விஸ்வா

விஸ்வா

கிளி.பச்சிலைப்பள்ளியில் தை மாதத்திற்கு முன்னதாக எஞ்சியுள்ள அனைவரும் மீள்குடியேற்றப்படுவர்.

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலர் பிரிவில் இன்னமும் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் முகாம்களில் தங்கியுள்ள மக்கள் எதிர்வரும் தை மாதத்திற்கு முன்னதாக மீள்குடியேற்றம் செய்யப்படுவர் என பச்சிலைப்பள்ளி பிரதேசச்செயலர் ரி.முகுந்தன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மிள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய நிலையில் 72 குடும்பங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. பச்சிலப்பள்ளி பிரதேச்செயலர் பிரிவில் இதுவரை 2393 குடும்பங்களைச் சேர்ந்த 7426 மக்கள் மீள்குடியர்த்தப் பட்டுள்ளதாகவும் பிரதேசச் செயலர் தெரிவித்துள்ளார். தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாகவும் முகாம்களில் எஞ்சியுள்ள மக்களை மீள்குடியேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 35 யாழ்.மாணவர்கள் 3 ‘ஏ’ திறமைச்சித்தி.

sri-lankan-students.jpgக.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று செவ்வாய்கிழமை இணைத்தளத்தில் வெளியாகியுள்ள நிலையில் யாழ். மாவட்டத்தில் 35 பேருக்கு மூன்று ‘ஏ’ திறமைச்சத்தி கிடைத்துள்ளது.

வேம்படி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த சுமங்கலி சிவகுமார் என்ற மாணவி கணிதப்பிரிவில் மூன்று ‘ஏ’ திறமைச் சித்தி பெற்று யாழ்.மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் பாலகோபாலன் கோகுலன் என்ற மாணவன் உயிரியல் பிரிவில் மூன்று ‘ஏ’ சித்திபெற்று யாழ்.மாவட்டத்தில் முதலிடத்தில் உள்ளார். வர்த்தகப் பிரிவிலும் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் புருசோத்தமக்குருக்கள் ராஜாராம் மூன்று ‘ஏ’ பெற்று மாவட்டத்தில் முதலிடத்தில் உள்ளார். கலைப்பிரிவில் கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலய மாணவன் குணசிங்கம் தர்மேந்திரன் மூன்று ‘ஏ’ சித்தி பெற்று மாவட்டத்தில் முதலிடத்தில் உள்ளார்.

யாழ்.இந்துக் கல்லூரியில் கணிதப்பிரிவில் 9 பேரும், உயிரியல் பிரிவில் 3 பேரும் மூன்று ‘ஏ’ சித்தி பெற்றுள்ளனர். வேம்படி மகளிர் கல்லூரியில் கணிதப்பிரிவில் 4 பேரும், உயிரியல் பிரிவில் 3 பேரும், வர்த்தகப்பிரிவில் 2 பேரும் 3 ஏ சித்தி பெற்றுள்ளனர். கொக்குவில் இந்துக் கல்லூரியில் கணிதப் பிரிவில் ஒருவரும், உயிரில் பிரிவில் 3 பேரும் மூன்று ‘ஏ’ சித்தி பெற்றுள்ளனர். சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கணிதம், உயிரியல், கலை ஆகிய பிரிவுகளில் தலா ஒவ்வொருவரும், நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் வர்த்தகப்பிரிவில் ஒருவரும் மூன்று ‘ஏ’ சித்தியும் பெற்றுள்ளனர்.

யாழ். வெள்ள அனர்த்தத்திற்கு அவசர நிதி ஒதுக்கிடு.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு அனர்த்த நிலமையை சீர்செய்வதற்காக அவசரமாக பத்து இலட்ச ரூபா நிதியை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஒதுக்கியுள்ளதாக யாழ். அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களில் மூவாயிரம் ரூபாவிற்கு குறைவாக மாதாந்தம் வருமானம் பெறும் மக்களுக்கே இந்த நிதியிலிருந்து சமைத்த உணவு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைவிட கூடாரங்களுக்குள் வெள்ளம் புகுந்து நிலம் ஈரமாகியுள்ள நிலையில் தங்கியுள்ள மக்களுக்கு பிளாஸ்ரிக் விரிப்புக்களை வழங்க அரசசார்பற்ற நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாநகரசபைக்கான இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாநகரசபைக்கு புதிதாக இணையத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய் கிழமை இந்த இணையத்தளத்தை மாநகரசபை முதல்வர் வைபவ ரிதியாக ஆரம்பித்து வைத்தார்.

மாநகர சபை ஆணையாளர் மு.சரவணபவ தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. யாழ் மாநகர சபை இணையத்தளத்தின் முகவரி www.jaffnamc.lk என்பதாகும்.

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் கைக்குண்டு மீட்பு.

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக யாழ்.நகருக்குப் பொறுப்பான படைத்தரப்பு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்திலுள்ள உணவகத்தின் பின்புறத்தில் கை;கண்டு ஒன்று காணப்பட்டது.

நேற்று செவ்வாய் கிழமை காலை பல்கலைக்கழக வளாகத்தில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சுத்திகரிப்பு பணியாளர்கள் கொடுத்த தகவலையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினர் படையினருக்கு தெரிவியப்படுத்தினர் இதனையடுத்தே இக்குண்டு மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் தமிழர்களின் ஜனாதிபதிக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்!

Angajan_Ramanathanலண்டனில் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் நேற்று ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள் நடத்தப்பட்டுள்ளன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்டக் கிளையினரின் ஏற்பாட்டிலும் படையினரின் ஏற்பாட்டிலும் அந்த ஆர்ப்பாட்ட பேரணிகள் இடம்பெற்றன. இப்பேரணிகள் முதலில் தனித்தனியாக ஒழங்கு செய்யப்பட்டு பின்னர் ஒன்றிணைக்கப்பட்டது.

