முள்ளிவாய்க்கால் கஞ்சி

முள்ளிவாய்க்கால் கஞ்சி

முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வருக்கும் விடுதலை!

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் – சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வருக்கும் மூதூர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (17) பிணை வழங்கி விடுதலை செய்துள்ளது.

 

குறித்த வழக்கானது நகர்த்தல் பத்திரத்தின்மூலம் இன்றையதினம் வழக்கு விசாரணைக்காக மூதூர் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராந்த நீதிபதி குறித்த நால்வரையும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

 

குறித்த நபர்களுடைய பிணைக்கான நகர்த்தல் விண்ணப்பத்தினை சட்டத்தரணி நாகராஜா மோகன் இன்றையதினம் தாக்கல் செய்திருந்தார். இதற்கு ஆதரவாக சட்டத்தரணி புவிராஜசிங்கம் முகுந்தன், சட்டத்தரணி தேவராஜா ரமணன் மற்றும் சட்டத்தரணி சயந்தன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.

 

சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் சம்பூர் பொலிசாரினால் குறித்த நால்வருக்கும் எதிராக ஐ.சி.சி.பி.ஆர் சட்டம் 3 (1) இன் கீழ் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் அதற்கான போதியளவான ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் அதனை நீக்கிக் கொண்டு குறித்த வழக்கை சம்பூர் பொலிசார் நகர்த்தல் பத்திரத்தின் மூலம் தண்டனைச் சட்டக்கோவை பிரிவின்கீழ் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் குறித்த பிணை விண்ணப்பத்தினை ஏற்றுக் கொண்ட நீதிபதி பிணை வழங்கி உத்தரவிட்டிருந்தார். குறித்த வழக்கானது மீண்டும் எதிர்வரும் 27ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 

கடந்த 12ஆம் திகதி சேனையூர் புவனகணபதி ஆலயத்தில் முள்ளிவாய்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் அன்றைய தினம் இரவு கமலேஸ்வரன் விஜிதா, பல்கலைக்கழக மாணவி கமலேஸ்வரன் தேமிலா, செல்வவினோத்குமார் சுஜானி, நவரெட்ணராஜா ஹரிஹரகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம்!

கிழக்கில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தை முன்னிட்டு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினரால் இன்று சனிக்கிழமை (11) கஞ்சி வழங்கும் நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்பட்டது.

2009 மே 18 முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலையை முன்னிட்டு மே 11ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை கஞ்சி வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.

வருடாவருடம் கஞ்சி வாரம் இடம்பெற்றுவரும் நிலையில், இம்முறை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர், கிழக்கில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவில் 1990ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட 152 பொதுக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியருகில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் வாரத்தை கட்சியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தலைமையில் ஆரம்பித்துவைத்தனர்.

இதன்போது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது.