எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

யு.எஸ், ஓபன் டென்னிஸ் தொடரிற்கு தகுதி

saniya.jpgயு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாட, இந்தியாவின் சானியா மிர்சா தகுதிபெற்றார். யு.எஸ், ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று துவங்குகிறது. இதில் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் சில நாட்களாக நடந்தது.

கிரிக்கெட் சூதாட்டம்! பாக். ஜனாதிபதி பிரதமர் அதிருப்தி

cricket.jpgபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கர்கள் சூதாட்டத்தில்  ஈடுபட்டு இருப்பது தொடர்பாக பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி பிரதமர் கிலாணி இருவரும் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர்.

இங்கிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி அந்நாட்டுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. லோர்ட்ஸ் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மஜீத் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தில் இதில் பாகிஸ்தான் வீரர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறியிருந்தார். இதுகுறித்து விசாரனை நடைபெற்று வருகிறது.

பிரதமர் கிலாணி கூறுகையில் பாகிஸ்தான் வீரர்கள் நாட்டிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டனர். இதுதொடர்பாக விசாரனை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு உத்தரவூ இடப்பட்டுள்ளது. வீரர்கள் மீதான புகாரில் உண்மையாகும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

கிளிநொச்சியில் யாழ். பல்கலையின் பொறியியல், விவசாய பீடங்கள்

sb.jpgயாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தையும் விவசாய பீடத்தையும் நவீன வசதிகளுடன் கிளிநொச்சியில் விரைவில் நிறுவவுள்ளதாக உயர் கல்வியமைச்சர் எஸ். பி. திசாநாயக்க தெரிவித்தார். இதற்கான முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர்; அடுத்த ஆண்டு முதல் ஆங்கில மொழியை ஒரு போதனா மொழியாகப் பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்துவதுடன் இதற்கிணங்க எமது விரிவுரையாளர்களை இந்தியாவிற்கு பயிற்சிக்காக அனுப்பத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க நேற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்து இங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்டதுடன் பல்கலைக்கழகத்தின் குறைபாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பில் பல்கலைக்கழக உபவேந்தர் மற்றும் பீடாதிபதிகளுடன் கலந்துரையாடினார்.

இதன்போது, பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்களில் நிலவும் விரிவுரையாளர் வெற்றிடங்கள், கட்டிட நெரிசல்கள், உடற்பயிற்சிப் பீடத்தின் குறைபாடுகள் சம்பந்தமாக அமைச்சருக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. இதனைச் செவிமடுத்த அமைச்சர்; இக்குறைபாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்திற்கு கட்டிடங்களைப் பெற்றுக்கொடுக்கும் அதேவேளை; போதனாசிரியர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்கவும் உயர் கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்கும் என குறிப்பிட்ட அமைச்சர், இதன் மூலம் அவர்களின் திறமைகள் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். பல்கலைக்கழக பீடங்களின் பிரிவுகளை ஒரே இடத்தில் நிர்மாணிக்காது காணி வசதிகளைக் கொண்ட பகுதிகளில் அவற்றை பரவலாக அமைக்க முடியுமெனவும் இதற்கென பெறப்படும் அரச காணிகளில் மாணவர்களுக்கான விடுதிகளையும் அமைக்க முடியுமெனவும் பல்கலைக்கழக மகளிர் அபிவிருத்தி நிதியப் பணிப்பாளர் திருமதி சரோஜா சிவச்சந்திரன் இதன்போது அமைச்சருக்கு ஆலோசனை வழங்கினார்.

கிளிநொச்சியில் 54,000 ஏக்கரில் நெற்செய்கை

paddy.jpgஇவ்வாண்டின் பெரும் போகத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் 54,000 ஏக்கரில் நெற்பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான சகல உதவிகளையும் அரசாங்கம் விவசாயிகளுக்குப் பெற்றுக் கொடுக்கவுள்ளது.

பரந்தனில் பாழடைந்த கிணற்றுக்குள் ஆயுதங்கள் மீட்பு

பரந்தன் உமையாள் புரத்திலுள்ள பாழடைந்த கிணற்றுக்குள்ளிருந்து பெருந்தொகையான ஆயுதங்களும் வெடிபொருட்களும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பிராதேசம் மீள்குடியேற்ற கிராமமாகும். அங்கிருக்கும் வைரவர் கோவிலுக்கு அருகில் அமைந்திருந்த பாழடைந்த கிணற்றுக்குள்ளிருந்தே சனிக் கிழமை மாலை இவை மீட்கப்பட்டுள்ளன. கிணறு நான்கு அடுக்குகளாகப் பிரிக்கப்பட்ட நிலையில் ஆயுதங்களும் வெடிபொருட்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

நிரூபமாராவ் இன்று வருகை

nerupama.jpgஇந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமாராவ் இன்று இலங்கை வருகிறார். இரு தரப்புச் சந்திப்புக்களை மேற்கொள்வதற்காக நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் இவர், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற்திட்டங்களை நேரில் சென்று பார்வையிடுவாரென வும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமாராவ் உள்ளிட்ட குழுவினர் வடக்கில் வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

தாய்லாந்து சர்ச்சையில் இழுபட்டிருக்கும் இலங்கை

தாய்லாந்தில் கிளறிவிடப்பட்டுக்கொண்டிருக்கும் சர்ச்சையில் இலங்கையும் விவாதிக்கப்படும் விடயமாக மேலெழுந்திருக்கிறது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய ஆயுத வியாபாரியிடம் பதவியிலிருந்து விலக்கப்பட்ட பிரதமர் தக்சின் சினாவத்ரா இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதாக வெளியான செய்தி குறித்து தாய்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்தே அந்நாட்டு சர்ச்சையில்இலங்கையும் விவாதிக்கப்படும் விடயமாக மேலெழுந்திருக்கிறது.

