::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

அரசாங்கத்தின் அறிவிப்பை புலிகள் நிராகரிப்பு

வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் சிக்குண்டுள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்குப் பாதுகாப்பான வழி அமைத்துக் கொடுக்கப்படும் எனக் குறிப்பிட்டு, அடுத்த 48 மணி நேரத்துக்குள் அவர்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்கும்படி புலிகள் இயக்கத்துக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வியாழக்கிழமை மாலையில் பகிரங்க அறிக்கை மூலம் விடுத்தகோரிக்கையைப் புலிகள் இயக்கம் அடியோடு நிராகரித்து விட்டது.

இந்த அறிவிப்பு உலகத்தை ஏமாற்றும் சூழ்ச்சி எனவும் புலிகள் விமர்சித்திருக்கின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பு “இரண்டு நாள் போர்நிறுத்தப் பிரகடனம்” என அர்த்தப்படுத்தப்படும் பின்னணியில், நேற்றும் அரசுப் படைகளின் கொடூரமான தாக்குதல்கள் காரணமாக குழந்தைகள், பெண்கள் உட்பட 28 பேர்வரை கொல்லப்பட்டு அறுபதுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்றும் புலிகள் குற்றம் சுமத்தினர்.

வன்னியிலிருந்து வரும் மக்களுக்கு அனைவரும் உதவ வேண்டும் – டக்ளஸ்

 epdp.jpgவன்னிப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து யாழ் நோக்கி வரும் எமது மக்களுக்கு மனிதாபிமான ரீதியில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு யாழ் குடாநாட்டு மக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் முன்வரவேண்டுமென சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத்திற்கான விசேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுமக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புலிப் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து ஏ-9 பாதை விடுவிக்கப் பட்டுள்ளதால் அதன் மூலம் பெரும் நன்மையடையப் போவது குடாநாட்டு மக்களேயாவர் என்றும் இதேபோன்று புலிப் பயங்கரவாதம் முற்று முழுதாகத் தோற்கடிக்கப்படும்போது அனைத்துத் தமிழ் பேசும் மக்களும் பாரிய நன்மைகளை அடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை என்றும் தெரிவித்தார்.

தற்போது தங்களது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் புலிகள் தங்களது இறுதிப் பாதுகாப்பு அரணாக அப்பாவி பொதுமக்களையே பயன்படுத்தி வருகின்றனர் என்றும் தெளிவுபடுத்தியதுடன் இந்த மக்களை விடுவித்துக் கொள்வதும், விடுவிக்கப்பட்டு வரும் மக்களைப் பேணிப் பாதுகாப்பதும் இன்று எம் முன்னுள்ள பாரிய பொறுப்பாக உள்ளதென்றும் உணர்த்தினார்.

வன்னியில் இருந்து வரும் மக்களின் பல்வேறு தேவைகள் குறித்து அரச மட்டத்தில் உரிய நடவடிக்கைகளை தான் எடுத்து வருவதை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குடாநாட்டில் உள்ள மக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் இம்மக்களின் நலன்கருதி செயற்பட முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

புலிகளின் தற்கொலைப் படகு முல்லைக் கடலில் தாக்கி அழிப்பு

sl_navy.jpgபுலிகளின் தற்கொலைப் படகு ஒன்றை கடற்படை படகுகள் நேற்றுக் காலை தாக்கியழித்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார். முல்லைத்தீவுக்கு வடக்கே கரையோரத்தை அண்மித்த பிரதேசத்தில் நேற்று அதி காலை 3.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடற்படையின் கடுமையான தாக்குதல்களில் புலிகளின் தற்கொலைப் படகு வெடித்துச் சிதறி நிர்மூலமாக்கப்பட்டுள்ளதுடன் அந்த படகிலிருந்தவர்களும் கொல்லப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். முல்லைத்தீவு வடக்கு கரையோரத்தை அண்மித்த கடற்பரப்பில் புலிகளின் தற்கொலைப் படகு ஒன்று செல்வதை கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கடற்படையினர் அவதானித்து கடற்படையின் அதிவேக தாக்குதல் மற்றும் டோரா படகுகளைப் பயன்படுத்தி கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

தற்பொழுது அந்தப் பிரதேசத்தில் கடற்படையினர் பாரிய தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, புலிகளின் விநியோகங்களையும், புலிகள் தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் வடக்குக் கரையோர பிரதேசம் மற்றும் கடற்பரப்பில் கடற்படையினர் நான்கு தடை வலயங்களை ஏற்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்த கடற்படைப் பேச்சாளர், முதலாவது, இரண்டாவது தடை வலயங்களில் கடற்படையின் துரித செயலணி, விசேட படகு அணி, அதிவேக தாக்குதல் படகுகளும், மூன்றாம், நான்காம் தடை வலயங்களில் பீரங்கி படகுகளும், கரையோர காவல் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் தமிழகத்திற்குள் ஊடுருவலாம்

