விஸ்வா

விஸ்வா

தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு தென்னிலங்கையில் வேலை வாய்ப்பும் தமிழ் மக்களின் சந்தேகங்களும் : விஸ்வா

Sritharan_SivagnamTNA_MPTextile_Factory_in_SLகிளிநொச்சியைச் சேர்ந்த இளம் பெண்கள் தொழில்பயிற்சிக்கென கண்டிக்கு அழைத்துச்செல்ல மேற்கொண்ட முயற்சியொன்று  தடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான ஆடைகளை உற்பத்தி செய்யும் தனியார் நிறவனம் ஒன்று 40 யுவதிகளை தொழில்வாய்ப்புக்கென அழைத்துச்செல்ல முயன்ற இறுதித் தருணத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக முன்னர் வெளியான செய்தி : தென்னிலங்கை ஆடைத்தொழிற்சாலைகளில் யாழ்.இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

கவர்ச்சிகரமான சம்பளம் மற்றும் இலவச இருப்பிட வசதிகள் மற்றும் மேலதிக வசதிகள் செய்து கொடுக்கப்படும் என துண்டுப் பிரசுரங்கள் மூலம் ஏற்கனவே கிளிநொச்சி கிராமங்கள் தோறும் விளம்பர துண்டுப் பிரசரங்களை விநியோகம் செய்து இந்நிறுவனம் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டிருந்தது. இதனை நம்பிய யுவதிகளும் அவர்களது பெற்றோரும் இதற்கு சம்மதித்து யுவதிகளை கண்டியிலுள்ள குறிப்பிட்ட தொழிற்சாலைக்கு அனுப்ப முற்பட்டனர். ஆனால் பொதுமக்கள் சிலரிடம் ஏற்பட்ட சந்தேகங்கள் இறுதி நேரத்தில் நடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு தெரிவிக்கப்பட்டதால். இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, மீள்குடியமர்த்தப்பட்டுள்ள இப்பிரதேச மக்களின் நடைமுறைகள் குறித்தும் விளக்கினார்.

இங்கு மக்கள் மீள்குடியமர்த்தப்படுகின்ற போது, குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை உட்பட்ட விபரங்கள் எடுக்கப்பட்டு, குடும்பப் படங்கள் எடுக்கப்பட்டு மேலும் பல பதிவுகளின் பின்னரே சொந்தக் காணிகளில் குடியமர அனுமதிக்கப்படுகின்றனர்.

கிளிநொச்சிக்குப் பொறுப்பாகவுள்ள சிவில் படைத்தரப்பிடம் அனுமதி கேட்டு இந்நிறுவனம் கடிதம் அனுப்பியதாக தெரிவித்த போதும், படைத்தரப்பிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தையல் இயந்திர இயக்குநர்கள், உற்பத்தி மேற்பார்வையாளர்கள் என இரு வகை வேலைகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்து. பயிற்சிக்காலம் முடிவடைந்த பின்னர் அதி கூடிய சம்பளமாக 14 ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனவும், உற்பத்தி ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 2அயிரம் ரூபாவிலிருந்து ஐயாயிரம் ரூபா வரையில் வழங்கப்படும் எனவும், உற்பத்தித் தரக்கொடுப்பனவாக ஆயிரத்து ஐந்நூறு ருபா கொடுக்கப்படுமெனவும் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்நிறுவனத்தின் நம்பகத்தன்மை சந்தேகத்திடமானதாக இருந்த காரணத்தினால் இறுதி நேரத்தில் குறிப்பட்ட யுவதிகள் அழைத்துச் செல்லப்படும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது. இவர்களை அழைத்துச் செல்ல கொண்டு வரப்பட்ட வாகனமும் திரும்பிச்சென்றது. குறித்த நிறுவனத்துடன் நாடாளுமன்ற உறுப்பினரும், பொதுமக்களும் விவாதித்துக்கொண்டிருக்கையில்,  அவ்விடத்திற்கு வந்த படையினர் சிலர் குறித்த நிறுவன அதிகாரிகளுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்தாகவும் விவாதம் செய்தவர்களிடம் கடும் தொனியில் பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது இவ்வாறிருக்க, வன்னிப்பிரதேசங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இன்னமும் நிறைவு பெறாத வேளையிலும், மீள்குடியேற்றப்பட்ட மக்கள் இன்னமும் கூடாரங்களில் தங்கி வாழும் நிலையில் இருக்கின்ற போதும், அவர்களின் வசதியின்மைகள்; வறுமை நிலைகளைப் பயன்படுத்தி அவர்களை ஏமாற்ற பல தரப்பினர் முற்படுகின்றமை தெரியவந்துள்ளது. மீள்குடியேற்றம் உட்பட இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்புகள் தொடர்பான நடவடிக்கைகளை அது அரசதுறையிலானாலும் சரி தனியார் துறையிலானாலும் சரி அதனை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் பொறுப்பும் உத்தரவாதமும் மிக அவசியமானதாக உள்ளது.

