20 ஆவது திருத்தம்

20 ஆவது திருத்தம்

“20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த 09 பாராளுமன்ற உறுப்பினர்களையும் கட்சியிலிருந்து நீக்கியது ஐ.ம.சக்தி !

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த 09 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியினர் பக்கம் ஆசனங்களை ஒதுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு கடந்த 21 ஆம் திகதி நடத்தப்பட்டது. இந்த சட்டமூலத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் 09 உறுப்பினர்கள் தங்களின் ஆதரவை வழங்கியிருந்தனர்.

டயனா கமகே, அருணாசலம் அரவிந்த குமார்,இஷாக் ரஹ்மான்,பைசல் காசிம்,H.M.M.ஹாரிஸ், M.S.தௌபீக், நசீர் அஹமட்,A.A.S.M. ரஹீம்,M.M.M. முஷாரப் ஆகியோர் சட்டமூலத்திற்கு ஆதரவளித்தனர்.

இந்த உறுப்பினர்களுக்கான ஆசனங்களை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வரிசையிலிருந்து நீக்கி, ஆளும் கட்சியின் ஆசன வரிசையில் ஒதுக்க நடவடிக்கை எடுக்குமாறு எதிர்கட்சியின் பிரதம கொறடா கோரிக்கை விடுத்துள்ளார்.

“இரட்டைப் பிரஜாவுரிமை நாற்றம் என்றவர்கள், ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தியதன் பின் அந்த நாற்றத்தை புசித்துப் பார்ப்பதற்கான முடிவினை எடுத்துவிட்டனர்“ – பாராளுமன்றத்தில் நளின்பண்டார ஆவேசம் !

“அமெரிக்கப் பிரஜைகள் மற்றும் சீனப்பிரஜைகளும் இலங்கை பாராளுமன்றத்தில் பிரவேசிப்பதற்கான வாய்ப்புக்களை அரசாங்கம் செய்துகொடுத்து வருவதாக  குற்றஞ்சாட்டி பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார , அமெரிக்காவின் தேசியக் கொடியையும் உயர்த்தி எதிர்ப்பை தன்னுடைய எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் பெரும் கூச்சலில் ஈடுபட்டனர். இந்த கூச்சலையும் பொருட்படுத்தாமல் நளின் பண்டார, அமெரிக்கத் தேசியக் கொடியையும், கறுப்பு நிறத்திலான முகமூடி ஒன்றையும் அணிந்துகொண்டு சபையில் கருத்து வெளியிட்டார்.

பாராளுமன்றில்  தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

பசில் ராஜபக்ச அமெரிக்கப் பிரஜை என்பதால் அவர் அந்நாட்டு சட்டத்தின் படி அமெரிக்கக் கொடிக்கு முன்பாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டிருக்கின்றார். இப்படிப்பட்ட நபர்களை சபைக்குள் உள்வாங்கவே புதிய அரசியலமைப்புத் திருத்தத்தில் இரட்டைப் பிரஜாவுரிமை விவகாரம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கொடிக்கு முன்பாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டவர்களுக்காகவே அரசியலமைப்புத் திருத்தமும் செய்யப்படுகின்றது.

சர்வாதிகார நாடுகளுக்கு எதிரான கருத்துடையவர்கள் இன்று பூனைக் குட்டிகளாகிவிட்டனர். சிங்கங்களைப் போல கர்ச்சித்தவர்கள் 20ஆவது திருத்தத்திலுள்ள இரட்டைப் பிரஜாவுரிமை நாற்றம் என்றவர்கள், ஜனாதிபதியின் அழைப்புக்கு மத்தியில் நேற்று இரவு பேச்சு நடத்தியதன் பின் அந்த நாற்றத்தை புசித்துப் பார்ப்பதற்கான முடிவினை எடுத்துவிட்டனர்.

