::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

இலங்கைக்கு நிதியுதவி அளிக்கவேண்டாம்: நாடு கடத்தப்பட்ட “சனல் 4” ஊடகவியலாளர்

channel-4news.jpgசிறிலங்கா அரசாங்கம், வெளிநாட்டு நிதிகளைப் பெறுவதில் குறியாக இருப்பதாக, இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரித்தானிய “சனல்4”  ஊடகவியலாளர் நிக் பெட்டன் வோல்ஸ் தெரிவித்துள்ளார்.  இலங்கை அரசாங்கத்தினால் ஏராளமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். இலங்கையில் ஊடகச் சுதந்திரம் என்பது சுத்தமாக இல்லை.

இலங்கை அரசாங்கம், முகாம்களை புனரமைக்கவும், பராமரிக்கவும் அதிகரித்த அளவு வெளிநாட்டு நிதிகளை எதிர்பார்த்து இருக்கிறது. அவர்கள் எந்த அளவு நிதிகளை திரட்ட முடியுமோ, அந்த அளவுக்கு திரட்ட முற்படுகின்றனர். ஆனால் உண்மையில் இந்த நிதிகள் அங்குள்ள பொது மக்களுக்கு பயன்படுத்தப்படப் போவதில்லை.

தேசிய பாதுகாப்பு என கூறி, இராணுவ முன்னெடுப்புகளுக்காகவே இந்த நிதிகளை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர், இதனாலேயே இடம்பெயர்ந்த நிலையில் இன்னும் பல வருடங்களாக தமிழ் மக்கள் குடியமர்த்தப்படாமல் இருக்கிறார்கள். எனவே தொண்டு நிறுவனங்கள் எதுவும் இலங்கை அரசாங்கத்திற்கு நிதியுதவி செய்யக்கூடாது என பிரித்தானிய ஊடகவியலாளரான வோல்ஸ் கோரியுள்ளார்.

கடற் புலிகளின் தளபதி – செய்தித் தொடர்பாளர் பலி

ilanthirayan.jpgஇலங்கையில் கரையமுள்ளி வாய்க்கால் பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில் விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவின் முக்கிய தளபதியான செழியன் பலியாகிவிட்டதாகவும் அதே போல விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் ராசையா இளந்திரையனும் பலியாகிவிட்டதாகவும்  கூறப்படுகிறது.

கடற் புலிகளின் இரண்டாவது தளபதியான செழியன் கடற்படையினருடன் நடந்த பல மோதல்களில் பங்கேற்றவர். கடந்த ஆண்டு மார்ச் 27ம் தேதி கடற்படையினருடன் நடந்த சண்டையில் காயமடைந்திருந்தார். ஆனாலும் இப்போதைய போரிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இந் நிலையில் கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் புலிகள் அமைத்திருந்த மண் அணையை கைப்பற்ற நடந்த மோதலில் செழியன் பலியானதாக இலங்கை இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

அதே போல இந்தத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் ராசையா இளந்திரையனும் படுகாயமடைந்துள்ளார் என்று கூறப்பட்டது.  இந் நிலையில் அவரும் பலியாகிவிட்டதாகத் கூறப்படுகிறது. மட்டக்களப்பைச் சேர்ந்தவர் இளந்திரையன். விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். இத்தகவல்களை இந்திய இணையத்தளங்களும் தெரிவித்துள்ளன.

நலன்புரி நிலையங்களில் நகைகளைப் பாதுகாக்க வங்கிக் கிளைகள்

chals_.jpg
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியிருக்கும் மக்களின் பெறுமதி மிக்க நகைகள் மற்றும் ஆவணங்களைப் பாதுகாத்துக் கொடுப்பதற்கு அரசாங்க வங்கிகள் பாதுகாப்புப் பெட்டகங்களை வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறினார்.

தமிழர்கள் பெரும்பாலும் தமது பணத்தை தங்க ஆபரணங்களில் முதலீடு செய்வது வழக்கம் என்பதால்,  இடம்பெயர்ந்த மக்களின் பெறுமதிவாய்ந்த ஆபரணங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

வளையல்கள்,  தாலி போன்ற ஆபரணங்களையே கூடுதலாகப் பாதுகாப்புப் பெட்டகங்களில் மக்கள் வைத்துள்ளனர். தற்பொழுது வங்கிகள் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் பாதுகாப்பு பெட்டகங்களை வழங்க ஆரம்பித்துள்ளன என்றும் அவர் கூறினார்.

