விஸ்வா

விஸ்வா

கைத்தொலைபேசியில் புலிகளின் பாடல்களை வைத்திருந்த மூவர் கைது!

மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் பாடல்களை கைத்தொலைபேசியில் பதிவு செய்து வைத்திருந்த மூன்று இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாhரின் திடீர் பரிசோதனைகளின் போதே இவ்விளைஞர்கள் தங்கள் கைத்தோலைபேசியில் இப்பாடல்களை வைத்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

வாகரை, நாவற்குடா, ஆரையம்பதி ஆகிய பிரதேசங்களைச்சேர்ந்த இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் மட்டக்களப்பில் சில இளைஞர்கள் கைத்தொலைபேசியில் புலிகளின் படங்கள், பாடல்களை போன்றவற்றை வைத்திருந்த காரணத்தினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வன்னியில் இறுதிப் போரில் கைவிடப்பட்ட வாகனங்கள் சில பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

வன்னியில் இறுதிப் போரின் போது பொது மக்களால் கைவிடப்பட்ட சைக்கிள்களைத் திருத்தியமைக்க 10 மில்லியன் ரூபாவிற்கு மேல் செலவாகியுள்ளதாக வடமாகாண சபை ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்துள்ளார். நேற்று கைவிடப்பட்ட வாகனங்கள் சில உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கையிடப்பட்ட இவ்வாகனங்களை ஓரிடத்தில் கொண்டு வந்து சேர்ப்பதற்கு நான்கு மாதங்கள் எடுத்ததென்றும் அவர் தெரிவித்தார். நேற்று (June 24 2010) வாகனங்களை சட்டபூர்வமாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு கிளிநொச்சியில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமத.p ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.

இதன்போது கையளிப்பட்ட மோட்டார் வாகனங்கள் திருத்தப்பாடாமலேயே கையளிக்கப்பட்டன. சைக்கிள்கள் சில திருத்தப்பட்டு கையளிக்கப்பட்டன.

14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சைக்கிள்களும். 7ஆயிரத்திற்கும்  மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் கிளிநொச்சியில் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளன. மோட்டார் சைக்கிள்கள் பல உதிரிப்பாகங்கள்  அகற்றப்பட்ட நிலையில் உள்ளதை அங்கு நேரில் சென்று பார்க்கும் போது தெரிந்து கொள்ள முடிகிறது.

வடமாகாணசபை அலுவலகம் கிளிநொச்சியில் இயங்கவுள்ளது.

இதுவரை காலமும் திருகோணமலையில் இயங்கி வந்த வடமாகாண நிர்வாக அலகுகள் இனி கிளிநொச்சியில் இயங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைய இம்மாற்றம் ஏற்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் வடமாகாண சபையின் நிர்வாக அலகுகள் அனைத்தும் கிளிநொச்சியில் இயங்கத் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சிக்கும் முறிகண்டிப் பகுதிக்குமிடையில் ஏ-9 வீதியின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அறிவியல் நகரில் விடுதலைப் புலிகளால் கட்டப்பட்ட தமிழ்மொழிப் பல்கலைக்கழக கட்டடத்தில் வடமாகாண சபையை இயக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். எனினும், மூன்று வருடங்களுக்குள் மாங்குளத்தில் மகாணசபைக்கான நிரந்தக்கட்டடம் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, இலங்கை வங்கியின் வட மாகாண அலுவலகம் எதிர்வரும் 4ம் திகதி யாழ்ப்பணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இதனைத்திறந்து வைக்கவுள்ளார்.

”நீதிபதிகள், சட்டத்தரணிகள் துணிச்சலுடன் செயற்பட வேண்டும்” ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன்

Wigneswaran_C_V_Justiceகுற்றச் செயல்களை, சமூகச் சிரழிவு நடவடிக்கைளை துணியுடன் கண்டிக்க, தட்டிக் கேட்க விழையும் நீதிபதிகள் திடீரென இடமாற்றம் செய்யப்படுவது அதிர்ச்சியளிக்கும் விடயம் என ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  காலஞ்சென்ற சட்டத்தரணி எஸ்.ஆர் கனகநாயகத்தின் உருவப்படம் நேற்று (June 24 2010) மாலை யாழ். நீதிமன்றக் கட்டடத்தொகுதியில் அமைந்துள்ள யாழ்.சட்ட நூலகத்தில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்துகெண்டு உருவப்படத்தை திரை நீக்கம் செய்து நிகழ்த்திய நீண்ட உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

”‘ஏசியா நியூஸ்’ என்ற ஊடகத்திற்கு மனித உரிமைகள் பணியாளரும், சட்ட சமூக நம்பிக்கையகப் பணிப்பாளருமான ஒரு சிங்கள சகோதரர் ருக்~ன் பெர்னாண்டொ வடமாகாணத்தில் இராணுவ ரீதியான தாக்குதல்களுக்கு பதிலாக கலாசார, மதரீதியான தாக்குதல்கள் நடைபெறுவதாகவும், வடமாகாணம் சிங்கள மயமாதலை எதிர்கொண்டுள்ளதெனவும் கூறி அது பற்றிய விபரங்களையும் கூறியிருந்தார்.