அந்த சிங்கங்கள் இன்று நரிகளாகவும், நாய்களாகவும் மாறிவிட்டனர். ஐக்கிய நாடுகளுக்கு எதிராக போராடியவர்கள் அமெரிக்காவுக்கு எதிராகப் போராடியவர்கள் எங்கே? பசில் ராஜபக்சவின் பெயரை உச்சரிக்கும் போது இந்த சிங்கங்கள் பூனைக் குட்டிகளாகிவிட்டன. ஜனாதிபதியே அமெரிக்கப் பிரஜாவுரிமையை இழந்துவிட்டார். இவர்கள் ஏன் வைத்திருக்கின்றார்கள்? மகாநாயக்க தேரர்கள் உட்பட சர்வமதத் தலைவர்களும் இதற்கெதிராக கருத்து வெளியிட்ட நிலையிலும் அதனைக்கூட அரசாங்கம் கணக்கில் எடுக்கவில்லை.

அமெரிக்கர்கள் மாத்திரமன்றி சீனர்களும் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்கலாம். இனிவரும் நாடாளுமன்றத்தில் சீனர்களைப் போன்ற இப்படிப்பட்ட நபர்களும் வரலாம். ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திற்குள் சீனர்களும், அமெரிக்கர்களும் வரத் தேவையான வசதிகளையே அரசாங்கம் செய்துகொடுக்கின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“18ஆவது திருத்தச்சட்டத்தை போன்றே 20ஆவது திருத்தச்சட்டத்திலும் ஜனநாயம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது” – பாராளுமன்றில் சரத் பொன்சேகா!

“18ஆவது திருத்தச்சட்டத்தை போன்றே 20ஆவது திருத்தச்சட்டத்திலும் ஜனநாயம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது” என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (22.10.2020) நடைபெற்ற அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் ஏற்படும் பாதகத்தன்மை பற்றி கடந்த காலத்தில் அனைத்து தேர்தல்களிலும் வேட்பாளர்கள் பேசினர். அதனை அடிப்படையாக கொண்டு தான் மக்கள் ஆணையை பெற்றுக்கொண்டார்கள்.

19ஆவது திருத்தத்தில் சர்வாதிகார போக்குடைய ஜனாதிபதி முறையை ஓரளவு குறைத்தோம். மீண்டும் அதற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு தனிநபரிடம் அதிகாரங்களை குவிக்காது பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரத்தை கொடுக்கும் சூழல் உருவாக்கப்பட்டதை மக்கள் ஏற்றுக்கொண்டிருந்தார்.

தேர்தல்களில் எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் ஜனநாயகம் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாகவுள்ளனர். 18ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனநாயம் குழிதோண்டி புதைக்கப்பட்டது. தற்போது மீண்டும் 20ஆவது திருத்தச்சட்டத்தில் அதுதான் நடைபெறுகிறது. தனிப்பட்ட சுயலாபம் மனசாட்சியை தாண்டியுள்ளதால் 20ஆவது திருத்தம் கொண்டுவரப்படுகிறது.

பாராளுமன்றம் சர்வாதிகார ஜனாதிபதி முன்னிலையில் மண்டியிட்டிருக்கிறது. பிரதமரை நினைத்தவுடன் நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கிறது. எந்தவொரு அமைச்சினையும் எச்சந்தர்ப்பத்திலும் பறிக்கலாம். இவ்வாறு ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் கிடைத்தால் அமைச்சர்களுக்கு அதிகாரம் இல்லாது போய்விடும். ஜனாதிபதியால் நினைத்தப்படி அமைச்சர்களை ஆட்டிவைக்கவும் முடியும்.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரமும் ஜனாதிபதிக்கு கிடைக்கிறது. ஐந்து வருடத்திற்கு மக்கள் வழங்கு ஆணையை அடிபணிய வைக்கும் செயற்பாடே இது. கடும் அழுத்தங்களால் 20இல் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இருந்தவாறு இது நிறைவேற்றப்பட்டிருந்தால் மக்களின் அடிப்படை உரிமைக்கூட கேள்விக்குறியாகியிருக்கும் என்றார்.

