எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

வங்கி ஊழியர் எனக்கூறி கிளிநொச்சி மக்களிடம் பணம் வசூலித்தவர் பிடிபட்டார்.

வங்கி ஊழியர் எனத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு பொதுமக்களிடம் பணம் வசூலித்தவர் கிளிநொச்சிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் லிங்கேஸ்வரன் என்ற இந்நபர் கிளிநொச்சியில் மீளக்குடியமர்ந்த மக்களிடம் தம்மை வங்கி ஊழியர் எனக்கூறிக்கொண்டு, போலி ஆவணங்களைக் காட்டி பணம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் இயங்கும் தனியார் வங்கி ஒன்றின் ஊழியர்களுக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற ஊழியர்கள் அவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்நபரிடமிருந்து. 20ஆயிரத்து 800 ரூபா பணம், போலியான வங்கி ஆவணங்கள் என்பனவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று (16-07-2010) கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட இந்நபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் பி.சிவகுமாரன் உத்தரவிட்டுள்ளார்.

பெண்ணை கத்தியால் வெட்டிக் காயப்படுத்திவிட்டு நகைகள் அபகரிப்பு. கோப்பாயில் சம்பவம்!

வீட்டில் குழந்தையுடன் தனித்திருந்த பெண்ணைக் கத்தியால் வெட்டிக் காயப்படுத்திவிட்டு அவர் அணிந்திருந்த நகைகளை திருடிச் சென்ற சம்பவம் கோப்பாய் தெற்கில் நடைபெற்றுள்ளது. விஜயகுமார் வதனி என்ற இளம் தாயே வெட்டிக் காயப்படுத்தப்பட்டுள்ளார். நேற்று (16-07-2010)  முற்பகல் 10 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

கணவர் வழமை போல் வேலைக்குச் சென்ற பின் கைக்குழந்தையுடன் வீட்டிலிருந்த குறித்த பெண் தலைக்கவசம் அணிந்து, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் கத்தி வெட்டுக்குள்ளானார். அப்பெண் கூக்குரலிடவே வந்தவர்கள் தப்பியோடிவிட்டனர். நெஞ்சுப்பகுதியிலும், இருகைளிலும், கால்களிலும் கத்திவெட்டுக் காயங்களுடன் குறித்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தெஹிவலை, கல்கிஸை டெங்கு பிரதேசங்களாகப் பிரகடனம்!

dengue22222.jpgதென்னிலங்கையில் தெஹிவளை. கல்கிஸை பிரதேசங்கள் டெங்கு நோய் அபாயப் பிரதேசங்களாக பிரடனப்படுத்தப்பட்டுள்ன. கடந்த யூன் மாதமும், நடைபெறும் யூலை மாதமும் இப்பகுதிகளில்  டெங்கு நோயாளிகள் அதிகமாக இனங்காணப்பட்டுள்ளனர். இப்பிரதேசங்களில் இந்நோயின் தாக்கம் வெகுவாக அதிகரித்து வருவதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பிரதேசங்களில் வீடு வீடாகச் சென்று டெங்கு நோய் தொடர்பான அறிவறுத்தல்கள் வழங்கப்பட நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக கல்கிஸை மாகநரசபை தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி. மாங்குளத்தில் பிராந்திய அஞ்சல் நிலையங்கள் அமைக்கப்படும்

Post_Box_SLகிளிநொச்சியிலும் மாங்குளத்திலும், நவீன வசதிகள் கொண்ட பிராந்திய அஞ்சல் நிலையங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வடமாகாண பிரதி அஞ்சல் மாஅதிபர் வி.குமரகுரு தெரிவித்துள்ளார். தபால்கள் சேகரிப்பு, தரம்பிரிப்பு உட்பட சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளக்கூடியதாக இப்பிராந்திய அஞ்சல் அலுவலகம் இயங்கும் எனவும் அவர் தெரிவித்தார். இப்பிராந்திய அஞ்சல் அலுவலகங்களுக்கான கட்டட வேலைகள் விரைவாக மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் மக்களிடம் மீளளிக்கப்பட மாட்டாது” – அமைச்சர் ரம்புக்வெல -“உயர்பாதுகாப்பு வலயக் காணிகள் மக்களிடம் கையளிக்கப்படும்” – அமைச்சர் டக்ளஸ்