இப்படியான ஒரு சூழலில் யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக கொலை. கொள்ளை, கற்பழிப்பு, மற்றும் கலாசார சிரழிவுகள் நடைபெற்று வருவருவதை நீங்களும் அறிவீர்கள். தெற்கிலிருந்து விலைமாதர்களும் கொண்டுவரப்பட்டு எமது இளைஞர்களுக்கு வலைவிரிப்பதாகவும், போதைப் பொருட்கள் கல்விக் கூடங்களுக்கு அருகில் விற்பனைக்கு விடப்படுவதாகவும் அறியக்கிடைத்தது.

எமது சொந்த தமிழ் இரத்தங்களும் இப்பேர்பட்ட சமூகச் சீரழிவு நடவடிக்கைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்று கேள்விப்படுகின்றபோது மனவேதனை ஏற்படுகின்றது.  இவ்வாறான சமூகச் சீரழிவுகளை துணிச்சலுடன் கண்டிக்கும் நீதிபதிகள் திடீரென இடமாற்றம் செய்யப்படுகின்றமை அதிhச்சியளிக்கின்றது. எனினும், இந்த அழிவுகளிலிருந்து குடாநாட்டை மீடபதற்கு நீதிபதிகள், சட்டத்தரணிகள் ஆகியோரின் ஒன்றிணைந்த துணிச்சலான பங்களிப்பு முக்கியமானது. 

பின்னணியில் வன்முறைகளைக் கையாள்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அதிகாரத்திலுள்ளவர்கள் துணை போகின்றார்கள் எனப் பயந்து சட்ட நடவடிக்கைகளைக் கைவிடக்கூடாது.  எமது சூழலில் நடப்பவை நீதிமன்றங்களில் எதிரொலித்தால் தான் வெளிநாட்டவர் கூட அவற்றைக் கவனத்தில் எடுப்பர்.”

இவ்வாறு ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் தனது உரையில் தெரிவித்தார்.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பொது உடன்பாடு காண்பதற்காக தமிழ் கட்சிகள் கொழும்பில் ஒன்றுகூடின.

douglas-devananda.jpgஇனப் பிரச்சனைக்கான பொது அரசியல் இணக்கப்பாடு ஒன்றைக் காண்பது தொடர்பாக தமிழ் அரசியல் கட்சிகள் நேற்று (June 24 2010) கொழும்பில் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளன. கொழும்பிலுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் நேற்று மாலை 6.15 மணியளவில் இச்சந்திப்பு ஆரம்பமாகி நடைபெற்றது.

தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே இன்ப்பிரச்சினைக்கான தீர்வை விரைந்து காணமுடியும் என்கிற கருத்தை இச்சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் வெளிப்படுத்தினர். மீண்டும் யூலை முதலாம் திகதி இக்கட்சிகள் ஒன்று கூடும் எனவும் இச்சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டது.

TamilPartys_Meeting_24thJune10ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதன் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என். டக்ளஸ் தேவானந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (வரதர் அணி) சார்பில் என். சிறிதரன், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு சார்பில் எம்.கே. சிவாஜிலிங்கம், என் சிறிகாந்தா, சிறிரெலோ சார்பில் எஸ்.உதயன், ஈரோஸ் சார்பில் பிரபா ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக தமிழ் அரசியல் கட்சிகள் ஒரு பொது இணக்கப்பாட்டை எட்டுவது தொடர்பாக இச்சந்திப்பில் ஆராயப்பட்டது. இரண்டு மணித்தியாலங்கள் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

நடைபெற்ற இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு. தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை.

கிளிநொச்சி செயலகத்தில் நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்காக எதிர்வரும் 29, 30 ஆம் திகதிகளில் நடமாடும் சேவை ஒன்று நடத்தப்படவுள்ளது. நீதி மறுசீரமைப்பு அமைச்சின் அனுசரணையுடன் அரசாங்க நிர்வாக மற்றும், உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இந்த நடமாடும் சேவை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடத்தப்படவுள்ளது. இச்சேவையில் கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பொதுமக்கள் பயன் பெற முடியும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பிறப்பு, இறப்பு, திருமண அத்தாட்சிப் பத்திரங்கள் தொடர்பான சேவை, தேசிய அடையாள அட்டை தொடர்பான சேவை, காலங்கடந்த ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பான விடயம், விதவைகள் அநாதைகள் ஆகியோருக்கு ஓய்வூதிய இலக்கம் வழங்கல், போன்ற சேவைகளை இந் நடமாடும் சேவையில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அடுத்த அமைச்சரவைக் கூட்டம் கிளிநொச்சியில்!

