எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

காயமடைந்த சிவிலியன்களை விடுவிக்க புலிகள் மறுப்பு பாரிய சந்தேகங்களை ஏற்படுத்துகிறது – கெஹலிய

kkhaliya.jpgவன்னியில் காயமடைந்துள்ளதாகக் கூறப்படும் 320 சிவிலியன்களை சிகிச்சைக்காக வவுனியாவிற்குக் கொண்டு வருவதைப் புலிகள் தடுப்பதானது பாரிய சந்தேகங்களை உருவாக்கியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். நேற்று தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் குறிப்பிட்ட அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது :-

வன்னியில் யுத்தத்தினால் காயமடைந்தவர்கள், நோயாளர்களென 320 பேர் புதுக்குடியிருப்பு அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை வவுனியாவிற்குக் கொண்டுவந்து சிறந்த முறையில் சிகிச்சைகளை வழங்கும் நோக்கில் ஐ. நா. அதிகாரிகள் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் மற்றும் படைத்தரப்பு அதிகாரிகள் பலரும் வன்னிக்குச் சென்றுள்ளனர்.  இறுதி நேரத்தில் அந்த நோயாளிகளை ஒப்படைக்க புலிகள் மறுத்துவிட்டனர். அரசாங்கம் உச்ச அளவில் சிகிச்சை வசதிகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே காயமடைந்தோரை அழைத்துவர தீர்மானித்தது.

அப் பகுதியில் பல சிவிலியன்கள் காயமடைந்துள்ளதாக செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் சிவிலியன்களா அல்லது பயங்கரவாதிகளா என எப்படி இனங்காண்பது? ஆயுதத்தைக் கீழே வைத்தால் புலிகளும் சிவிலியன்கள்தானே? இவர்கள் சிவிலியன்கள் என ஒரு அரச சார்பற்ற அமைப்பினருக்கு எவ்வாறு இனங்காண முடிந்தது?

எந்த சிவிலியன்களை இலக்கு வைத்தும் படையினர் தாக்குதல் நடத்தவில்லை. எனினும் சில ஊடகங்கள் இது பற்றி அங்குள்ள டாக்டர்கள் தமக்குத் தகவல் தந்ததாகத் தெரிவிக்கின்றன. ஊடகங்களின் தகவலின்படி அத்தகைய பெயருடைய எவரும் அரசவைத்தியர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. இந்த டாக்டர்கள் தகவல் தெரிவிக்கையில்:-

இராணுவத்தினரே இம்மக்களைச் சுட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். டாக்டர்கள் எவ்வாறு இப்படி கூற முடியும். இவர்கள் புலிகள் அமைப்பின் டாக்டர்களோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஒரு டாக்டர் எப்படி யுத்த நிலைமை சம்பந்தமாக விளக்கமுடியும்? எனவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கேள்வியெழுப்பினார்.
இத்தகைய விடயங்கள் தொடர்பில் தகவல்களை வெளியிடும் ஊடகங்கள் கவனமாகச் செயற்படுவது அவசியம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருணா‌நி‌தி இல‌ங்கை செ‌ல்ல வே‌ண்டு‌‌ம்: ஜெயல‌லிதா

jaya.jpgஇலங்கை அதிபர் ராஜப‌க்சேயின் அழைப்பை ஏற்று முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி இலங்கை செல்ல வேண்டும் என்றும், அவர் சொன்னால்தான் விடுதலைப் புலிகள் கேட்பார்கள் என்றும் அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா கூறினா‌ர்.
   
அ.இ.அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் அவ‌ர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அ‌ப்போது, இலங்கை வர வேண்டும் என்றும், பிடித்து வைத்துள்ள தமிழர்களை விடுவிக்கும்படி விடுதலைப் புலிகளை கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் ராஜப‌‌க்சே கூறியிருப்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. இத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த அவ‌ர், எனக்கு அவர் விடுத்த அழைப்புக்கு நன்றி. நான் போவதால் எந்த நன்மையும் ஏற்படாது. விடுதலைப் புலிகள் நான் சொல்வதை கேட்க மாட்டார்கள் என்ற‌‌ா‌ர்.

மேலு‌ம் இலங்கையில் அமைதியும், போர் நிறுத்தமும் ஏற்பட வேண்டும் என்பதே இப்போது முக்கியமானதாகும். இத‌ற்காக கருணாநிதி இலங்கை போக வேண்டும். அவர் சொன்னால் விடுதலைப்புலிகள் கேட்பார்கள். ஆகவே அவரை அழைத்துச் சென்று விடுதலைப் புலிகளை ஆயுதத்தை ஒப்படைக்கும்படி கூறலாம் என்று‌ம் ஜெயலலிதா தெ‌ரி‌வி‌த்தா‌ர். 

