எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

தென்னிந்திய தமிழ் திரைப்படங்களை இலங்கையில் திரையிடப்படுவது தடை செய்யப்பட வேண்டும்!

tamil-cini.pngதென்னிந்திய தமிழ் திரைப்படங்களை இலங்கையில் திரையிடப்படுவது தடைசெய்யப்பட வேண்டும் என்று கோரிய சில சுவரொட்டிகள்  கண்டி நகரப்பகுதியிலும் மேலும் சில நகரப்பகுதிகளிலும் ஒட்டப்பட்டிருந்ததை காணமுடிந்தது. கண்டி மத்திய பேருந்து நிலையம் சந்தை தொகுதி கட்டிடங்கள் மற்றும் புகையிரத நிலையங்கள் உள்ளிட்ட பல பிரதேசங்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்த இந்த சுவரொட்டிகளில் தென்னிந்திய தமிழ் திரைப்படங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கருத்துக்களை வெளிப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஊடகவியலாளர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டப் பேரணி

stop-terr-media.jpgசண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்தும், ஊடக சுதந்திரத்தை அடக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரியும் கொழும்பு லேக் ஹவுஸ் சுற்று வட்டத்தின் அருகே நேற்று நண்பகல் 12.15 மணியளவில் அனைத்து ஊடகவியலாளர் அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தின.  பேரணியின் போது பதாதைகளைத் தாங்கியவாறு ‘ஊடகங்களுக்கு எதிரான பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்’ போன்ற கோஷங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் எழுப்பப்பட்டன. அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கறுப்புப் பட்டி அணிந்து காணப்பட்டனர். ஐந்து ஊடக அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணி லேக் ஹவுஸ் அரச பத்திரிகை நிறுவனத்திற்கு முன்பாக நடைபெற்றது.

அன்று நிமலராஜன் நடேசன், சிவராம் இன்று லசந்த நாளை யார் என்று கேள்வி கேட்டும் முழக்கமிட்ட ஆர்ப்பட்டக்காரர்கள் இதுவரை காலமும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் தாக்குதலுக்குள்ளான ஊடக நிறுவனங்களின் விபரங்கள் அடங்கிய வாசக அட்டைகளையும் தாங்கியிருந்தனர். இதனிடையே பாதுகாப்பு நடவடிக்கைகளும் அங்கு பலப்படுத்தப்பட்டிருந்தன. கலகத் தடுப்புப் பொலிஸ் பிரிவினர் உட்பட பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த பலர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். எனினும் எதுவித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.

பிரஜாவுரிமை; சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றம்

ratnasri.jpgஇந்திய வம்சாவளியினருக்கு பிரஜாவுரிமை வழங்க (திருத்தச்) சட்டமூலமும், நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்க (சிறப்பேற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலமும் வியாழக்கிழமை சபையில் திருத்தங்களின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றத்தில் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க இவ்விரு சட்டமூலங்களையும் சபைக்கு சமர்ப்பித்தார். இதில் இந்திய வம்சாவளியினரான ஆட்களுக்கு பிரஜாவுரிமை வழங்கல் திருத்தச் சட்டமூலம் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.

இதன் பின்னர் நடைபெற்ற நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்கல் சிறப்பேற்பாடுகள் திருத்தச் சட்ட மூலம் மீதான விவாதத்தின் இறுதியில் பதிலளித்து பேசிய பிரதமர் தெரிவிக்கையில்;

” சிரிமாசாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் எந்த ஒரு நாட்டுக்கும் உரித்தில்லாத ஒரு பகுதியினர் இருந்தனர். இவர்களுக்கு எந்த நாட்டினதும் பிரஜாவுரிமை இல்லாமல் இருந்தது. இம் மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்கும் முகமாகவே சட்டமொன்று அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. இதிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாகவே தற்போதைய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

எவராயிருந்தாலும் அவரவர்க்கென உரித்தான நாடொன்று இருக்கவேண்டும். அதன் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவருக்கும் இலங்கையில் பிரஜாவுரிமை வழங்க செயற்படுவோம்.

இதன்போது, சிக்கல்கள் ஏற்படலாம். இவ்வாறான சிக்கல்களை பேச்சுகள் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும். நாம் அனைவரும் இவ் விடயத்தில் ஒருமித்து நேர்மையாக செயற்படுவோமாயின், முகம் கொடுக்கவேண்டியிருக்கும் சிக்கல்களை எதிர்கொள்வதில் கஷ்டம் இருக்காது’ என்றார்

‘புலிகள் இயக்கத்தடையை வெளிநாடுகளோ இராஜதந்திரிகளோ ஆட்சேபிக்கவில்லை’ – அமைச்சர் போகொல்லாகம

rohitha-bougo.jpgபுலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளமைக்கு இலங்கையிலுள்ள இராஜதந்திரிகளோ வெளிநாடுகளோ எவ்வித ஆட்சேபனையையும் தெரிவிக்கவில்லையென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இலங்கை அரசாங்கம் நேற்று முன்தினம் இரவு முதல் தடை விதித்திருந்தது. அரசாங்கத்தின் இந்நிலைப்பாடு குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கும் மாநாடு நேற்று வெளிவிவகார அமைச்சில் அமைச்சர் போகொல்லாகம தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இராஜதந்திரிகள், இலங்கை அரசாங்கம் புலிகளை தடைசெய்தமை குறித்து ஒரு சிறு எதிர்ப்பை கூட வெளிப்படுத்தவில்லையென அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு எதிராக எடுத்துள்ள இம்முடிவு அனைத்து நாடுகளும் விரும்பத்தக்க வகையில் அமைத்துள்ளதென்பதையே இது குறிக்கின்றது என தெரிவித்த அமைச்சர் இது அரசாங்கத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியெனவும் குறிப்பிட்டார்.