ஜனநாயகக் கட்சி எம்.பி.யும் தாய்லாந்துப் பிரதமர் அபிஜித் வெஜ்ஜிவாவின் நெருங்கிய உதவியாளருமான சிறி சோக்சோபா ரஷ்ய ஆயுத வியாபாரியான விக்ரர் போட்டை கேள்வி எழுப்பியிருப்பதாக தாய்லாந்து ஊடகம் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. அதாவது விக்ரர் போட் கடந்த வருடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை இரகசியமாக சந்தித்திருந்தாரா என்பது பற்றியும் இலங்கை மார்க்கத்தில் செல்வதற்கு இருந்த ஆயுதங்களுடான விமானத்தை தடுத்து வைப்பதற்கும் இந்தச் சந்திப்புக்கும் இடையில் தொடர்புகள் உள்ளனவா என்பது பற்றியும் சிறிசோக் சோபா, விக்ரர் போட்டை கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏப்ரலில் தான் போட்டை சந்தித்திருந்தை சனிக்கிழமை சிறிசோக் சோபா உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால், உயர்மட்ட உதவியாளர் என்ற உத்தியோகபூர்வ ரீதியில் தான் சந்தித்தாரென்பதை சிறிசோக் சோபா மறுத்திருந்தார்.

இலங்கைப் பெண்களை வேலைக்கு அமர்த்தும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு நிபந்தனைகள்

sri-lankan-maids.jpgஇலங்கை யிலிருந்து வீட்டுப் பணிப் பெண்களை வேலைக்கு அமர்த்தும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கொள்கைகள், நிபந்தனைகள் அடங்கிய அறிக்கையைச் சமர்ப்பிப்பதென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தீர்மானித்திருக்கிறது.

மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள், இராஜதந்திரப் பிரதிநிதி அலுவலகங்களூடாக இந்தத் தீர்மானம் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அறிவிக்கப்படும் என்று வேலைவாய்ப்புப் பணியகத்தின் மேலதிக பொது முகாமையாளர் எல்.கே. றுகுணுகே கூறியுள்ளார்.

இந்தக் கொள்கைகள், நிபந்தனைகளுக்கு நாடுகள் இணங்க வேண்டும். பணிப்பெண்களாகத் தொழிலுக்கு அமர்த்துவதற்கு முன் இவற்றுக்கு இணங்கியிருக்க வேண்டும். அதேசமயம், மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள அதிகாரிகள் பணிப்பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் றுகுணுகே கூறியுள்ளார்.

தொழிலுக்கு அமர்த்துவோரால் வீட்டுப் பணிப்பெண்கள் சித்திரவதை, கொடுமைக்கு இலக்காகும் போது அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு புலம்பெயர் தொழிலாளர்களுக்குச் சர்வதேச அமைப்புகள் உதவ வேண்டும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

ஜனாதிபதிப்பதவியில் ஒருவர் இரண்டு தடவைகள் மட்டுமே இருக்கமுடியும்

அரசாங்கம் முன்வைக்கவிருக்கும் உத்தேச அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலத்துக்கு அங்கீகாரம் பெற்றுக்கொள்வதற்கான விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

தற்போதைய அரசியலமைப்பில் காணப்படும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப்பதவியில் ஒருவர் இரண்டு தடவைகள் மட்டுமே இருக்கமுடியும் என்ற அம்சத்தை முற்றாக நீக்கும் விதத்திலேயே அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்படவிருக்கின்றது.

அமரர் தொண்டமானின் 98வது ஜனன தினம்

tondaman.jpgஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சரும், பிரபல தொழிற்சங்கத் தலைவருமான அமரர் செளமிய மூர்த்தி தொண்டமானின் 98 ஆவது பிறந்த தினத்தின் நிமித்தம் இன்று பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

கொழும்பில் பழைய பாராளுமன்ற முன்றலிலுள்ள அமரர் தொண்டமானின் உருவச் சிலைக்கு பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தலைமையில் இன்று காலை 7.00 மணிக்கு மலர்மாலை அணிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து பிரதியமைச்சர் தலைமையில் இ. தொ. கா. வின் தலைமையகமான செளமிய பவனில் அமரர் தொண்டமானின் ஆத்ம சாந்திக்காகப் பூஜைகளும், பிரார்த்தனைகளும் இடம்பெறவுள்ளன.

இதேவேளை இ. தொ. கா. செயலாளர் நாயகமும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் இன்று காலை 8.00 மணிக்கு அன்னாரது குடும்ப உறவினர்கள் சகிதம் ரம்பொட தொண்டமான் கலாநிலையத்திலுள்ள அமரர் தொண்டமானின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிப்பார்.

இதேவேளை கொட்டகலை தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தில் கற்கையைப் பூர்த்தி செய்தவர்களுக்கு ஸ்தாபகர் தின சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று முற்பகல் 11.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் பிரதமர் டி. எம். ஜயரத்ன பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளுகின்றார். அத்தோடு அமரர் தொண்டமானின் நினைவாக கொட்டகலையைச் சேர்ந்த 150 ஏழைக் குடும்பங்களுக்கு கால் நடைகளும், வழங்கப்படவுள்ளன. லிந்துல, திலிக்குற்றி தோட்டத்தில் குளிரூட்டி நிலையமொன்றும் திறந்து வைக்கப்படவுள்ளது.