::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

வட பகுதி முழுமையாக மீட்கப்பட்டு விரைவில் மக்களிடம் ஒப்படைக்கப்படும் – ஜனாதிபதி

pr-tam-deli.jpgவடபகுதி முழுமையாக மீட்கப்பட்டு விரைவில் அங்குள்ள மக்களிடம் ஒப்படை க்கப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திலிருந்து மீட்கப்பட்ட பகுதியில் மிதி வெடி மற்றும் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு சிவில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் அம்மக்கள் தமது சொந்த இடங்களில் விரைவாகக் குடியேற நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை அலரி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கு தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் நிலைமைகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தையொன்றை நடத்துவதற்கென தமிழ்க் கட்சிகள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே ஜனாதிபதியினால் இச்சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததென ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இங்கு கருத்துத் தெரிவித்த தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள்; பிரபாகரனின் பயங்கரவாத நடவடிக்கைகளால் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தனர். அதனைக் கவனத்திற் கொண்ட ஜனாதிபதி, மீட்கப்பட்டுள்ள மக்கள் புலிகளின் நடவடிக்கைகளினால் உள ரீதியான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

அந் நிலையிலிருந்து அவர்களை மீட்கும் வகையில் தமிழ்க்கட்சிப் பிரதிநிதிகள் அப்பகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சகோதர மக்களின் பிரச்சினைகளைக் கண்டறிய தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பினை தாம் உணர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு சகல தமிழ்க் கட்சிகளினதும் ஒத்துழைப்பு தமக்குக் கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சர்வதேச ரீதியில் எழும் சவால்களுக்கு இணைந்த பலத்துடன் முகங்கொடுத்த சகோதர மக்களைப் பாதுகாத்து அவர்களை நிரந்தர இடங்களில் மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைகளில் இணைந்து செயற்பட வருமாறும் ஜனாதிபதி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அப்பாவி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலேயே சர்வதேச சமூகம் அக்கறை கொள்ள வேண்டுமே தவிர பயங்கரவாதிகளைப் பலப்படுத்துவதிலல்ல எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். கடந்த 30 வருட காலமாக வடக்கு தமிழ் மக்கள் அனுபவித்துவரும் துன்பங்களைத் தாம் அறிந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அம்மக்கள் மீளக் குடியமர்த்தப்படும் இடங்களில் அவர்கள் மீண்டும் அவ்வாறான சிக்கல்களுக்கு முகங்கொடுக்க இடமளிக்க மாட்டோமெனவும் தெரிவித்துள்ளார்.

வடக்கில் நகர்ப்பகுதிகள் மட்டுமன்றி கிராமியப் பிரதேசங்களின் வீதி, மின்சாரம், போக்குவரத்து, சுகாதாரம் உட்பட சகல வசதிகளையும் பெற்றுக் கொடுத்து விரைவில் அம்மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார். இந்நடவடிக்கைகளில் தமிழ்க் கட்சிகளின் ஆலோசனைகள் பெறப்பட்டு அதில் கவனம் செலுத்தப்பட்டு எதிர்கால நடவடிக்கைகள் திட்டமிடப்படுமென தெரிவித்த ஜனாதிபதி எச்சந்தர்ப்பதிலும் எக்காரணத்திற்காகவும் பயங்கரவாதிகளுக்கு எத்தகைய ஆதரவும் வழங்கக்கூடாதெனவும் தெரிவித்துள்ளார்.

போர்ப் பகுதியில் பயங்கரமான நிலையில் மக்கள்:பிரிட்டனின் நாடாளுமன்ற குழு

icrc.jpgஇலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, வடபகுதியில் மோதல் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள மக்களின் நிலை மிகவும் பயங்கரமாக உள்ளதாக கூறியுள்ளது.