இராஜதந்திரிகளுடனான சந்திப்பையடுத்து செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தலதா மாளிகை மீது புலிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து 1998ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் திகதி அரசாங்கத்தினால் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது. 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை அரசாங்கமும் புலிகளும் கைச்சாத்திட்ட போர் நிறுத்த உடன்படிக்கையைத் தொடர்ந்து அவ்வருடம் செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதி இருதரப்பினருக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இத்தடை நீக்கப்பட்டது.

இது இவ்வாறிருக்க கடந்த இரண்டாம் திகதி கிளிநொச்சி முழுமையாக படையினரிடம் வீழ்ந்ததையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றுகையில், பயங்கரவாதத்தை கைவிட்டுவிட்டு பேச்சுக்கு வருமாறு புலிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு முன்னரும் ஜனாதிபதி இதேபோன்றதொரு அழைப்பை விடுத்திருந்தார். ஆனால் புலிகள் தரப்பிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.
 
இச்சந்தர்ப்பத்திலேயே கொம்பனித்தெருவிலுள்ள இலங்கை விமானப்படை தலைமையகத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. அப்பாவி மக்களை இலக்கு வைத்து புலிகள் நடத்தும் இதுபோன்ற தாக்குதல்கள் அவர்கள் இன்னும் பயங்கரவாதத்தை கைவிடவில்லை யென்பதை நன்கு புலப்படுத்துகிறது. எனவேதான் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் புலிகள் இயக்கத்தை தடை செய்ய வேண்டிய கட்டாயம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டதாகவும் அமைச்சர் போகொல்லாகம கூறினார்.

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பாக புலிகள் இயக்கத்தை பிரகடனப்படுத்துவதன் மூலம் ஏனைய நாடுகளுக்கு அதனை அறிமுகப்படுத்துவதற்கு எமக்கு இலகுவாக இருக்கும். இதன் மூலம் புலிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் ஆயுத உதவிகளை எம்மால் நாளடைவில் முழுமையாக நிறுத்திவிட முடியும். புலிகள் இயக்கத்தை நாட்டினுள் தடைசெய்துள்ளமை எமக்கு நல்லதொரு ஆரம்பமாகுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் புலிகள் இயக்கத்தை தடைசெய்ய எவ்வாறான முயற்சிகளை முன்னெடுத்து வருகிர்களென செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவை குறித்து பகிரங்கமாக எதுவும் தெரிவிக்க முடியாது. குறிப்பாக புலிகளுக்கு ஆயுதம் வழங்கும், அவர்களுக்காக நிதி சேகரிக்கும் நாடுகளிலேயே புலிகளை தடை செய்யவேண்டும்.

27 ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 31 நாடுகளில் புலிகள் தடை செய்யப்பட்டுள்ளனர். தமிழர் புனர்வாழ்வு கழகம் உள்ளிட்ட புலிகளை சார்பு படுத்தி வெளிநாடுகளில் இயங்கும் முன்னணி அமைப்புக்களை தடைசெய்யவேண்டும். வன்னி மக்களுக்கென இவர்கள் சேகரித்த நிதியில் அங்கு என்னென்ன அபிவிருத்திகளை முன்னெடுத்திருக்கிறார்களென கிளிநொச்சியை கைப்பற்றிய பின்னர் உலக நாடுகளுக்கும் நன்கு விளங்கியிருக்கும். அவர்கள் அதுவரை அணிந்திருந்த முகமூடிகளை நாம் கழற்றிவிட்டோமெனவும் அமைச்சர் கூறினார்.

புலிகளின் வான் பலத்தை அழிக்க கவனம் செலுத்துமாறு ஐ.தே.க. வலியுறுத்தல்

parliment_inside.jpg
விடுதலைப் புலிகள் சிறு பிரதேசத்துக்குள் முடக்கப்பட்டிருக்கின்ற போதிலும் புலிகளின் வான் பலம் இன்னும் அழிக்க முடியாமல் போயிருப்பது குறித்து எதிர்வரும் நடவடிக்கைகளின் போது கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போதே அத்தநாயக்க எம்.பி. இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;  பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து ஒழித்துக் கட்டுவதே எம் அனைவரினதும் பொறுப்பு. நாட்டில் பயங்கரவாதம் தொடர்வதை எவரும் விரும்பவில்லை. எனவே, பயங்கரவாதத்தை ஒழிக்க எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் எமது ஆதரவு உண்டு. படையினர் புலிகளிடமிருந்து பிரதேசங்களைக் கைப்பற்றி தங்களது வெற்றியை நிரூபித்துள்ளனர். இந்நிலையில், படையினரால் மீட்கப்பட்ட பிரதேசங்களை தக்க வைத்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் படையினரின் வெற்றி அர்த்தமற்றதாகி விடும். ஏனெனில், கடந்தகால சம்பவங்கள் இதற்குச் சான்றுபகிர்கின்றன.

