மலையக தோட்டத் தொழிலாளர்கள்

மலையக தோட்டத் தொழிலாளர்கள்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1700 – நிறைவேற்றப்பட்டது தீர்மானம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்கும் தீர்மானம், சம்பள நிர்ணய சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபையில் இன்று வாக்கெடுப்பொன்று நடத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

 

இதன்படி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாவும், உற்பத்தி ஊக்குவிப்பு விசேட கொடுப்பனவாக 350 ரூபாவும் வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது .

 

இதேவேளை, சம்பள விடயம் உயர் நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில், நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட தவறுகளை திருத்தி அமைத்து 1700 ரூபாய் சம்பளம் உயர்வை பெற்றுத்தர முழு ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

 

மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளத்தை முன்மொழிந்தது போல அதனை மக்கள் கை பெற்றுக்கொடுக்கும் முழுப்பொறுப்பும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்க கம்பெனிகள் இணக்கம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்க 7 தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமானினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டி மாவட்ட தோட்டத் தொழிலாளர் சங்கங்கள் மற்றும் இளைஞர் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தொழிலாளர் அமைச்சு தனது கீழ் உள்ளதால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குத் தேவையான விசேட சட்டங்களை முன்வைப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை சம்பளச் சபையைக் கூட்டவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

பெருந்தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1700 ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி இரத்து !

பெருந்தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1700 ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1700 ரூபாவாக அதிகரித்துக் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து பெருந்தோட்ட;நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடியதன் அடிப்படையில் குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர்நீதிமன்றம் தடையுத்தரவைப்;பிறப்பித்துள்ளது.

 

இந்த நிலையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல்கள் ;இரத்து செய்யப்படுவதாக அறிவித்து தொழில் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தரவினால் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

 

இதேவேளை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன விடயத்தில் அரசாங்க தரப்பினருக்கும்; பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் இடையே புதிய இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்த நிலையில், முன்னதாக முன்மொழியப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் குறைக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஈரானிடம் இருந்து வாங்கிய கடனை அடைத்த மலையக பெண்களுக்கு எப்போது தான் விடிவுகாலம் பிறக்கும்..? – மனோகணேசன்

“தேயிலை உற்பத்திக்காகப் பாடுபடும் மலையகப் பெண்களுக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும்?” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது “இவ்வாண்டு அதிகரித்த தேயிலை ஏற்றுமதியால், ஈரானிடம் வாங்கிய பெட்ரோல் கடனில் 60 மில்லியன் டொலரை மீள செலுத்த முடிந்தமையை எண்ணி ஒரு இலங்கையனாக மகிழ்கிறேன்.

ஆனால், அந்த தேயிலையை உற்பத்தி செய்ய ஆண்டாண்டு காலமாக பாடுபடும் மலையகப் பெண்களுக்கு நல்ல செய்தி எப்போது வரப் போகின்றது?

 

இலங்கையில் பெருந்தோட்ட தொழிற்துறையை தவிர, பெயருக்கு கூட வேறு ஏற்றுமதி தொழிற்துறைகள் இருக்கவில்லை. 1948ம் முதல் நமது மக்களின் உழைப்பை கொண்டு பெற்ற அந்நிய செலாவணி இருப்பை வைத்து தான், அரச தலைவர்கள் சுகபோக வாழ்கை நடத்தினர்.

 

இனியாவது மலையக பிற்போக்கு அரசியல்வாதிகள் வாய் சவடால்களை நிறுத்தி விட்டு, இலங்கை சரித்திரத்தை, பொருளாதார வரலாறுகளை கற்றறிந்து, எமது மக்களின் உரிமைகளுக்கு குரல் எழுப்ப வேண்டும். இதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணி எவருடனும் கரம் கோர்த்து செயற்படத் தயார்” இவ்வாறு மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இருநூறு ஆண்டுகளாக உழைக்கும் தோட்டத்தொழிலாளர்களை கவனிக்காமல் மத்திய வங்கி அதிகாரிகள் மனசாட்சியின்றி தமது சம்பளத்தை அதிகரித்துக்கொள்கிறார்கள் – சுமந்திரன்

இரு நூற்றாண்டுகளாக இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்த தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் ஊழியர் சேமலாப நிதியத்தின் ஊடாக தேசிய கடன் மறுசீரமைப்புக்குப் பங்களிப்பு செய்யும் அதேவேளை, அதற்குப் பொறுப்பான மத்திய வங்கி அதிகாரிகள் மனசாட்சியின்றி தமது சம்பளத்தை அதிகரித்துக்கொள்வதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

அண்மையில் புதிய மத்திய வங்கிச் சட்டத்தின் பிரகாரம், இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்ட விடயம் கடும் சர்ச்சைக்குள்ளாகியிருந்தது. இவ்விடயம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை செயற்றிட்டப் பிரதானி பீற்றர் ப்ரூவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போதிலும், சம்பள அதிகரிப்பு தொடர்பில் தன்னால் எதனையும் கூறமுடியாது எனவும், இருப்பினும் மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் பதிலளித்திருந்தார்.

 

இவ்வாறானதொரு பின்னணியில் மத்திய மலைநாட்டு பகுதிகளில் பணிபுரியும் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் சுமார் இரண்டு நூற்றாண்டுகளாக இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்ந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள எம்.ஏ.சுமந்திரன், தற்போது அவர்கள் தமது ஊழியர் சேமலாப நிதிய சேமிப்பின் ஊடாக உள்ளகக் கடன் மறுசீரமைப்புக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

 

இருப்பினும், அந்த ஊழியர் சேமலாப நிதியத்துக்கும், இலங்கை மத்திய வங்கிக்கும் பொறுப்பானவர்கள் மனசாட்சியின்றி பெருமளவால் தமது சம்பளத்தை அதிகரிக்கின்றனர் எனவும் சுமந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார்.