இலங்கையின் மாகாண சபைகளுக்கு அதிகாரத்தை வழங்கும் 13 ஆவது அரசியல் திருத்தம் அமுல்படுத்தப்படுவதை வரவேற்பதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எச்.ஈ.சிவ்சங்கர் மேனன் தெரிவித்ததாக இலங்கைக்கான இந்தியத் தூதுவராலயம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் கடந்த 16ஆம், 17ஆம் திகதிகளில் இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற் கொண்டிருந்தார். இது தொடர்பில் இலங்கைக்கான இந்திய தூதுவராலயம் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இவ் விஜயத்தின் போது, இலங்கையின் வெளிவிவகாரச் செயலாளர் கலாநிதி பாலித ஹோஹண, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஆகியோரைச் சந்தித்தார். அத்துடன் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பிரபல தலைவர்களையும் சந்தித்துள்ளார். இதன் போதான கலந்துரையாடல்கள் இரு தரப்பு உறவுகள், இலங்கையின் தற்போதைய சூழ்நிலை மற்றும் பிராந்திய அபிவிருத்தி என்பவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.
இக்கலந்துரையாடல்களில் துரிதமான இராணுவ வெற்றியின் மூலமாக இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் தனது விருப்பத்தை ஜனாதிபதி தெரிவித்தார். இதன் போது சிவ்சங்கர் மேனன் வடக்கு உட்பட முழுநாட்டிற்கும் சமாதான முறையில் பேச்சுவார்த்தையினூடாக தீர்வு காணும்படி வலியுறுத்தினார். அத்துடன் தமிழர் உட்பட அனைத்து சமுதாயத்திற்கும் அமைதியான வாழ்வை அளிக்கும் ஐக்கிய இலங்கைக்கு தேவையான அரசியல் புரிந்துணர்வு பற்றியும் அறிவுறுத்தினார். மேலும், இச் சந்திப்பின் போது இலங்கையின் வடக்குப் பிரதேச மனிதாபிமான நடவடிக்கை தொடர்பில் இந்தியாவின் அக்கறை உள்ளதை தெரிவித்ததுடன் இடம்பெயர்ந்த பொதுமக்களின் பாதுகாப்பு பற்றி உத்தரவாதமளிக்கும் படியும் வேண்டினார்.
அத்துடன் அம்மக்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன் அவ்வாறு செய்யாவிடின் மக்களிடையே பகைமை உணர்வு ஏற்படும் என்பதையும் தெரிவித்தார். மேலும், தற்காலிக தங்குமிடம், மருந்துப் பொருட்கள் அடங்கலாக நிவாரணம், பொருட்களையும் இந்தியா வழங்க எண்ணியுள்ளது என்பதையும் தெரிவித்தார். இதன் ஒரு கட்டமாக மருந்துப் பொருட்களை ஜனாதிபதியின் செயலாளர் பசில் ராஜபக்ஷவிடம் ஒப்படைத்தார். ஏற்கனவே இந்தியாவிலிருந்து 1680 தொன் நிவராணப் பொருட்கள் ஐ.சி.ஆர்.சி.யினூடாக வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.