பொதுமக்களை விடுவிக்க வேண்டும் என விடுக்கப்படும் கோரிக்கைகளை விடுதலைப் புலிகள் தொடர்ந்து நிராகரித்து வருவதாகவும் டேஸ் பிரவுண் தலைமையிலான அந்தக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் இலங்கைக்கான விஜயம் குறித்து பிரிட்டனின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. மோதல்கள் நடக்கும் பகுதிகளில், இலங்கை அரசு கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்று கூறியுள்ளதை உறுதியாக கடைபிடிக்க வேண்டும் எனவும், அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் எனவும் அந்த குழுவினர் கோரியுள்ளனர்.

வவுனியாப் பகுதிக்கு சென்ற அந்தக் குழுவினர் அங்கு இடைத் தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுடன் கலந்துரையாடியதாகவும் அப்போது அவர்கள் தாங்கள் விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து வெளியேறி தற்போது பாதுகாப்பாக தங்கியுள்ளதாக தம்மிடம் தெரித்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் எனவும் பிரிட்டனின் நாடாளுமன்ற குழுவினரின் அறிக்கை கோருகிறது.

பாதுகாப்பு வலயப் பகுதியில் மோதல் தொடர்வது குறித்து ஐ.நா. கவலை – உத்தியோகப்பற்றற்ற அமர்வுக்கு மட்டுமே ரஷ்யா இணக்கம்’

Wanni_War_IDPsஐ.நா. இலங்கையின் மோதல் சூன்யப் பகுதியில் 50 ஆயிரம் பொதுமக்கள் வரை சிக்குண்டிருக்கும் நிலையில் அங்கு இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறுவது குறித்து ஐ.நா. தொடர்ந்தும் கவலை தெரிவித்து வரும் நிலையில், இலங்கை விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புச்சபையின் உத்தியோகப்பற்றற்ற அமர்வுகளுக்கு மட்டுமே ரஷ்யா இணங்கியிருப்பதாக ஐ.நா.விலுள்ள ரஷ்யத்தூதுவரும் இந்த மாதம் பாதுகாப்புச் சபையின் தலைவருமான சேர்க்கின் கூறியுள்ளார்.

நியூயோர்க்கிலுள்ள ஐ.நா.தலைமையகத்தில் நிருபர்களை திங்களன்று சந்தித்த ஐ.நா. வின் பேச்சாளர் மேரி ஒசாவே இலங்கை விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்;

மோதல் வலயத்திற்குள் இருப்போரிடமிருந்து கிடைத்த அறிக்கைகளின் பிரகாரம் மோதல் அதிகரித்திருப்பதாகவும் மென்ரக, கனரக ஆயுதங்களும் பயன்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.

மோதல் வலயத்திலிருந்து 1 இலட்சத்து 88 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர். 1,8600 பேர் முகாம்களில் உள்ளனர் .காயமடைந்த 1700 பேரும் அவர்களை பராமரிப்போரும் ஆஸ்பத்திரிகளில் உள்ளனர். ஏப்ரல் 27 இற்குப் பின்னர் இடம்பெயர்ந்தவர்கள் முகாம்களுக்கு வந்துகொண்டிருப்பதாக அறிக்கை இல்லை. எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதில் தாமதம் ஏற்படுவது கள நிலை யதார்த்தமாக இருக்கலாம் என்றும் மேரி ஒகாபே கூறியுள்ளார்.

இதேவேளை, இன்னர் சிற்றி பிரஸ் ஐ.நா.வின் இந்த மாதத்திற்கான பாதுகாப்புச் சபைத் தலைவர் சேர்க்கினிடம் ஐ.நா. வின் மாதாந்த நிகழ்ச்சி நிரலில் ஏன் இலங்கையின் யுத்தம் குறித்து சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கை தொடர்பான கூட்டத்தை சபையின் மண்டபத்தில் அல்லது ஆலோசனை அறையில் நடத்துவதற்கு ரஷ்யா ஏன் தடையாக இருக்கின்றது என்பது குறித்து விளக்கமளிக்குமாறு பாதுகாப்பு சபைத் தலைவர் சேர்க்கினிடம் இன்னர் சிற்றி பிரஸ் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த சேர்க்கின், ஐ.நா.வின் அடித்தளத்தில் உத்தியோகப்பற்றற்ற கூட்டங்களுக்கு ரஷ்யா இணங்கியிருந்ததாக அவர் கூறியுள்ளார்.

