சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

பறவை மோதி ஆற்றில் விழுந்த விமானம்

air.jpgஅமெ ரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து கார் லோட்டி நகருக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு ஏர்பஸ் 320 ரக விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 6 சிப்பந்திகள் உள்பட 155 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானத்தின் இறகுகள் மீது பறவைகள் மோதியது.

இதையடுத்து விமானம் தாறுமாறாக பறக்கத் தொடங்கியது. விமானி சாமார்த்தியமாக மான்ஹாட்டன் அருகே தரை இறக்க முயன்றார். ஆனால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து மன்ஹாட்டன் அருகே ஹட்சன் ஆற்றில் விழுந்தது.
.
ஆற்றில் விழுந்த விமானத்தில் இருந்து பயணிகள் வெளியே குதித்தனர். சிலர் தண்ணீரில் பாதி அளவு மூழ்கியபடி மிதந்த விமானத்தின் இறகுகள் மீது ஏறி நின்று கூக்குரல் போட்டனர். அப் பகுதியில் மைனஸ் 6-டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியதால் பலரும் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தனர். உடனடியாக மீட்புப் பணியாளர்களும், கப்பலும் சென்றதால் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஈரான் விவகாரத்தில் புதிய அணுகுமுறையை கடைப்பிடிக்க ஒபாமா திட்டம்

obama.jpgஈரான் விவகாரம் தொடர்பாக தனது தலைமைத்துவத்தின் கீழ் அமெரிக்கா புதிய அணுகுமுறையைக் கையாளப்போவதாக அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே ஒபாமா இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்தொலைக்காட்சி நேர்காணலில் ஒபாமா மேலும் தெரிவிக்கையில்;

எமது சவால்களுக்குள் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக ஈரான் விவகாரம் உள்ளது. ஈரானின் அணு நிகழ்ச்சித் திட்டமும் லெபனானின் சியா கட்சி ஹிஸ்புல்லா அமைப்புக்கான ஈரான் ஆதரவு வழங்குவதும் கவலை தருவதாக உள்ளது. மேலும், மத்திய கிழக்கின் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு விசேட குழு ஒன்றை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி புஷ்ஷின் நிர்வாக காலத்தில் குற்றமிழைத்த அதிகாரிகளை நான் நிராகரிக்கப்போவதில்லை. நான் பதவியேற்று நூறு நாட்களுக்குள் முடியாவிடினும் எப்படியாவது குவான்டனமோ சிறைச்சாலையை மூடுவது உறுதி. புஷ் நிர்வாகத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்தவர்கள் தொடர்பாக சட்டமா அதிபர் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்வார் எனத் தெரிவித்தார்.

வன்னியிலிருந்து இதுவரை 1400 பேர் வவுனியாவுக்கு! – அமைச்சர் ரிஷாத் தகவல்

risard.jpgவன்னியிலிருந்து இதுவரை ஆயிரத்து நானூறு பேர் இடம் பெயர்ந்து வவுனியாவுக்கு வந்துள்ளனர் என்று அரசு தெரிவிக்கின்றது. இவர்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கும் நோக்கில் மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் நேற்று வவுனியாவுக்குச் சென்று அந்த மக்களைப் பார்வையிட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் கூறியவை வருமாறு:-வன்னியிலிருந்து மக்கள் வவுனியாவுக்கு வர ஆரம்பித்துள்ளனர். தற்போது வரை 540 குடும்பங்களைச் சேர்ந்த 1400 பேர் வவுனியாவை வந்தடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் வவுனியா பார்மில் அமைக்கப்பட்டுள்ள  தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.இந்த மக்களுக்குத் தேவையான வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்கும் நடவடிக்கையில் எனது அமைச்சு முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகின்றது.

இவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் தங்குமிட வசதிகள் போன்றவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளுமாறு நான் வவுனியா அரச அதிபருக்கு உத்தரவிட்டுள்ளேன். வன்னியில் இருந்து வவுனியாவுக்குத் தொடர்ந்தும் மக்கள் வந்தால் அவர்களுக்குத் தேவையான வசதிகள் அனைத்தையும் வழங்குவதற்கு எனது அமைச்சு தயார் நிலையில் உள்ளது – என்றார்.