Douglas DevanandaKeheliya_Rambukwellaஅதி உயர் பாதுகாப்பு வலயங்களிலிருக்கும் காணிகள் பொதுமக்களுக்கு மீளளிக்கப்படமாட்டாததெனவும், அதற்குப் பதிலாக அம்மக்களுக்கு வேறு இடங்களில் காணிகள் வழங்கப்படும் எனவும் இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.  ஆனால் அதனை நிராகரித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள காணிகள் உரிய மக்களிடம் கையளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பை பேணுவதற்காக வடபகுதியில் உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்ந்தும் இருக்கும் என அமைச்சர் ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார். வாராந்த அமைச்சரவைத் தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (June 16 2010) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

“நாட்டின் பாதுகாப்பு மிக முக்கியமானது. சிலநாடுகளில் பாதுகாப்பு வலயங்கள் விரிந்து காணப்படுகின்றன. பாதுகாப்பு முகாம்கள், பாதுகாப்பு வலயங்கள் என்பன ஒரு நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு மிகவும் முக்கியமானது. பாதுகாப்பு வலயங்கள் தேவை என இனங்காணப்படும் பகுதிகளில் இவை ஏற்படுத்தப்பட வேண்டும்.

அமெரிக்கா அதன் பாதுகாப்புத் தேவைக்காக தென்கொரியாவில் பாதுகாப்பு வலயம் ஒன்றை அமைத்துள்ளது. தற்போது நாட்டில் காணப்படும் பாதுகாப்பு வலயங்களும், படைமுகாம்களும் அப்படியே இருக்க வேண்டும்.

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ள பொது மக்களுக்குச் சொந்தமான காணிகள் உள்ளன. அவை காணி உறுதிப்பத்திரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டாலும் நாட்டின் பாதுகாப்பு என்பது முக்கியமானது. எனவே, அக்காணிகள் திருப்பிக் கொடுக்கப்படமாட்டாது. அவர்களுக்கு வேறு இடங்களில் காணிகள் வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்தள்ளது” என அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

“அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ள இத்தகவல் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பல இடங்களில் ஜனாதிபதி உரையாற்றுகின்ற போது பாதுகாப்பு வலயங்கள் நாட்டில் தொடர்ந்து இருக்க முடியாது என்று கூறியுள்ளார்,

கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டு வருகின்றன. கொழும்பில் யுத்தகாலங்களில் உயர்பாதுகாப்பு வலயங்களாக மூடப்பட்டிருந்த இடங்கள் பல இப்போது திறந்து விடப்பட்டுள்ளன. அதேபோல வடக்கிலும் பல பகுதிகள் திறந்து விடப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயங்களாக கருதப்பட்ட இடங்கள் சில தினங்களில் மக்களின் பாவனைக்காக திறந்து விடப்படவுள்ளன.  இவ்வுயர் பாதுகாப்பு வலயங்கள் நாளடைவில் இல்லாமல் போய்விடும்” இவ்வாறு  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்றிரவு பி.பி.சி தமிழோசையிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தென்பகுதிகளில் கடும் மழை. களுகங்கை பெருக்கெடுக்கும் அபாயம்!

இலங்கையின் தென்பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக களுகங்கை ஆற்றின் நீர்ப்பெருக்கு அதிகரித்து வருவதால் இரத்தினபுரி. களுத்துறை பகுதிகளிலுள்ள மக்கள் தங்கள் இருப்பிடங்களைவிட்டு  வெளியேறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த சில தினங்களாக இலங்கையின் தென்பகுதிகளிலும். மலையகத்திலும் இடி மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்து வருகின்றது. ஆனால், யாழப்பாணம் உட்பட்ட வடபகுதியில் தற்போது கடும் வெயிலும், வெப்பமும் காணப்படுகின்றமையும் இங்கு குறிப்படத்தக்கது.

