2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் அரசாங்கத்தின் சகாக்களுக்கும் கடத்தல்காரர்களுக்கும் கல்விமான்கள் என கூறிக்கொள்ளும் புதிய தனவந்தர்களுக்கும் மட்டுமே பயனை கொடுக்கும்” என பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று (18.11.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடகாலம் பூர்த்தியாகியுள்ளது. இந்நிலையில் வருட இறுதியிலேயே வரவு செலவுதிட்டத்தை முன்வைத்துள்ளனர். எதிர்வரும் வருடத்திற்காக இவர்களால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் அவர்களது சகாக்களுக்கும் கடத்தல்காரர்களுக்கும் கல்விமான்கள் என கூறிக்கொள்ளும் புதிய தனவந்தர்களுக்கும் பயனைப்பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே அதனை தயாரித்துள்ளது.
இதில் கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் எந்த செயற்திட்டங்களும் உள்ளடக்கப்படவில்லை. தற்போது வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை முன்னேற்றுவது தொடர்பிலும் இந்த வரவு செலவு திட்டத்தில் எந்த விடயமும் உள்ளடக்கப்படவில்லை.
கொரோனா வைரஸ் பரவல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலைமையில், ஏனைய உலக நாடுகள், எந்தவொரு செயற்திட்டத்தை ஆரம்பிக்கும் போதும் இந்த வைரஸ் பரவல் தொடர்பிலும் கருத்திற் கொண்டு அதற்கேற்பவே தங்களது திட்டங்களை தயாரிக்கும். ஆனால் இந்த வரவு செலவு திட்டத்தில், வைரஸ் பரவல் தொடர்பில் ஒரேயொரு பந்தியில் மாத்திரமே கூறப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பிலும், நாட்டில் உள்ள உழைக்கும் மக்களுக்கு நன்மை ஏற்படுத்தும் வகையிலும், எந்த வேலைத்திடத்தையும் இவர்கள் இதில் முன்வைக்கவில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.