::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

இலங்கை இராணுவம் கொத்தனிக் குண்டுகளை பயன்படுத்தவில்லை! வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மறுப்பு

palitha_koahana.jpgஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினால் தடை செய்யப்பட்டுள்ள கொத்தனிக் குண்டுகளை இலங்கை இராணுவத்தினர் பயன்படுத்தவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன தெரிவித்துள்ளார்

பாதுகாப்புப் படையினா; புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது கொத்தனிக் குண்டுகளைப் போட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடாபாக சீ.என்.என். செய்திச் சேவைக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார் அப்பேட்டியில் வெளிவிவகார அமைச்சின் செயலாளா மேலும் குறிப்பிடுகையில்

இலங்கை இதுவரை காலமும் கொத்தனிக் குண்டுகளைக் கொள்வனவு செய்யவோ தயாரிக்கவோ அல்லது விற்பனை செய்யவோ இல்லை. இந்நிலையில் அரசாங்கத்தினால் பராமிக்கப்படும் வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்தும் தேவை அரசுக்கு கிடையாது.

பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மாத்திரம் இயங்கவில்லை. பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் இன்னும் பல வைத்தியசாலைகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் அரசாங்க வைத்தியசாலைகள். அங்கு அரச உத்தியோகத்தர்களே பணி புரிகின்றனர் அப்பிரதேசங்களில் வசிப்பவர்கள் இந்நாட்டு மக்கள். எனவே அவர்கள் மீது தாக்குதல் நடத்த எந்தத் தேவையும் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது பாதுகாப்புப் படையினா கொத்தனிக் குண்டுகளைப் போட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ள தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் கொடூரமான பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து தேசத்தை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான நடவடிக்கைகளில் மனித குலத்தின் அழிவுக்கு வித்திடும் பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை எனக் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆயுதங்களை கீழே வைத்து ஜனநாயக வழிக்கு வருவோரை ஏற்க அரசு தயார்

pm-srianka.jpgபுலி கள் இயக்கத்தின் சிலர் ஆயுதங்களை கீழே வைத்து அரசிடம் சரணடையப் போவதாக தெரிவித்துள்ளனர். உண்மையிலேயே அது புத்தி சாலித்தனமான தீர்மானம். ஆயுதங்களைக் கீழே வைத்து ஜனநாயக வழிக்குத் திரும்பும் அனைவரையும் ஏற்றுக்கொள்ள எமது அரசு ஆயத்தமாக இருக்கிறது என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

நேற்றுக் காலை பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத் திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்துப் பேசும்போதே பிரதமர் மேற் கண்டவாறு தெரிவித்தார். பிரதமர் தொடர்ந்தும் பேசும்போது:-

புலிகள் மக்களை கேடயங்களாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளார்கள். சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் கருணையையும் பெற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்கிறார்கள். எந்தவொரு அழுத்தம் வந்தபோதும் மனிதாபிமான நடவடிக்கை நிறுத் தப்படமாட்டாது. புலிகள் இன்று போக்கிடமின்றி இருக்கிறார்கள். தங்களது உறுப்பினர்களையே கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் நாம் தான் என புலிகள் உலகத்துக்கு கூறினார்கள். ஆனால் தமிழ் மக்களினாலேயே ஒதுக்கித் தள்ளப்பட்டவர்களாக இருக்கிறார்கள். சிலர் காடுகளில் ஒளிந்துகொண்டு இருக்கிறார்கள். மக்களை கேடயங்களாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். புலிகளின் சிலர் அரசிடம் சரணடையப் போவதாக ஊடகங்களினூடாக தெரிவித்திருக்கின்றனர். காலம்கடந்தாவது யதார்த்தத்தைப் புரிந்துகொண்டுள்ளமையும், புத்திசாலித்தனமாக செயல் என அரசு கருதுகிறது.