“தமிழனாக ஏன் இந்தியாவில் பிறந்தேன் என்று வேதனையாக இருக்கு’’ : நடிகர் வடிவேலு

vadivel.jpgஇலங்கை பிரச்சனை தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன் ராமேஸவரத்தில் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் நடிகர் வடிவேலு. இப்போராட்டத்தில் பேசும்போது, ‘’நம்ம தமிழச்சிகளை கற்பழித்து உடம்பு முழுக்க பிளேடால் கிழிக்கிறான் சிங்களன். இந்த கொடுமையெல்லாம் எப்போது முடிவுக்கு வரும்’’ என்று அப்போது வேதனைப்பட்டார். பின்னர், சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் நடந்த இலங்கை பிரச்சனை போராட்டத்திலும் கலந்து கொண்டு குரல்கொடுத்தார்.

இந்நிலையில், இலங்கை பிரச்சனையை முன்வைத்து 7 வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி மாணவர்களை சந்தித்தார் வடிவேலு. அப்போது, ‘’இலங்கையில் 300 பேர் இறந்துவிட்டனர், 1000 பேர் காயமடைந்தனர் என்ற செய்திகளை படிக்கும் போது வேதனையாக இருக்கு. தமிழனாக ஏன் இந்தியாவில் பிறந்தேன் என்று வேதனையாக இருக்கு’’ என்றார். அவர் மேலும், ‘’மாணவர்கள் போராட்டம்தான் எல்லா போராட்டத்திற்கும் வெற்றியை அளித்துள்ளது. இப்போராட்டமும் வெற்றியை அளிக்கும்’’ என்றார்.

கல்முனை அஷ்ரப் ஆஸ்பத்திரிக்கு அவசர சத்திர சிகிச்சைப் பிரிவு

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு ஈரான் இஸ்லாமியக் குடியரசு இமாம் கொமெய்னி நிதி நிறுவனத்தால் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவு அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கைக்கான ஈரான் நாட்டு தூதுவர் மஃமூத் றகிமி கோஜி கல்முனை மாநகர முதல்வர் எச். எம். எம். ஹரீஸிடம் உறுதியளித்துள்ளார்.

ஈரான் தூதுவர் மஃமூத் றகிமி கோஜிக்கும், கல்முனை மாநகர முதல்வர் எச். எம். எம். ஹரீஸ¤க்கும் இடையே நேற்று முன்தினம் (27)  ஈரானிய தூதுவராலயத்தில் ஒரு மணிநேரம் இச் ந்திப்பு இடம் பெற்றது. இச்சந்திப்பின் போது கல்முனை மாநகரத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தி பற்றி முதல்வர் உயர் ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தினார்.

இலங்கையுடனும், ஜனாதிபதியுடனும் ஈரான் கொண்டுள்ள தொடர்புகளுக்கும் ஈரான் இலங்கைக்கு வழங்கி வரும் அபிவிருத்திசார் உதவிகளுக்கும் தனது மகிழ்ச்சியை தெரிவித்த கல்முனை முதல்வர் கிழக்கு மாகாணம் பயங்கரவாதப் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டதன் பின்னர் கல்முனை மாநகர பிரதேசத்தில் காணப்படும் கைத்தொழில்துறை, விவசாயம், மீன்பிடி என்பனவற்றின் முன்னேற்றம் பற்றியும் முதல்வரினால் எடுத்துக் கூறப்பட்டது. புலிகள் கிழக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்பு தற்போதைய அரசியல் சூழல், கிழக்கு மாகாண நிர்வாக செயற்பாடுகள், அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் கல்முனை முதல்வர் ஈரான் தூதுவருக்கு விரிவாக எடுத்துக் கூறினார்.

கல்முனை மாநகர சபை ஏற்பாடு செய்துள்ள கலாசார பெருவிழா மார்ச் மாதம் முதல்வாரத்தில் நடைபெறவு ள்ளது. இவ் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொள் ளுமாறு கல்முனை மாநகர முதல்வர் ஈரானிய உயர் ஸ்தானிகருக்கு விடுத்த உத்தியோகபூர்வ அழைப்பையும் அவர் ஏற்றுக் கொண்டார். இக் கலாசாரப் பெருவிழாவில் ஈரான் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஈரான் நாட்டுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வழங்கும் உதவித் திட்டத்தில் ஈரான் கிராமிய மின் திட்டங்களுக்கு கூடுதல் உதவி புரிகின்றது. இதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள கிராமங்களுக்கும் இம்மின்சாரத் திட்டத்தை விஸ்தரிக்க வேண்டுமெனவும் கல்முனை முதல்வர் கோரிக்கை விடுத்தார்.