யாழ்.மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக முக்கிய கூட்டம்

Chandrakumar_MP_Jaffna_EPDP இலங்கையில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் இவ்வேளையில், நேற்று (June 15 2010) யாழ்ப்பாணத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பான கூட்டம் ஒன்று நடைபெற்றது. வடமாகாண சகாதார வைத்திய அதிகாரிகள்,   பிரதேச சபை செயலாளர்கள், கல்விப்பணிப்பாளர்கள் ஆகியோர்  இக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ்.மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, யாழ்.மேலதிக கல்விப்பணிப்பாளர் தி.செல்வரத்தினம், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கடந்த சில தினங்களில் இலங்கையின் தென்பகுதிகளில் டெங்கு காய்ச்சலினால் சிலர் பாதிக்கப்பட்டும் உயிரிழந்துமுள்ள நிலையில். யாழ்.மாவட்டத்தில் இதன் தாக்கத்தை கட்டப்படுத்துவது தொடர்பாக இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.

நெதர்லாந்திலிருந்து வந்த மாப்பிள்ளை திருமணக் கோலத்திலேயே நீதிமன்றில் நிறுத்தப்பட்டார்!

ஒன்பது வருடங்களுக்கு முன்பு நெதர்லாந்தில் திருமணம் முடித்துவிட்டு தற்போது யாழ்ப்பாணத்தில் இன்னொரு திருமணம் செய்யமுற்பட்டதாகக் கூறப்படும் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு,  மாப்பிள்ளை கோலத்தில் நீதிமன்றில் நிறுத்தப்பட்டார். கடந்த 12ம் திகதி மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் மல்லாக நீதிமன்ற நீதவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது.

குறித்த நபர் நெதர்லாந்திலிருந்து வருகை தந்தவர் எனவும், குறித்த 12ம் திகதி அவருக்கு திருமணம் நடைபெறவிருந்ததாகவும், அவ்வேளையில் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. குறித்த நபர் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்து பெண்ணொருவரை நெதர்லாந்திற்கு அழைத்துச்சென்று சம்பிரதாய முறைப்படி திருமணம் செய்தவர் என அவரது முன்னைய மனைவியின் சகோதரர் வழங்கிய முறைப்பாட்டையடுத்தே அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டார்.

விசாரணைகளின் போது, தான் முன்னர் சட்டபூர்வமாகத் திருமணம் முடிக்கவில்லை எனக்கூற, மனைவியின் சகோதரர் எனக் குறிப்பிடப்பட்டவரால் திருமணப் புகைப்படங்கள் சில நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன. அப்படங்களில் ஒன்றில் குறிப்பட்ட நபர் பெண்ணிற்கு தாலிகட்டும் படமும் காணப்பட்டது. அத்தோடு, திருமணத்திற்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழ்களும் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.

விசாரணைகளின் போது, அந்தப்படத்திலுள்ள பெண் தனது ஒன்றுவிட்ட சகோதரி எனவும், அவரை நெதர்லாந்திற்கு அழைத்துச் செல்வதற்காகவே திருமணம் செய்வது போன்று நடித்ததாகவும்,  அப்பெண்ணின் குடும்பத்தவர்களின் நன்மைக்காகவே அவ்வாறு செய்ததாகவும் கூறினார்.

நீதவான் சில கேள்விகளை அவரிடம் தொடர்ந்து கேட்டபோது அதற்குப் பதில் கூறமுடியாமல் முரண்பாடான பதில்களை கூறியதையடுத்து குறித்த நபரை எச்சரித்த நீதிபதி ஒரு லட்சம் ரூபா பிணையில் செல்லுமாறும், கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும், ஞாயிற்றுக்கிழமை தோறும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திடுமாறும் உத்தரவிட்டு வழக்கை அடுத்த தவணைக்கு ஒத்திவைத்தார்.

தடுத்து வைக்கப்பட்டிருந்த வேலணை வைத்தியர் பிணையில் விடுவிப்பு!

