ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி

ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி

“ ´ஹபாயா´ சர்ச்சை – சுயலாப அரசியலுக்காக பிரச்சினையாக்காதீர்கள்.” – இரா.சாணக்கியன்

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள சர்ச்சை குறித்து சுயாதீனமான முறையில் பக்கசார்பின்றி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இரா.சாணக்கியனின் பெயரை பயன்படுத்தி குறித்த விடயம் தொடர்பாக பகிரப்பட்டு வரும் கருத்துக்கள் குறித்து இன்று (05) ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள ´ஹபாயா´ சர்ச்சை பற்றிய உண்மைத்தன்மை குறித்து சரிவர தெரியாமையினாலேயே நான் அதுகுறித்து இதுவரை பேசாமல் இருந்தேன்.

எனினும் எனது பெயரினை பயன்படுத்தி சில விசமிகள் இனங்களுக்கிடையில் பிரிவினையினை வெளியிடும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதன்காரணமாகவே நான் தற்போது இதுகுறித்து சில கருத்துக்களை வெளியிட விரும்புகின்றேன்.

இது குறித்து சுயாதீனமான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன், பெரும் சர்ச்சையாகியுள்ள ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி விவகாரத்தினை சுயலாப அரசியலுக்காக பயன்படுத்துவதனை கைவிட வேண்டும்.

இவ்வாறான பிரச்சனைகள் இரு சமூக இணைப்பாட்டுடன் தீர விசாரிக்கப்பட்டு தீர்க்கப்பட வேண்டும்.’ எனத்தெரித்துள்ளார்.

“ஹபாயா’ சர்ச்சை இனப்பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடாது.” – இரா.சம்பந்தன் வலியுறுத்தல் !

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள ‘ஹபாயா’ சர்ச்சையால் அதிருப்தியடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், இது இனப்பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள ‘ஹபாயா’ சர்ச்சை தொடர்பில் ஊடகங்களிடம் பேசிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.  மேலும் பேசியுள்ள அவர்,

தமிழ்பேசும் மக்கள் என்ற ரீதியில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அத்தியாவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, ஒவ்வொரு இனத்தினுடைய உரிமைகளையும் மற்றைய இனம் மதிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

‘ஹபாயா’ அணிந்து வந்திருந்த குறித்த முஸ்லிம் பெண் ஆசிரியர் உண்மையில் அதிபர் மீது தாக்குதல் நடத்தியிருந்தால் அது தவறான விடயம் எனவும், இந்தக் கருமத்தை நாம் சமாதானமாகத் தீர்க்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“ஒருவரையொருவர் மதித்து மற்றவர்களுடைய கருமத்துக்கு – சுயமரியாதைக்கு – இறைமைகளுக்குப் பாதகம் இல்லாமல் நாம் செயற்பட வேண்டும். அனைவரும் இந்தக் கடமையை ஒற்றுமையாகச் செய்ய வேண்டும் என நான் மிகத் தயவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

பிரச்சினையை நாம் வளர்க்கக்கூடாது. தமிழ்பேசும் மக்கள் என்ற வகையில் வடக்கு – கிழக்கு என்பது எமது சரித்திர ரீதியான வதிவிடம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த அடிப்படையில் இறைமையை நாம் பாதுகாப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும்” – என்றார்.