இலங்கை அரசு கடுமையானதும் கடினமானதுமான பகைவருடன் சண்டையிடுவதாகவும், (அந்த எதிரி) பயங்கரவாத அமைப்பென பல தரப்புகளால் உத்தியோக பூர்வமாக வகைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார். மத்திய கிழக்கிலும் சிலர் இவ்வாறு வர்ணிக்கப்படுகிறார்களே அது எவ்வாறு? என்று இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

புலிகளின் சிங்கள கலாசார மொழிப் பயிற்சி நிலையம் படையினரால் கண்டுபிடிப்பு

sinhala_class_vauniya.jpg புலிகளினால் நிர்வகிக்கப்பட்டுவந்த சிங்கள காலாச்சார மற்றும் மொழி பயிற்சி நிலையம் புதுக்குடியிருப்பின் கிழக்கே அடர்ந்த காட்டுப் பகுதியினுள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. 57 ஆம் படையணியினர் மேற்கொண்ட தேடுதலின் போது இந்த மொழிப் பயிற்சி நிலையம் தொடர்பான பல விடயங்கள் வெளிவந்துள்ளன.

புலிகளின் தற்கொலைதாரிகள் மற்றும் புலனாய்வுத் துறையினருக்கு மொழி மற்றும் சிங்கள மக்களது காலாச்சாரங்கள் தொடர்பான பயிற்சிகளை வழங்குவதற்கு இந்நிலையம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

473 வன்னி குடும்பங்கள் நெல்லியடியில் தங்கவைப்பு

menikfarm.gifவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்த 473 குடும்பங்களைச் சேர்ந்த 1,250 பேர் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால் இப்பாடசாலையில் மாணவர்களுக்கு அருகில் உள்ள வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியில் மாலை நேரங்களில் தற்காலிகமாக வகுப்புக்கள் நடைபெறுகின்றன.

நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் தங்கியுள்ள அகதிகளுக்கு யாழ். அரசாங்க அதிபர் உணவை வழங்கிவருகிறார். ஏனைய உதவிகளை யுனிசெப், யூ.என்.எச்.சி.ஆர்., லீட்ஸ் மற்றும் சேவா லங்கா ஆகிய அரசசார்பற்ற நிறுவனங்கள் செய்துவருகின்றன.

இதேவேளை, இங்கு தங்கியுள்ள சிறுவர்கள், குழந்தைகளுக்கு இராணுவத்தினர் உடுபுடவைகள் வழங்கியுள்ளனர். இங்குள்ள அகதிகளை வெளியார் எவரும் பார்வையிட அனுமதி வழங்கப்படவில்லை.

சரணடைபவர்களை குடாநட்டு நீதிமன்றங்களில் ஆஜர் செய்யலாம்

saran.jpgயாழ் குடாநாட்டில் உயிர் அச்சுறுத்தலகள் காரணமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் சரணடைபவர்களை யாழ் மாவட்டத்தில் இயங்கும் நீதிமன்றங்களில் கையளிக்கலாம் என மேல் நிதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சரணடைபவர்களை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வாகனத்தில் நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லாது தனியார் வாகனங்களில் கொண்டு செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாழ் குடாநாட்டில் சாவகச்சேரி, பருத்தித்துறை, மல்லாகம், ஊர்காவற்துறை , மற்றும் யாழ்ப்பாணம் நீதிமன்றங்களில் ஆஜர் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரட்டை வாய்க்காலுக்கு தென்பகுதி மும்முனைகளால் சுற்றிவளைப்பு