நாம் ஆரம்பத்திலிருந்து கூறியது போன்று ஆயுதங்களை கீழே வைத்து ஜனநாயக வழிக்கு திரும்பும் எவரையும் ஏற்க நாம் ஆயத்தமாக இருக்கிறோம். நாட்டின் வளங்களை, சொத்துக்களை அழிக்கின்ற, மக்களின் உயிர்களை பலி கொள்கின்ற யுத்தத்திற்குச் செல்லாமல் ஜனநாயக ரீதியாக பிரச்சினைக்குத் தீர்வு காண்பதையே புலிகள் இன்று செய்ய வேண்டியுள்ளது.

மூன்று தசாப்தங்களின் பின்னராவது யதார்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கு புலிகளின் சிலர் முன்வந்திருப்பது மக்களின் நன்மைக்காகவே. அவ்வாறு யதார்த்தத்தை புரிந்துகொள்ளத் தவறும் பட்சத்தில் எந்தவொரு அழுத்தத்திற்காகவும் மனிதாபிமான நடவடிக்கையை அரசு நிறுத்தப்போவதில்லை.

எந்த சக்திக்கும் நாம் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளை நிறுத்திவிட முடியாது.

எந்தவொரு நாட்டுக்கும் சுயாதீனத் தன்மை இருக்கிறது. உள்நாட்டுப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கு அதிகாரம் இருக்கவேண்டும். இதற்கு பங்காளியாக மற்றுமொரு தரப்பினரின் உதவியை நாடவும் முடியும். அன்று சுதந்திரத்திற்காக போராடியபோதும் ஆசிய நாடுகள் ஒற்றுமையுடன் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டன. இதனால் ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற நேரிட்டது. இன்றும் அதே நிலைமைதான்.

உலகத்திலேயே திறமையான படை எங்களுடையதென மார்தட்டிக்கொண்ட புலிகள் இன்று காட்டுக்குள் ஒழிந்துகொண்டுள்ளார்கள். படையினருக்கு பாடம் புகட்டுவோம் என்று கூறிய புலிகள் மக்களை கேடயங்களாக வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் எமது படை வீரர்களே.

களத்தில் நிற்கின்ற படையினருக்கும், உயிர்நீத்த, படுகாயமடைந்து இன்று ஊனமுற்ற படையினருக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம். எந்நேரமும் நன்றியுணர்வுடன் அவர்களை நினைவுகூரவும் கடமைப்பட்டுள்ளோம்.

எல்லாவற்றுக்கும் மக்களின் ஆதரவே பக்கபலமாக எமக்கும் படையினருக்கும் அமைந்துள்ளது. படையினரின் ஒவ்வொரு வெற்றிக்கும் மக்களின் ஒன்றுபட்ட ஆதரவே பக்கபலமாக அமைந்துள்ளது.

புலிகளின் கட்டளைத் தளம் அழிப்பு

mi24_2601.jpgமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள புலிகளின் பிரதான தொலைத் தொடர்பு நிலையம் மற்றும் புலி முக்கியஸ்தர்களின் கட்டளைத்தளம் ஆகியவற்றை விமானப் படையினர் தாக்கியழித்துள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

விமானப்படைக்குச் சொந்தமான ஜெட் ரகதாக்குதல் விமானங்களால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். புதுக்குடியிப்புக்கு வடகிழக்கே 1.5 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள கட்டளைத் தளம் மற்றும் புதுக்குடியிருப்புச் சந்திக்கு வடக்கே 1.5 கிலோ மீற்றர் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த தொலைத் தொடர்புத் தளம் ஆகியவற்றை இலக்குவைத்தே நேற்றுக்காலை 10.10 மணியளவில் இந்த விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள புலிகளின் பல்வேறு இலக்குகள் மீது நேற்று முன்தினம் கடுமையான தாக்குதல்களை விமானப்படையினர் நடத்தியுள்ளனர்.13 தடவைகள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

புலிகளின் பிடியில் எஞ்சியுள்ள பிரதேசங்களை முழுமையாக விடுவிக்கும் நோக்குடன் பல முனைகளில் முன்னேறிவரும் இராணுவத்தின் 58, 59வது படைப் பிரிவினருக்கும், நான்காவது செயலணிக்கும் உதவியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் விமானப் படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்