இதேநேரம், வடக்கில் பல பிரதேசங்கள் புலிகளிடமிருந்து மீட்கப்பட்டிருந்தாலும் இங்கு தெற்கில் ஆங்காங்கே குண்டுகள் வெடிக்கின்றன. இம்மாதிரியான செயற்பாடுகளில் புலிகள் தொடர்ந்தும் ஈடுபடக் கூடும். எனவே, இம்மாதிரியான நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

இராணுவத் தளபதி கூறியது போல புலிகள் சிறு பிரதேசத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பது உண்மை. நாம் புலிகளின் பலத்தை உயர்த்திக் கூறவரவில்லை. எனினும், புலிகளின் வான் பலத்தை இன்னும் எம்மால் அழிக்க முடியாமல் போயுள்ளது. எனவே, எதிர்வரும் நடவடிக்கைகளின் போது அரசாங்கம் அது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

காஸாவில் போர் நிறுத்தம்: ஐ.நா. தீர்மானம்

gaza_.jpgகாஸாவில் இஸ்ரேல் தாக்குதலை உடனடியாக நிறுத்த வலியுறுத்தும் போர் நிறுத்தம் கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் தீரமானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் இந்த தீர்மானத்தின் மீதான வாக்களிப்பில் அமெரிக்கா பங்கேற்கவில்லை. 3 நாட்கள் நடைபெற்ற கடும் விவாதத்தைத் தொடர்ந்து இந்த தீர்மானத்தை நிறைவேற்றும் தீர்மானத்தில் எஞ்சிய 14 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

இஸ்ரேல் மீது பலஸ்தீனத்தை ஆளும் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இஸ்ரேல் படைகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதல்களில் இதுவரை 700க்கும் மேற்பட் டோர் கொல்லப்பட்டனர். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொன்டலிசா ரைஸ், இந்த தீர்மானத்தை, நோக்கத்தை அமெரிக்கா ஆதரிப்பதாக கூறினார்.

காஸா மீதான தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம்

gaasa.jpgகாஸா மீதான இஸ்ரேலிய தாக்குதலைக் கண்டித்து நேற்று (9) கொழும்பு உட்பட நாடு பூராவும் ஜும்ஆத் தொழுகையின் பின்னர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஜும்ஆ தொழுகையின் போது விசேட துஆப் பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டன.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள் பொதுமக்கள் உட்பட பெருந்திரளான வர்கள் கலந்து கொண்டனர். காஸா மீதான குரூரமான தாக்குதலை நிறுத்துமாறும் சர்வதேச சமூகம் தலையிட்டு இதற்கு முடிவு கட்ட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர்.

கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலின் முன்பாக நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா, தொழில் அமைச்சர் அதாவுத செனவிரத்ன, பலஸ்தீன தூதுவர், ஜே. வி. பி. பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன் ஹெட்டி, மு. கா. தலைவர் ரவூப் ஹக்கீம், மு. கா. உறுப்பினர் சபீக் ரஜாப்தீன், முஸ்லிம் உரிமைக்கான அமைப்பின் தலைவர் முஜீபுர் ரஹ்மான் உட்பட பெருந் திரளானவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

தென் கிழக்குப் பல்கலைக்கழக முஸ் லிம் மஜ்லிஸ், மாணவர் பேரவை மற்றும் பல்கலைக்கழக மாணவ கழகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டப் பேரணி ஜும்ஆத் தொழுகையின் பின் நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை ‌பிர‌ச்சனை‌யி‌ல் முறை‌யிடுவது கடை‌சி முய‌ற்‌‌சி: சோனியா காந்திக்கு ராமதாஸ் கடிதம்

raamadas.jpgமுல்லைத் தீவில் இன்று பெருமளவில் மனித உயிரிழப்பைத் தடுப்பதற்கு, முறையிடுவதற்கான கடைசிப் புகலிடமாக உங்களை (சோ‌னியாகா‌ந்‌தி) நான் அணுகி இருக்கிறேன் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ள பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ், இலங்கையில் உடனடி போர்நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியாகாந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‌விடுதலைப்புலி போராளிகளுக்கு எதிராக இலங்கைப் படையினர் போர் நடத்துகிறார்கள் என்ற போர்வையில், இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கிக் கொல்லப்படுவது குறித்துத் தமிழக மக்கள் கொந்தளிப்பு அடைந்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இலங்கையில் நிலவும் அநீதியான நிலைமை குறித்துத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கவலை தெரிவித்துள்ளன.

இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு அவர் தலையிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து வேண்டுகோள் விடுப்பதற்காக, கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சி தூதுக்குழுவைத் தமிழக முதலமை‌ச்சர் கருணாநிதி தலைமை ஏற்று அழைத்துச் சென்றார்.

அமைதி முயற்சிகளைத் தொடங்குவதற்கு அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்புவதாகத் தமிழகத் தூதுக்குழுவினரிடம் பிரதமர் உறுதி அளித்தார். ஆனால் பிரதமர் வாக்குறுதி அளித்தபடி பிரணாப் முகர்ஜியை இலங்கைக்குச் செல்லவில்லை என்பதையும், தமிழக மக்களின் ஒட்டுமொத்த குரலுக்கு மதிப்பளிக்கப்படவில்லை என்பதையும் வருத்தத்துடன் உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையில் தமிழ் மக்கள் பாதுகாப்புடன் வாழ்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரி ஆறு கோடி தமிழ் மக்களும் மத்திய அரசை அணுகினர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. எனினும், இலங்கைத் தமிழ் மக்களும், இந்தியத் தமிழ் மக்களும் நீங்கள்தான் தங்களின் பாதுகாவலர் என்று உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர்.

