யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் யார்..?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த நான்கு பேரில், திறமைப் புள்ளி அடிப்படையில் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, சிரேஷ்ட பேராசிரியர் ரி. வேல்நம்பி, பேராசிரியர் செ. கண்ணதாசன் ஆகியோர் பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பல்கலைக் கழகங்களில் துணைவேந்தரை நியமிப்பதற்கான சுற்றுநிருபத்துக்கு அமைவாகத் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்தவர்களின் தகுதி, தராதரங்களின் அடிப்படையில் திறமைப் புள்ளியிடலுக்காகப் பல்கலைக்கழகப் பேரவை இன்று புதன்கிழமை காலை கூடியது.

இதன்போது, துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி பேராசியர் செ. கண்ணதாசன், முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் முன்னாள் பீடாதிபயும், சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக விலங்கியல் துறைப் பேராசிரியர் பி. வினோபாபா ஆகியோர் பேரவை உறுப்பினர்கள் முன்னிலையில் தமது அறிக்கைகளை முன்வைத்தனர்.

சுற்றறிக்கையில் வரையறுக்கப்பட்ட புள்ளித் திட்டத்துக்கமைய ஒவ்வொரு பேரவை உறுப்பினர்களும் தனித் தனியாகப் புள்ளிகளை வழங்கினர். புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களையும் முறையே பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, சிரேஷ்ட பேராசிரியர் ரி. வேல்நம்பி, பேராசிரியர் செ. கண்ணதாசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அதனடிப்படையில், பேரவையின் பரிந்துரை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் கல்வி அமைச்சின் ஊடாக ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

1978 ஆம் ஆண்டின்  16 ஆம் இலக்க பல்கலைக் கழகச் சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் படி பல்கலைக்கழகப் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள மூன்று பேரில் ஒருவரைத் துணைவேந்தராக ஜனாதிபதி அறிவிப்பார்.

தற்போதைய துணைவேந்தரின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட்  மாதம் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதால், மிக விரைவில் அடுத்த துணைவேந்தர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழிநுட்பவியல் நிறுவனத்தின் ஆளுநர் சபை உறுப்பினராக பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா !

ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழிநுட்பவியல் நிறுவனத்தின் ஆளுநர் சபை உறுப்பினர்களில் ஒருவராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்காவின் கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜெயந்தவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கப் பிரிவின் கீழ் இந் நவீன தொழிநுட்பவியல் நிறுவனம் நிர்வகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

1994 ஆம் ஆண்டின் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பவியல் அபிவிருத்திச் சட்டத்தின் கீழ், உடனடியாகச் செயற்படும் வகையில் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதி.கா.இந்திரபாலா தொல்லியல் அருங்காட்சியகம் !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதி.கா.இந்திரபாலா தொல்லியல் அருங்காட்சியகம் இன்று புதன்கிழமை(24) காலை 11 மணியளவில் திறந்துவைக்கப்பட்டது.

ஆரம்ப நிகழ்வு கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றதுடன் தொடர்ந்து கலாநிதி இந்திரபாலா தொல்லியல் கண்காட்சியும் தொல்லியல் அருங்காட்சியக இணையத்தளமும் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், வரலாற்றுத்துறை ஓய்வுநிலை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், வரலாற்றுத்துறை தலைவர் சாந்தினி அருளானந்தம், பேராசிரியர் மௌனகுரு ஏனைய பீட பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள், மத்திய கலாசார நிதியத்தினர், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் அருங்காட்சியகம் வரலாற்றுத்துறை முதல் பேராசான் கலாநிதி கா.இந்திரபாலாவால் அடித்தளமிடப்பட்டது.

 

ஐ.நாவின் இலங்கை மீதான புதிய தீர்மானம் இலங்கை இராணுவத்தின் சர்வதேச குற்றங்களை வெள்ளை அடித்து அவர்களை பிணை எடுக்கிறது !

“தமிழர்கள் மீதான அடக்குமுறைகளையும் கொடுமைகளையும் ஊக்குவிக்கும்  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான தீர்மானத்தை நிராகரிக்கின்றோம்.” என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று(5) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள நியாயமற்ற தீர்மானத்தை முற்றாக நிராகரிப்பதற்கான எமது முடிவை வெளிப்படுத்தும் வகையில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த நாங்கள் இந்த ஊடக அறிக்கையினை வெளியிடுகின்றோம். ஏனெனில் இத் தீர்மானமானது தமிழர் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இராணுவ வீரர்களினால் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளையும் கொடுமைகளையும் ஊக்குவிக்கும் விதமாகவே அமைந்துள்ளது.