கண்டியிலும், தென்பகுதிகளிலும் தொழில் வாய்ப்பின்றி பல சிங்கள தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகள் இருக்கின்ற நிலையில்,  கண்டியைச் சேர்ந்த குறித்த தனியார் ஆடைத்தொழிற்சாலை கவர்ச்சிகரமான ஊதியத்தை விளம்பரப்படுத்தி கிளிநொச்சி பெண்களை வேலைக்கமர்த்த முயல்வதன் உள்நோக்கம் சந்தேகத்திற்கிடமானதாகவே இருக்கின்றது. தென்பகுதிகளின் கிராமங்களில் வாழும் சிங்கள யுவதிகள் கூட கொழும்பிலுள்ள ஆடைத்தொழிற்சாலைகளில் வேலைக்கமர்த்தப்பட்டு ஊதியம் போதாமை காரணமாக, பாலியல் தொழில்களில் ஈடுபடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. கொழும்பின் தனியார் மருத்துவமனைகளில் கருக்கலைப்பிற்காக வரும் திருமணமாகாத யுவதிகளில் பெரும்பாலானோர் ஆடைத்தொழிற்சாலைகளில் வேலை செய்வோர் என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

மலையத்தில் உள்ள இளம்பெண்கள் தொழில் வாய்ப்புகளுக்கென சிலரால் கொழும்பிற்கு ஏமாற்றி அழைத்து வரப்பட்டு பாலியல் தொழில்களுக்கு பழக்கப்படுத்தப்பட்டு, ஈடுபடுத்தப்பட்டு வருகின்றமையும் நடைபெற்று வருகின்றது. வாரம் அல்லது மாதம் ஒரு முறை  பாலியல் தொழிலால் கிடைத்த பணத்துடன் ஊருக்கச்சென்று வரும் இப்பெண்களின் உறவினருக்குக் கூட இது தெரியாமலுள்ளமை கசப்பான உண்மையாகும்.

தென்னிலங்கையின் யுவதிகள் தொழில் வாய்ப்பின்றி அரபு நாடுகளுக்குச் சென்று சீரழிகின்ற செய்திகளும் நாளாந்தம் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், யுத்தத்தால் சகலதையும் இழந்து நிர்க்கதியாகியுள்ள வன்னி மக்களின் வறுமையையும், துன்பங்களையும் பயன்படுத்தி அவர்களை சீரழிவிற்குள் இட்டுச்செல்ல முற்படும் தரப்புகளிடமிருந்து தமிழ் இளைஞர் யுவதிகள் மட்டுமல்ல அவர்களின் பெற்றோரும், சமூகத்தினரும் விழிப்பாக இருக்கவேண்டும் என்பது அவசியமானதாகும்.

Related News:

சிங்கப்பூரில் பலவந்தமாக பாலியல் தொழில்களில் ஈடுபடுத்தப்படும் இலங்கை யுவதிகள்!

பெண்கள் மற்றும் சிறுவர்களை துன்புறுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு

இலங்கையில் 30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் வரையிலான பாலியல் தொழிலாளர்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே தொடரும் என தெரிவிப்பு!

நிறைவெற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவியைத் தவிர்த்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதிவியை ஏற்படுத்தவதற்கான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாக அரசாங்கத்தரப்பிலிருந்தும் எதிர்கட்சித்தரப்பிலிருந்தும் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தொடர்ந்தும் நிறைவெற்று ஜனாதிபதி முறையே தொடரும் என ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த சில தினங்களாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்குமிடையில் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறையை எற்படுத்துவதற்கு இரு தலைவர்ளும் ஓரளவிற்கு இணங்கியிருந்தனர். எனினும், சட்டமாஅதிபர் இவ்வாறு நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறையை ஏற்படுத்த வேண்டுமானால். அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என சட்டமாஅதிபர் தெரிவத்ததால் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதாகவ தெரிவிக்கப்படுகின்றது.

வன்னியில் மீள்குடியேறிய மக்கள் தங்கள் வீடுகளை அமைத்துக் கொள்வதில் தாமதங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

வன்னியில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தங்களின் அழிவடைந்த வீடுகளை அமைத்துக் கொள்வதிலும், சேதமுற்ற விடுகளை திருத்திக்கொள்வதிலும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு; வருகின்றனர்.