முல்லைத் தீவில் இன்று பெருமளவில் மனித உயிரிழப்பைத் தடுப்பதற்கு, முறையிடுவதற்கான கடைசிப் புகலிடமாக உங்களை நான் அணுகி இருக்கிறேன். மத்திய அரசை ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் என்ற முறையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பல்வேறு நடவடிக்கைகளை நீங்கள் எடுத்திருக்கிறீர்கள்.

அதே தகுதியில், இலங்கையில் உடனடியாகப் போர்நிறுத்தம் ஏற்படத் தலையிட வேண்டும் என்றும், இலங்கை அரசுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையே பேச்சுக்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் இந்திய அரசுக்கு நீங்கள் ஆணையிட வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இந்தச் சிக்கலை மிகுந்த மனிதநேயத்துடனும், அனுதாபத்துடனும் நீங்கள் அணுகுவீர்கள் என்றும், இலங்கையில் தமிழ் மக்களுக்கு அமைதியையும், பாதுகாப்பையும் மீட்டுத் தருவீர்கள் என்றும் நான் உறுதியுடன் நம்புகிறேன் எ‌ன்று அ‌ந்த கடி‌த‌த்‌தி‌ல் ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

A-9 பாதை படையினரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் : தொகுப்பு – ஏகாந்தி

a-9-road.jpg23 வருடங்களுக்கு பின்னர்  A-9 பிரதான வீதி முழுமையாக பாதுகாப்பு படையினரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.  இந்த அறிவித்தலை நேற்று (09) முப்படைகளின் பிரதம தளபதி என்ற அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலத்திரனியல் ஊடகங்களின் மூலம் நேற்று (09) நாட்டு மக்களுக்கு உத்தியோகபூர்வமாக விடுத்தார்.

கண்டி யாழ்ப்பாணப் பாதையான A-9  சுமார் 270 கிலோமீற்றர் நீளமுடையது. கடந்த 23 ஆண்டுகளாக  A-9 பாதையில் வன்னிப் பிரதேசத்தில் இடைக்கிடையே புலிகளின் கட்டுப்பாடு நிலவியது தெரிந்ததே.

 A-9 பிரதான பாதையில் ஓமந்தை தொடக்கம் முகமாலை வரை இடைக்கிடையே படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த போதும்கூட,  23 வருடங்களுக்கு பிறகு படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இது பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும் என்றும் தெரிவித்தார்.

இது குறித்து இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

_army.jpgஓமந்தை சோதனைச் சாவடியிலிருந்து முகமாலை வரையிலான 96 கிலோ மீற்றர் பிரதேசமே தற்பொழுது முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. முகமாலை மற்றும் கிளாலி பிரதேசங்களிலிருந்து படை நடவடிக்கைகளை ஆரம்பித்த இராணுவத்தின் 53 வது மற்றும் 55 வது படைப் பிரிவினர் பளை, சோரன்பற்று ஆகிய பிரதேசங்களை நேற்று முன்தினம் (08) கைப்பற்றினர். அங்கிருந்து முன்னேறிய படையினர் நேற்று (09) இயக்கச்சியையும், ஆணையிறவு பிரதேசத்தையும் முழுமையாகக் கைப்பற்றி தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். ஆணையிறவிலிருந்து முகமாலை வரையான 20 கிலோ மீற்றர் பிரதேசத்தை குறுகிய நாட்களுக்குள் படையினர் மீட்டெடுத்துள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர் ஆணையிறவை விடுவித்தமையூடாக  A-9 பிரதான வீதியை இணைக்க முடிந்ததாக குறிப்பிட்டார்.

1991 ஆம் ஆண்டு ஆணையிறவில் பாதுகாப்பு படையினர் பாரிய முகாம்களை அமைத்தமை புலிகளுக்கு தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க மிகவும் இடையூறாக அமைந்திருந்தது. ஆணையிறவின் மீது தமது பூரண கவனத்தை செலுத்தியிருந்த புலிகள் 1991 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் திகதி ஆணையிறவு பிரதேசத்தை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். ஆணையிறவிலுள்ள தமது நிலைகளையும், முக்கிய தளங்களையும் பாதுகாத்துக் கொள்ள 1991 ஜூலை மாதம் 14 ஆம் திகதி வெற்றிலைக்கேணி பிரதேசத்திற்கு படையினர் அனுப்பிவைக்கப்பட்டனர்.  ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவின் தலைமையில் படை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி படையினரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. ஆணையிறவை கைப்பற்றும் படை நடவடிக்கைகளின் போது அப்போதைய பிரிகேட் கொமாண்டராக தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா கடமையாற்றியதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி ஆணையிறவு புலிகள் வசமானதை அடுத்து நேற்று (09) மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
A-9  பிரதான வீதி ஓமந்தையிலுள்ள இராணுவச் சோதனைச் சாவடியை அடுத்து புலிகளின் சோதனைச் சாவடி அமைந்திருந்தது. இந்த பிரதேசத்தை ஊடுருவி யாழ். குடாநாட்டுக்குச் செல்பவர்களுக்கு விசேட பாஸ் நடைமுறைகளை புலிகள் அமுல்படுத்தியிருந்தனர். வாகனங்களில் செல்பவர்களிடம் வரி அறவிட்டனர். சொந்த பாவனைக்காக பொருட்கள் எடுத்துச் செல்பவர்களிடம் கூட வரி அறவிடப்பட்டது. வர்த்தகர்களிடம் வரி அறவிட்டதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு யாழ். குடாநாட்டிலுள்ள வர்த்தகர்கள் தள்ளப்பட்டனர்.