வேலணை மருத்துவமாது தர்சிகாவின் மரணம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட வைத்தியர் பிரியந்த செனவிரட்ண இன்று (16-07-2010)பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழப்பாண உயர் நீதிமன்றினால் இன்று இவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10ம் திகதி வேலணை மருத்தவமனையில் மருத்துவ மாதுவாகப் பணியாற்றிய செல்வி சரவணை தர்சிகாவின் மரணத்தில் தொடர்பு பட்டதான சந்தேகத்தில் இவ்வைத்தியர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.  யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னைய செய்தி: மருத்துவமாதுவின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியருக்கு எற்பட்டுள்ள நோய் குறித்து தெளிவில்லையாம்!

மருத்துவமாது சரவணை தர்சிகாவின் மரணம் தொடர்பாக சந்தேகத்தில் பேரில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வைத்தியர் செனவிரட்ன தற்போது யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு என்ன நோய் என்பது குறித்து கண்டுபிடிக்க முடியாதுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். யாழ்.சிறைச்சாலையில் இருந்தபோது. சிலரால் தான் தாக்கப்பட்டதாக முதலில் அவர் கூறியிருந்தார்.  பின் தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.

யாழ்.சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட இவர் கடந்த பதன்கிழமை இரவு 8.30 மணியளவில் யாழ்.மருத்தவமனைக்கு கொண்டுவரப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், தடுப்புக்காவலில் உள்ள குறிப்பிட்ட மருத்துவரான பிரியந்த செனவிரட்ன யாழ்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் அவரின் உடல் நிலைப்பாதிப்பு குறித்து எதிர்வரும் 19ம் திகதி நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்.போதனா மருத்துவமனை வைத்திய அதிகாரிக்கு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் ஆர்.வசந்தசேனன் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபரான வைத்தியரின் பாதுகாப்பு காரணங்களுக்காக அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்ற அனுமதி வழங்குமாறு பொலிஸார் நீதிமன்றிடம் விடுத்த கோரிக்கையை நீதவான் மறுத்துள்ளார். அவரை யாழ். சிறைச்சாலையில் விசேட பாதுகாப்புடன் எதிர்வரும் 21ம் திகதி வரை தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வவுனியா செட்டிக்குளத்தில் இடம்பெயர்ந்தோர் முகாம்கள் அமைந்திருந்த நிலப்பரப்புக்களை ஆக்கிரமிக்க சிலர் முயற்சி!

IDP_Campஇறுதிக் கட்டப் போரின் போது வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா செட்டிக்குளம் பகுதியிலுள்ள ‘மெனிக்பாம்’ முகாமில் தங்கியிருந்த மக்கள் கட்டம் கட்டமாக சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டு வருகின்ற நிலையில், அம்முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த பாரிய நிலப்பரப்பை ஆக்கிரமிக்க அரசாங்கத்துடன் அங்கம் வகிப்பவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் முதலானோர் அதிகம் முனைப்புக் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடர்ந்த காடுகளாக இருந்த அப்பகுதிகள் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்கள் அமைக்கப்படுவதற்காக காடுகள் அழிக்கப்பட்டு துப்புரவாக்கப்பட்டன. அப்பகுதிகளில் பல கட்டிடங்கள். குழாய் நீர் அமைப்பு என்பனவும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வகையில் அந்நிலப்பரப்பு சிறந்த விவசாய நிலமாகவும் மக்கள் குடியிருக்கக்கூடிய பகுதிகளாகவும் மாற்றப்பட்டுள்ளன.

IDP_Campஇடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டு வரும் வேளையில், இந்நிலப்பரப்புக்கள் சிங்கள மக்களின் குடியேற்ற நிலமாக மாற்றப்படலாம் என்கிற தகவல்கள் முன்னரே வெளியாகியிருந்தன. இதேவேளை, அம்முகாம்களில் தங்கியிருந்த வன்னி மக்களில் சிலர் அப்பகுதிகளில் தங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டால் அங்கு நிரந்தரமாக தங்கவதற்கு விருப்பமான நிலையிலும் காணப்பட்டனர். ஆனால், தற்போது அரசாங்கத்தோடு தொடர்புடைய சிலர் சொந்த நிலமாக அதனை ஆக்கிரமிக்கும் நோக்கில் முயன்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.