மருத்துவமனைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி

மருத்துவமனைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி

சத்தியமூர்த்திக்கு எதிராக மருத்துவர்கள் போர்க்கொடி

சத்தியமூர்த்திக்கு எதிராக மருத்துவர்கள் போர்க்கொடி

 

யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்திக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கையை இன்று தொடக்கம் முன்னெடுத்துள்ளனர். பணிப்பாளர் சத்தியமூர்த்தி மீது அண்மைக் காலமாக மருத்துவ அசமந்தப் போக்கோடு நிதி நிர்வாக முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுகளும் நிறையவே வெளிவந்தன. பா உ அர்ச்சுனாவும் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தொடர்பில் பல குற்றச்சாட்டுக்களை அடுக்கியிருந்தார்.

அதே போல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரும் ஒரு மாபியா போல் செயற்படுவதாக பா உ அர்ச்சுனாவும் ஏனையவர்களும் நீண்டகாலமாக குற்றம்சாட்டி வருகின்றனர். மருத்துவ கலாநிதி நாகநாதன் தேசம்நெற் இல் யாழ் மருத்துவமனையில் நடைபெறும் பல்வேறு விடயங்களையும் நாசுக்காக தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பணிப்பாளர் சத்தியமூர்த்திக்கு எதிரான போராட்டம் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நோயாளிகளது பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியமை மற்றும் நிர்வாகத்தைத் தக்க வைக்க மருத்துவமனை ஊழியர்களிடையே தொடர்ந்தும் சர்ச்சைகளை உருவாக்கும் முயற்சிகளைத் தொடர்ச்சியாக மருத்துவமனைப் பணிப்பாளர் மேற்கொண்டு வருவதை எதிர்த்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நாம் தீர்மானித்துள்ளோம்.

வைத்தியசாலை நிர்வாகத்தோடு இரண்டு மாதங்களாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு வந்த நிலையிலும் நோயாளர்களின் பாதுகாப்பை யாழ் போதனா வைத்தியசாலையினது நிர்வாகம் உறுதி செய்யத் தவறியமையால், தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

பின்வரும் காரணங்களுக்காகவே நாம் எமது தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளோம்.

1.நோயாளர் அவசர சேவைகளுக்கான பிரிவுகளுக்கு ஆளணி பற்றாக்குறையாகவும் அதே நேரம், சாதாரண பிரிவுகளுக்கு அதிகமான ஆளணியும் பொருத்தப்பாடற்ற விதத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதனால் நோயாளரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் உள்ளது.

2. யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக விபத்து, அதி தீவிர சிகிச்சைப் பிரிவு (ATICU) இல் ஒரு ஆபத்தான பணியாளரைப் பொறுப்பிலிருத்தி, அர்ப்பணிப்பான பணியாளரை இடம் மாற்றியுள்ளமை நோயாளிகளின் உயிராபத்திற்கேதுவான பாதகமான நிலைமை நிலையை உருவாக்கியுள்ளது.

3. சில ஊழியர்களின் பொறுப்புணர்ச்சி அற்ற நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக் காட்டியபோதும் அவர்களைத் திருத்துவதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

4. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மருத்துவ நிபுணர்களால் தகவல்கள் கோரப்படும் போது தவறான தகவல்களை வழங்குவதுடன் தகவல்களை வழங்குவதில் தாமதம் செலுத்துதல்.

5. மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ள அனைத்து நோயாளிகளினதும் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை தொழிற்சங்க நடவடிக்கையாக, அதிதீவிர சிகிச்சை தவிர்ந்த சாதாரண பணிகளையும் இடை நிறுத்த முடிவு செய்துள்ளோம்.

2.5: இது நோயாளரின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள முடிவு என்பதனால் நீண்டகால நோக்கிலான சரியான முடிவுகள் எட்டப்படும் வரை தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடர வாய்ப்புள்ளது.

2.6: இதனால் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய சிகிச்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என்பதனை மன வருத்தத்துடன் நாம் தெரிவித்துக் கொள்கின்றோம்” என்றுள்ளது.

2.7: “மருத்துவர்களது போராட்டம் அரச மருத்துவமனைகள் மீது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தி, தனியார் மருத்துவமனைக்கு நோயாளர்களை வரவழைக்கும் உத்தி” என பத்தி எழுத்தாளர் சி. கருணாகரன் குற்றஞ்சாடியுள்ளார்.

2.8: “நிர்வாக முறைகேடுகள், குறைபாடுகள் இருந்தால் அவற்றை உரிய ஆதாரங்களோடு வெளிப்படுத்தி, நிர்வாக ரீதியாகவும் சமூக ரீதியாகவும் போராட வேண்டும் என்றும் நோயாளிகளின் உயிரோடும் வாழ்க்கையோடும் விளையாடக்கூடாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.