அதேநேரம், அரசாங்க வங்கிகள் மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் தமது வங்கிக் கிளைகளையும் திறந்துள்ளதாகவும்  சார்ள்ஸ் கூறினார். இடம்பெயர்ந்த மக்கள் அரசாங்க வங்கிகளின் பாதுகாப்புப் பெட்டகங்களில் 165 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதாக வடபகுதி மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான இணைப்பதிகாரி,  முன்னாள் பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னான்டோ கூறியுள்ளார்.

யாழ். குடாநாட்டிற்குள் ஊடுருவியுள்ள புலிகளை உடனடியாக சரணடையுமாறு இராணுவம் அறிவிப்பு

saran.jpg வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் வந்துள்ள மக்களோடு மக்களாக விடுதலைப்புலி உறுப்பினர்களும் ஊடுருவியுள்ளனர் என்றும் இவ்வாறு ஊடுருவிய புலி உறுப்பினர்களை உடனடியாக சரணடையுமாறும் இராணுவத்தினர் அறிவித்து வருகின்றனர்.
வலி. மேற்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஆட்டோ வண்டியில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கி மூலம் இராணுவத்தினர் மேற்படி அறிவிப்பை விடுத்திருந்தனர்.

அவ்வறிவிப்பில், யாழ். மாவட்டத்துக்குள் அண்மைக்காலமாக புலி உறுப்பினர்கள் ஊடுருவி வருகின்றனர். இவ்வாறு ஊடுருவி வரும் புலி உறுப்பினர்களுடன் தொடர்புவைத்திருப்பதையோ, உணவு வழங்குவதையோ முற்றாகத் தவிர்ப்பதோடு அவர்கள் தொடர்பான விடயத்தை உடனடியாக எமக்கு அறிவித்து உதவுங்கள்.

இதைவிடுத்து அவர்களை மறைத்து வைத்து உணவளித்து தகவல் வழங்காது இருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

பிரிட்டிஷ் செய்தியாளர்களை இலங்கை திருப்பி அனுப்பியமை குறித்து பிரிட்டன் ஏமாற்றம்

channel-4news.jpg
இலங்கையில் செய்தி சேகரிக்கச் சென்ற பிரிட்டிஷ் தொலைக்காட்சி செய்தியாளர் குழு ஒன்றை திருப்பி அனுப்பியது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகம் ஏமாற்றம் தெரிவித்துள்ளது.

இலங்கை படையினரின் அந்தஸ்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்ட 3 பிரிட்டிஷ் தொலைக்காட்சி செய்தியாளர்களை, இலங்கை அரசாங்கம் நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.

இலங்கை படையினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான மோதல்களில் தப்பி முககாம்களில் தஞ்சமடைந்துள்ள மக்கள் மோசமாக நடத்தப்படுவது, மற்றும் அவர்கள் பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்யப்படுவது ஆகியவை குறித்த குற்றச்சாட்டுக்கள் பற்றிய செய்திகளை சேகரிப்பதற்காக சென்ற இவர்கள் மூவரும் பிரிட்டனின் ”சனல் 4” தொலைக்காட்சியை சேர்ந்தவர்களாவர்.

சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்ட இவர்கள் இலங்கையின் கிழக்கே திருகோணமலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

தாம் சில தவறுகளை செய்ததாக இவர்கள் ஒப்புக்கொண்டதாக, இலங்கை பாதுகாப்பு தகவல் மையத்தைச் சேர்ந்த லக்ஸ்மன் ஹுலுகல்ல அவர்கள் கூறியுள்ளார்.

இலங்கையில் ஒரு பெரிய அளவிலான வெளிப்படைத்தன்மை தேவை என்ற நிலைமை இருக்கின்ற நிலையில், இவர்களை திருப்பி அனுப்புவதற்காக இலங்கை எடுத்த முடிவு தமக்கு ஏமாற்றத்தை தருவதாக பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தங்களுக்குரிய உணவு சமைக்கும் பணியை நிவாரணக் கிராம மக்கள் ஆரம்பித்தனர்

risard-badi.jpgவவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் நேற்று (10) முதல் தாங்களாக சமைக்கத் தொடங்கியுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். அவர்கள் தாமாக சமைத்து சாப்பிட சமையல் உபகரணங்கள், உலர் உணவுப் பொருட்கள், மரக்கறி வகைகள் அடங்கலான சகல நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களின் தேவைகள் தொடர்பாக ஆராயும் உயர்மட்ட மாநாடு நேற்று (10) வவுனியா அரச அதிபர் பணிமனையில் நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த மாநாட்டில் வவுனியா அரச அதிபர் திருமதி சாள்ஸ், மேஜர் ஜெனரல் சந்ரசிரி, அரச நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றின் பிரதிநிதிகளும் பங்குபற்றினர்.