புதுக்குடியிருப்பில் இருந்து இன்னும் ஆழமான யுத்த பகுதிக்குள் மக்கள் நகர்வு – ‘புலிகளின் முக்கிய தலைவர்களுக்கு மன்னிப்பு இல்லை’ கோதபாய : த ஜெயபாலன்

Makeshift Hospitalபுலிகளுடன் சரணடைவது பற்றி பேசுவதற்கு எதுவும் இல்லை அவர்கள் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் சரணடைய வேண்டும் என இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோதபாய ராஜபக்ச தெரிவித்து உள்ளார். புலிகளின் கீழ் நிலை உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் பிரதான சமூகத்துடன் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று தெரிவித்துள்ள கோதபாய ராஜபக்ச புலிகளின் தலைமை உறுப்பினர்களுக்கு எவ்வித மன்னிப்பும் இல்லை என்று தெரிவித்து உள்ளார். பிபிசி உலகசேவைக்கு இணைத் தலைமைநாடுகளின் வேண்டுகோள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே பாதுகாப்புச் செயலர் இதனைத் தெரிவித்து உள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் சகோதரரான இவரை குறிவைத்து விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதல் தோல்வியடைந்தது தெரிந்ததே. மேலும் தற்போதைய இராணுவத் தளபதி சரத்பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதலும் தோல்வியடைந்தது. அடிபட்ட பாம்புகளின் சீற்றத்தில் புலிகளுக்கு எதிரான இந்த யுத்தம் தற்போது முடக்கி விடப்பட்டு உள்ளது. மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது அவருடைய சகோதரர் கோதபாய ராஜபக்சவே முக்கிய முடிவுகளில் ஆளுமை செலுத்துகிறார் என்று அரசியல் வட்டாரங்கள் நம்புகின்றன.

இலங்கை அரசினால் பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் இடம்பெற்ற தாக்குதல்கள் காரணமாக கடந்த சில தினங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் அங்கு இயங்கி வந்த ஒரே மருத்துவ நிலையமும் செயலிழந்து போய் உள்ளது. அங்கு கடமையாற்றிய 15 யுஎன் பணியாளர்களும் அவர்களது 81 குடும்ப உறுப்பினர்களும் மருத்துவமனையை விட்டு வெளியேற் உள்ளதாக கொழும்பில் உள்ள யுஎன் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்து உள்ளார்.

சர்வதேச அழுத்தங்கள் பலமுனைகளில் இருந்து வந்த போதும் புதுக்குடியிருப்பில் உள்ள 250000 மக்களது உயிர்களைப் பணயம் வைத்து இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் தங்கள் இராணுவ நடவடிக்கையைத் தொடர்கின்றனர். உலகின் முக்கிய தலை நகரங்களில் எல்லாம் ஆயிரக் கணக்கில் தமிழர்கள் ஒன்றுதிரண்டு குரல் எழுப்பிய போதும் அவை கவனத்திற்கொள்ளபடுவதாக இல்லை.

கடந்த நான்கு நாட்களாக பெப்ப்ரவரியில் மட்டும் 85க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒருவர் ஐசிஆர்சி மருத்துவப் பணியாளர்.
01 பெப் 13 பேர் கொல்லப்பட்டனர்
02 பெப் 9 பேர் கொல்லப்பட்டனர்
03 பெப் 52 பேர் கொல்லப்பட்டனர்
04 பெப் 12 பேர் கொல்லப்பட்டனர்
05 பெப் 7 பேர் கொல்லப்பட்டனர்