தமிழர்களாகிய நாம் பல்லாண்டு காலமாக மிகப்பெரும் இழப்புகளையும் அழிவுகளையும் சந்தித்துள்ளோம். இந்தத் தீர்மானமானத்தினூடாக ஆகக்குறைந்தது நீதியாவது கிடைக்கும் என்று நம்பியிருந்தோம். ஆனால் இந்தத் தீர்மானத்தால் எங்களின் நம்பிக்கை பொய்த்துப்போயுள்ளது.

இந்தத் தீர்மானம், தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்கள் பற்றிய எந்தப் புரிதலையும் வெளிப்படுத்தவில்லை. ஆகக்குறைந்தது தமிழ் மக்கள் எதிர்கொண்ட துன்பங்கள், வேதனைகளை கூட பிரதிபலிக்கவில்லை. இந்தத் தீர்மானம் பல தசாப்தங்களாகத் தொடர்ந்து வந்த சிறிலங்கா அரசாங்கங்களினால் தமிழர்கள் எதிர்கொண்ட கொடுமைகளுக்குத் தீர்வு வழங்கத் தவறிவிட்டது. இத் தீர்மானம் குற்றம் இழைத்தவர்களை பொறுப்பு கூறவைப்பதற்குப் பதிலாக, அவர்களின் சர்வதேச குற்றங்களை வெள்ளை அடிப்பதுடன், அவர்களை பிணை எடுப்பதாகவே அமைத்துள்ளது.

தமது குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய தேவை இல்லை, தாம் தண்டனைக்கு உட்படுத்தப்படமாட்டோம் என உணரும் தமிழர் தாயகம் எங்கும் ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்கா அரச படையினர், எதிர்காலத்திலும் தமிழர்களுக்கு எதிராக அட்டூழியங்களைத் தயக்கமின்றி மேற்கொள்வதற்கு, இத்தீர்மானம் வழி ஏற்படுத்தியுள்ளது.

ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த, ஆயிரக்கணக்கான தமிழரை காணாமல் ஆக்கிய, நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்திய அதே சிறிலங்கா அரச படையினரே, அவர்களால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மத்தியில் இன்னமும் ஆக்கிரமித்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இந்த தீர்மானம், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்த பரிந்துரையை முற்றிலும் புறக்கணித்துள்ளது.

இதே பரிந்துரையை அனைத்து முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்களும், இலங்கைக்கு வருகை தந்து அறிக்கையிட்ட ஒன்பது முன்னாள் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்களும் மற்றும் இலங்கை தொடர்பான ஐ.நா நிபுணர்கள் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் இதே பரிந்துரையை வலியுறுத்தி உள்ளனர்.

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை, நாம் உட்பட பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகம் உட்பட அனைத்து தமிழ் மக்கள் தரப்பினாலும் வலியுறுத்தப்பட்டது.

சிறிலங்காவின் அரச படையினராலும் அரசியல் தலைவர்களாலும் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட வன்கொடுமைகளுக்கு நீதியை பெற்றுக்கொள்ளும் ஒரே வழியாக இதனையே எதிர்பார்த்திருந்தோம். ஆனால் இந்தத் தீர்மானம் எங்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் முற்றிலும் புறக்கணித்துள்ளது.

இலங்கை தொடர்பான ஐ.நா.வின் உள்ளக ஆய்வு அறிக்கையின்படி, போரின் இறுதி ஆறு மாதங்களில் சுமார் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் பெப்ரவரி 2017 இல், தமிழ்ப் பெண்கள் “பாலியல் அடிமைகளாக” கையாளப்பட்ட சிறிலங்கா இராணுவ “கற்பழிப்பு முகாம்கள்” பற்றிய விவரங்களை ஐ.நாவிடம் ஒப்படைத்தது.

மேலும், சிறிலங்கா அரச படையினரால் கைக்குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

ஐ.நா.வின் மூத்த அதிகாரிகள் மற்றும் பெரும் இழப்பினை சந்தித்த தமிழ் சமூகத்தின் பல்வேறு தரப்பினாலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், சமர்ப்பிக்கப்பட்ட இத்தீர்மானம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த தவறியது மட்டுமல்லாது, பாதிக்கப்பட்ட தமிழ் இனத்தின் பெரும் துயரத்தையும் வலிகளையும் புறக்கணித்துள்ளது.

