப்பப்பட்டதைத் தொடர்ந்து அரசு பல்வேறு அழுத்தங்களுக்கு முகம் கொடுத்துவருகின்றது. இந்நிலையில் மூன்று சுயாதீன அறிக்கையாளர்களைக் கொண்டு சனல் 4 வீடியோ குறித்த விசாரணைகளை மேற்கொண்ட பேராசிரியர் பிலிப் அல்ஸ்ரன் அது குறித்த தனது இறுதி அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளார்.

ஆனால், இந்த ஒளிப்பதிவுகள் எந்தவிதமான ஆதாரமும் அற்றவை ஆகும். இருந்தாலும் இதுகுறித்து சர்வதேச அளவில் சர்ச்சை நிலவுவதால் இந்த ஒளிப்பதிவு குறித்த உள்ளக விசாரணைகளை நாம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். அதேவேளை, இவ்விடயம் குறித்த சந்திப்பொன்றுக்கு பிலிப் அல்ஸ்ரனிடம் சனல் 4 ஒளிப்பதிவு குறித்து ஆரம்ப சர்ச்சைகள் எழுந்தபோது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், அவர் அதனை நிராகரித்திருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவரிற்கு அழைப்பு விடுத்து பதில் கடிதம் அனுப்பியுள்ளோம். சனல் 4 விவகாரத்தினால் தோன்றியுள்ள அனைத்து அழுத்தங்களுக்கும் முகம்கொடுக்க அரசு தயாராக உள்ளது. இதேவேளை, இலங்கை மீது போர்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருத்தலானது அந்நாட்டின் படையினர் மக்கள் என்ற அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ள பாரதூரமான அவமானமாகும். இதனால், இச்சம்பவத்தின் உண்மைத்தன்மையினைக் கண்டறிவதற்குரிய உள்ளக விசாரணைகள் மேற்கொள்ளப்படும். அதேவேளை, இந்த விசாரணைகளில் ஐ.நா. அதிகாரிகளின் பங்களிப்பு குறித்து ஆராய்ந்து வருகின்றோம். அத்துடன் மனித உரிமை மீறும் செயல்களை அரசு ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லையெனவும் தெரிவித்தார்.

நாட்டை காட்டிக் கொடுக்க இடமளியோம் – ஜனாதிபதி

mahinda.jpgஉயிர்களை அர்ப்பணித்து பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டிருக்கும் தாய் நாட்டை திருட்டுத்தனமாக உடன்படிக்கைகளின் ஊடாக மீண்டும் காட்டிக் கொடுக்க இடமளியோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மொனறாகலையில் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மொனறாகலை மாவட்ட ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் மொனறாகலை பிரதேச சபை பொதுமக்கள் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகை யில் :-

கடந்த எல்லா தேர்தல்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அமோக வெற்றியைப் பெற்றுத் தந்த மாவட்டங்களில் மொனறாகலையும் ஒன்றாகும். அந்த வகையில் இந்த சன சமுத்திரம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அமோக வெற்றியைப் பெற்றுத் தரும் என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கின்றது. ஆனால் நாம் இந்த வெற்றியைப் பேணிப் பாதுகாக்கவென உச்ச அளவில் செயற்படுவோம்.

மொனறாகலை மாவட்டத்திற்கு ஒரு பக்கம் கிழக்கு மாகாணம், மறுபக்கம் சப்ரகமுவ , ஊவா மாகாணங்கள் அமைந்திருக்கின்றன. இது வரலாற்றுச் சிறப்பு மிக்க பூமி. இங்கு ஒரு இலட்சம் வயல் நிலங்கள் இருந்துள்ளன என்று வரலாற்றில் பதிவாகியுள்ளது. என்றாலும் கடந்த கால செயற்பாடுகளால் அவை குறைந்துள்ளன. ஆன போதிலும் இப்பகுதி மீண்டும் வளமான விவசாய பூமியாகக் கட்டியெழுப்பப்படும்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து நாட்டை மீட்டுத் தருவேன் என்று வாக்குறுதி வழங்கினேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்றி நாட்டை விடுவித்திருக்கின்றேன். மிகவும் அர்ப்பணிப்புடன் விடுவிக்கப்பட்டிருக்கும் நாட்டைப் பாதுகாப்பது எமது பொறுப்பாகும். இரகசிய ஒப்பந்தங்களின் ஊடாக நாட்டை மீண்டும் காட்டிக் கொடுக்க நாம் இடமளியோம்.

முப்படைகளையும் பொலிஸ் துறையையும் சேர்ந்த 27 ஆயிரம் பேர் தங்கள் உயிர்களை அர்ப்பணித்துத் தான் இந்த நாட்டைப் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டெடுத்திருக்கின்றார்கள். இந்த நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. நாட்டில் ஊழல், மோசடிகளை ஒழித்துக்கட்டும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். அதேநேரம் நாட்டைப் பாரியளவில் துரிதமாக அபிவிருத்தி செய்யவும் திட்டமிட்டிருக்கிறோம்.

வீதி, மின்னுற்பத்தி, துறைமுக நிர்மாணங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள் போன்ற பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இவை யுத்தம் ஒரு பக்கம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மறுபக்கம் மேற்கொள்ளப்பட்டன.