A-9 மீட்டெடுக்கப்பட்டதன் ஊடாக பொது மக்கள் எவ்வித கெடுபிடிகளும் இன்றி தரைவழி பாதையூடாக மக்கள் யாழ். குடாவுக்கு சுதந்திரமாக சென்றுவர நல்லதொரு சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.  பெருந்தொகைப் பணத்தை செலவு செய்து விமானத்தின் மூலம் யாழ். – கொழும்பு சென்றவர்கள் இனி A-9  பாதையூடாக செல்லும் வாய்ப்பை படையினர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர் என்றும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக் காட்டினார்.

இவ்வாறாக இராணுவப் பேச்சாளர் கருத்துத் தெரிவித்துள்ள போதிலும்கூட, A-9 பாதை பொதுமக்களின் பாவனைக்காக எப்போது திறக்கப்படும் என்ற அறிவித்தல் இதுவரை வெளியிடப்படவில்லை. தற்போது வன்னிப் பகுதியில் தொடர்ச்சியான யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் A-9 பாதை விரைவாக பொது மக்களின் பாவனைக்கு விடப்படும் எனவும் எதிர்பார்க்க முடியாது.

 A-9 வீதி படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள சில கருத்துக்கள். கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

வீ. ஆனந்தசங்கரி
(கிளிநொச்சி முன்னாள் எம்.பி)

இது ஒரு பெரிய வரப்பிரசாதம். இதனையே மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்தார்கள். இப்பாதை திறக்கப்பட்டிருப்பதன் பயனாக யாழ். குடாநாட்டுக்குத் தரை வழியாக சென்று வரக் கூடிய வாய்ப்புக் கிடைக்கப் பெற்றிருக்கிறது. இனிமேல் தரைவழியாக யாழ்ப்பாணத்திற்கு சென்று வர போக்குவரத்து சிரமங்கள் இராது. இப்பாதையைத் திறந்ததன் மூலம் அரசாங்கம் யாழ். குடா நாட்டு மக்களுக்கு பாரிய உபகாரத்தைச் செய்திருக்கிறது. இது என்றும் மறக்க முடியாத உபகாரம்.

புலிகள் இயக்கத்தினர் இப்பாதையை இழுத்து மூடியதனால் யாழ். குடாநாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். அம்மக்களின் பொருளாதாரம் முடக்கப்பட்டது. புலிகள் இயக்கத்தினரின் இந் நடவடிக்கையால் யாழ். குடாநாட்டு மக்கள் வறுமைப் பிடிக்குள் பிடித்துத் தள்ளப்பட்டார்கள். பொருட்களின் விலைகள் முன்னொரு போதுமே இல்லாத அளவுக்கு அதிகரித்தன. யாழ். குடாநாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க முடியாமல் திண்டாடினார்கள்.

புலிகள் இயக்கத்தினர் தரைவழி பாதையை மூடிய போதிலும் அரசாங்கம் மக்களை கைவிடவில்லை. யாழ். குடாநாட்டு மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவு மற்றும் பொருட்களைக் கடல் வழியாக சரக்கு கப்பல்களில் அரசாங்கம் அனுப்பி வருகின்றது. இதுவும் அரசாங்கம் யாழ். குடாநாட்டு மக்களுக்கு செய்து வரும் மறக்கமுடியாத பேருபகாரமாகும்.

புலிகள் இயக்கத்தினர் இப்பாதையை இழுத்து மூடாததற்கு முன்னர் இப்பாதை வழியாகத் தினமும் 60, 70 லொறிகளில் யாழ். குடாநாட்டு உற்பத்தி பொருட்கள் தென்பகுதிக்கு வரும். அவற்றில் மரக்கறி, கிழங்கு வகைகள், மீன் வகைகள், கருவாடு, இறால், வாழைப்பழம் போன்றன அடங்கி இருக்கும். இதேபோல் 60, 70 லொறிகள் யாழ். குடாநாட்டுக்கு தென்பகுதியிலிருந்து பொருட்களை எடுத்துச் செல்லும். இவற்றில் சீனி, பருப்பு உள்ளிட்ட சகல அத்தியாவசியப் பொருட்களும் அடங்கியிருக்கும்.
இவ்வாறான சூழலில் யாழ். குடா நாட்டிலும், தென்பகுதியிலும் பொருட்களின் விலைகள் நியாயமான முறையில் குறைவாக ஏற்றத்தாழ்வின்றி காணப்பட்டன. இதே நேரம் யாழ். குடாநாட்டு மக்களின் பொருளாதாரமும் வளர்ச்சி அடைந்திருந்தது.
புலிகள் இயக்கத்தினர் தங்களது சுயலாபத்திற்காகவே A- 9 பாதையை இழுத்து மூடினர். அவர்கள் மக்களின் நலன்களை சிறிதளவேனும் கருத்தில் கொள்ளாமலேயே இவ்வாறு செய்தனர். தங்களை வளப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே அவர்கள் இப் பாதையை மூடினர்.  இப்பாதை படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதன் மூலம் யாழ். குடா நாட்டு மக்களின் பொருளாதாரம் மீண்டும் சுபீட்சம் பெறும். பொருட்களின் விலைகள் குறையும். எதுவிதமான சிரமங்களுமின்றி தரை வழியாகச் சென்று வரக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