மருத்துவமனை மீதான தொடர்ச்சியான தாக்குதலை அடுத்து காயப்பட்டவர்கள் நோயாளர்கள் இன்னும் ஆழமான யுத்த பகுதிகள்  நோக்கி நகர நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளதாக அல்ஜசீரா செய்தி தெரிவிக்கின்றது. கரையோரப் பிரதேசமான அங்கு குடிநிர் வசதிகளே இல்லையென ஐசிஆர்சி பெச்சாளர் சரசி விஜயரட்னே தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் காயப்பட்டவர்களும் நோயாளிகயளும் மருத்துவப் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதற்கு அல்லது யுத்தப் பகுதியில் இருந்து வெளியேறுவதற்கான பாதுகாப்பான வழி ஒன்றை ஏற்படுத்தமாறு அரச படைகளையும் புலிகளையும் கேட்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்றும் உடையார்கட்டு மருத்துவமனை மீது பாரதுரமான தாக்குதல் நடத்தப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள Office for the Coordination of Humanitarian Affairs (OCHA) உலக உணவுத் திட்டம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான உணவு விநியோகத்தை மேற்கொள்வதற்கான வழியை ஏற்படுத்துவதற்காக தொடர்ந்தும் போச்சு வார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவிக்கிறது. நாளை உணவு விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என்று தாம் நம்புவதாகவும் தெரிவித்து உள்ளது.

இணைத் தலைமை நாடுகளின் சரணடைவது பற்றிய வேண்டுகோள் தொடர்பாக புலிகள் உத்தியோகபூர்வமாக எதனையும் குறிப்பிவில்லை. குறிப்பாக நோர்வேயும் அந்த வேண்டுகோளில் தன்னையும் இணைத்துக் கொண்டது புலிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்ததாகவே உள்ளது. பேச்சு வாரத்தைகளின் போது நோர்வே விடுதலைப் புலிகளுக்கு சாதகமாகச் செயற்பட்டது என்று குற்றச்சாட்டப்பட்டது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்த யுத்தம் முற்றிலும் இந்தியாவின் அணுசரணையுடன் மேற்கொள்ளப்படுகிறது என்பது இந்தியாவின் நீண்ட மெளனத்தில் இருந்து தெரியவருகிறது. தமிழ்நாட்டை உசுப்பி இந்தாயவைப் பணிய வைக்கும் முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை. அமெரிக்காவில் பதவியேற்றுள்ள புதிய ஆட்சியாளர்களும் வழமையான கோரிக்கைகள் கண்டனங்களுடன் நிறுத்திக் கொண்டுள்ளனர். அவர்களுடன் பிரித்தானியாவும் இணைந்து தனது கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளது. கிட்டத்தட்ட புலிகள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் ஒதுக்கப்பட்டு உள்ளனர்.

எவ்வித அரசியல் செயற்பாடுகளையும் கொண்டிராத முற்றிலும் இராணுவ அமைப்பான புலிகள் சக இன மக்களுடன் நல்லுநவைக் கொண்டிராத சக தேசிய சர்வதேசிய விடுதலை அமைப்புகளுடன் உறவுகளைக் கொண்டிராத மக்களை நம்பாது ஆயுதங்களை மட்டுமே நம்பிய புலிகளை அந்த ஆயுதங்கள் இன்று காப்பாற்றவில்லை. 250 000 மக்கள் விரும்பியோ விரும்பாமலோ இன்று தங்களைப் பணயம் வைத்து புலிகளைக் காக்கின்றனர்.

தற்போதைய யுத்தத்தில் சிக்குண்டுள்ள 250 000 மக்களில் கணிசமானவர்கள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் குடும்பங்கள் அவர்களது அலுவலகங்களில் பணியாற்றியவர்கள் விரும்பியோ விரும்பாமலோ இராணுவப் பயிற்சிக்கு உட்பட்டவர்கள். கடந்த இரு தசாப்தங்களாக தங்களது பூரண கட்டுப்பாட்டில் இருந்த மக்களை புலிகள் தங்களது நோக்கங்களுக்காகப் பயன்படுத்தி இருப்பார்கள் என்பதும் அதனை அந்த மக்களால் மறுப்பதற்கு வாய்ப்பிருந்திருக்காது என்பதும் யதார்த்தம்.