udaya_nanayakkara_brigediars.jpgபுலிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் பாதுகாப்பு வலயத்தின் எஞ்சியுள்ள பிரதேசத்தை நோக்கி முன்னேறிவரும் பாதுகாப்புப் படையினர் புலிகளின் கடைசி மறைவிடத்தை நெருங்கிய வண்ணம் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொது மக்களை மீட்டெடுக்கும் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முனனெடுக்கப்படும் அதேசமயம், இரட்டை வாய்க்காலுக்கு தெற்காக உள்ள பிரதேசம் மும்முனைகளில் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வலயத்திற்குள் எஞ்சியுள்ள 4.5 கிலோ மீற்றர் நிலப்பரப்புக்குள் புலிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், இதில் மிகவும் வேண்டப்படும் புலிகளின் தலைவர்கள் பலர் அடங்குவதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவிக்கிறது.

ஏ-35 பிரதான வீதிச் சந்தியிலிருந்து தெற்கிலும் முல்லைத்தீவு நந்திக் கடல் கடல் நீரேரியிலிருந்து வடக்கிலும் சுமார் 500 மீற்றர் நீளத்துக்கு அமைக்கப்பட்டிருந்த மண்அணை ஒன்றை கைப்பற்றிய படையினர் அங்கிருந்து மேலும் 250 மீற்றர் நீளமான பிரதேசத்தை முன்னேறி கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புலிகள் மோட்டார், பீரங்கிகளைப் பயன்படுத்தி படையினரின் முன்னேற்றத்தைத் தடுக்கும் வகையில் கடும் தாக்குதல்களைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்ற போதிலும் பொது மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வண்ணம் படையினர் பதில் தாக்குதல்களை மேற்கொண்டு முன்னேறி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்திலிருந்து வடக்காகவும், மேற்காகவும் முன்னேறிவரும் இராணுவத்தின் 58 வது மற்றும் 53 வது படைப் பிரிவினரை இலக்கு வைத்து புலிகள் நேற்றைய தினமும் கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதேவேளை வட்டுவாக்கல் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளில் நிலை கொண்டிருந்த இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் தற்போது அங்கிருந்து வடக்கு நோக்கி முனனேற ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.

பிரிட்டிஷ் எம்.பிக்கள் குழு நிவாரண கிராமங்களுக்கு விஜயம்

Wanni_War_IDPs
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு நேற்று (செவ்வாய்) பகல் 2 மணியளவில் செட்டிகுளத்திற்கு விஜயம் செய்தது.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து செட்டிகுளம் மெனிக்பாம் நிவாரணக் கிராமத்தில் தங்கியுள்ள மக்களை சந்தித்த இவர்கள் அங்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளை அவதானித்ததுடன் மக்களிடம் கேட்டறிந்து கொண்டனரென அதிகாரிகள் தெரிவித்தனர்.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வந்த மக்களின் பெரும்பாலானவர்கள் செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக இருப்பிடங்களில் தங்கவைக்கப்பட்டு ள்ளனர். இவர்களுக்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட செயலகம் தெரிவிக்கின்றது.

வவுனியாவில் பாடசாலைகள் உட்பட 24 இடங்களில் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவில் அருவிதோட்டம், ஆனந்தகுமாரசாமி வலயம் 1, கதிர்காமர், அருணாசலம் வலயம் 3, செட்டிகுளம் மகா வித்தியாலயம், ஆண்டியாபுளியங்குளம் பாடசாலை, இராமநாதன் வலயம் 2 ஆகிய பகுதிகளில் 13 ஆயிரத்து 428 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 785 பேர் தங்கியுள்ளதாக மாவட்ட செயலக புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. ஏனைய 39 ஆயிரத்து 182 பேரும் வவுனியாவில் உள்ள 17 பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