இடம்பெயர்ந்து வந்துள்ள மக்கள் 4 நிவாரணக் கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சமைத்த உணவுகளே இவ்வளவு காலமும் வழங்கப்பட்டன. இவர்களுக்கு உலக உணவுத் திட்டத்தினூடாக அரிசி, மா, பருப்பு, சீனி என்பன வழங்கப்படுவதோடு ஏனைய உலர் உணவுப் பொருட்கள் சமையல் உபகரணங்கள் என்பனவற்றை அராசங்கமும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.

மக்கள் மீள்குடியேற்றப்படும் வரை மக்களுக்கு இலவசமாக தொடர்ந்து உலர் உணவுப் பொருட்கள், மலிகைச் சாமான்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதேவேளை, மக்களுக்கு தடையின்றி உணவுப் பொருட்கள் வழங்குவதற்கென வவுனியாவில் களஞ்சியமொன்றை அமைக்க உள்ளதாகவும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இங்கு தெரிவித்தார். இனிமேல் வவுனியா அரச அதிபரினூடாக மாத்திரமே இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணங்கள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் கூறினார். இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிகள் வழங்க விரும்புபவர்கள் வவுனியா அரச அதிபரிடம் தமது உதவிகளை கையளிக்குமாறும் அவர் கோரினார்.

மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளை கேட்டறிந்த அமைச்சர் அவர்களுக்கான சேமநல திட்டங்களை துரிதப்படுத்துமாறு பணித்தார்.

குடிநீர் மற்றும் மலசலகூட வசதியற்றவர்களுக்கு உடனடியாக உரிய வசதிகள் அளிக்குமாறும் அவர் தெரிவித்தார். மலசல மற்றும் குடிநீர் வசதியற்றவர்களுக்கு தேவையான வசதிகள் வழங்க சில அரச சார்பற்ற நிறுவனங்கள் இதன்போது இணக்கம் தெரிவித்தன.

வவுனியா மாவட்டத்தில் உள்ள சில பொதுக் கட்டிடங்களிலும் பாடசாலைகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்க ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், விரைவில் குறித்த பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் கூறினார். ஆண்டியபுளியங்குளம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 1346 பேர் இன்று (11) வலயம் 2 இல் தங்கவைக்கப்பட உள்ளனர். அருவித்தோட்டம் சிவானந்த கல்லூரியில் உள்ள மக்களும் விரைவில் நிவாரணக் கிராமங்களுக்கு மாற்றப்பட உள்ளனர்.

இதேவேளை இடம்பெயர்ந்த மக்கள் சுதந்திரமாக நடமாடும் வகையில் அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளமை குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், சிறியவர் முதல் பெரியவர் வரை சகலரையும் பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இது தொடர்பான அறிவுரைகளை அமைச்சர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கியுள்ளார்.

இதுவரை ஒரு இலட்சத்து 87 ஆயிரத்து 910 பேர் வவுனியாவுக்கு வந்துள்ளதாகக் கூறிய அமைச்சர் அனைவரும் இன, மத, பேதங்களை மறந்து உதவ முன்வர வேண்டும் எனவும் கோரினார். அரிசி போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகக் கூறிய அவர், பருப்பு, கடலை, நெத்தலி, மீன் மற்றும் மலிகைச் சாமான்களே அதிகமாகத் தேவைப்படுவதாகவும் கூறினார். இங்கு கருத்துத் தெரிவித்த மேஜர் ஜெனரல் சந்ரசிரி இராணுவத்தினரின், அரசாங்க அதிகாரிகளின் பங்களிப்புடன் இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு உதவி வருவதாகக் கூறினார்.

முதியவர்களை தமது உறவினர்களுடன் சுதந்திரமாகச் செல்வதற்கு அனுமதித்து வருவதாகக் கூறிய அவர் பிரிந்த குடும்பத்தவர்களை இணைக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுவதாகக் கூறினார்.