_bort.jpgஇலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடக்கும் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விடுதலைப் புலிகள்  தமிழகத்திற்குள் ஊடுருவலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து கடலோரங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால், விடுதலை புலிகள் அங்கிருந்து கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்து உள்ளது. இதையடுத்து தமிழக கடலோர பகுதிகளில் தீவிரமாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள டிஜிபி ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்பட 11 மாவட்டங்களில் கடலோர காவல் நிலையங்கள் உள்ளன. ஏற்கனவே இங்கு பாதுகாப்பை தீவிரப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.தற்போது உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து 24 மணி நேரமும் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

படுகாயமடைந்தோருக்கான போக்குவரத்தை ஐ.நா.வும் சர்வதேச அமைப்புகளும் செய்ய வேண்டும்- நடேசன் கோரிக்கை

hospital.jpgவன்னியில் இடம்பெறும் ஷெல் தாக்குதல்களில் படுகாயமடைந்தவர்களுக்கான போக்குவரத்துகளை ஒழுங்கு செய்ய ஐ.நா.உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டுமென்று விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடேசன் கூறியதாக “புதினம்’ இணையத்தளம் தெரிவித்துள்ளதாவது;

இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயங்களுக்கு ஐ.நா.மற்றும் இதர சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டு அங்குள்ள மக்களின் கருத்துகளை சுயாதீனமாக கேட்டறிய வேண்டும். வவுனியாவுக்கு செல்லும் நோயாளிகளை விடுதலைப் புலிகள் தடுத்து வைத்திருக்கவில்லை. வவுனியாவுக்கு நேற்று வியாழக்கிழமை மட்டும் 200 நோயாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மருந்துவ, போக்குவரத்து வசதிகள் இல்லாமையால் பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்களுக்கான மருத்துவ தேவைகளுக்கான போக்குவரத்துகளுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா.உள்ளிட்ட அனைத்து சர்வதேச அமைப்புகளும் ஏற்பாடு செய்ய வேண்டும். சர்வதேச மற்றும் ஐ.நா.விதிகளின் படி, படுகாயமடைந்த பொதுமக்களுக்கான சிகிச்சைகளுக்குரிய போக்குவரத்துகளை அரசு அனுமதிக்காமலிருப்பது பாரிய மீறலாகும்.

தங்களது குடும்பங்களுடன் இணைந்து கொள்ள விரும்புவோரையும் கூட படைத்தரப்பு அனுமதிக்க மறுத்து வருகிறது. மோதல் பகுதியிலிருந்து வெளியேற விரும்புவது தனிநபரின் உரிமை என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். எந்த ஒரு தனிநபருக்கு எதிராகவும் எந்த தடையும் விதிக்கவில்லை. சர்வதேச சமூகத்தினர் இதனையும் பொதுமக்களின் உரிமையையும் புரிந்துகொள்ள வேண்டும்.

படையினரின் கரங்களில் சிக்கிக் கொள்ள விரும்பாத தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் பாதுகாப்பார்கள். பொதுமக்களை படுகொலை செய்யும் நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச சமூகத்தின் செயல்பாடுகள் குறித்து மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 

புலிகளின் சிறியரக நீர்மூழ்கிப் படகு கண்டுபிடிப்பு

sub-marine-01.jpgதற்போது முல்லைத்தீவை நோக்கி முன்னேறி வரும் படையினர் முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில் விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி,  மூன்று சிறிய தற்கொலைத் தாக்குதல் படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.  நேற்று வியாழக்கிழமை காலை உடையார்கட்டுக்குளம் பகுதியில் தேடுதல் நடத்திய விஷேடப் படையணி 3 இவற்றைக் கண்டுபிடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வன்னியில் படையினர் இதுவரை காலமும் நடத்திய தாக்குதலின் போது மேற்கொண்ட மிக முக்கியமான கண்டுபிடிப்பு இவையெனவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.  கட்டுமானப்பணிகள் பூர்த்தியடையாத நிலையிலுள்ள இந்த நீர்மூழ்கி 35 அடி நீளமானதும் கவசத் தகட்டினால் உருவாக்கப்பட்டு வருவதுமாகும்.