அந்த வகையில் இலங்கை அரசு அந்த மக்களின் நம்பிக்கையைப் பெறாத வரையில் அவர்கள் ஒரு போதும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழையமாட்டார்கள் என்பது உறுதி. இதற்கிடையே யுத்தப் பகுதியில் இருந்து தப்பி வந்த சிலர் கைது செய்யப்பட்டு காணாமல் போகிறார்கள் என்ற செய்திகள் வெளியெ கசிகின்றன. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுபவர்களதும் நிலை மோசமாக உள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் பொறுப்பில் பாதுகாப்பு வலயங்களை ஒப்படைக்க வேண்டும். சரணடைய விரும்புபவர்கள் சர்வதேச மனிதாபிமான அமைப்புகளிடம் சரணடைவதற்கான வழிவகைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். இலங்கை இராணுவத்தை எந்தவொரு வன்னிக் குடிமகனும் குடிமகளும் நம்புவார்கள் என்று அரசோ சர்வதேச சமூகமோ எதிர்பார்க்க முடியாது.

மாற்றுக் கருத்து தளத்தில் செயற்பட்டவர்கள் மாற்றுக் கருத்து என்பது  புலியெதிர்ப்பு என்றளவில் செயற்படாமல் இலங்கை அரசு மீதான தங்களுடைய அழுத்தங்களை பிரயோகிப்பது அவசியம். இந்த வன்னி மக்கள் சந்திக்க உள்ள அவலத்தை தடுத்து நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். பெயருக்கு அறிக்கைவிட்டு தங்கள் கடமை முடிந்துவிட்டது என்றளவில் இல்லாமல் தொடர்ச்சியான அழுத்தங்களை நேரடியாகவும் சர்வதேச சமூகத்திற்கு ஊடாகவும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். புலி எப்ப காலியாகும் நாங்கள் எப்ப போய் குந்தலாம் என்ற எண்ணத்தில் செயற்பட்டால் அது அவர்கள் வன்னி மக்களுக்கு இழைக்கும் பாரிய துரோகச் செயலாக அமையும்.

இன்றைக்கு தமிழ் மக்களுடைய போராட்டங்கள் யுத்தத்தை நிறுத்துவதையும் சர்வதேச சமூகத்தின் பொறுப்பில் பாதுகாப்பு வலயங்கள் உருவாக்கப்படுவதையும் அரசியல் தீர்வு முன் வைக்கப்படுவதையும் மையமாக வைத்து நடத்தப்பட வேண்டும். மாறாக புலிகளின் நலன்கருதி மேற்கொள்ளப்படும் எவ்வித போராட்டமும் பயனற்றதாகவே அமையும். எங்கள் தலைவர் பிரபாகரன் புலிகளின் தடையை நீக்குங்கள் எங்களுக்கு தமிழீழம் வேண்டும் என்ற கோசங்கள் வன்னி மக்களுக்கு எவ்வகையிலும் உதவாது. யதார்தத்தைப் புரிந்து கொண்டு ஏற்படப் போகும் மனித அவலத்தை தடுத்து நிறுத்த போராடுவதே இன்றுள்ள முக்கிய கடமை.

பெயர் குறிப்பிட விரும்பாத ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார் ”நாங்கள் எங்களுடைய வரலாற்றுத் தவறுகளை எழுதப் போனால் புத்தகம் புத்தகமாக எழுதலாம். பாவம் மக்கள். ரொம்பவும் கஸ்டப்படுத்திவிட்டோம்” என்று. அவர் மேலும் கூறுகையில் ”இன்றைக்கு பணயம் வைக்கப்பட்டுள்ள 250 000 மக்களில் 5000 – 10 000 மக்களைப் பலிகொடுத்துத் தான் அரசியல் பேரம் பேச வேண்டி இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

பிரபாகரனின் உருவில் இன்னுமொருவர்

praba.jpgகடந்த வாரம் வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் தங்கியிருந்ததாகக் கருதப்படும் சொகுசு பதுங்குக் குழியொன்றை கண்டுபிடித்துள்ளதாக படைத் தரப்பினர் அறிவித்திருந்தமை தெரிந்ததே. அப்பதுங்குழியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட புகைப்படங்களுள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒத்த இன்னுமொருவருடன் பிரபாகரன் எடுத்துள்ள புகைப்படமொன்றினையும் படைத் தரப்பு வெளியிட்டுள்ளது.