இலங்கை அரசாங்கம் அடுத்து நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தை கிளிநொச்சியில் நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டமும், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடும் கிளிநொச்சியிலேயே நடைபெறும் என அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நடைபெறவுள்ள அமைச்சரவைக்கூட்டத்திற்குச் செல்லும் அமைச்சர்கள் தங்கள் அமைச்சு சார்ந்த அபிவிருத்தித் திட்டங்களை அங்கு பார்வையிடுவார்கள் எனவும் அங்கு மீள்குடியேற்றபட்டுள்ள மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றிற்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பர் எனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாகாணத்திலும் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துவதற்கான ஆலோசனையை ஜனாதிபதி முன்வைத்துள்ளதாகவும் அமைச்சரவைக் கூட்டத்திற்கு முதல் நாள் அப்பிரதேசத்தில் நடமாடும் சேவை ஒன்றினை நடத்துவதற்கும் ஜனாதிபதி ஆலோசனை கூறியுள்ளதாகவும், அதன்படி  கிளிநொச்சியில்  முதலாவதாக இது நடைபெறவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் யூலை 14ம் திகதி அமைச்சரவைக் கூட்டம் கிளிநொச்சியில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக்கூட்டத்தின் போது செய்தியாளர்களும் கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

‘புறக்கோட்டைக் குண்டு வெடிப்பிற்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை.’ பொலிஸ் பேச்சாளர்

கொழும்பு புறக்கோட்டையில் நேற்று (June 24 2010) இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளுக்குத் தொடர்பில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவத்துள்ளார். கடந்த வருடம் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் அவர்களால் எந்தவொரு தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட வில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புறக்கோட்டை போதிராஜ மாவத்தையில்  நேற்று அதிகாலை நடைபெற்ற கைக்கண்டுத் தாக்குதலினால் ஐந்து படையினர் உட்பட ஒன்பது பேர் காயமடைந்தனர். இக்கைக்குண்டு வெடிப்பிற்கு எவரும் காரணமா அல்லது தற்செயல் விபத்தா என்பது குறித்து பொலிசார் ஆராய்ந்து வருகின்றனர். நேற்று மாலை வரை இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

‘போர்குற்ற விசாரணைகளில் அரசாங்கத்தின் சாட்சியாக கே.பி!’ கெஹலிய ரம்புக்வெல

minis-kahali.jpgபோர் குற்ற விசாரணைகளின் போது அரசாங்கத்தின் சாட்சியாளராக கே.பி பயன்படுத்தப்படுவாராம்

சர்வதேச அமைப்புக்களாலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களினாலும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக அரசாங்கத்தின் சாட்சியாளராக கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் பயன்படுத்தப்படுவார் என அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவத்துள்ளார்.

அரசாங்கத்தின் பொறுப்பில் தற்போது இருக்கும் கே.பி கடந்தவாரம் வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்தோர் நிவாரண முகாம்களுக்குச் சென்றதாகவும், இடம்பெயர்ந்த மக்களையும், விடுதலைப் புலிகள் சந்தேக நபர்களையும் அவர் சந்தித்ததாகவும், அவர் வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் குறித்தும், கே.பி தொடர்பாக அரசாங்கம் எதிர்காலத்தில் என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது என்பது தொடர்பாகவும் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கே.பி தொடர்பாக தீர்மானங்களை எடுக்கும் உரிமை இலங்கைக்குண்டு, அவர் தொடர்பாக சர்வதேசத்தில் காணப்படும் பிரச்சினைகளையே முதலில் தீர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related News:

வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக கே.பி?

புலம்பெயர்ந்த புலித் தலைவர்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு – கே.பி. உட்பட 9 பேர் கொழும்பில் பேச்சுவார்த்தை

கே.பி.க்கு மன்னிப்பு வழங்குவதென அரசு தீர்மானித்தால் ஆச்சரியப்படமாட்டேன் அமைச்சர் கெஹலிய

தோட்டங்களில் வேலைக்கமர்த்தப்படும் பெண்கள் கர்ப்பம் தரித்துள்ளனரா என சோதிக்கப்படுகிறார்கள்!

மலையகத் தோட்டப் பகுதிகளில் உள்ள இளம் பெண்கள் தோட்டத் தொழிற்துறையில் வேலைக்கமர்த்துவதற்கு முன்னதாக  அவர்கள் காப்பம் தரித்துள்ளனரா என ஆராயும் மருத்துவ சேதனைகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைக் கண்டித்து தற்போது இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளி ரகுநாதன் இம்முறைப்பாட்டைச் செய்துள்ளார். தோட்டத் தொழிற்துறையில் இளம் பெண்களை வேலைக்கு அமர்த்தும் போது அவர்கள் காப்பம் தரித்துள்ளனரா என ஆராயும் நடவடிக்கைகள் பெண்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

காப்பம் தரித்த பெண்களை வேலைக்கமர்த்துவதால். பிரசவத்தின் போது பல கொடுப்பனவுகளை வழங்க வேண்டி வரும் என்பதற்காகவே தோட்ட நிர்வாகம் பெண்களிடம் இவ்வாறான மருத்துவ சோதனைகளை நடத்தவதாக தெரியவருகின்றது.