காஷ்மீர் கிராமத்தில் நீர்நிலைகள் விஷமானதால் 17 பேர் மரணம் ! யாழில் கிளிநொச்சியில் யாருக்குத் தெரியும் ?
இந்தியாவின் காஷ்மீரின் மலைக் கிராமமான பதாலில் சமீபத்தில் ஒன்றரை மாத காலப் பகுதிக்குள் 17 பேர் அநியாயமாக உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் 3 தொடக்கம் 15 வயது வரையிலான சிறுவர்கள் ஆகும். உயிரிழந்தவர்களின் உடற்கூறாய்வு முடிவுகள் படி, இறந்தவர்கள் நரம்பு மண்டலத்தை பாதிக்க கூடிய ஒருவகை விஷத்தினால் பாதிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தெரியவருவதாவது பதால் மலைக் கிராமத்தின் நீருற்றின் தண்ணீரில் ஒருவகையான பூச்சி கொல்லி கலந்திருந்தமை தெரியவந்துள்ளது. விசாரணைகள் தொடர்கின்றன.
இப்படியான திடீர் மரணங்கள் நீர் விஷமாவதால் நிகழாமல் இருக்க வேண்டும் என்பதே சமூகநலன் விரும்பிகளின் அவாவாகும். யாழ்ப்பாணதில் நிலத்தடி நீர் விரைவாக விஷமாகிக் கொண்டு வருவதை கடந்த பல ஆண்டுகளாக சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாண நிலத்தடி நீரில் மலசல கூட கழிவு நீர் கலந்து வருவதற்கான ஏது நிலைகள் இருக்கின்றமையும் நீர்ப் பாதுகாவலர்களால் எடுத்தியம்பப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கூட ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம். யாழ்ப்பாணத்தில் மத்திய கழிவகற்றல் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும். இரணைமடு தண்ணீர் விவகாரத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தேசம்நெற் வலியுறுத்துகிறது. வரும் முன் காப்போம்.