புளொட்.- தர்மலிங்கம் சித்தார்த்தன்

A-9 பாதை திறக்கப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கக் கூடிய விடயமாகும். இப்பாதை மூடப்பட்டதால் மக்கள் பெரிதும் துன்பப்பட்டார்கள். யாழ்ப்பாணத்திற்கு விமானத்தில் ஒரு தடவை சென்று வருவதற்கு 25 ஆயிரம் ரூபாவுக்கு மேல் செலவிட வேண்டிய நிலைமை நிலவியது.  அதுவும் நினைத்த மாத்திரத்தில் சென்று வர முடியாது. அந்தளவுக்குக் கஷ்டமான காரியமாக அது இருந்தது.  இவ்வாறான காரணங்களினால் தான் இப்பாதை எப்போது திறக்கப்படும்? என்ற பெருத்த எதிர்பார்ப்புடனும், ஆவலுடனும் மக்கள் இருந்தார்கள். அந்த எதிர்பார்ப்பு இப்போது நிறைவேறியுள்ளது.
புலிகள் இயக்கத்தினர் இப்பாதையை மூடியதால் யாழ். குடாநாட்டின் விளைபொருட்கள் எதனையும் தென் பகுதிக்குக் கொண்டு வர முடியாத நிலைமை ஏற்பட்டது. இதேநேரம் யாழ். குடாநாட்டில் பொருட்களின் விலைகளும் பெரிதும் அதிகரித்தது. இதனால் யாழ். குடாநாட்டு மக்களும், உற்பத்தியாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இந்த நிலைமை எப்போது முடிவுக்கு வரும் என்ற பெருத்த எதிர்பார்ப்புடன் தான் மக்கள் இருந்தார்கள். அந்தளவுக்கு மக்கள் கஷ்டப்பட்டார்கள்.

இனி யாழ் குடாநாட்டுக்குத் தரை வழியாக சிரமங்களின்றி சென்று வர முடியும். அங்கு பொருட்களின் விலைகள் குறையும். யாழ்ப்பாணத்தில் விளைகின்ற பொருட்கள் தென் பகுதிக்கு வந்து சேரும். இதன் மூலம் மக்களின் வாழ்வில் பொருளாதார ரீதியாக சுபீட்சம் ஏற்படும். மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.

திருநாவுக்கரசு
ஈ.பி.ஆர்.எல்.எப் (பத்மநாபா அணி)

A – 9 வீதி திறப்பது தொடர்பாக அனைத்து தரப்பினராலும் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்த விடயமாகும். வன்னி மக்களின் சமூக பொருளாதார நடவடிக்கைகள் A – 9 வீதியையே மையமாகக் கொண்டுள்ளது. இவ் வீதி இயங்கினால்தான் மக்களின் வாழ்வு உயிர்பெறும்.

பெரும் வரப்பிரசாதமாய் அமைந்த இவ் வீதி திறக்கப்பட்ட பின்னர் எவரும் குழப்பக்கூடாது. மனிதனது வாழ்வு தொடர்பான பிரச்சினையாகவே இதனை நோக்க வேண்டும். A – 9 வீதி திறப்பதால் பொருட்களின் விலைகள் குறைவதுடன், மக்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
போக்குவரத்து வசதிகள் இல்லாமல் மக்கள் அனுபவித்த துன்பங்களை வார்த்தைகளால் விபரிக்க முடியாது. சாதாரண மக்கள் விமானத்தில் பயணம் செய்ய முடியாது. A – 9 வீதி திறப்பின் மூலம் வடக்கு, தெற்கிடையேயான உறவுகள் வலுப்பெற்று இனங்களுக்கிடையில் ஐக்கியம் ஏற்படும்.

பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்ம
சர்வதேச இந்துமத பீடம

A – 9 பாதை திறக்கப்பட்டிருப்பது தமிழ் மக்களுக்குக் கிடைக்கப்பெற்றிருக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதமாகும். அதேநேரம் பெளத்த மக்கள் நாகதீப விகாரைகளில் வழிபடுவதற்கான வாய்ப்புக்களும் இலகுவாகிவிடும். இப்பாதை மூடப்பட்டதால் யாழ். குடாநாட்டு மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் தான் பல் வேறு தேவைகளின் நிமித்தம் கொழும்புக்கு வருகின்றார்கள். இப் பாதை திறக்கப்பட்டிருப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு பொன்னான வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருப்பதுடன், பொன்னான காலமும் பிறந்திருக்கிறது என உறுதிபடக் கூறலாம்.

தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் போராட வேண்டியுள்ளது. அந்தவகையில் இப்பாதை திறக்கப்பட்டிருப்பதன் மூலம் வடக்கு, தெற்கு மக்களுக்கிடையில் அன்னியோன்ய உறவும், புரிந்துணர்வும் வளர்ச்சி அடையும். இவை இன செளஜன்யத்திற்கும் சகவாழ்வுக்கும் வழி வகுக்கும்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தரைவழியாகச் செல்லுவது ஏற்கனவே மக்கள் மனங்களில் ஆச்சரியம் மிக்கதான செயலாக இருந்தது. ஆனால் இப்போது இப்பாதை திறக்கப்பட்டிருப்பதன் மூலம் தமிழ் மக்கள் மட்டுமல்லாமல் முழுநாட்டு மக்களுமே சந்தோஷமடைவார்கள் என்பதில் ஐயமில்லை.

ஜனாதிபதியின் உரை

presidentmahinda.jpgநேற்றைய தினம் (09) ஆணையிறவு விடுவிக்கப்பட்டமை குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தொலைக்காட்சிகளினூடாக மக்களுக்கு நிகழ்த்திய உரையின் தொகுப்பு வருமாறு:

2009 ஆம் ஆண்டு படையினரின் வெற்றி வருடமென நான் ஏற்கனவே கூறியிருந்தேன். பரந்தனை படையினர் முழுமையாக மீட்டெடுப்பதோடு 2009 ஆம் ஆண்டு உதயமானது. ஜனவரி 2 ஆம் திகதியாகும் போது படையினர் கிளிநொச்சியை முழுமையாக மீட்டனர்.

எமது படையினர் மற்றொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியொன்றை ஈட்டியுள்ளனர். ஆனையிறவு பகுதியை எமது படையினர் இன்று மாலையாகும் போது முழுமையாக மீட்டுள்ளனர்.

அதேபோல, தேவேந்திரமுனை முதல் பருத்தித்துறை வரையான பகுதியை மீண்டும் இணைக்கும் வகையில் A-9 வீதியை முழுமையாக புலிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 23 வருடங்களின் பின்னரே A-9 வீதி முழுமையாக படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. 

ஒன்பது வருடங்களுக்கு முன்னர் ஆனையிறவை எமக்கு இழக்க நேரிட்டது. இந்த மோதலில் 359 படையினர் உயிர் நீத்தனர். மேலும் 349 பேர் காணாமல் போனார்கள். 2500 பேர் காயமடைந்தனர்.  அன்று தொடக்கம் எமது படையினர் முகமாலையினூடாக ஆனையிறவைக் கைப்பற்ற பல தடவைகள் முயன்றார்கள். இந்த முயற்சிகளினால் பெருமளவு படையினர் உயிர் நீத்தார்கள்.  இன்று 53 ஆம் 55 ஆம் படையணியினர் முகமாலையினூடாக ஆனையிறவை முழுமையாக மீட்டுள்ளனர். ஆனையிறவு வெற்றிக்காக கடந்த காலங்களில் உயிர் நீத்த சகல படையினருக்கும் நாட்டின் கெளரவத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

வடக்கினதும் தெற்கினதும் ஒற்றுமையை வெளிக்காட்டும் பாதையாகவே A-9 வீதி குறிக்கப்படுகிறது. A-9 வீதியினூடாக பயணிக்க மக்களுக்கு சட்ட விரோத பயங்கரவாதத்தின் கட்டுப்பாட்டிற்கு அடிபணிய நேரிட்டது. A-9 வீதியினூடாக பயணித்த மக்களிடம் புலிகள் பல மில்லியன் ரூபா கப்பமாக பெற்றது. அந்த வரலாற்றை எமக்கு ஒருபோதும் மறக்க முடியாது.  புலிகளின் பிடியிலுள்ள இடங்களை மட்டு மன்றி வடக்கு மக்களின் சுதந்திரம் ஜனநாயகம் மற்றும் சமாதானத்தையே எமது படையினர் வென்று தந்துள்ளனர்.

பயங்கரவாதமில்லாத இலங்கையொன்றை உருவாக்கும் மனிதாபிமானப் போராட்டமே இன்று முன்னெடுக்கப்படுகிறது. முழு நாடுமே படையினரின் வெற்றிகளுக்கு தமது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறது. ஆனால் அந்த வெற்றிகளை இழிவுபடுத்தவும் மக்களின் கவனத்தை திசை திருப்பவும் உள்நாட்டு வெளிநாடடு சதிகள் முன்னெடுக்கப்படுகின்றன.  இந்த வெற்றிகளுக்கு முன்னின்று உழைக்கும் இராணுவத் தளபதி மீதும் அரசாங்கத்தின் மீதும் பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தவும் அதனூடாக நாட்டில் ஸ்தீரமற்ற தன்மையை ஏற்படுத்தவும், சர்வதேச ரீதியில் அவப்பெயர் ஏற்படுத்தவும் சதி முன்னெடுக்கப்படகிறது.