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குப் குழிபறிக்கும் வகையிலேயே இரட்டைக் குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது” – அமைச்சர் வாசுதேவ நாயணக்கார

‘ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குப் குழிபறிக்கும் வகையிலேயே இரட்டைக் குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது ஆனால்  நாம் உண்மையாகவே இரட்டைக் குடியுரிமை உள்ளவர்களை இந்த நாட்டின் ஆட்சியில் இணைத்துக்கொள்ளக்கூடாது என   அமைச்சர் வாசுதேவ நாயணக்கார தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு நேற்று உரையாற்றும் போதே வாசுதேவ நாயணக்கார மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“காட்டு ஆட்சியிலிருந்து நாட்டை மீட்டெடுத்துள்ளோம். புதிய அரசமைப்பொன்றும் புதிய தேர்தல் முறையும் கட்டாயம் அறிமுகப்படுத்தப்படும். அதுவரை இந்தக் காட்டாட்சி சட்டங்களுடன் பயணிக்க முடியாது. ஜனாதிபதியும், பிரதமரும் எமது கட்சியைச் சேர்ந்தவர்கள். மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் எமக்குள்ளது. அதனால் அதிகாரம் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படாது.

இரட்டைக் குடிரிமை இருப்பவர்கள் நாடாளுமன்றம் செல்ல முடியாது என 19ஆவது திருத்தச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதி வேட்பாளராக வரக்கூடும் என்பதை அறிந்துகொண்டு அதனைத் தடுப்பதற்காகவே இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றம் செல்ல முடியாது என்ற சரத்தை உள்வாங்கினர்.

இரட்டைக் குடியுரிமைச் சட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குப் குழிபறிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட போதிலும் அவர் அந்தக் குழியைத் தாண்டி வந்தார். ஆனால், நாம் உண்மையாகவே இரட்டைக் குடியுரிமை உள்ளவர்களை இந்த நாட்டின் ஆட்சியில் இணைத்துக்கொள்ளக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர்கள்.

வேறு காரணிகளுக்காக இரட்டைக் குடியுரிமைச் சட்டத்தை அவர்கள் கொண்டு வந்திருந்தாலும் நாட்டின் சுயாதீனத்தை அடிப்படையாகக் கொண்டு அதற்கு இடமளிக்கக் கூடாது. குழுநிலை விவாதத்தில் நீதி அமைச்சர் இந்தச் சரத்தில் திருத்தத்தைக் கொண்டு வருவார் என்று நம்புகின்றோம். முழுமையான ஜனநாயகம் உலகில் எங்கும் இல்லை. சில நாடுகளில் ஜனாதிபதி முறையும் சில நாடுகளில் பிரதமர் முறையும் உள்ளன. அதேபோன்று  பல்வேறு தேர்தல் முறைகளும் உள்ளன. புதிய அரசமைப்பொன்று கொண்டுவரப்படும் வரை நாட்டைக் கொண்டு செல்வதற்கான பின்புலத்தை உருவாக்கிக் கொடுப்பதற்காகவே 20ஆவது திருத்தச் சட்ட வரைவு கொண்டுவரப்பட்டுள்ளது” – என்றார்.

20 வது திருத்தத்தில் மேலும் மூன்று திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை முடிவு !

அரசியலமைப்பில் 20 வது திருத்தத்தில் மேலும் மூன்று திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை முடிவு செய்துள்ளது. நேற்று மாலை (19.10.2020) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அமைச்சரவை எண்ணிக்கை மற்றும் தணிக்கை சேவைகள் ஆணையத்தின் அமைப்பு தொடர்பாக அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தில் உள்ள உட்பிரிவுகள் மாறாமல் இருக்கும்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவை, தேசிய பாதுகாப்பு அல்லது தேசிய அனர்த்தம் தொடர்பான பிரச்சினைகள் தவிர, அவசரகால மசோதாக்களை நாடாளுமன்றத்திற்கு வழங்குவதை மட்டுப்படுத்தவும் முடிவு செய்துள்ளது.

