முத்தையா முரளிதரன்

முத்தையா முரளிதரன்

இந்தியாவின் கர்நாடகாவில் 1,400 கோடி ரூபா முதலீடு செய்யும் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்!

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளீதரன் கர்நாடக மாநிலம் சாமராஜநகரா மாவட்டத்தில் உள்ள படன குப்பேயில் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 1,400 கோடி ரூபா முதலீடு செய்ய உள்ளதாக கர்நாடக தொழில்துறை அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் பற்றி அவருடன் முரளீதரன் கலந்துரையாடியுள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளீதரன் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைக்க திட்டமிட்டுள்ளார்.

இதற்காக ஆரம்பத்தில்; 230 கோடி ரூபாய் முதலீட்டில் திட்டமிடப்பட்ட இந்த திட்டம், தற்போது மொத்தம் 1,000 கோடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் 1,400 கோடியாக உயர்த்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்காக ஏற்கனவே 46 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிறுவனத்துக்கான உற்பத்தி நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முரளீதரன் எதிர்வரும் காலங்களில் தார் வாட்டில் மற்றொரு பிரிவையும் தொடங்க திட்டமிட்டுள்ளார் என குறித்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

“இலங்கை தமிழரிடையே பல குழுக்கள் உள்ளன. அவர்களுள் சிலரே தனிநாட்டை உருவாக்க விரும்பினர்.” – கோவாவில் முத்தையா முரளிதரன் !

உள்நாட்டுப் போரின் போது ஏற்பட்ட இன நெருக்கடியை தமிழக அரசு சரியாகப் புரிந்துகொள்ளத் தவறியதன் காரணமாகவே தேசத் துரோகம் இழைத்ததாக தன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.

இந்திய சர்வதேச திரைப்பட விழாவுடன் இணைந்து நேற்று (26) கோவாவில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அன்றைய இலங்கையின் உண்மை நிலவரத்தை தமிழக அரசு புரிந்து கொள்ளத் தவறிவிட்டது என்று கூற தாம் அஞ்சப்போவதில்லை என்று கூறிய முத்தையா முரளிதரன், அதற்குக் காரணம் தமிழகத்திற்கும் இலங்கைக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன என குறிப்பிட்டார்.

இலங்கை தமிழ் சமூகத்தில் பல்வேறு துணைகுழுக்கள் உள்ளன. எல்லா குழுக்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை ஆனால் அவை அரசியல் ரீதியாக பிளவுபட்டுள்ளன என்று முரளிதரன் கூறினார்.

அந்தக் குழுக்களில் உள்ள சிலர் இலங்கையின் ஒரு பகுதியை பிரித்து தனி நாட்டை உருவாக்க விரும்புவதாகவும், ஆனால் பலர் அவ்வாறு செய்ய விரும்பவில்லை எனவும் முரளிதரன் தெரிவித்தார்.

முரளிதரனின் கிரிக்கெட் வரலாறு கூறும் 800 திரைப்பட முன்னோட்டம் தொடர்பில் மனோகணேசன் அதிருப்தி !

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறான 800 படத்தின் முன்னோட்டம் நேற்று முன்தினம் (5) வெளியிடப்பட்டுள்ள நிலையில், முன்னோட்டத்திலுள்ள வசனங்கள் சர்ச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

 

நாட்டையும் உலகையும் திரும்பி பார்க்க வைக்கும் மலையக தமிழன் என்று சொல்லுங்கள். தடை செய்யப்பட்ட வார்த்தை பிரயோகம் வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இவ்வாறான சர்ச்சைக்குரிய சொற்பிரயோகம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மனோ கணேசன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்நாட்டு இந்திய வம்சாவளி மலையக தமிழர் மத்தியில், தடை செய்யப்பட்ட வார்த்தையை உங்கள் பட முன்னோட்ட “ட்ரைலரில்” பயன்படுத்த வேண்டாம்.

அந்த வார்த்தையை நானே நேரடியாக தடை செய்து காட்டியுள்ளேன். கதையம்சத்துக்கு தேவை என என்னிடம் கதைவிட வேண்டாம். நானே ஒரு கதாசிரியர். எனக்கு இது தெரியும்.