யுத்த வெற்றிக்காக அரசு, படையினரை பாராட்டுகிறார் ரணில்

ranil-2912.jpgவடபகுதி யுத்தத்தில் வெற்றியீட்டியமைக்காக அரசாங்கத்தையும் படையினரையும் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பாராட்டியுள்ளார். வெற்றியை சாத்தியமாக்கிய எமது ஆயுதப்படைகளின் வீரத்தையும் உணர்வையும் நாங்கள் எந்தவித தயக்கமுமின்றி பாராட்டுகின்றோம். எமது நாட்டின் இறைமை பாதுகாக்கப்பட்டுள்ளது.அத்துடன் நாட்டின் ஆட்புல ஒருமைப்பாடும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று ரணில் கூறியுள்ளார். பயங்கரவாத நடவடிக்கைகளை தடுத்ததற்காக ஆயுதப்படையினருக்கு ஐ.தே.க. மரியாதை செலுத்துகின்றது. அத்துடன் பொலிஸார் விசேட அதிரடிப்படையினரின் சேவைகளையும் ஐ.தே.க. பாராட்டுகின்றது என்று ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று முன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அறிக்கையொன்றை ரணில் விடுத்தார். அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது; வடக்கில் ஏற்பட்டிருக்கும் இராணுவ வெற்றிகளுக்காக ஆயுதப்படைகளுக்கு ஐ.தே.க. மரியாதை செலுத்துகின்றது. அவர்களின் வெற்றிகள் உண்மையில் மனதில் கொள்ளப்படக்கூடியவையாகும்.  இப்போது வடமாகாணத்தின் சகல மாவட்டங்களும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. புலிகளின் பலத்தை எமது படைகள் உடைத்துவிட்டன.

இந்த இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வை செய்த ஜனாதிபதி , பிரதமர் , அமைச்சர்கள் ஆகியோரையும் நாம் பாராட்டுகிறோம். அதேவேளை பலதடைகளை அரசு தாண்ட வேண்டியுள்ளதையும் நாம் நினைவூட்டுகிறோம். உண்மையான அரசியல் தீர்வே இறுதியான சமாதானத்தை கொண்டுவரும் . அதுவும் தாண்டப்படவேண்டிய தடைகளில் ஒன்றாக உள்ளது. அத்துடன் அது வன்னியில் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமைபற்றியதாகும். அவர்கள் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டவர்கள். சகல பிரஜைகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை நாம் வலியுறுத்துகிறோம். இந்த விடயம் கடமை மட்டுமல்லாமல் பிரக்ஞையானதுமாகும

கல்மடுகுளம் உடைக்கப்பட்டதால் பொதுமக்களே பாதிக்கப்பட்டனர் – இராணுவ பேச்சாளர்

vanni-kalmadu.jpgகல்மடு குளத்தை உடைப்பெடுக்கச் செய்து இராணுவத்தை பாதிப்படையச் செய்ய நினைத்த புலிகளின் திட்டம் பலிக்கவில்லை. மாறாக பெருமளவிலான பொதுமக்களும் பொதுமக்களின் சொத்துக்களுமே பாதிக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புலிகள் கல்மடு குளத்தின் அணை மீது நடத்திய தாக்குதலில் படையினருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தர்மபுரம் பகுதியிலிருந்த பொதுமக்களின் வீடுகளே பெரும் சேதத்துக்குள்ளாகின எனவும் அவர் தெரிவித்தார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவின் பல பகுதிகளைப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

நகரிலுள்ள டெலிகொம் நிறுவனத்துக்குச் சொந்தமான கட்டடத்தில் புலிகள் பல்வேறு சிதைவுகளை ஏற்படுத்தியுள்ளதைக் காண முடிந்தது. மீட்கப்பட்ட பகுதிகளில் புலிகளின் மோட்டார் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் நவீன இயந்திரம் அழிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதிகளிலிருந்து வெடி பொருட்களையும் படையினர் கைப்பற்றியுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வங்கிகளுக்கான எரிபொருள் ஹெட்ஜிங் கொடுப்பனவு மோதலை உயர்நீதிமன்றம் முடிவுக்கு கொண்டு வந்தது

petrol-pump2801.jpgவங்கி களுக்கான எரிபொருள் ஹெட்ஜிங் கொடுப்பனவுகள் தொடர்பான மோதலை உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. கடந்த நவம்பரில் வங்கிகளுக்கான எரிபொருள் ஹெட்ஜிங் கொடுப்பனவுகளை இடைநிறுத்திய உயர் நீதிமன்றம், உலகச் சந்தையில் எரிபொருள் விற்கப்படும் விலைக்கமைய பெற்றோலின் சில்லறை விற்பனை விலையையும் இடைநிறுத்திவைக்கும் பணிப்புரையை விடுத்திருந்தது.