ஆபிரகாம் லிங்கனின் நினைவிடத்திற்கு பராக் ஒபாமா விஜயம்: அவரைப் பின்பற்ற உறுதி

obama.jpgஅமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆப்ரகாம் லிங்கன் பயன்படுத்திய பைபிளை வைத்தே பராக் ஒபாமா பதவியேற்கவுள்ளார். ஆப்ரகாம் லிங்கன் அதிபராகப் பதவியேற்றுக் கொண்ட பின்னர் எவ்வித மதிய உணவு சாப்பிட்டாரோ அதே போல தானும் சாப்பிட ஒபாமா முடிவெடுத்துள்ளார். ஆப்ரகாம் லிங்கனின் வழியை பின்பற்றி வருபவர் பராக் ஒபாமா. இதனால் அவரது வழியிலேயே தானும் பதவியேற்றுக்கொள்ள முடிவெடுத்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்வாகியுள்ள ஒபாமா வரும் 20ம் திகதி முறைப்படி பதவியேற்றுக் கொள்ளவுள்ளார். பதவியேற்பு விழா மிகப் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர். பதவியேற்றுக் கொண்ட பின்னர் ஒபாமா தனது மதிய உணவை நாடாளுமன்ற குழுவினருடன் சேர்ந்து சாப்பிட உள்ளார். இந்த விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்காவின் துணை அதிபர், அவரது குடும்பத்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 200க்கும் மேலான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் ஒபாமா தனது குடும்பத்தாருடன் ஆப்ரகாம் லிங்கனின் நினைவிடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில் :- என்னை கவர்ந்த மாபெரும் தலைவர் ஆப்ரகாம் லிங்கன் என்று பெருமிதத்துடன் கூறினார்.

தார்மீக பெறுமானங்களின் அபிவிருத்தி இன்றி நாடு முன்னேற்றமடையாது -ஜனாதிபதி

presidentmahinda.jpgதார்மீக பெறுமானங்களின் அபிவிருத்தியில்லாமல் நாடு முன்னேற்றமடையாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அபிவிருத்தி திட்டங்கள் பல மேற்கொள்ளப் பட்டுள்ள போதிலும் தார்மீக துறையின் அபிவிருத்தியற்ற முன்னேற்றத்தினால் எதிர்கால சந்ததியினருக்கு எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை. நாட்டில் அபிவிருத்தியில் ஆன்மிக முன்னேற்றத்திற்கு சமபங்கு உண்டென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2600 ஆம் ஆண்டு புத்த ஜயந்தி கொண்டாட்டங்கள் தொடர்பாக திட்டமிடுவதற்கென அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்த கருத்துகளை வெளியிட்டார். 2011 ஆம் ஆண்டில் இந்த கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன. புத்தஜயந்தி கொண்டாட்டங்களுடன் இணைந்ததாக மகா சங்கத்தின் வழிகாட்டலுடன் நாட்டில் வாழும் பெளத்த மக்களின் ஒத்துழைப்புடன் மேலும் பல நிகழ்ச்சிகளை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்தக் கூட்டத்தின்போது 2600 புத்தஜயந்தி கொண்டாட்டங்கள் பற்றி மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கு விளக்கிக் கூறினர். புத்தஜயந்தியை குறிக்கும் வகையில் அரசாங்கத்தின் பூர்வாங்க நிகழ்ச்சியொன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரதம மந்திரி ரத்னசிறி விக்கிரமநாயக்க தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.

வட மாகாண எதிர்காலத் தலைநகரம் – மாங்குளம்

jaffna.jpgவட மாகாணத்தின் எதிர்காலத் தலைநகராக மாங்குளத்தை அபிவிருத்தி செய்வதென்றும் வடக்கு மாகாண சபையின் பிரதம செயலகத்தை மாங்குளத்தில் நிர்மாணிப்பது என்றும் அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. மாங்குளம் தலைநகராக அபிவிருத்தி செய்யப்படுவது, வட மாகாண பிரதம செயலக வளாகத்தை மாங்குளத்தில் நிர்மாணம் செய்வது ஆகியன பற்றி பாரிய திட்டம் ஒன்றை சமர்ப்பிப்பது தொடர்பாக நிபுணத்துவ சேவைகள் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரும் விளம்பரங்களை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு அரசாங்க பத்திரிகைகளில் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருந்தது.

தகுதி படைத்த நிபுணத்துவ சேவை நிறுவனங்களிடமிருந்து வட மாகாண சபையின் சார்பாக விண்ணப்பங்களைக் கோருவதாகவும் அமைச்சு விளம்பரம் மூலம் தெரிவித்துள்ளது. விரும்பும் நிபுணத்துவ சேவைகள் (Consultanly Services) நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்களை பெப்ரவரி 1 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்பாக திருகோணமலை, கன்னியா வீதியில் வரோதய நகரில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபையின் பிரதம செயலகத்திற்குக் கிடைக்கக் கூடிய வகையில் அனுப்பி வைக்குமாறு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் எச்.பி.கஷியன் ஹேரத் விளம்பரத்தில் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார செயலர் நாளை இலங்கை வருகை

sivashankar.jpgமும்பையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலையடுத்து தெற்காசிய சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார செயலாளர் சிவசங்கர் மேனன் நாளை இலங்கை வரவிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு நாளை மாலை வரும் மேனன் அடுத்தநாளே நாடு திரும்பவுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க எதிர்பார்த்திருக்கும் மேனன், வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இதேவேளை பெப்ரவரி இறுதியில் கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் அமைச்சர்களுக்கான மாநாடு தொடர்பாகவும் இவர் கலந்துரையாடவுள்ளார்.

பெற்றோல் விலையை ஏன் குறைக்க முடியாது? காரணம் தெரிவிக்க ஜனவரி 27 வரை அரசுக்கு உயர் நீதிமன்றம்

supreme_court.jpg
அடிப்படை உரிமைகள் மனு மீதான உயர்நீதிமன்றத்தின் எந்தவொரு தீர்மானத்திற்கும் அரசியலமைப்பின் 188 ஆவது சரத்தின் பிரகாரம் நிறைவேற்றதிகாரம் (ஜனாதிபதி) இணங்க வேண்டும் என்று நேற்று செவ்வாய்க்கிழமை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கும் அதேசமயம், பெற்றோலின் விலையை லீற்றர் 100 ரூபாவாக ஏன் குறைக்க முடியாதென்பதற்கான காரணத்தை தெரிவிப்பதற்கு ஜனவரி 27 வரை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. உயர்நீதிமன்றத்தில் நேற்று எரிபொருள் விலை மற்றும் ஹெட்ஜிங் தொடர்பான அண்மைய விடயங்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது பிரதம நீதியரசர் சரத் என் சில்வா இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை அமைச்சர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை பரிசீலனைக்கெடுத்து பரந்துபட்ட அளவில் நுகர்வோருக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் டீசல், மண்ணெண்ணெயின் விலைகளை குறைத்திருப்பதுடன் பெற்றோல் விலையையும் குறைத்திருப்பதாகவும் திறைசேரியின் செயலாளருக்காக ஆஜரான பிரதி சொலிசிற்றர் ஜெனரல் எஸ். இராஜரெட்ணம் நீதிமன்றத்துக்கு தெரிவித்தார். அதேவேளை, நீதிமன்றத்தின் பணிப்புரைக்கமைய பெற்றோலியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதால் தமது வாடிக்கையாளருக்கு அதிகளவு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் ஏனெனில் சுங்கத்தீர்வை விலக்கை அளிக்க அரசாங்கம் தவறிவிட்டதால் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

2008 டிசம்பர் 17 இல் விடுக்கப்பட்ட இடைக்கால உத்தரவை ஏன் அமுல்படுத்த முடியாது என்பதற்கான காரணத்தை திறைசேரி செயலாளர் தெரிவிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் நுகர்வோருக்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் விரும்பினால் அது தொடர்பாக நீதிமன்றத்திற்கு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டுமெனவும் நீதிமன்றம் பணித்துள்ளது.

லாவ் காஸ் தலைவர் டபிள்யூ.கே. எச் வேகல் பிட்டிய, ரவி கருணாநாயக்கா எம்.பி. மற்றும் இருவர் உட்பட மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்ற உத்தரவு முழுமையாக அமுல்படுத்தப்படாவிடின் தமது மனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்வார்களென நீதிமன்றத்துக்கு தெரிவித்தனர். மனுக்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டால் வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விடும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பான இறுதித் தீர்மானத்திற்காக ஜனவரி 27 இல் விசாரணை இடம் பெறவுள்ளது.