வீடுகள் முற்றாக அழிவுற்ற மக்களுக்கு  வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான உதவிகளை சில நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியமர்ந்த மக்கள் வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான உதவிகள் சில பகுதிகளில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. மூன்றரை இலட்ச ரூபா செலவில் சிறிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான பணம் கட்டம் கட்டமாக வழஙகப்படுகின்றன. வீட்டு அத்திவாரம் இடுவதற்காக முதற்கட்டமாக ஐம்பதினாயிரம் ரூபா வழங்கப்பட்டு அதற்கான வேலைகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்ட கொடுப்பனவிற்காக சம்பந்தப்பட்ட மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மூன்று மாதங்களில் வீடமைப்புப் பணிகள் முற்றாக நிறைவடைய வேண்டுமென குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், அதன்படி தாங்கள் வீட்டு அத்திவார வேலைகள் முடித்து ஒரு மாதமாகியும் அடுத்த கட்ட வேலைக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என மக்கள் எம்மிடம் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை, வீட்டின் சுவர்கள் எஞ்சியுள்ள நிலையில், கூரைகள் கதவு, யன்னல்களற்ற விடுகளுக்கு திருத்த வேலைகளுக்காக ஒன்றரை இலட்ச ரூபா வழங்குவதாக இன்னொரு நிறுவனம் பதிவுகளை மேற்கொண்டுள்ள நிலையிலும் அதற்கான வேலைத்திட்டங்கள் மிகவும் தாமதமாகி வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். அடுத்து வரும் மாதங்களில் பருவமழை பெய்ய விருப்பதால் தங்களின் சிறுபிள்ளைகள் அடங்கிய குடும்பத்தினரோடு எவ்வாறு தங்கள் காணிகளில் தங்கியிருப்பது என்கிற கவலைகள் அம்மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடபகுதி பஸ்களில் பயணிக்கும் பெண்கள் படையினரால் தொல்லைகளுக்கு உள்ளாகின்றனர்

வடபகுதிகளில் பஸ்களில் பயணம் செய்யும் பெண்கள் படையினரால் பெரும் சிரமத்திற்கும் அச்சத்திற்கும் உள்ளாகி வருகின்றனர். இளம்பெண்களுக்கு அருகில் அமர்ந்து பயணம் செய்யும் படையினர் சிலர் அப்பெண்களுடன் அங்க சேட்டைகளில் ஈடுபடுகின்றனர். சீருடையில் பயணம் செய்கின்ற படையினர் பெரும்பாலும் மக்களுடன் இருக்கையில் அமர்ந்து பிரயாணம் செய்வதில்லை. ஆனால், சிவில் உடைகளில் பயணம் செய்யும் படையினர் மக்களோடு மக்களாக அவர்களின் அருகில் இருக்கைகளில் அமர்ந்து பிரயாணம் செய்கின்றனர். இவ்வாறான வேளைகளில் அருகில் இளம் பெண்கள் அமர்ந்திருந்தால் அவர்கள் மீது அங்க சேட்டைகளில் ஈடுபடுகின்றனர்.

இதற்கெதிராக பாதிக்கப்படும் பெண்ணோ அல்லது. அதனைக் கவனிக்கின்ற ஏனையொரோ எதுவும் செய்ய முடியாத நிலையிலுள்ளனர். படையினர் என்பதால் அவர்கள் கண்டும் காணாதவர்கள் போல் இருக்கும் கொள்ளும் நிலை ஏற்படுகின்றது. குறிப்பாக யாழப்பாணத்திலிருந்து கிளிநொச்சி. வவுனியா செல்லும் பஸ்களில் இவ்வாறான சம்பவங்கள் அதிகம் இடம்பெறுகின்றன.

கொட்டாஞ்சேனைப் பகுதி பொலிஸாரினால் சுற்றிவளைப்பு! மீண்டும் தமிழர்கள் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளனர்.

 Police_Checkகொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதி நேற்று முன் தினம் வியாழக்கிழமை (Aug 12 2010) அதிகாலை பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் பொலிஸார் கேட்டுள்ளனர். இதன் போது தமிழ் பொதுமக்கள் சிலருக்கும் பொலிஸாருக்குமிடையில் வாக்குவாதங்களும் எற்பட்டுள்ளன. போர் முடிவுற்ற பின்னர் அவசரகாலச் சட்ட விதிகளிலிருந்து தமிழ்மக்கள் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்படவேண்டும் என்ற சரத்து நீக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் தமிழ் மக்களை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யும் படி கேட்பது எந்த வகையில் நியாயம் என சில படித்த தமிழர்கள் பொலிஸாரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது வெளிநாடுகளிலுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்கள்  கொழும்பில் ஊடுருவியிருக்கலாம் என்கிற சந்தேகம் உள்ளதாகத் பொலிஸார் தெரிவித்தனர்.