இப்படத்திலுள்ளவர் பிரபாகரனை ஒத்த உருவம் கொண்டவர். இவருக்கு பிரபாகரனுக்குக் காணப்படுவதைப் போல மேல் மீசை காணப்படுவதில்லை என்றும், இவர் பிரபாகரனைவிட சுமார் 6 அங்குலங்கள் உயரமுள்ளவராக இருப்பாரென்றும் படைத் தரப்பு தெரிவிக்கின்றது.  

praba.jpg

வன்னியிலிருந்து நோயாளிகளைக் கொண்டுவரும் முகமாக சில மணிநேரம் போர் நிறுத்தம்

injured.jpgஇலங்கையின் வடக்கே நடைபெறும் மோதல்களில் காயமடைந்துள்ளவர்களையும், நோயாளிகளையும் மேலதிக சிகிச்சைக்காக வவுனியாவுக்கு கொண்டுவர வழிசெய்யும் வகையில் நாளை (இன்று) சுமார் ஆறு மணி நேர போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிபிசியிடம் தகவல் வெளியிட்ட,  இலங்கை அரசின் சுகாதார சேவைகளின் தலைமை இயக்குநர் டாக்டர் அஜித் மெண்டிஸ், இந்த போர் நிறுத்தமானது ஆறு மணி நேரத்துக்கு இருக்கும் என்று சுகாதார சேவைகள் துறையின் செயலர் தம்மிடம் தெரிவித்ததாக பிபிசி செய்திச்சேவையிடம் கூறியுள்ளார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் வன்னிப் பகுதியிலுள்ள நோயாளிகளும் காயமடைந்தவர்களும் வவுனியாவுக்கு கொண்டுவரப்படுவார்கள் என்றும் டாக்டர் அஜித் மெண்டிஸ் தெரிவித்தார்.  இவ்வாறு வன்னியிலிருந்து சிகிச்சைக்காக வவுனியாவுக்கு கொண்டுவரப்படும் நோயாளிகளை கவனிப்பதற்கென்று, வவுனியா மருத்துவமனையில் தனிப் பிரிவு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அங்கு அறுவை சிகிச்சை வல்லுநர்கள், சிறப்பு மருத்துவர்கள், இரத்தம் மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

இந்த முடிவை பாதுகாப்பு அமைச்சகத்துடன் சேர்ந்து சுகாதார அமைச்சகம் எடுத்துள்ளது என்றும், இந்தத் தகவல் இராணுவத்துக்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் டாக்டர் அஜித் மெண்டிஸ் பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.

கொத்தணி குண்டுகளை பயன்படுத்தவில்லை: இலங்கை அரசு

cluster.gifஇலங்கையின் வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளுடனான மோதல்களில் தாம் கொத்தணிக்குண்டுகளை பயன்படுத்தவில்லை என்று இலங்கை அரசு கூறும் உறுதியை தாம் ஏற்பதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது என பி.பி.ஸி. செய்திச்சேவை அறிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த 18 மணிநேர எறிகணைத் தாக்குதல்களில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கின்ற கடைசி முக்கிய மருத்துவமனையும் கொத்தணிக்குண்டுகளால் தாக்கப்பட்டதாக ஐ. நா பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார். இந்த கொத்தணிக்குண்டுகளை யார் ஏவினார்கள் என்று தெரியவில்லை என்றும், அந்த மருத்துவமனை தற்போது அங்கிருந்து அகற்றப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்குப் பகுதியில் இலங்கை இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான மோதல்களில் குறைந்தது 52 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. மேலும் 80 பேர் அதில் காயமடைந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் சார்பிலான பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், இன்னும் சில நாட்களில் விடுதலைப்புலிகள் வெற்றிகொள்ளப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலிகளின் தற்கொலை பயிற்சி முகாம் முல்லை காட்டுப் பகுதியில் கண்டுபிடிப்பு – உதய நாணயக்கார

