கேரளாவிலிருந்து கர்நாடகத்திற்கு வந்திருந்த என்ஜீனியர் சாலை விபத்தில் சிக்கி மூளைச் சாவை சந்தித்தார். இதையடுத்து அவரது இதயம், பாதுகாப்பாக சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு அங்கு நோயாளிக்குப் பொருத்தப்பட்டது. மேலும் என்ஜீனியரின் இதய ரத்தக் குழாய்கள் தான்சானியாவைச் சேர்ந்தவருக்குப் பொருத்தப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த 28 வயது என்ஜீனியர் பெங்களூரில் பணியாற்றி வந்தார். வியாழக்கிழமை இரவு எச்.ஏ.எல். விமான நிலைய சாலையில் சாலை விபத்தில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மணிப்பால் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் மூளைச் சாவை சந்தித்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த என்ஜீனியரின் குடும்பத்தினரை மணிபால் மருத்துவமனை நிர்வாகம் தொடர்பு கொண்டு உறுப்பு தானத்தை அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் ஆகியவை எடுக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து பெங்களூரைச் சேர்ந்த 36 வயது நோயாளிக்கு கல்லீரல் பொருத்தப்பட்டது. பின்னர் 37 வயதுப் பெண்மணிக்கு ஒரு சிறுநீரகமும், பெங்களூர் கமாண்ட் மருத்துவமனைக்கு இன்னொரு சிறுநீரகமும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதயத்தைப் பொருத்துவதற்கு சரியான நபர் கிடைக்கவில்லை. இதையடுத்து மணிபால் மருத்துவமனை சென்னையைச் சேர்ந்த பிரபல இதயவியல் நிபுணர் டாக்டர் செரியனை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவரது பிரான்டியர் லைப்லைன் மருத்துவமனையில் நோயாளி ஒருவர் இருப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த சஜாஸ் ஏர் சார்ட்டர் நிறுவனத்தின் விமான ஆம்புலன்ஸ் புக் செய்யப்பட்டு அது பெங்களூர் விரைந்தது. அந்த விமானம் மூலம் பெங்களூர் விரைந்த பிரான்டியர் மருத்துவமனை டாக்டர்கள், மூளைச் சாவை சந்தித்த என்ஜீனியரின் இதயத்தை அறுவைச் சிகிச்சை செய்து பத்திரமாக எடுத்தனர். பின்னர் மின்னல் வேகத்தில் அங்கிருந்து அதே விமானத்தில் சென்னை திரும்பினர். விமான நிலையத்திலிருந்து பிரான்டியர் லைப் லைன் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் தடையின்றி விரைய வழி ஏற்படுத்தி சென்னை போலீஸாரும், பேருதவி புரிந்தனர்.
அங்கு இரு டாக்டர்கள் குழு தயார் நிலையில் இருந்தன. அவர்கள் விரைவாக செயல்பட்டு இதய மாற்று சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். ஒரு குழு நோயாளியின் உடலிலிருந்து இதயத்தை எடுத்தது. இன்னொரு குழு உடனடியாக இதயத்தை பொருத்தியது. இரு அறுவைச் சிகிச்சைகளும் வெற்றிகரமாக இருந்ததாகவும், நோயாளி நலமுடன் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கேரள என்ஜீனியரின் இதயத்தைப் பெற்று புது வாழ்வு பெற்ற நோயாளிக்கு 32 வயதாகிறது. அவர் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். கடந்த 3 மாதங்களில் நான்கு முறை பிரான்டியர் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுள்ளார். டாக்டர் செரியனின் உதவியால் அவருக்குப் புது வாழ்வு கிடைத்துள்ளது.
வால்வுகளும் உதவின …
இதற்கிடையே லைப்லைன் மருத்துவமனையில் இதய ரத்த குழாய்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தான்சானியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் அனுமதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக அவர் மிகச் சரியான நேரத்தில் அங்கிருந்தார். உடனடியாக செரியன் தலைமையிலான டாக்டர்கள் குழு, அந்த தான்சானியா நாட்டுக்காருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். பழுதடைந்திருந்த அவரது ரத்தக்குழாய்கள் அகற்றப்பட்டு, பெங்களூர் என்ஜினீயரின் ரத்தக்குழாய்கள் பொருத்தப்பட்டன.
பெங்களுரில் அறுவை சிகிச்சை செய்து, இதயத்தை தனி விமானத்தில் எடுத்து வந்து, சென்னை போலீஸ் காரருக்கும், தான்சானியா நாட்டுக்காரருக்கும் பொருத்த டாக்டர்கள் எடுத்துக்கொண்ட மொத்த நேரம் 2 மணி 40 நிமிடமே. இந்த மின்னல் வேக சிகிச்சை இந்திய மருத்துவ உலகில் புதிய சாதனையாக கருதப்படுகிறது. இந்த மின்னல் வேக சிகிச்சை காரணமாக 2 உயிர்கள் மறுவாழ்வு பெற்றுள்ளன. இதுகுறித்து டாக்டர் செரியன் கூறுகையில், பெங்களூர் என்ஜினீயர் கொடுத்த இதயத்தால் சென்னையில் ஒரு போலீஸ்காரரும், தான்சானியா நாட்டுக்காரரும் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
நிறைய மருத்துமனைகளில் சிறுநீரகத்தை மட்டும் எடுத்துவிட்டு இதயத்தை கைவிட்டு விடுகிறார்கள். இதயத்தையும் இப்படி எடுக்க அனுமதித்தால் ஏராளமான இதய நோயாளிகளுக்கு வாழ்வு கொடுக்க முடியும் என்றார்.
நன்றி; வன் இந்தியா