இந்த திருத்தங்கள் அரசியலமைப்பின் 20 வது திருத்தம் குறித்த விவாதத்தின் குழு நிலை கூட்டத்தின் முடிவில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அரச வட்டாரங்கள் தெரிவித்தன.

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு ஜனாதிபதி அரசாங்க நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்து, அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அரசாங்கக் குழு உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

“அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு” – பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் !

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என்று அக்கட்சியின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட பூண்டுலோயா ஹெரோ தோட்ட கீழ்ப்பிரிவு பாதையை காபட் பாதையாக மாற்றியமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறும்போது ,

“19ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் எனக்கோரியே நாட்டு மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள், அதனை நிறைவேற்றுவதற்காகவே 20ஆவது திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்படுகின்றது. அதற்கு நாம் ஆதரவு வழங்குவோம்.

பாராளுமன்றத்தில் அடுத்தவாரம் 20ஆவது திருத்தச்சட்டம் நிறைவேறும். அதற்கான பெரும்பான்மை பலமும் ஆளுங்கட்சி வசம் இருக்கின்றது. எதிரணி உறுப்பினர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அவர்களும் ஆதரவு வழங்குவார்கள் என நம்புகின்றோம்.

ரிஷாட் பதியுதீன் விரைவில் கைதுசெய்யப்பட வேண்டும் என்பது எனது கருத்தாகும். ”  எனவும் அவர் அங்கு தெரிவித்துள்ளார்.

அரசு தரப்பிலுள்ள தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்களிடம் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்துள்ள வேண்டுகோள் !

இலங்கை அரசினால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய அரசியல் சீர்திருத்தமாகிய 20ஆவது அரசியலைப்பு திருத்த சட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான வியாழேந்திரன் மற்றும் பிள்ளையான் உட்பட அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (14.10.2020) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசால் கொண்டுவரப்பட்டுள்ள 20ஆவது திருத்த சட்டமானது தமிழ் மக்களுக்கு பயனற்றது. அவற்றால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை எனவே அதற்கு ஆதரவாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வாக்களிக்க கூடாது. மேலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோருக்கும் வடக்கில் இதனைத்தான் கூறியுள்ளேன்” என மேலும் தெரிவித்துள்ளார்.

20ஆவது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக விசேட கட்சித் தலைவர் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு !

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாளை வெள்ளிக்கிழமை விசேட கட்சித் தலைவர் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார். சபாநாயர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பி.ப. 1.30 மணிக்கு கட்சித் தலைவர் கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.

20ஆவது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில், இதன்போது விரிவாக கலந்துரையாடல்கள் நடத்தப்படுமென அரசாங்கத்தின் தகவலறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அதனை எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக சபாநாயகர் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்தப்பின்புலத்தில் கட்சித் தலைவர் கூட்டத்தில், கலந்துரையாடப்படவுள்ள திருத்தங்களையும் அன்றைய தினம் சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாகவும் அறிய முடிகிறது. இருபதாவது திருத்தச் சட்டம் தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை, ஐவரடங்கிய நீதியரசர் குழாம் கடந்த சனிக்கிழமை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் அறிவித்திருந்தது.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தை சவாலுக்குட்படுத்தி 39 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யட்டது. உயர்நீதிமன்ற நீதியரசர் ஜயந்த ஜயவிக்கிரம தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர் குழாம் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு உட்படுத்தியிருந்த நிலையிலேயே கடந்த 10ஆம் திகதி 20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்த்கது.

“உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய 20ஆவது திருத்தச் சட்ட வரைவில் அரசு மாற்றங்களைச் செய்தாலும் அந்தச் சட்ட வரைவை நாம் எதிர்த்தே தீருவோம்” – எதிரக்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ உறுதி !

“உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய 20ஆவது திருத்தச் சட்ட வரைவில் அரசு மாற்றங்களைச் செய்தாலும் அந்தச் சட்ட வரைவை நாம் எதிர்த்தே தீருவோம்” என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் முடிவடைந்து தீர்ப்பு ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சஜித் பிரேமதாஸவிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

20ஆவது திருத்தச் சட்ட வரைவில் திருத்தம் எதனையும் மேற்கொள்ளாமல் அதை நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் மட்டும் நிறைவேற்றலாம் என்று அரசு எண்ணியது. அந்த எண்ணம் இன்று தவிடு பொடியாகியுள்ளது. குறித்த சட்ட வரைவில் உள்ள சரத்துக்கள் அனைத்தையும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மட்டும் நிறைவேற்ற முடியாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தேர்தல்கள் தொடர்பான ஜனாதிபதியின் அதிகாரங்கள், ஜனாதிபதிக்கு சட்ட விலக்களிப்பு வழங்கல், நாடாளுமன்ற கலைப்புக்கான ஜனாதிபதியின் அதிகாரம், தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் ஆகிய நான்கு சரத்துக்களை நாடாளுமன்ற அனுமதியுடன் மட்டும் நிறைவேற்ற முடியாது என்று  உயர்நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

குறித்த நான்கு சரத்துக்களையும் நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற உத்தரவை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. இது அரசுக்கு நீதித்துறை வழங்கியுள்ள சாட்டையடியாகும். எனினும், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய 20ஆவது திருத்தச் சட்ட வரைவில் அரசு மாற்றங்களைச் செய்தாலும் அந்தச் சட்ட வரைவை நாம் எதிர்த்தே தீருவோம்.

ஏனெனில் 20ஆவது திருத்தச் சட்ட வரைவு தற்போது அவசியமற்றது. அதிலுள்ள மேலும் பல சரத்துக்கள் நாட்டின் ஜனநாயகத்துக்கு ஆபத்தானவை. எனவே, 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிரான நிலைப்பாட்டிலிருந்து நாம் ஒருபோதும் பின் வாங்க மாட்டோம்  என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திலுள்ள நன்மையைப் பார்த்து எதிர்க்கட்சியிலுள்ள எவரேனும் அதற்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடும்” – கெஹெலிய ரம்புக்வெல

புதிய அரசாங்கம் பதவியேற்ற நாள் முதல் நாட்டுக்கான 20வது திருத்தத்தை உருவாக்குவது தொடர்பாக அதிக கவனம் செலுத்தி வருகின்றது. ஒரு புறமாக 20வது திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி பயணிப்பதாக பல தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்ற போதிலுமு் கூட ஆளுமு்தரப்பினர் அது மக்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளதாக மிகத்தெளிவாக கூறுவதையும் காண முடிகின்றது.

இந்நிலையில் , 20 ஆவது திருத்தத்தில் உள்ள விடயங்களை நாடாளுமன்றத்தில் ஆராயவும் மக்களின் கருத்தாடலுக்கு விடவும் எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, மூன்றில் இரண்டு பெரும்பான்மை எவ்வாறுள்ளது என்பதைப் பார்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டமூலத்தில் உள்ள நன்மையைப் பார்த்து எதிர்க்கட்சியிலுள்ள எவரேனும் அதற்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடும் எனவும் அவர் இதன்போது நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

இதே நேரத்தில் இன்னுமொரு ஆளுங்கட்சி பாராளுமன்ற  உறுப்பினரான நாமல் ராஜபக்ஸ 20ஆவது திருத்தம் பற்றி குறிப்பிடும் போது ”20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை எழுதியது யார், கொண்டு வந்தது யார் என்பதை ஆலோசிக்க வேண்டிய நேரம் இதுவல்ல , 20 ஆவது திருத்தத்தில் எவருக்கேனும் சந்தேகங்கள் எழுந்தால் நீதிமன்றத்தை நாடலாம் என குறிப்பிட்டுள்ளார்.