போர் நடைபெற்ற காலப்பகுதிகளில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் கொழும்பு உள்ளிட்ட தென்பகுதிகளில் இடம்பெற்றபோது பொலிஸ் பதிவு நடைமுறையும், தமிழர்கள் வசிக்கும் குடியிருப்பக்கள், விடுதிகள் முதலானவை அடிக்கடி சுற்றிவளைப்பு, தேடுதல்களுக்கு உள்ளாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

“கே.பி அரசாங்கத்தால் நடத்தப்படும் முறை ஏற்றுக்கொள்ள முடியாதது” தவிகூ தலைவர் வீ ஆனந்தசங்கரி

a_sangary.jpgவிடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள மன்னிப்பும். அவரை நடத்தி வருகின்ற முறையும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு’வின் முன் சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இடம்பெயர்ந்த மக்களும், விடுதலைப் புலி போராளிகளும் இன்னும் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் குமரன் பத்மநாதனுக்கு அரசாங்கம் பரிவு காட்டி வருகின்றது. 10500 இளைஞர்கள் இன்னமும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எமது பிள்ளைகளான அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தவறு” எனக் குறிப்பிட்ட அவர் அரசாங்கம் கே.பியிலும், அவரது ஆதரவாளர்களிலும் தங்கியிருப்பது குறித்தும் எச்சரிக்கை செய்தார்.

 கே.பி இலங்கையின் அபிவிருத்திக்காக முதலீடு செய்யப்போவதாக கூறப்படும் பணம் சட்டவிரோதமாகவும், பாவ காரியங்களூடாகவும் சேர்க்கப்பட்டவையாகும். அப்பணத்தை அபிவிருத்திக்கு பயன்படுத்துவதன் மூலம் மேற்படி பாவத்தில் அரசாங்கமும் பங்கு கொள்ளக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழும் மக்களின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும்,  இராணுவத்தினர் மத்தியில் வாழும் அம்மக்கள் சட்டியிலிருந்து அடுப்பிற்குள் விழுந்த நிலையிலுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டுவரும் 10,000 பேரையும் விடுவிக்க வேண்டும் – நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் ஆனந்தசங்கரி சாட்சியம்

தடுத்து வைக்கப் பட்டுப் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் பத்தாயிரம் பேரையும் விடுவித்து அவர்களை சமூகமயப்படுத்த வேண்டுமென்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

முன்னாள் ஜே. வி. பி. உறுப்பினர்களைப் புனர்வாழ்வளித்து விடுவித்ததைப்போல், புலி உறுப்பினர்களையும், விடுவிக்க வேண்டுமென்று குறிப்பிட்ட அவர், குழுவொன்றை அமைத்து அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொண்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றார்.

அத்துடன் வடக்கில் மக்களின் சுதந்திரமான இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்து வதற்காக அங்கு சிவில் நிர் வாகத்தை முழுமையாக ஏற் படுத்த வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் பகிரங்க அமர்வில் ஆனந்தசங்கரி நேற்று சாட்சியமளித்தார். குழுவின் தலைவர் – முன்னாள் சட்டமா அதிபர் சீ.ஆர்.டி. சில்வா தலைமையில் நடைபெற்ற விசாரணையில் சுமார் 45 நிமிடம் சாட்சியமளித்த கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி, குழுவின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

“தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் பேரும் எமது அப்பாவி பிள்ளைகள். அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு இந்த நிலைக்கு ஆளாகியுள்ளார்களே தவிர எந்தக் குற்றமும் அறியாதவர்கள். அவர்கள் உடலால் சரணடைந்திருந்தாலும் அவர்கள் உணர்வால் சரணடையவில்லை. அவர்கள் அப்பாவிகள். அவர்களைப் பெற்றோரிடம் ஒப்படைத்தால், அவர்கள் சமூகமயப் படுத்துவார்கள். யுத்தம் முடிவடைந்திருக்கும் நிலையில் எமது மக்கள் சுதந்திரமாக அவர்களின் சொந்த மண்ணில் வாழ வேண்டும். இது எமது நாடு. எமது மண். நாம் இந்த நாட்டையே நேசிக்றோம். நான் இந்த நாட்டையே பிரதிநிதித்துவப் படுத்துகிறேன்.