அத்துடன், பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் அஜந்த டி மெல் ஆகியோரையும் இடைநிறுத்தி வைக்கும் பணிப்புரையை விடுத்திருந்தது. ஆனால், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. “இதனால் இடைநிறுத்தஉத்தரவும் முடிவுக்கு வந்துள்ளது. அவர்கள் வழக்கை தள்ளுபடி செய்து விட்டனர். விபரத்திற்காக நான் காத்திருக்கின்றேன்’ என்று அமைச்சர் பௌசி இது தொடர்பாக ராய்ட்டர் செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.  இந்த வழக்கை வர்த்தகர் ஒருவரும் சில எதிரணி அரசியல்வாதிகளுமாக தாக்கல் செய்திருந்ததாகவும் அதனை முன்கூட்டியே அவர்கள் வாபஸ்பெற முன்வந்ததாகவும் வழக்கறிஞர்கள் கூறினர். “நீதிமன்ற வழக்கு விசாரணைகளை பிரதம நீதியரசர் முடிவுக்கு கொண்டுவந்துள்ளார். இதன் விளைவாக சகல இடைக்கால உத்தரவுகளும் செயலிழந்துவிட்டன’ என்று மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி உதித்த எகலாஹேவ தெரிவித்தார்.

முஸ்லீம்கள் யோகா செய்ய இந்தோனேசிய உலமாக்கள் தடை

yoga.jpgஇந்தோ னேசியாவில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் யோகா செய்வது, வேத மந்திரங்களை முழங்குவது, தியானம் செய்வது ஆகியவற்றுக்கு இந்தோனேசிய உலமா கவுன்சில் தடை விதித்துள்ளது. இந்தோனேசியாவின் முக்கிய மத அமைப்பா உலமா கவுன்சில் சமீபத்தில் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதில் யோகா முஸ்லீம் மத நம்பிகைகக்கு விரோதமானது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், முழுமையான தடையை அவர்கள் விதிக்கவில்லை. இதுகுறித்து உலமாகவுன்சில் எடுத்த முடிவில், இந்தோனேசிய முஸ்லிம்கள் யோகாவை வெறும் உடற்பயிற்சியாக மட்டுமே செய்ய வேண்டும். அதோடு இணைந்து வேத மந்திரங்களை உச்சரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படி வேத மந்திரங்களை முழங்குவது, தியானம் செய்வது, முஸ்லிம் மத சட்டங்களுக்கு எதிரானது. இதனால் முஸ்லிம் மக்கள் வேறு மதத்தினரின் நம்பிக்கையை பின்பற்ற நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் சேவையில் ஈடுபடும் பஸ்கள் கொண்டிருக்க வேண்டிய தகைமைகள்

intercity-bus.jpgபயணிகள் சேவையில் ஈடுபடும் தனியார் சொகுசு பஸ் மற்றும் அரைச் சொகுசு பஸ்கள் கொண்டிருக்க வேண்டிய பயண வசதிகள் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. பயணிகளை கவர்வதற்கான சிறந்த பயண சேவையை வழங்கும் நோக்கில், இந்த அறிவித்தலை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதற்கிணங்க, ஆசன ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரைச் சொகுசு பஸ்களில் பின்வரும் 8 பயணிகள் வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவேண்டும். பயணிகள் ஆசனம் 700 மில்லிமீற்றர் உயரமும் 40 பாகை சரிவையும் கொண்டிருப்பதுடன் பக்க வாட்டில் கை இருக்க வசதிகள் இருக்கவேண்டும்.

ஆசனத்துக்கு மேலே இருக்க வேண்டிய இடைவெளி 680 மில்லிமீற்றர் ஆகவும் இரு ஆசனங்களுக்கு இடையிலான தூரம் 300 மில்லிமீற்றராகவும் இருப்பதுடன் ஆசனங்கள் இலக்க மிடப்பட்டிருப்பதுடன் பயணச் சீட்டுகள் ஆசனங்கள் தொடர் இலக்கத்தையும் கொண்டிருக்க வேண்டும்.