 

அந்த இடத்தில் “நாட்டை திரும்பி பார்க்க வைத்த மலையக தமிழன்” என்று போடுங்கள். சரியாக வரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

450 விக்கெட்டுகள் – அஸ்வின் அசத்தல்!

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் அரங்கில் தனது 450வது விக்கெட்டை வீழ்த்தினார்.

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் அலெக்ஸ் கேரியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், 450 விக்கெட்டுகளை எட்டிய உலகின் இரண்டாவது டெஸ்ட் பந்துவீச்சாளர் என்ற சாதனையை அஸ்வின் பெற்றார்.

அஸ்வின் இந்த மைல்கல்லை எட்ட 89 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் முன்னணியில் இருப்பவர் உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராகக் கருதப்படும் இலங்கையின் முத்தையா முரளிதரன். 80 டெஸ்ட் போட்டிகளில் இந்த மைல்கல்லை அவர் எட்டியுள்ளார்.

உலக அளவில் இந்த மைல்கல்லை எட்டிய 9வது பந்து வீச்சாளர் மற்றும் இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்.

இதற்கு முன், இந்தியாவின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான அனில் கும்ப்ளே, 2005ல் இந்த மைல்கல்லை எட்டினார். இருப்பினும் அவர் 93 போட்டிகளிலேயே 450 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

அஸ்வின் தற்போது டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் நான்காவது இடத்திலும், சகலதுறை வீரர் தரவரிசையில் இரண்டாவது இடத்திலும் உள்ளார்.

 

வனிந்து ஹசரங்க துடுப்பாட்ட வீரர்களுக்கு தலைவலி – முத்தையா முரளிதரன்

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கிண்ணப் போட்டியில் வனிந்து ஹசரங்க துடுப்பாட்ட வீரர்களுக்கு தலைவலியாக இருப்பார் என இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முத்தையா முரளிதரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்களில், இந்தியாவில் இடம்பெறும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் முத்தையா முரளிதரன் இணைந்து கொண்டதுடன், போட்டிக்காக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

எனினும் அவரது பந்துகளை நன்றாக எதிர்கொள்ளும் துடுப்பாட்ட வீரர்கள் இல்லாமலும் இல்லை என முத்தையா முரளிதரன் மேலும் தெரிவித்துள்ளார். எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் பந்துவீச்சாளர்கள் அதிக நன்மைகளைப் பெற முடியும் எனவும் முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கை கிரிக்கெட் அணியில் இதுவரை தமிழ் வீரர்கள் இணைத்துக் கொள்ளப்படாமைக்கு அரசியல் காரணமல்ல.அவர்களிடம்  திறமையின்மையே காரணம்” – முத்தையா முரளிதரன்

“இலங்கை கிரிக்கெட் அணியில் இதுவரை தமிழ் வீரர்கள் இணைத்துக் கொள்ளப்படாமைக்கு அரசியல் காரணமல்ல.அவர்களிடம்  திறமையின்மையே காரணம்” என முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தனியார் ஊடகமொன்றிற்கு செய்தி வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளதாக குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் கருத்து தெரிவித்துள்ள முத்தையா முரளிதரன்,

“வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையாக தமிழர்களே உள்ளனர். யுத்தம் காரணமாக 30 வருடங்களாக அங்கு கிரிக்கெட் விளையாடப்படவில்லை. யுத்தத்திற்கு முதல் பலர் விளையாடியிருப்பார்கள் எனினும் அப்போது இலங்கை டெஸ்ட் அந்தஸ்தை பெற்றிருக்காததால் அவர்களிற்கு வாய்ப்பு கிடைக்காமலிருந்திருக்கலாம்,

அத்துடன் 30 வருடங்களின் பின் விளையாடும்போது அவர்களின் திறமை கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது. பயிற்சி, வசதிகள் அங்கு குறைவாக இருந்தது. வீரர்கள் திறமையை காட்டினாலும், நாட்டின் தெற்கு, மத்திய பகுதி வீரர்களை விட குறைவாக இருந்தமையினாலேயே அவர்களிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் இலங்கை கிரிக்கெட் அணியில் இதுவரை வடக்கு கிழக்கை சேர்ந்த வீரர்கள் இணைத்துக் கொள்ளப்படாமைக்கு அரசியல் காரணங்கள் கிடையாது என்றுமுரளிதரன் தெரிவித்ததாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.