புதுமாத்தளன் – பாதுகாப்பு வலயம்: போதியளவு உணவு அனுப்பிவைப்பு – தட்டுப்பாடில்லை என்கிறது உலக உணவுத்திட்டம்

taking-to-green-ocean.jpgபுதுமாத்தளன் பகுதியில் எஞ்சியுள்ள மக்கள் சீரான முறையில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதில்லை யென்ற புலிகள் இயக்கத்தின் குற்றச்சாட்டை உலக உணவுத் திட்டம் நிராகரித்துள்ளது. அங்கு சீரான முறையில் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் கடந்த பெப்ரவரி 19ம் திகதி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை 3,328 மெற்றிக்தொன் உணவுப் பொருட்கள் அங்கு அனுப்பப்பட்டதாகவும் உலக உணவுத் திட்டத்தின் இலங்கை காரியாலயம் தெரிவித்தது.

புதுமாத்தளனில் உள்ள மக்களுக்கு சீரான முறையில் உணவு அனுப்பப்படுவ தில்லையெனவும், இதனால் அங்குள்ள மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளதாகவும் புலிகள் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள உலக உணவுத் திட்டத்தின் பிரதிப் பணிப்பாளர் அசேட் அஸ்ரத், புதுமாத்தளனுக்கு சீராக உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதில்லையென்ற குற்றச்சாட்டு தவறானது என்று கூறினார். அரசாங்கத்தின் உதவியுடன் புதுமாத்தளனுக்கு கப்பல் மூலம் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் எதுவித தடங்கலும் செய்யவில்லை.

புதுமாத்தளனுக்கு உணவுப் பொருட்களை சேமித்து வைப்பதில் சிக்கல் உள்ளது. அதனால் பெருமளவு உணவுப் பொருட்களை அங்கு அனுப்ப முடியாதுள்ளது. உணவுப் பொருட்கள் பெரிய கப்பலில் எடுத்துச் சென்று அவை சிறிய மீன்பிடிப் படகுகளுக்கு மாற்றப்பட்டு கரைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. சிறிய படகுகளில் 30 தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இவ்வாறு அனுப்பப்படுகின்றன.

புதுமாத்தளனுக்கு உணவுப் பொருட்கள் கிரமமாக எடுத்துச் செல்லப்பட்டு தடையின்றி விநியோகிக்கப்பட்டு வருகிறது. அங்கு உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை எதுவும் கிடையாது எனவும் பிரதிப் பணிப்பாளர் கூறியுள்ளார்.

இது வரை 674 மெற்றிக்தொன் அரிசி, 1074 மெற்றிக் தொன் கோதுமை மா, 29 மெற்றிக்தொன் மரக்கறி மற்றும் சீனி, பருப்பு, எண்ணெய், சோயா கலன், சோளம் என்பன அனுப்பப்பட்டுள்ளன. இதேவேளை நேற்று (5) கப்பல் மூலம் புதுமாத்தளன் பகுதிக்கு மருந்து வகைகள் அனுப்பப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியது.

இலங்கை அகதிகளுக்கான அவசர உதவிகளுக்காக ஐ.நா கோரிக்கை

fily-ap.jpg இலங்கையின் வடக்கே மோதல் நடக்கும் பகுதிகளில் இருந்து தப்பியோடி வரும் மக்களின் உடனடி மனித நேயத் தேவைகளுக்காக ஐக்கிய நாடுகள் சபை 5 கோடி டாலர்கள் அவசர உதவி கோரியுள்ளது.

இலங்கை அரசும், உதவி நிறுவனங்களும் பெருமளவில் இடம்பெயர்ந்தோர்களின் தேவைகளை சமாளிக்க முடியாமல் திணறுவதாக கொழும்பில் உள்ள ஐ நா அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

கடந்த மாதம் ஏராளமானோர் சண்டை நடக்கும் பகுதிகளில் இருந்து வந்ததன் காரணமாக, முகாம்களில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்து தற்போது ஒரு லட்சத்து தொண்ணூறாயிரமாக உயர்ந்திருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.