உங்களதும், உங்களது எதிர்கால சந்ததியினரதும் நலன்களை கருத்தில் கொண்டுதான் நாட்டை அபிவிருத்தி செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். 2015ம் 2020ம் ஆண்டுகளை இலக்காக வைத்துத்தான் இந்த அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.

மீள் குடியேற்றத்துக்கான இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது! அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ

lankaidsleavingcamp.jpgமீள் குடியேற்றத்துக்கான இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது என இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ தெரிவித்தார். தற்போது வவுனியா நலன்புரி முகாம்களில் 79965 பேர் தங்கியுள்ளனர். மேலும் யாழ்ப்பாணத்தில் 1349 பேர் தங்கியள்ளனர். இதேவேளை வைத்தியசாலைகளில் 1626 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதன்படி  இன்னும் மீள் குடியேற்றத்துக்கு 82940 பேர் மாத்திரமே உள்ளனர் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை முன்னர் 2 இலட்சத்து 70000 பேராக இருந்ததாகவும் தற்போது அவர்களில் 169891 பேர் மீளக் குடியேற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்

யாழ்- கொழும்பு இரவு நேர பஸ்சேவை விரைவில் – இ.போ.ச பொதுமுகாமையாளர் தகவல்

buss.jpgயாழ்ப் பாணத்திலிருந்து கொழும்புக்கான இரவுநேர இ.போ.ச பஸ்சேவை இன்னும் ஓரிரு தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடபிராந்திய இ.போ.ச பொதுமுகாமையாளர் எஸ்.கணேசபிள்ளை தெரிவித்தார்.

ஏ9 வீதி 24 மணித்தியாலமும் பொதுமக்களின் பாவனைக்காகத் திறக்கப்பட்டுள்ளதையடுத்து இவ் இரவுநேர பஸ்சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. 

வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலிருந்து ஏ9 வீதியூடாக இராணுவ வழித்துணையின்றி சாதாரண பஸ்சேவைகள் நேற்று முதல் ஆரம்பாகியுள்ளன.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா, மன்னார், கண்டி,  திருமலை, மட்டக்களப்பு,  கொழும்பு ஆகிய இடங்களை நோக்கிப் புறப்பட்ட பஸ்வண்டிகள் ஏ9 வீதியில் இராணுவ வழித்துணையுடன்,  வாகனத் தொடரணியாகவே நடைபெற்றுவந்தன.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பஸ்கள் வவுனியா தேக்கவத்தையிலிருந்து இராணுவத்தினரின் அனுமதி பெற்றபின்பே பயணிகள் பிரயாணத்தை மேற்கொண்டு வந்தனர். இந்த நடைமுறையும் இப்போது மாற்றப்பட்டுள்ளது.

ஏதிர்வரும் வியாழன் முதல் இந்நடைமுறை மாற்றப்பட்டு, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து பஸ்வண்டிகள் இ.போ.ச நேர அட்டவணைக்கமைய சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொதுமுகாமையாளர் மேலும் தெரிவித்தார். 

விமான தகர்ப்பு முயற்சி எதிரொலி: அமெரிக்காவில் பாதுகாப்பு மறுசீரமைப்புக்கு அதிபர் ஒபாமா உத்தரவு

obama.jpgநத்தார் தினத்தில் டெட்ராய்ட்டுக்கு அருகே விமானம் ஒன்றை குண்டுவைத்து தகர்க்க மேற்கொண்ட முயற்சி பற்றிய அறிக்கை, தொடர்ச்சியான பல தவறுகளை சுட்டிக்காட்டியதை அடுத்து, ஒரு பாதுகாப்பு மறுசீரமமைப்புக்கு அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

மிகவும் கடுமையாக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், உளவுத்தகவல்களை மிகவும் அடிக்கடி பரிமாறிக்கொள்ளுமாறும், அவை குறித்து மிகவும் வேகமாக செயற்படுமாறும், சந்தேகத்துக்குரியவர்களின் பட்டியலை மேலும் செயற்திறனுடன் தயாரித்து, ஆபத்தானவர்களை விமானப் பயணங்களில் இருந்து தள்ளிவைக்குமாறும் தனது உளவுப்பிரிவினருக்கு அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

அல்கயீதாவினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பில் தோல்வியற்ற தீர்வு என்று எதுவும் கிடையாது என்று ஒப்புக்கொண்டுள்ள அவர், மிகவும் கவனமாக செயற்பட வேண்டும் என்பதில் ஒருபடி அமெரிக்கா முன்னோக்கி செயற்பட வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

வத்திக்கான் பிரதிநிதி நாளை வவுனியா விஜயம்

கொழும்பில் உள்ள பாப்பரசரின் வத்திக்கான் பிரதிநிதி அதிவணக்கத்திற்குரிய ஆயர் யோசப் ஸ்பிரெறி ஆண்டகை நாளை வவுனியா வருகின்றார்.

முதல் தடவையாக வவுனியா வரும் இவருக்கு இறம்பைக்குளம் அந்தோனியார் தேவாலயத்தில் அன்று மாலை 4 மணிக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. சிறப்பு ஆராதனை கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.