ஆசனங்களின் எண்ணிக்கை 40க்கு அதிகமில்லாமலும் பொதிகள் வைப்பதற்கான இடம் ஒரு சதுர மீற்றர் இடைவெளி கொண்டதாகவும் இருப்பதுடன் சாரதிக்கான பக்க கண்ணாடிகள் தவிர ஜன்னல் கண்ணாடி இலேசான நிறம் கொண்டவையாக இருக்க வேண்டும்.

அத்துடன், சொகு பஸ் வண்டிகளுக்கு இந்த வசதிகளுடன் மேலதிகமாக ஆசனங்கள் 25 ஆக இருப்பதுடன் குளிரூட்டப்பட்ட பஸ் சேவையாக இருக்க வேண்டும் எனவும் ஆணைக்குழுவின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூகத்தை வழிநடத்தக்கூடிய அரசியல் தலைமைத்துவங்கள் நிலையான கொள்கையை கொண்டிருக்கவேண்டும்’

vote.jpgசமூகத் தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் அச்சமூகத்தை வழிநடத்தும் தலைமைத்துவத்தின் ஆளுமையிலேயே தங்கியுள்ளது என்று தெரிவித்துள்ள மத்திய மாகாணசபைத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் மாட்டு வண்டிச் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சைக் குழுவின் தலைமை வேட்பாளரான எஸ். ஸ்ரீநிவாசன் இத்தேர்தலை தமிழர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் மந்தண்டாவளை பிரதேச தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; ஒரு சமூகம் ஆளுமை மிக்க தலைமைத்துவமொன்றை உருவாக்கிக்கொள்வதன் மூலமே தமது சமூகத்திலிருந்து நாட்டுக்கும் சமூகத்திற்கும் பேரும் புகழும் பெற்றுக்கொடுக்ககூடியதான புத்திஜீவிகளையும் கல்விமான்களையும் உருவாக்கிக்கொள்ள முடியும்.

எனவே இந்த மாகாணசபைத்தேர்தலில் மலையக தமிழ் மக்கள் தம்மை முறையாக வழிநடத்தக்கூடிய தலைமைத்துவத்தை தெரிவு செய்துக்கொள்வது அவசியமாகும் ஒரு சமூகத்தை வழிநடத்தக்கூடிய அரசியல் தலைமைத்துவங்கள் பச்சோந்திகளைப் போல் அவ்வப்போது நிறமாறிக்கொண்டிராது, நிலையானதும் உறுதியானதுமான கொள்கைகளை கொண்டிருக்க வேண்டும். தனது ஆளுமையை தனது மக்களது மேம்பாட்டுக்கு தியாகம் செய்யக்கூடிய மனப்பான்மையை கொண்டிருக்க வேண்டும்.

மத்திய மாகாணத்தைப் பொறுத்தவரையில் மாத்தளை மாவட்டத்திலேயே பெருமளவிலாக கல்விமான்களும் புத்திஜீவிகளும் உள்ளனர். பெரும்பாலும் சமூகத்தை வழிநடத்தக்கூடிய ஆளுமையும் உறுதியான அரசியல் கொள்கையுமுள்ள தலைமைத்துவமொன்றை உருவாக்கிக்கொள்ளமுடியாமல் போய்விட்டதால் பாராளுமன்ற பிரதிநிதித்துவமொன்றை பெற்றுக்கொள்ளக் கூடிய வாக்குப்பலமிருந்தும் மாகாணசபை உறுப்பினர் ஒருவரைக் கூட தெரிவுசெய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அன்றுமுதல் இன்றுவரை மாத்தளை வாழ் தமிழ் சமூகம் குறிப்பிட்ட ஒரு சில அரசியல்வாதிகளின் சுயநலத்துக்காக பெரும்பான்மை சமூக கட்சிகளுக்கே இரையாகிப் போயுள்ளனர். இந்த மாகாணசபைத் தேர்தலில் கூட மாத்தளை மாவட்டத்தில் பெரும்பான்மைக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் தமிழர்கள் வெற்றிபெறவேண்டும். குறைந்தபட்சம் 18 ஆயிரம் விருப்பு வாக்குகளை பெறவேண்டும். இதேசமயம், சுயேச்சைக்குழுவில் போட்டியிடும் நாம் வெற்றிபெறவேண்டுமெனில் சுமார் 6 ஆயிரம் விருப்புவாக்குகளை பெற்றுவிட்டால் போதுமானது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் மாத்தளை மாவட்டத்தில் பிரதான அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் எந்தவொரு தமிழ் அரசியல்வாதியாலும் 18 ஆயிரம் விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொள்வது கடினமான விடயமாகும் என்றார்.