நத்தார் தினத்தில் ஜோசப் பரராஜசிங்கம் ஆலயமொன்றினுள் வைத்து சுடப்பட்டார். இதன் மூலம் நாட்டுக்கு சர்வதேச மட்டத்தில் அபகீர்த்தி ஏற்படுத்த முயற்சி செய்யப்பட்டது. சர்வதேச ஊடக தினத்தில் உதயன் பத்திரிகை மீது தாக்கல் நடத்தப்பட்டது.  தொப்பிகல மீட்கப்பட்ட சந்தர்ப்பத்தில் ஆங்கில பத்திரிகயொன்றின் ஊடகவியலாளர் கடத்தி தாக்கப்பட்டார். பல வருடங்களின் பின் பயங்கரவாதிகளுக்கு பலத்த தோல்வியை ஏற்படுத்தி விடத்தல்தீவை மீட்ட மறு தினம் வவுனியாவிலுள்ள முகாமொன்றின் மீது தீ வைக்கப்பட்டது.  தி. மகேஸ்வரன் கொல்லப்பட்ட போது அரசின் மீதே குற்றஞ் சுமத்தப்பட்டது. ஆனால், புலிகளே இந்தக் கொலையை செய்தனர் என பின்பு உறுதியானது.  கிளிநொச்சி வெற்றியின் சூடு தனிய முன்னர் ஊடக நிலையமொன்று தாக்கப்பட்டது. அதன் பின்னர் நாமறிந்த ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்டார்.  இந்த சகல சம்பவங்களினாலும் வெற்றி கிடைப்பது யாருக்கு? இந்த சதிகளின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை நாம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த உள்ளோம்.  இது எனக்கோ அரசுக்கோ எதிரான சதிகளல்ல. இது முழு நாட்டுக்கும் எதிரான சதியாகும். படையினரின் வெற்றியை கண்டு பீதியடைந்தவர்களே இந்த சதிகளின் பின்னால் உள்ளனர்.

எந்த சவாலுக்கும் முகம் கொடுக்கும் உறுதியுடனே நான் 2005 ஆம் ஆண்டு ஆட்சி பீடமேறினேன். தோற்கடிக்க முடியாது என்று கூறப்பட்ட பயங்கரவாதத்தை தோற்கடித்துள்ள எமக்கு சிறிய குழுவின் சதிகளைத் தோற்கடிப்பது இலகுவான விடயமாகும்.  நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு நாம் உயிரூட்டி வருகிறோம். ஜனநாயகத்துக்கு உயிரூட்டி வருகிறோம். பயங்கரவாதத்தை தோற்கடிப்பதென்பது சமாதானத்திற்கும் சுதந்திரத்திற்கும் உயிரூட்டும் நடவடிக்கையேயாகும்.
பருத்தித்துறையில் இருந்து தேவேந்திரமுனை வரை சுதந்திரமாக பயணிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் மற்றும் மலே மக்கள் ஒற்று மையாக வாழும் நிலையை நிச்சயமாக உருவாக்கு வோம். அந்த வெற்றிக்காக அனைவரும் ஒன்றுபடுவோம்.

இவ்வாறு ஜனாதிபதி உரையாற்றினார்.

தனது உளவு விமானத்தை ‘ரோ’ ‘பிரபாகரனைக் கண்காணிக்கவே பயன்படுத்தி வருகிறது. – திருமாவளவன்

thiruma.jpgதனது உளவு விமானத்தை ‘ரோ’ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைக் கண்காணிக்கவே பயன்படுத்தி வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

அண்மைக் காலமாக சிங்கள இனவெறி அரசு ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க இந்திய அரசு ராணுவ உதவிகளும் பண உதவிகளும் பெருமளவில் செய்து வருவது உறுதிப்பட்டு வருகிறது. கிளிநொச்சியை விட்டு விடுதலைப்புலிகளும் பொது மக்களும் இடம் பெயர்ந்துள்ள ஓரிரு நாட்களுக்குள் இந்திய அரசின் உளவு நிறுவனமான ரோ அமைப்பின் நவீன விமானம் ஒன்று தமிழீழத்தின் கடலோரப்பகுதிகளையும் காடுகளையும் கண்காணிப்பு ஆய்வு செய்வதற்கு 3-ம் தேதி அதிகாலை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து சில ‘ரோ’ அதிகாரிகளுடன் புறப்பட்டுச் சென்றுள்ளது.

உயர்ந்த தொழில் நுட்ப வேவு கருவிகளைக் கொண்ட இந்த வானூர்தி இரவு நேரத்திலும் தரையில் நடந்து செல்லும் ஒருவரை மிகத்துல்லியமாக புகைப்படம் எடுக்குமளவிற்கு ஆற்றலுடையது என்று தெரிய வருகிறது.

முதல் – அமைச்சர் கருணாநிதியின் முயற்சியில் இந்திய பிரதமரை சந்தித்து அனைத்துக்கட்சித் தலைவர்களின் கோரிக்கையையும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்தத்தை வலியுறுத்திய தீர்மானத்தையும் புறந்தள்ளியது மட்டுமில்லாமல் முல்லைத்தீவுப் பகுதிகளைக் கண்காணிக்க ரோ அமைப்பின் அதிகாரிகளை உயர் தொழில் நுட்ப உளவு விமானத்தில் அனுப்பியிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. பிரபாகரனை காட்டிக் கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது என்பதையே இது உறுதிப்படுத்துகிறது. தமிழீழ விடுதலைப்போரை நசுக்கவும், அதன் தலைவரை அழித்தொழிக்கவும் இந்திய அரசு வெளிப்படையாக ஈடுபட்டிருப்பது தமிழ்ச் சமூகத்தால் மன்னிக்கவே முடியாத செயலாகும்.

இந்திய அரசு,  இந்தக் காட்டிக் கொடுக்கும் கேவலத்தை உடனடியாகக் கைவிடவில்லையெனில் பொங்கியெழும் தமிழக மக்களுக்கு பதில் சொல்லியேத் தீர வேண்டும் என்று கூறியுள்ளார் திருமாவளவன்