தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் அதன் பிரதித்தலைவரான கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும், அதன் முன்னாள’ தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்குமிடையே கடந்த சில காலமாக நலவிய பனிப்போருக்கு முற்றுப்புள்ளி வைத்து இருவரும் ஒன்று சேர்ந்து இயங்கத் தீர்மானித்துள்ளனர். கருணா அணிக்கும் பிள்ளையான் அணிக்குமிடையே கடந்த சில தினங்களாக நடைபெற்ற பல சுற்றுப்பேச்சு வார்த்தைகளின் பின் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த நன்மையைக் கருத்திற் கொண்டு இரு தரப்பினரும் இணங்கி செயற்படுவதற்கு இணக்கம் கண்டுள்ளனர் என இலங்கையிலிருந்து வெளிவரும் நவமணி பத்திரிகை பிரதான செய்தியில் குறிப்பிட்டிருந்தது.
அச்செய்தியில் மேலும் காணப்படுவதாவது, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பதவியை பாராளுமன்ற உறுப்பினர் கருணாவும், கட்சியின் செயலாளர் பதவியை முதலமைச்சர் பிள்ளையானும் பெறுப்பேற்கவுள்ளதாகத் தெரிகிறது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் தலைவராக இருந்த கருணா பிரித்தானியா சென்று கைது செய்யப்பட்டதையடுத்து பிள்ளையானும் அண்மையில் கொல்லப்பட்ட ரகுவும் கட்சியின் பிரதானிகளானார்கள். கருணா நாடு திரும்பிய பின் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடு மும்முரமடைந்து கட்சி இரண்டு கூறாக பிரியும் நிலை உருவானது. தமிழ் மக்கள் விடுதலை கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை அமைப்பதற்கு கருணா அணியினர் தயாராகினர்.
ரீ.வீ.என்.பி. கட்சி பிளவுபடுவது கிழக்கு மாகாண தமிழ் மக்களது எதிர்காலத்திற்கு பாதிப்பாக அமையும் என்பதில் அக்கறை கொண்ட சில சக்திகள் முயற்சி செய்து இரு தரப்பினரையும் சமரசப்படுத்தியுள்ளனர். இரு தரப்பினரதும் இணக்கப்பாடு பற்றி கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனுடன் நவமணி தொடர்பு கொண்டு கேட்டபோது தமிழ் மக்களின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு தாம் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் கருணாவுக்கு தலைமைப் பதவியை வழங்க இணங்கியதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக எதிர்வரும் 10ம் திகதி செய்தியாளர் மகாநாடு ஒன்றை நடாத்தி அறிவிக்கவுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.