நேற்று செவ்வாய்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து ஆரம்பான பேரணி ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாதைகளுடன் முற்றவெளிப் பகுதியூடாக யாழ்.பஸ்நிலையத்திற்கு வந்தடைந்தது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் இ. அங்கஜன் அங்கு உரையாற்றினார். பின்னர் அங்கிருந்து ஆஸ்பத்திரி வீதியூடாக சென்று ஆரியகுளம் சந்தி, ஸ்ரான்லி வீதி வழியாக பேரணி மீண்டும் யாழ்.பஸ்நிலையத்தை வந்தடைந்தது.

ஆர்ப்பட்ட நடவடிக்கைக்காக குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் பஸ்கள் மூலம் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். மழை பெய்து கொண்டிருந்த நிலையில் இப்பேரணி நடைபெற்றதால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டது.

போரின் போது முல்லை மாவட்டத்தில் உடமைகளை கைவிட்டவர்கள் அவற்றை மீட்டுச்செல்ல அனுமதி.

இறுதிகட்ட யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து வந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் தங்கள் உடமைகளை கைவிட்டவர்கள் தங்களின் உடமைகளை எடுத்துச் செல்வதற்கான அனுமதியைப் பெறும் விண்ணப்பத்தை புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் செயலகத்தில் சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

முல்லை மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவைச் சேர்ந்த உடையார்கட்டு வடக்கு, சுதந்திரபுரம், தேவிபுரம், வள்ளிபுரம், இரணைப்பாலை. ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளில் பொருட்களைக் கைவிட்டவர்களே இவ்வாறான நடைமுறையைக் கடைப்பிடிக்குமாறு கோரப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் உரிமையாளர்கள் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய தங்கள் பொருட்களை எடுத்துச்செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக படையினரின் உதவி பெறப்பட்டுள்ளது.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் கடும் மழைகாரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினையடுத்து படையினரின் உதவி பெறபட்டுள்ளது. 57வது படைப்பிரிவினரின் உதவி பெறப்பட்டுள்ளதோடு, திருகோணமலையிலிருந்து கடற்படையினரின் உதவியும் கோரப்பட்டள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக பல பாதைகள் துண்டிக்கபட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்காக நிவாரணப் பொருட்கள் கடற்படையினரின் படகுகள் ஊடாகவே தற்போது கொண்டு செல்லப்படுகின்றன.

கிளிநொச்சியில் தட்டுவன்கொட்டி, கண்டாவளை ஆகிய கிராமங்களுக்கான ஒரேயொரு பாதையும் துண்டிக்கபட்டுள்ளது. தட்டுவன்கொட்டியில் சுமார் 80 குடும்பங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு நிர்க்கதியான நிலையிலுள்ளன. இவர்களுக்கான போக்குவரவு மற்றும், நிவாரண உதவிகளை வழங்குவதற்கு தற்போது கடற்படையினரின் படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முல்லை மாவட்டத்திலும் பல வீதிகள் வெள்ளத்தால் துண்டிக்கபட்ட நிலையில் அப்பகுதி மக்களுக்கான உதவிகளை மேற்கொள்வதற்கும் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்து பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் தங்கியுள்ள மக்களுக்கு துரிதமாக உதவிகளை வழங்கும் நோக்கில் நேற்று திங்கள் கிழமை கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் அவசர உதவி வழங்கும் மாநாடு ஒன்று இடம்பெற்றுள்ளது. உதவி அரசாங்க அதிபர்கள், உள்ளூராட்சி திணைக்கள உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இதேவேளை, நேற்றும் இன்றும் மழை பெய்வது தணிந்து, காலநிலை ஓரளவு சீராகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் சீரான முறையில் வழங்கப்படுவதில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்

வன்னியில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களுக்கு பல்வேறு பட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்ற போதும் அவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீராகச் சென்றடைவதில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். நெற்செய்கையாளர்கள். தோட்டச்செய்கையாளர்கள், கால்நடை வளர்ப்போர் என பலவேறு தரப்பினருக்கும் நிறுவனங்களால் வழங்கப்படுகின்ற உதவிகளை குறிப்பட்ட சிலரே பெற்றுக்கொள்ள முடிவதாகவும,; எதுவித முன்னறித்தலும் இல்லாமல் இவை வழங்கப்படுவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை, வீடமைப்பு வீட்டுச் சேதங்களுக்கான உதவிகள், குடிநீர்க்கிணறுகள் இறைத்துக்கொடுத்தல் போன்ற பணிகளும் அரசசார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளபட்டு வருகின்றன இவை கூட தேவைப்படுவோருக்கு சரியான முறையில் கிடைப்பதில்லை என தெரிவிக்கப்படுகின்றது கிராமசேவை அலுவலர்களின் அக்கறையின்மை மற்றும், கிராம அபிவிருத்திச்சங்களைச் சேர்ந்தவர்களின் சுயநலமான செயற்பாடுகள் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

க.பொ.த பரீட்சையில் தோற்றவிருக்கும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு விசேட பரீட்சை நிலையங்கள்.

000stud.jpgஇலங்கையில் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைகள் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு விசேட பரீட்சை நிலையங்கள் ஒழங்கு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் இவர்களுக்கான பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, பூசா முகாமிலும் பரீட்சை நிலையம் அமைக்கபட்டுள்ளது. பூசா முகாமிலுள்ள 55 முன்னாள் புலி உறுப்பினர்கள் க.பொ.த பரீடசைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.