_army.jpgபுலிகளின் தற்கொலை குண்டுதாரிகள் பயன்படுத்திய பாரிய பயிற்சி முகாம் ஒன்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். முல்லைத்தீவு அடர்ந்த காட்டுப் பகுதியில் புலிகளால் மிகவும் சூட்சுமமாக அமைக்கப்பட்டிருந்த இந்த பாரிய முகாமை இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படைப் பிரிவினர் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும், புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் பலரும் இந்த முகாமை பயன்படுத்தியிருக்கலாம் என்று படையினர் நம்புவதாக தெரிவித்த பிரிகேடியர், நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டிருந்த உடற் பயிற்சி நிலையம், விரிவுரை மண்டபம், நிலக்கீழ் முகாம் மற்றும் பெருமளவிலான உணவு களஞ்சியத் தொகுதி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். படையினரின் கடுமையான தாக்குதல்களால் படுகாயமடைந்த நிலையில் பின்வாங்கிச் சென்ற புலிகள் விட்டுச்சென்ற ஜீப் ரக வண்டியொன்றையும் படையினர் இந்தப் பிரதேசத்திலிருந்து கண்டெடுத்துள்ளனர்.

மிகவும் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டிருந்த இந்த ஜீப்பை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனோ அல்லது அவருக்கு நெருக்கமான முக்கிய உறுப்பினர் ஒருவரோ கள நிலைமைகளை ஆராய்வதற்காக பயன்படுத்தியிருக்கலாம் என்றும் படைத் தரப்பினர் சந்தேகிப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

பிரபாகரன் அடிக்கடி இந்த முகாமுக்கு வந்து சென்றிருக்கலாமென படையினர் நம்புவதாக தெரிவித்த அவர், புலிகளை தற்கொலைத் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு அனுப்புவதற்கு முன்னர் அவர்களுடன் பிரபாகரன் இறுதி இராப் போசனங்களை இங்கிருந்தே எடுத்துள்ளமைக்கான அறிகுறிகளும், அடையாளங்களும் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

இங்குள்ள பல்வேறு அறைகளில் ஒரு அறையில் தற்கொலை தாக்குதலை நடத்தி உயிரிழந்த புலிகளின் தற்கொலைப் படைப் பிரிவு உறுப்பினர்களின் படங்களும் ஞாபகார்த்தமாக வைக்கப்பட்டிருந்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, வன்னி இறுதிக் கட்ட படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினருக்கும், புலிகளுக்கும் இடையில் சாலை, புதுக்குடியிருப்பு, விசுவமடு, பகுதிகளில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பிரதேசங்களில் மோதல்களுக்குப் பின்னர் படையினர் மேற்கொண்ட தேடுதலின் போது கொல்லப்பட்ட புலிகளின் ஐந்து சடலங்கள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

ரி – 56 ரக துப்பாக்கிகள் –  தற்கொலை அங்கிகள், தொலைத் தொடர்பு கருவிகள் – மோட்டார் சைக்கிள் –  40 மி. மீ. ரக குண்டுகள், மிதிவெடிகள் – பிஸ்டல்கள், 120 மி. மீ. ரக மோட்டார் குண்டு –  12.7 மி. மீ. ரக விமான எதிர்ப்பு பீரங்கி –  பெருந்தொகையாக வெடிக்க வைக்கும் கருவிகளையும் இராணுவத்தினர் மீட்டெடுத்துள்ளதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

398 சிவிலியன்கள் இராணுவத்திடம் நேற்று தஞ்சம்

புலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்த 398 பொதுமக்கள் பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

ஓமந்தை மற்றும் சாலைக்கு மேற்கு பிரதேசங்களை நோக்கி மூன்று கட்டங்களாக 398 சிவிலியன்களும் வருகை தந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். சாலைக்கு மேற்கே உள்ள இராணுவத்தின் 58வது படைப்பிரிவினரிடம் 92 சிவிலியன்கள் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் 32 பெண்களும், 30 ஆண்களும், 30 பிள்ளைகளும் அடங்குவர். இதேவேளை, மேலும் 15 பேர் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி வருகை தந்துள்ளனர். இதேவேளை, ஓமந்தை சோதனைச் சாவடியை நோக்கி 23 குடும்பங்களைச் சேர்ந்த 78 சிவிலியன்கள் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். 22 பெண்கள், 20 ஆண்கள், 23 சிறுமிகள் மற்றும் 12 சிறுவர்களும் இவர்களில் அடங்குவர்.

இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வருகை தந்துள்ள 184 சிவிலியன்களும் வழக்கமான விசாரணைகளுக்குப் பின்னர் கிளிநொச்சி மற்றும் வவுனியா பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

விசுவமடு: 5 ஏக்கரில் புலிகளின் சிறைச்சாலை, சித்திரவதை முகாம்- நாசி யுகத்தை ஒத்ததென்கிறார் இராணுவ பேச்சாளர் (படங்கள் இணைப்பு)

wiswamadu.jpgபுலிகளின் சிறைச்சாலை கட்டடத் தொகுதி உள்ளடக்கிய பாரிய சித்திரவதை முகாமை பாதுகாப்புப் படையினர் நேற்றுக்காலை கைப்பற்றியுள்ளனர். விசுவமடுவுக்கு மேற்கு பிரதேசத்தில் உள்ள சுமார் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் இந்த சித்திரவதை முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். புலிகளின் கோட்பாடுகளை செவிமடுக்காதவர்களை கடுமையான விசாரணைக்குட்படுத்தி அவர்களுக்கு கடுமையாக சித்திரவதை செய்வதற்கு இந்த வதைமுகாம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த சிறைக்கூடங்கள் நாசியுக சிறைக் கூடங்களுக்கு ஒத்த அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

புலிகளின் சித்திரவதை முகாம் அமைந்திருக்கும் வளாகத்தைச் சுற்றிலும் சுமார் பத்து அடி உயரத்திற்கு முற்களைக் கொண்ட சுருள்கம்பிகளால் வேலியிடப்பட்டுள்ளது. கொங்கிரீட் மற்றும் சீமெந்தினால் அமைக்கப்பட்டுள்ள இந்த முகாமில் மிகவும் சிறிய பல சிறைக்கூடங்களை காணமுடிகிறது. இவை காற்றோட்டம் இல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

சிறைகூடங்களுக்கு அண்மித்ததாக புலிகளின் தலைமைகளால் தண்டனை வழங்கப்படும் பாரிய மண்டபம் ஒன்றும் காணப்பட்டது. இந்த மண்டபத்தை சுற்றி பல இரும்புக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதேவேளை, புலிகள் இன்னுமொரு தண்டனை வழங்கும் உபாயமாக குட்டையானதும் நீளமானதுமான காற்றோட்டமில்லாத இரும்பு பெட்டியொன்றை வைத்துள்ளனர். கடுமையான தண்டனைக்குரியவர்களென தீர்மானிக்கப்படுவோர் அந்தப் பெட்டியினுள் இட்டு அடைத்து வைக்கப்படுவர். அதிலும் தண்டனை அதிகரிக்கும் பட்சத்தில் அப்பெட்டி ஜெனரேட்டரின் உதவியுடன் மேலும் சூடாக்கப்படுமெனவும் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார்.

புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழிகள், அதிசொகுசு வீடுகள், களஞ்சியங்கள், முகாம் தொகுதிகள் உள்ளிட்ட பல முக்கிய கட்டடத் தொகுதிகளை கைப்பற்றி வரும் படையினரது வெற்றிக்கு சித்திரவதை முகாம் கைப்பற்றப்பட்டுள்ளமை பாரிய திருப்புமுனையாக அமைந்துள்ளதெனவும் பிரிகேடியர் குறிப்பிட்டார்.

img_0401-01.jpg

img_0401-02.jpg

img_0401-03.jpg

img_0401-04.jpg

.