மீள்குடியேற்ற வேலைத் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு அறிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தற்காலிக வீடமைப்பு, மலசலகூடம், மின்சாரம், குடிநீர், சுகாதாரம் போன்ற விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது ஏற்படும் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் பற்றியும் ஆராயப்பட்டது. வெளி மாவட்டத்திலிருந்து கொண்டுவரப்பட்ட இடம்பெயர்ந்த மக்களுக்கு கையளிக்கப்படும் நிவாரணப் பொருட்களை வவுனியாவில் களஞ்சியப்படுத்த மூன்று நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நேற்று இராசையா இளந்திரையன் ஷெல் வீச்சில் படுகாயம்

ilanthirayan.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் என்று   அழைக்கப்படும் இராசையா புனிதரூபன் அவர்கள் நேற்று அதிகாலை இலங்கை இராணுவத்தின் கடும் ஷெல் வீச்சில் படுகாயம் அடைந்துதுள்ளார் என  இணைய செய்திகள் தெரிவிக்கின்றன

நீண்டகால இடைவெளிக்கு பின் இளந்திரையன் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு சனிக்கிழமை செவ்வி ஒன்றை வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஞ்சியுள்ள சிவிலியன்களை மீட்கும் இறுதி நடவடிக்கை நேற்று ஆரம்பம் – இராணுவப் பேச்சாளர்

udaya_nanayakkara_brigediars.jpg முல்லைத்தீவில் புலிகளின் பிடியில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள சிவிலியன்களையும் மீட்கும் இறுதிக்கட்ட நடவடிக்கைகளை இராணுவத்தினரும், கடற்படையினரும் இணைந்து நேற்று ஆரம்பித்தனர். இதன் விளைவாக நேற்றுக் காலை முதல் மாலை வரையான காலப்பகுதிக்குள் 1000 சிவிலியன்கள் கட்டம் கட்டமாக படையினரை நோக்கி வருகை தந்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

சிவிலியன்களை மீட்கும் நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு கரியமுள்ளிவாய்க்கால் பகுதியில் புலிகளால் இறுதியாக அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அரணை படையினர் கடந்த சனிக்கிழமை மாலை தகர்ந்து அழித்தனர். இதனையடுத்தே பெருந்திரளான மக்கள் கட்டம் கட்டமாக படையினரை நோக்கி வந்து சேர்ந்ததாகவும் பிரிகேடியர் கூறினார்.

கரியமுள்ளிவாய்க்காலில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரையில் படையினருக்கும் புலிகளுக்குமிடையே கடும் சமர் மூண்டுள்ளது. இதன் போது புலிகள் தரப்புக்கு பாரிய சேதம் ஏற்பட்டதுடன் பெரும் எண்ணிக்கையான புலிகள் கொல்லப்பட்டதாகவும் பேச்சாளர் நாணயக்கார தெரிவித்தார். சனிக்கிழமை மாலையளவில் புலிகளின் இறுதி மணல்மேடு அழிக்கப்பட்டதும் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மக்கள் படையினரை நோக்கி வந்து சேர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது கரியமுள்ளிவாய்க்காலிலிருந்த நேற்று 685 சிவிலியன்கள் 53 ஆம் படையணியினரிடம் வந்து சேர்ந்துள்ளனர். முல்லைத்தீவிலிருந்து 15 சிவிலியன்கள் 59 ஆம் படையணியினரிடம் தஞ்சமடைந்துள்ள அதேவேளை, கடற்படையின் படகுகள் மூலம் 300 சிவிலியன்களை மீட்டிருப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

இராணுவத்தின் 53ஆம் மற்றும் 59ஆம் படையணியினரிடம் தஞ்சமடைந்துள்ள மேற்படி 700 சிவிலியன்களும் புலிகளிடமிருந்து தப்பிவரும் வேளை, புலிகள் அவர்கள் மீது சரமாறியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். தப்பி வந்தவர்களுள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நால்வரது நிலை கவலைக்கிடமானதையடுத்து அந்நால்வரும் விமானம் மூலம் உடனடியாக அனுராதபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் இராணுவ பேச்சாளர் நாணயக்கார குறிப்பிட்டார். இராணுவத்தினரால் கடந்த வெள்ளிக்கிழமை (08) முதல் பாதுகாப்பு வலயத்தின் எல்லைகள் மீள வரையறுக்கப்பட்டுள்ளன. இப்புதிய பாதுகாப்பு வலயத்துக்குள்ளிலிருந்து புலிகள் துப்பாக்கித் தாக்குதல்கள் நடத்தியமை இராணுவத்தினரின் ராடரில் பதிவாகியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புலிகள் இப்புதிய பாதுகாப்பு வலயத்துக்குள்ளிலிருந்து, சிவிலியன்களின் வருகையைத் தடுக்கும் பொருட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் காலை 10.19 மணிவரையிலும் கடும் துப்பாக்கிச் சமரை நடத்தியிருப்பது ராடரில் பதிவாகியுள்ளது. புலிகள் இவ்வாறான தாக்குதல்களை நடத்திவிட்டு படையினர் மீது குற்றம் சுமத்த முயற்சிப்பதாகவும் ஊடக மத்திய நிலையம் கூறியது.