வடக்கில் முழுமையாக சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும். மக்கள் சுதந்திரமாக வாழும் சூழல் ஏற்படாத வரை நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. எமது பிரச்சினை 50 வருடம் பழைமை வாய்ந்தது. இன்னமும் தீர்வு காணப்படவில்லை” என்று குறிப்பிட்ட ஆனந்த சங்கரி பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பிட்ட தொகை நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மொழிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழ், சிங்கள மொழிகளைப் பாடசாலை மட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றதுடன் ஆங்கிலக் கல்வியைப் போதிப்பதற்காக இந்தியாவிலிருந்து ஆசிரியர்களைத் தருவிக்கலாம் என்றும் யோசனை தெரிவித்தார்.

ஆணைக்குழுவின் முன் நேற்று சாட்சியமளித்த எஸ். எல். குணசேகர, “புலிகள் இயக்கத்திற்கும் ஜே. வி. பி. யினருக்கும் வேறுபாடு கிடையாது. இவர்களும் வன்முறையில் ஈடுபட்டார்கள். ஆனால், இரு அமைப்புக்களின் ஒழுங்கு நடைமுறையே மாறுபட்டிருந்தது” என்று சுட்டிக்காட்டினார்.

சுகவீனமுற்றுள்ள ரணிலின் தாயாரை மகிந்த ராஜபக்ச பார்வையிட்டார்.!

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தாயாரை இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சென்று பார்வையிட்டார்.

 நோயுற்ற நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வரும் ரணில் விக்கரமசிங்கவின் தாயார் நளினி விக்கிரமசிங்கவை நேரடியாக வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டதோடு அவர் சுகமடைய தனது வாழ்த்துக்களையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஜனாதபதி வைத்தியசாலைக்குச் சென்ற போது அங்கு ரணில் விக்கரமசிங்க இருக்கவில்லை எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

14வயது சிறுமியை பாலியல்வல்லுறவுக்குட்படுத்திய இருவர் கைது!

14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி கட்டுகஸ்தொட்ட என்ற இடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த 14 வயது சிறுமியின் காதலனான இளைஞன் ஒருவனும் 38 வயதான முச்சக்கரவண்டி சாரதியும் இச்சிறுமியை ஏமாற்றி அழைத்துச்சென்று பாலியல் வல்லறவிற்குட்படுத்தினர் என விசாரணகளில் தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும், சிறுமியை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்

பரீட்சை நிலையத்தில் செல்லிடத்தொலைபேசியைப் பயன்படுத்திய மாணவர்கள் விசாரணையில்!

தற்போது க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெற்று வரும் நிலையில், மாத்தறையிலுள்ள பரிட்சை நிலையமொன்றில் இரு மாணவர்கள் செல்லிடத் தொலைபேசியைப் பயனபடுத்தியமைக்காக விசாரணகளுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இம்மாணவர்கள் பரீட்சையில் ஏதும் மோசடி செய்வதற்காக தொலைபேசியைப் பயன்படுத்தினரா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இம்மாணவர்கள் பரிட்சைகளை பூhத்தி செய்ததும் இது குறித்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

”பிரபாகரன் கையெழுத்துக் காட்டி நிதி திரட்டுகின்றனர்.” தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியம்

வெளிநாடுகளிலுள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் பிரபாகரனின் கையெழுத்துடனான ஆவணங்களைக் காட்டி புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் நிதி சேகரித்து வருவதாக சிறிலங்கா அரசின் சமாதான செயலகத்தின் முன்னாள் பணிப்பாளர் பேணாட் குணதிலக தெரிவித்துள்ளார். தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் நேற்று சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரபாகரன் உயிருடன் இருப்பதாகக் கூறி அவர் கையெழுத்திட்ட ஆவணங்களைப் பயன்படுத்தி அவர்கள் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2002ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்குமிடையில் பேச்சுவார்தைகள் நடைபெற்ற போது தாம் அதில் முக்கிய பங்காற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய நல்லிணக்க ஆணைக்குழு அதன் முதலாவது விசாரணையை நேற்று கொழும்பில் உள்ள லக்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகளுக்கும் ஆய்வுகளுக்குமான நிலையத்தில் தொடக்கி வைத்தது. எதிர்வரும் காலங்களில் பல முக்கியஸ்தர்கள் இவ்வாணைக்குழுவில் சாட்சியங்களை அளிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 17ம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச சாட்சியமளிக்க முன்வந்துள்ளதாகவும், 25ம் திகதி அரச உத்தியோகத்தர்கள், அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள், புத்திஜீவிகள் சாட்சியமளிப்பர் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை, இலங்கையின் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் யுத்தக்குற்றங்களுக்கான விசாரணைகள் வெறும் கண்துடைப்பு நடவடிக்கை என நியூயோர்க்கை தளமாகக் கொண்டு இயங்கும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.