ஆகவே இந்த நியாயமற்ற தீர்மானத்தை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம் – என அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இரண்டாவது நாளாகவும் தொடரும் யாழ்.பல்கலைக ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் !

யாழ். பல்கலைக்கழகப் பேரவையினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினர் தங்களது தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரி முன்னெடுக்கும் உணவு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

இன்று காலை போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வருகை தந்த யாழ்.பல்கலைக்கழக சமூகவியல் துறை, துறைத்தலைவர் ஜீவசுதன் மாணவர்களையும், ஊடகவியாளர்களையும் எச்சரிக்கும் தொணியில் கதைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தனியார் மருத்துவ பீடங்களை வடக்கில் உருவாக்க வேண்டும் – மருத்துவர் சி.யமுனாநந்தா

வடக்கில் தனியார் மருத்துவ பீடங்களை உருவாக்குவதே வடக்கில் நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறையை நிவர்த்திசெய்வதற்கான தீர்வாக அமையும் என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்தார் வடக்கில் காணப்படுகின்ற வைத்தியர்கள் பற்றாக்குறை நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

வடபகுதியில் வைத்தியர்கள் பற்றாக்குறை இருப்பதாக அண்மைக்காலங்களில் பொதுமக்களின் பங்களிப்புடன் ஆர்ப்பாட்டங்கள் முல்லைத்தீவு மாவட்டத்திலே நடாத்தப்பட்டிருக்கின்றது. குறிப்பாக, யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து வைத்தியர்கள் அங்கு கடமைக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.  ஆனால் யாழ் போதனா வைத்தியசாலையில் சுமார் 80க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் கடமையாற்றுகின்றார்கள். குழந்தை மருத்துவம் உட்பட சிறு குழந்தைகளுக்கு உரிய சிறப்பு மருத்துவர்கள், இதய சிகிச்சைக்குரிய மருத்துவர்கள், சிறுநீரக சிகிச்சை நிபுணர்கள் கடமையாற்றுகிறார்கள் தற்போது மருத்துவத்துறை நன்கு விருத்தியடைந்துள்ளது

ஒவ்வொரு மருத்துவ நிபுணருக்கும் குறைந்தது மூன்று மருத்துவர்கள் பணியாற்றினால் மாத்திரமே அந்த பிரிவினை சிறப்பாக செயற்படுத்த முடியும் யாழ் போதனா வைத்தியசாலையானது மிகவும் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகின்றது. தற்போதுள்ள பணிப்பாளரின் அயராத முயற்சியின் காரணமாக அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து
வருகின்றது .

இதனால், மருத்துவ படிப்பு மட்டுமல்ல மருத்துவபடிப்பின் பின் பட்டப்படிப்பு அதேபோல தாதிய பயிற்சி போன்ற பல்வேறு துறைகளில் யாழ் போதனா வைத்தியசாலை விருத்தியடைந்து வருகின்றது. யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து வைத்தியர்களை வேறு வைத்தியசாலைக்கு மாற்றும் போது சில சேவைகள் இடைநிறுத்த படக் கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமேயானால் புதிதாக பல மருத்துவர்களை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. குறிப்பாக, யாழ் மாவட்டத்தில் தனியார் மருத்துவ பீடம் ஒன்றை உருவாக்கும் பட்சத்தில் இந்த குறைபாட்டை நீக்கலாம்.

ஏனென்றால், இன்று மருத்துவம் உலகளாவிய ரீதியில் அதிகளவில் விருத்தியடைந்து காணப்படுகின்றது ஒவ்வொரு துறையிலும் பல மருத்துவர்கள் உள்ளார்கள் அவர்களின் கீழ் பணி புரிவதற்கும் பல மருத்துவர்கள் தேவை. அதே போல் மருத்துவ நிபுணர்கள் இளைப்பாறும் போது புதிய மருத்துவ நிபுணர்கள் உருவாக்கப்பட வேண்டும். எனவே எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க போராட்டங்களை கைவிட்டு புதிதாக மருத்துவ பீடங்களை உருவாக்குவதற்குரிய முயற்சியில் ஈடுபடவேண்டும் அரசாங்கத்திடம் போதியளவு பணம் இல்லாத படியினால் தனியார் மருத்துவ பீடங்களை உருவாக்குவதே இந்த காலகட்டத்தில் தேவையாக உள்ளது என்றார்.

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்காக மூன்று பேராசிரியர்கள் தெரிவு!