இதைவிட இந்த நீர்மூழ்கியைத் தாங்குவதற்கும் அதனை இடத்திற்கிடம் நகர்த்துவதற்குமான சக்கரங்கள் பூட்டப்பட்ட “ரெயிலர்’, கவசத்தகடுகள், ஒட்டுவேலைக்கு பயன்படுத்தப்படும் பாரிய சிலிண்டர்கள், ஒவ்வொன்றும் 20 அடி நீளமான 30 கவசத்தகடுகள், மிதித்துச் செல்லக்கூடிய வகையை சேர்ந்த மூன்று தற்கொலைத்தாக்குதல் படகுகள், டோறா வகையைச் சேர்ந்த வேகத்தாக்குதல் படகொன்றும் பெருமளவு நீரிறைக்கும் கருவிகள் (வாட்டர்பம்), இரு லொறிகள், இரு பஸ்கள், ஒரு ட்ரக், அதிசக்தி வாய்ந்த ஒரு ஜெனரேற்றர், வாட்டபவுசர், இழுவை வண்டி, ஒரு பவுசர், மண்ணெண்ணெய், இரு பெரிய லேத்மெசின்கள், சக்தி வாய்ந்த இரு கொம்புறசர்கள், ஓட்டும் இயந்திரம், ஒரு தொகுதி மின்சார மோட்டார்கள், மிகப்பெரியதொரு உயர்த்தி (ஜய்க்), பலபடகுகள், வாகன இயந்திரங்கள், மிகப்பெரியதொரு கட்டிடம், குளிரூட்டப்பட்ட சிறியரக வீடுகள் 15 என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த கண்டுபிடிப்பின் மூலம் நீருக்கடியிலான ஆயுத வகைகளைத் தயாரிப்பதில் ஈடுபட்ட முதலாவது அமைப்பாக விடுதலைப் புலிகளே இருப்பது தெரியவந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

sub-marine-03.jpg

sub-marine-04jpg.jpg

sub-marine-01.jpg

152 மி.மீ. ரக ஆட்டிலறியும் படையினரால் மீட்பு

_army.jpgபுலிகள் பாவித்து வந்த 152 மி. மீ. ரக ஆட்டிலறி ஒன்றை பாதுகாப்புப் படையினர் நேற்றுக் காலை கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். விசுவமடு பிரதேசத்தில் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர். இந்த ஆட்டிலறியை கண்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

விசுவமடு கிழக்கு பிரதேசத்தில் இந்த ஆட்டிலறியும் 70 வெற்று ரவைகளும் புதைக்கப்பட்டிருந்த நிலையிலே படையினர் மீட்டெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 58வது படைப் பிரிவின் 10வது கஜபா படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜனக உடுவோவிட்ட தலைமையிலான படைப் பிரிவினர் இந்த ஆட்டிலறியை கைப்பற்றியுள்ளனர். இந்த ஆட்டிலறி மூலம் 17 கி. மீ. தொடக்கம் 24 கிலோ மீற்றர் தூரம்வரை தாக்குதல் நடத்த முடியும்.

அப்பாவி தமிழ் மக்களைத் தண்டிக்காதீர்கள்! : தமிழ் சமாதான ஒன்றியம்

TFP Logoஇலங்கையில் தொடர்ந்துவரும் இனப்போரில்; அகப்பட்டுள்ள அப்பாவிப் பொதுமக்கள் பேரழிவுகளுக்கு உள்ளாகும் சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்துவரும் செய்திகளையிட்டு தமிழ் சமாதான ஒன்றியம் கவலை கொண்டுள்ளது. இலங்கை அரசும், தமிழீழ விடுதலைப் புலிகளும் பொதுமக்களின் நலன்களை புறந்தள்ளி அப்பாவிப் பொது மக்களை தொடர்ந்து பணயக் கேடையங்களாக பாவித்து போர் புரிவதை தமிழ் சமாதான ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்க விரும்புகின்றது. குறிப்பாக, இலங்கை அரசு ஏற்படுத்தியிருந்த பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்திலிருந்து இலங்கை அரச படைகள்மீது போர் புரிவதன்மூலம் பொது மக்களுக்கு ஏற்படும் இழப்புகள் அதிகரிக்கச் செய்வதை தமிழீழ விடுதலைப் புலிகள் உடனடியாகக் கைவிடவேண்டுமென தமிழ் சமாதான ஒன்றியம் வற்புறுத்துகிறது.

போரில் சிக்குண்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரும் வரையில் இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் உடனடியாகப் போர்நிறுத்தம் ஒன்றை செய்யவேண்டுமென தமிழ் சமாதான ஒன்றியம் கோருகிறது. அத்துடன் சர்வதேச கண்காணிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் ஏற்படுத்தப்படும் பாதுகாப்பு வலயமொன்றில் பொதுமக்கள் சென்று சேர்வதற்கான ஏற்பாடுகளை இரு பகுதியினரும் உடனடியாக செய்யவேண்டுமெனவும் தமிழ் சமாதான ஒன்றியம் கருதுகிறது.