இலங்கையில் சேவையை ஆரம்பித்தது இந்தியாவின் பார்தி எயார்ரெல் நிறுவனம்

airtel.jpgஇந்தியாவை தளமாக கொண்டியங்கும் பார்தி எயார்ரெல் தொலைத்தொடர்பு சேவை  திங்கட்கிழமை முதல் இலங்கையில் தனது சேவைகளை ஆரம்பித்துள்ளது.  இலங்கையில் தனது சேவைகளை விஸ்தரிப்பதற்காக கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் நூறு மில்லியன் அமெரிக்க டொலரினை முதலீடு செய்திருந்த எயார்ரெல் அடுத்து வரும் 3 வருடத்துக்குள் மேலும், நூறு மில்லியன் அமெரிக்க டொலரினை முதலீடு செய்யவுள்ளது.

நாட்டின் 60 சதவீதமான பகுதிகளில் தற்பொழுது எயார்ரெல்லின் சமிக்ஞை கிடைக்கப்பெறுவதுடன், இலங்கையில் பார்தி எயார்ரெல் லங்கா (தனியார்) வரையறுக்கப்பட்ட நிறுவனம் என்ற பெயருடன் இயங்குகின்றது.  இலங்கையில் தனது சேவைகளை ஆரம்பிப்பதன் மூலம் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்த எயார்ரெல் குழுமத்தின் தலைமை முகாமைத்துவ பணிப்பாளர் சுனில் பார்தி மிட்டல் நாட்டின் வளர்ச்சியில் தாமும் பங்கு கொள்வதாகத் தெரிவித்தார்.

மேலும், இலங்கைச் சந்தையில் ஓர் முக்கிய இடத்தினை பெறுவதற்கு எயார்ரெல் கடுமையாக உழைக்குமெனவும் தொலைத்தொடர்பு மற்றும் கையடக்கத் தொலைபேசி ஊடான இணைய சேவை போன்றவற்றை மக்கள் மேலும், அதிக வசதிகளுடன் அனுபவிக்கலாமெனவும் அவர் தெரிவித்தார்.  அத்துடன் 88 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டிருப்பதன் அனுபவத்தின் மூலம் இலங்கையின் தொலைபேசி வலையமைப்பிலும் ஒரு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தப்போவதாகவும் சுனில் பார்தி மிட்டல் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் தற்பொழுது 2.9 மில்லியன் நிலையான தொலைபேசி பாவனையாளர்களும் 7.9 மில்லியன் கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களும் 2 இலட்சம் இணையத்தள பாவனையாளர்களும் உள்ளனர்.  எயார்ரெல்லின் வருகையை தொடர்ந்து நாட்டிலுள்ள ஏனைய கையடக்கத்தொலைபேசிச் சேவை வழங்குநர்கள் அழைப்புக்களுக்கான கட்டணங்களை குறைத்துள்ளதுடன் கழிவுகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் பிரதித்தூதர் குடாநாடு விஜயம்

gooding_1.jpgயாழ். குடாநாட்டின் மனிதாபிமான, பாதுகாப்பு நிலைவரங்களை நேரில் கண்டறிவதற்காக பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர் ஸ்தானிகர் மார்க் கூடிவ் இருநாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார். தமது விஜயத்தின்போது அவர் யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய படைத்தளபதி, யாழ்.மறைமாவட்ட ஆயர், அங்குள்ள சர்வதேச அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்தார்.

அதேசமயம் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கும் சென்று நிலைமையை நேரில் அவர் கண்டறிந்தார்.  மேலும், வரலாற்று புகழ்மிக்க நல்லூர் ஆலயம், யாழ்ப்பாண நூல் நிலையம் ஆகியவற்றுக்கும் பிரிட்டிஷ் தூதுவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதேவேளை யாழ்.அரச அதிபருடனான சந்திப்பு நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் மாவட்ட செயலகத்திலுள்ள அரச அதிபரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இச் சந்திப்பின்போது குடாநாட்டின் தற்போதைய நிலைமைகள், வன்னியில் இடம்பெறும் யுத்தத்தால் குடாநாட்டுக்கு இடம்பெயர்ந்து வருவோரைத் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதித் தூதுவருடன் பிரித்தானிய உயர்ஸ்தானிகத்தின் அரசியல் மற்றும் ஊடக அதிகாரி நிருபன் முத்தையாவும் வருகை தந்திருந்தார்.