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த ஆறு பேரில் மதிப்பீட்டுக் குழு மற்றும் பேரவையின் மதிப்பீடுகளின் அடிப்படையில் மூவரின் பெயர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக ஜனாதிபதிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞான பீடம், தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றின் முன்னாள் பீடாதிபதியும், கணிதப் புள்ளி விபரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜாவின் பெயர் முதலாவதாகவும் உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன், வணிக முகாமைத்துவ பீடாதிபதி ரி.வேல்நம்பி ஆகியோரின் பெயர்கள் முறையே இரண்டாவது, மூன்றாவதாகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவையால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் துணைவேந்தரும், கணிதப் புள்ளிவிபரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் இ.விக்னேஸ்வரன், மருத்துவ பீடாதிபதி மருத்துவ நிபுணர் எஸ். ரவிராஜ் ஆகிய இருவரும் முறையே நான்காவது ஐந்தாவது இடங்களையும் பெற்றிருந்தனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய சுற்றறிக்கைக்கு அமைவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக கடந்த மே மாதம் 15 ஆம் திகதி பல்கலைக்கழகப் பதிவாளரினால் பத்திரிகைகள் மூலமாகக் விண்ணப்பங் கோரப்பட்டிருந்தது. அதற்கமையக் கிடைக்கப்பெற்ற 7 விண்ணப்பங்களில் ஒன்று – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ந. தனேந்திரனுடையது. உரிய முறைப்படி நிரப்பப்படாத காரணத்தினால் அது நிராகரிக்கப்பட்டிருந்தது.

முன்னாள் துணைவேந்தரும், கணிதப் புள்ளிவிபரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் இ.விக்னேஸ்வரன், உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன், வணிக முகாமைத்துவ பீடாதிபதி ரி.வேல்நம்பி, மருத்துவ பீடாதிபதி வைத்திய நிபுணர் எஸ். ரவிராஜ், விஞ்ஞான பீடம், தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றின் முன்னாள் பீடாதிபதியும், கணிதப் புள்ளி விபரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா, புள்ளி விபரவியல் துறைப் பேராசிரியர் செ. இளங்குமரன் ஆகியோரின் விண்ணப்பங்கள் மதிப்பீட்டுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டு, பேராசிரியர் அபே குணவர்த்தன தலைமையிலான மதிப்பீட்டுக்குழு விடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆறு பேரிலிருந்து ஐந்து பேரைத் தெரிவு செய்வதற்காக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட மூவருடன், பல்கலைக்கழக மூதவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பேரவையினால் முன்மொழியப்பட்ட இருவரையும் கொண்ட, மதிப்பீட்டுக்குழு 11.08.2020 காலை கூடியது.

இந்த மதிப்பீட்டுக்குழு ஒவ்வொரு விண்ணப்பதாரிகளாலும் தனித்தனியாக குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்ட அளிக்கைகளையும் மதிப்பீடு செய்த பின்னர் – புள்ளி விபரவியல் துறைப் பேராசிரியர் செ. இளங்குமரன் புள்ளிகளின் அடிப்படையில் 6ஆவது இடத்தைப் பெற்ற நிலையில் ஏனைய 5 பேரின் பெயர்கள் 11.08.2020 பிற்பகல் பேரவைக்கு முன்மொழியப்பட்டது.

மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களால் ஒவ்வொரு விண்ணப்பதாரிகளும், தனித்தனியாக மதிப்பீடு செய்யப்பட்டதைப் போலவே, ஒவ்வொரு பேரவை உறுப்பினர்களும் – ஒவ்வொரு விண்ணப்பதாரிகளையும் சுற்றறிக்கையின் படி தனித்தனியாக மதிப்பீடு செய்து புள்ளிகளை வழங்கினர். சுயாதீன மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்களின் தனித் தனி மதிப்பீட்டுப் புள்ளிகள், பேரவை உறுப்பினர்களின் தனித்தனி மதிப்பீட்டுப் புள்ளிகள் ஆகியவற்றின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களையும் பெறும் திறமைப் பட்டியல் பல்கலைக்கழகப் பேரவையின் பரிந்துரையுடன், தகுதி வாய்ந்த அதிகாரியினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, உயர் கல்வி அமைச்சு ஊடாகத் தனது பரிந்துரையை ஜனாதிபதிக்கு முன்வைக்கும்.

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் படி, ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஒருவரைத் தெரிவு செய்வார்.