போரில் சிக்குண்டுள்ள அப்பாவிப் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும், வணக்கத்திற்குரிய யாழ் அதிமேற்றிராணியார் அவர்களும் மற்றும் ஜக்கிய நாடுகள் ஸ்தாபனமும் இதுவரையில் தெரிவித்திருந்த கருத்துக்களை கவனத்திலெடுத்து செயற்படுமாறு இலங்கை அரசையும், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழ் சமாதான ஒன்றியம் கேட்டுக் கொள்கிறது. இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பில் பொறுப்பாக நடந்துகொள்ள கடமைப்பட்டவர்கள் என்பதை தமிழ் சமாதான ஒன்றியம் நினைவூட்ட விரும்புகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் குறிப்பிட்ட சிறுபகுதியினுள் முடக்கப்பட்ட நிலையில் அவர்களை மேலும் பலவீனப்படுத்துவதற்காக அப்பாவி மக்களைக் கொல்லக்கூடிய போர் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துவது மட்டுமே இலங்கை அரசு தமிழ் மக்கள் மேல் அக்கறை கொண்டுள்ளது என்பதை வெளிபடுத்தும். தற்பாதுபாப்பு அணுகுமுறைகளை மேற்கொண்டு மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துவதை நிறுத்தவும் அப்பிரதேசங்களிலிருந்து மக்கள் வெளியேறவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு தமிழ் சமாதான ஒன்றியம் அரச தரப்பினரை கேட்டுக் கொள்கிறது. அதற்கு ஆவன செய்யுமாறு புலம் பெயர்ந்து வாழும் எமது மக்களையும் இந்திய அரசு உட்பட அனைத்து உலக நாடுகளையும் சர்வதேச அமைப்புக்களையும் சமய நிறுவனங்களையும் கரம் கொடுத்து உதவுமாறு தமிழ் சமாதான ஒன்றியம் கோருகிறது.

வவுனியா ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த 26 உடல்களும் பூந்தோட்டம் மயானத்தில் அடக்கம்

வவுனியா அரசினர் பொது வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்த அடையாளம் காணப்படாத 26 சடலங்களும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியவில் அரசாங்க செலவில் பூந்தோட்டம் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட நீதிமன்றின் உத்தரவுடன் சடலங்களை பொலிஸார் அடக்கம் செய்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. வன்னிப் போர்முனைப் பகுதியில் இராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்ட இவையாவும் புலிகளின் சடலங்கள் எனத் தெரிவிக்கப்பட்டு சவச்சாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. சடலங்களை பொறுப்பேற்குமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் பொலிஸார் கேட்டிருந்தனர். பழுதடைந்த நிலையில் இவை இருந்ததால் சவச்சாலையிலிருந்து விரைவாக அப்புறப்படுத்தப்பட வேண்டுமென பொலிஸார் தெரிவித்திருந்தனர். அத்துடன் சவச்சாலையில் இடநெருக்கடியும் ஏற்பட்டிருந்தது. தொடர்ந்தும் சடலங்களை வைத்திருக்க முடியாத நிலையில் மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் பொலிஸார் சடலங்களை அடக்கம் செய்தனர்.

புலிகள் அனுமதித்தால் காயமடைந்தவர்களை மீட்போம்: ஐ.நா.

uno.gifஇலங்கையின் போர் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி மக்களை மீட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஐ.நா. திட்டமிட்டுள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே தற்போது போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பல்வேறு நகரங்களை பிடித்துள்ள ராணுவம், தற்போது முல்லைத்தீவையும் பிடிக்க போராடி வருகிறது.

இந்நிலையில், போரினால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் இரண்டரை லட்சம் அப்பாவிப் பொதுமக்கள் வன்னிக் காட்டுப் பகுதியில் சிக்கியுள்ளனர். இவர்களில் சுமார் 50 குழந்தைகள் உள்பட பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், போரினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களை மீட்டு, சிகிச்சையளிக்க தயாராக இருப்பதாகவும், இதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும் என்றும் ஐ.நா.சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூனின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “புலிகள் அனுமதித்தால், இன்று பகல் நேரத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, வவுனியாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.காயமடைந்தவர்களை போர் நடக்கும் பகுதியில் இருந்து மீட்பதற்காக சென்ற ஐ.நா மீட்புக் குழு, புதுக்குடியிருப்பு பகுதியில் சிக்கியுள்ளது. இப்பகுதி விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.