புலிகளின் தொலைத் தொடர்பு சம்பாஷணைகளை இடைமறிந்து செவிமடுத்த போது அவர்களுடைய கண்மூடித்தனமான தாக்குதல்களால் நேற்றுக் காலை மாத்திரம் பெரும் எண்ணிக்கையிலான சிவிலியன்கள் உயிரிழந்த தகவல் ஊர்ஜிதம் செய்யப்பட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

இராணுவத்தின் 58ஆம் படையணியினர் தற்போது புதிய பாதுகாப்பு வலயத்திலிருந்து 250 மீற்றர் தொலைவில் நிலைகொண்டிருப்பதாகவும் நிலையம் சுட்டிக்காட்டியது. மேலும் நேற்று இராணுவத்தினராலும் கடற்படையினராலும் மீட்கப்பட்ட ஆயிரம் சிவிலியன்களும் பாதுகாப்பாக நிவாரணக் கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவரெனவும் பிரிகேடியர் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மே 9ம் திகதிக்குட்பட்ட காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 493 பேர் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர்.  இவர்களுக்கான தங்குமிடம் மற்றும் அனைத்து அத்தியாவசிய வசதிகளையும் அரசாங்கம் ஆவலுடன் முன்னெடுத்து வருகிறது. தொடர்ந்தும் புலிகளிடமிருந்து வரும் சிவிலியன்களுக்கு இவ்வசதிகள் முன்னெடுக்கப்படும் என்றும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

சின்னம்மை தாக்கம் – மீட்கப்பட்ட சகலருக்கும் வைரஸ் எதிர்ப்பு மருந்து

vanni-0001.jpgபுலிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டிருக்கும் சகல மக்களுக்கும் வைரஸ் எதிர்ப்பு மருந்து வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. சின்னம்மை நோய் பரவுகையைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இம்மருந்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

புலிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ள பலர் சின்னம்மை நோய்க்கு உள்ளாகியுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் முதல் இற்றைவரையும் சுமார் எட்டாயிரம் பேர் சின்னம்மை நோயார்களாக இனம் காணப்பட்டிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுக் கூறினார்.

இந்நோயாளர்களாக இனம் காணப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். இதன் பயனாக வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரணக் கிராமங்களிலும் நலன்புரி நிலையங்களிலும் இந்நோய் பரவுவது தவிர்க்கப்பட்டிருப்பதாகவும் அவ்வதிகாரி கூறினார். சின்னம்மை நோயாளர்களுக்குச் சிகிச்சை அளிக்கவென வவுனியா, புவரசங்குளம் ஆஸ்பத்திரி தயார்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறான நிலையில் தான் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கும் சகலருக்கும் வைரஸ் எதிர்ப்பு மருந்து வழங்க அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு சின்னமுத்து

vavuniyatents.jpgஇடம் பெயர்ந்து வந்து வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்கள் சிலர் சின்னமுத்து நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளவென பூவரசங்குளம் ஆதார வைத்திய சாலை விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நோய்கு உள்ளான மேலும் சிலர் நேற்று (09.05.2009) இந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த நோயை கட்டுப்படுத்தும் மருந்து வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளதுடன் முகாம்களில் உள்ள மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த மக்களில் சிலருக்கு தோல் சம்மந்தமான தொற்று ஏற்பட்டுள்ளது மருத்துவ பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வவுனியா முகாம்களில் மக்களிடையே பரவக்கூடிய தொற்று நோய் குறித்து ஆராய்வதற்கென வைத்தியர்கள் குழுஒன்றை வவுனியாவிற்கு அனுப்பியுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் கூறியுள்ளது.